Wednesday, March 24, 2010

மறுகாலனிய எதிர்ப்புப் போரில் நமது வரலாற்றுக் கடமையை உணர்வோம்! வரலாற்று எதிரிகளை எதிர்கொள்வோம்!!


23/03/2010 - ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்கள் தூக்கிலிடப்பட்ட 79வது நினைவு தினம். காந்தி தன்னுடைய போலியான அகிம்சை முகத்தை, ஏகாதிபத்திய - முதலாளித்துவ அடிவருடித்தனத்தைத் தக்க வைத்து கொள்வதற்காக, மாவீரன் பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை "இவர்கள் சாக விரும்புகிறார்கள்" என்று சொல்லி வஞ்சம் தீர்த்து கொண்ட நாள்.

நமது விடுதலைப் போராட்ட மரபில், கட்டபொம்மன், திப்பு, மருது சகோதரர்கள் என்று நீளும் வீரத்திற்கான நீண்ட பட்டியலில் பகத்சிங் வரை, தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறும் போது அந்தந்த காலகட்டத்தின் துரோகிகளையும் நினைவு கூற் வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எட்டப்பனை இகழாமல் கட்டபொம்மனை மட்டும் தனியே புகழ முடியாது. ஏனெனில் துரோகத்தால் தான் தியாகத்தின் இன்றியமையாத தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. காந்தியின் துரோக அரசியலிலிருந்து புரட்சிகர தோழர்களின் போராட்டங்களை, தியாகங்களைத் தனியே பிரிக்கமுடியாது. மாவீரன் பகத்சிங்கின் வாரிசுகளாக களம் காணவிருக்கும் நமக்கு எதிராக எட்டப்பன் முதல் காந்தி வரையிலான துரோகிகளின் வாரிசுகளும் அணிவகுத்து நிற்கிறார்கள். குறிப்பாக காங்கிரசு - பா.ஜ.க - போலி கம்யூனிஸ்டுகள் துரோகத்தின் வாரிசுகளாக, நமக்குச் சவாலாக களத்தில் நிற்கின்றனர். தியாகத்தையும் துரோகத்தையும் "இரண்டும் ஒன்று தான்" என்பதாக உருவகப்படுத்துகிறார்கள். பகத்சிங்கும் காந்தியும் வெவ்வேறு வழியில் நம் தேச விடுதலைக்காக போராடியவர்கள் தான் என்று மோசடியான சித்திரத்தை உருவாக்கத் துடிக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

தியாகத்தையும் துரோகத்தையும் சமமாக மதிப்பிடுவதன் மூலம் உண்மையான தியாகிகளை கீழ்மைப்படுத்தியும் துரோகிகளை மேன்மைப்படுத்தியும் பேசுவதன் மூலம் வரலாற்றைத்
திருத்திவிடலாம் என்று துடிக்கிறார்கள். கம்யூனிசத் திருத்தல்வாதிகளான போலி கம்யூனிஸ்டுகள் தான் நம்முடைய வாலாற்றில் துரோகிகளின் பங்களிப்பையும் திருத்திவிடத் தவிக்கிறார்கள். இதன் மூலம் பெயரில் மட்டும் 'கம்யூனிசத்தை'க் கொண்டிருக்கும் அவர்கள் துரோகத்தின் வாரிசுகளாகத் தம்மை வெளிப்படையாக அடையாளப்படுத்து கொள்கிறார்கள்.

சேகுவேராவையும் பகத்சிங்கையும் காட்சிப்படுத்துவது இளைஞர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும்தான். தக்கவைக்கப்பட்ட அணிகள் காந்தியின் வாரிசாக வார்த்தெடுக்கப்படுகிறார்கள். பகத்சிங்கின் மீது நேசம் கொண்டவர்கள், புரட்சியை நேசிப்பவர்கள் போலிக்கம்யூனிச அரசியலிலிருந்து விலகி புரட்சிகர அணிகளுடன் கரம் கோர்த்துக்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்தை படைப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த போலிகள், இப்போதைய இழிந்த சமூக நிலைமைகளை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை, தேவை ஆட்சிமாற்றம் மட்டும் தான் என்று அதுதான் தமது இறுதி இலக்கு என்றும் சொல்லிவருகின்றனர்.

