Tuesday, February 24, 2009

விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி!.....

/////‘காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து./////

மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசித்துப் பாருங்களேன். இது பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், புதிய ஜனநாயகத்துக்கு எதிராக கட்டியெழுப்பியுள்ள மணற்கோபுரம்!

“பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்து மதவெறியர்களுக்கு அனுசரனையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்” என்கிற குற்றச்சாட்டை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும் விமர்சனம், எப்படி பார்ப்பனியத்தைக் குளிர்விக்கும்? பார்ப்பன-இந்துவெறியர்களை ஆதரித்தவன் என்று ஒருவனைக் குற்றம் சாட்டினால், பார்ப்பனியவாதிகளுக்கு நம்மீது ஆத்திரம் வருமா, வராதா; என்பதை நீங்களே (வேறாருமல்ல இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள்தான்) சொல்லுங்கள். ஆனால், இப்போது ஆத்திரம் விடுதலை ராசேந்திரனுக்கு வருகிறதே, அது ஏன்? இதனை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன-இந்துவெறியர்களை எதிர்த்து எழுதப்பட்டிருப்பதை அவதூறு செய்வதனால், விடுதலை ராசேந்திரனுக்கு பார்ப்பன ஆதரவு கண்ணோட்டம் இருப்பதாக நாமும் சொல்லலாமா? இல்லையா? ஆனால், அப்படியெல்லாம் நாம் சொல்லவில்லை. அது சரியான மதிப்பீடும் அல்