போலிச் சுதந்திரத்திற்கு முந்தைய காலனிய இந்தியாவில், தேவை சமூகப் பொருளாதார மாற்றம், அரசியல் அதிகாரம் மட்டும் போதாது என்றும் சொல்லி புரட்சிக்கான அவசியத்தை
வலியுறுத்துகிறார் பகத்சிங். ஆனால், காந்தி புரட்சியெல்லாம் தேவையில்லை ஆட்சி மாற்றம் நமது தேசத்தை மறுகாலனிய நாடாக்குவதற்குத்தான் வழி செய்திருக்கிறது. போலி சுதந்திரத்துக்கு முந்தைய காந்தியின் "ஆட்சி மாற்றம் போதும்" என்கிற கோரிக்கை இன்றைய மறுகாலனிய சூழலில் போலி கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையாக மாறியிருக்கிறாது. காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக தமது தலைமையிலான ஆட்சி மட்டும் தான் இலக்கு. தமது தலைமையில் ஆட்சியமைவதே "மக்கள் ஜனநாயகப் புரட்சி"யாகும் என்றும் பிதற்றிவருகிறார்கள்.

1920-ல் கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி காங்கிரசுக்கு வால்பிடித்துக் கொண்டிருந்தனர் போலி கம்யூனிசத்தின் முன்னோடிகள். ஆனால், தோழர் பகத்சிங், தனது சொந்த புரிதலின் மூலம் மார்க்சிய - லெனினியத்தை உள்வாங்கி கொண்டு கம்யூனிசப் பண்புகளில் படிப்படியாக வளர்ந்து, சோஷலிசம் குறித்தும், சமூக முழுமைக்குமான விடுதலை குறித்தும், சமதர்மம் தழைக்க வேண்டும் என்றும் பேசுகிறார். அப்படிப்பட்ட சமூகத்தைப் படைக்க ரஷ்யாவைப் போன்ற புரட்சி ஒன்றை விடுதலை போராட்டத்தினுடாக நமது நாட்டிலும் நடத்த வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்திகிறார். 'புரட்சி ஓங்குக!' என்ற விண்ணதிரும் முழக்கத்தை விடுதலைப் போர்க்களத்தில் ஒலிக்கச் செய்த பெருமைக்குரியவராக பகத்சிங் திகழ்ந்தார்.

சீக்கிய மதப் பழமைவாத குடும்ப பின்னணியிலிருந்து வந்த பகத்சிங், ஒரு கம்யூனிச புரட்சியாளனாக வளர்ந்து கொண்டிருந்த அதே நாட்களில், நம்ம 'காம்ரேடுகள்' கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி - காங்கிரசின் ஏகாதிபத்திய எடுபிடி அரசியலுக்கு துணைபோயினர். காந்தியின் பார்ப்பனிய பிற்போக்கு வாதங்களில் கிறங்கிப் போய்க்கிடந்தது அன்றைய போலிக்கம்யூனிசத்தலைமை. அதற்கு இப்போதைய போலிகம்யூனிஸ்டுகள் சொல்லும் அருமையான விளக்கத்தையும் கொஞ்சம் கேளுங்கள். பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் காந்தியை விமர்சித்தால், தமது கட்சி மக்களிடமிருந்து தனிமைபட்டுவிடும் என்று அஞ்சியே வேறு வழியின்றி காந்திக்கு வால்பிடித்தார்களாம். இது போன்ற மொன்னைத்தனமான காரணங்களைச் சிறிதும் கூசாமல் சொல்வதற்கு போலிகள் தயங்குவதேயில்லை.

'பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட' காந்தியை, தீண்டாமைச் சவடால்களையும் போலியான மதச்சார்பின்மையையும் பேசித் திரிந்த காந்தியை, ஒரு வருணாசிரம வெறியன் தான் காந்தி என்று பண்பாட்டுத்தளத்தில் திரைகிழித்து அம்பலப்படுத்தினாரே அண்ணல் அம்பேத்கர், அவர் என்ன தனிமைப்பட்டுவிட்டாரா?

பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கர் காந்தியை அம்பலப்படுத்தியதைப்போல, விடுதலை போராட்ட அரசியல் களத்தில் பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் 'மகாத்மா'வின் போலி அகிம்சையை, ஏகாதிப்பத்திய எடுபிடித்தனத்தை, பிர்லாவின் மாளிகையில் படுத்துக்கொண்டு எளிமையை போதிப்பதை அடுக்கடுக்காக அம்பலப்படுத்தினார்கள். காந்தியை துணிந்து அம்பலப்படுத்தியதற்காக பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் யாரும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படவில்லை. மாறாக காந்தியின் போலிபிம்பம் தான் மக்கள் மத்தியில் அம்பலமானது. அதனால் தான் காந்தி பகத்சிங் உள்ளிட்ட தோழர்களின் மரண தண்டனைக்கு துணை போனதோடு, "அவர்கள் சாக விரும்புகிறார்கள்" என்றும் சொன்னார்.

இவ்வாறாக புரட்சிகர தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்ட காந்திக்கு முன்வாயும் பின்வாயுமாக இருந்துகொண்டு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தார்கள் போலிகள். இந்தியாவின் போலி கம்யூனிச வரலாறு தொடக்க காலம் முதல் இன்றைய மறுகாலனியச் சூழல் வரை காந்தி - காங்கிரசோடு கூட்டணி கட்டிக்கொண்டு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது. தேர்தலுக்குத் தேர்தல் நடைபெறும் அணிமாற்ற நாடகமெல்லாம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இல்லாமல் ஒரே அணியாக, துரோக அணியாக காங்கிரசோடு தம்மை போலிகள் நிலைப்படுத்தி வருகிறார்கள்.

துரோகி காந்தியையும் தியாகத்தோழன் பகத்சிங்கையும் தேச விடுதலைப் போராளிகள் என்று சமமாக மதிப்பிடும் போலிகள், அகிம்சையா? ஆயுதமா? என்ற ஒன்றில் மட்டும்தான் இவர்கள் வேறுபடுவதாகச் சித்தரிக்கிறார்கள். இதே முறையைத்தான் தமது போலி கம்யூனிச அரசியலுக்கும் புரட்சிகர அரசியலுக்கும் இடையிலுள்ள வேறுபாடாகவும் சித்தரிக்க முயலுகிறார்கள். இந்தியாவின் 'அக்மார்க்' இடதுசாரிகளான தமக்கும் மார்க்சிய - லெனினிய புரட்சியாளர்களுக்கும் இடையிலான முரண்பாடும் ஆயுதப்பாதையா? அமைதிப்பாதையா? என்பது மட்டும் தான் என்பதாகச் சொல்லி, போலி கம்யூனிஸ்டு கட்சியின் பெரும்பாலான அணிகள் நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக முழுமைக்கான விடுதலையையும் வலியுறுத்துகிற புரட்சிகர அரசியலுக்கும், வெறும் ஆட்சிமாற்றம் மட்டும் போதுமானது என்ற காந்திய - காங்கிரசு அரசியலுக்கும் இருந்த பாரதூரமான வேறுபாடுதான் இன்றைய புரட்சிகர சக்திகளுக்கும் போலிகளுக்குமான வேறுபாடாக இருக்கிறது. ஏகாதிபத்தியத்துடன் கரம் கோர்த்துக் கொண்டு செயல்படும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அங்கமான போலி கம்யூனிஸ்டு கட்சிக்கும், ஏகாதிபத்தியத்தை இந்த மண்ணை விட்டு துரத்தியடிக்கும் மறுகாலனிய எதிர்ப்புப் போராளிகளுக்கும் அடிப்படையிலேயே எதிரெதிரான கருத்துக்கள் இருப்பதை போலி கம்யூனிச அணிகளுக்கு நாம் புரியவைக்க வேண்டியிருக்கிறது.

சிபிஎம் கட்சியின் ஈ.எம்.எஸ். என்கிற சங்கரன் நம்பூதிரி முதற்கொண்டு பி. ராமமூர்த்தி வரையிலான தலைவர்களின் பார்ப்பனிய - காந்திய - காங்கிரசு பாணியில் தமது கட்சியை வழி நடத்தியிருப்பது தத்துவார்த்த ரீதியில் 'புதிய ஜனநாயகம்' இதழால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய மறுகாலனிய சூழலில், மறுகாலனிய திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏனைய ஓட்டுக்கட்சிகளுக்கு சற்றும் சளையாதவர்களாக களத்தில் நிற்கிறார்கள் போலிகள். ப. சிதம்பரம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையடிப்பதற்காக உள்நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள "காட்டு வேட்டை" எனும் உள்நாட்டுப் போரில் போலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசு அரசுக்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் தோளோடு தோள் நின்று, அந்த பன்னாட்டு பகாசூர நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையிட வழிவகை செய்துகொடுக்கிறார்கள்.

இன்றைய மறுகாலனியத்திற்கு எதிரான சமர்க் களத்தில் பகத்சிங்கின் உண்மையான அரசியல் வாரிசுகளான புரட்சிகர சக்திகள் இதர ஓட்டுப்பொறுக்கி கும்பலை நேரதிராகச் சந்திக்க வேண்டிய சூழலை வரலாற்று ரீதியான தொடர் நிகழ்வுகள் நமக்கு வழங்கியுள்ளன. எதிரிகளையும் துரோகிகளையும் சந்திக்கின்ற வாய்ப்பை நமக்கு வரலாறு வழங்கியிருக்கிறாது. பகத்சிங்கின் வாரிசுகளான நமக்கு வரலாற்றுக் கடமை குறித்து சொல்லியா கொடுக்க வேண்டும்!

தோழமையுடன்,

ஏகலைவன்.

1 comments:

said...

அருமையான பதிவு நண்பரே,பதிவுக்கு நன்றி !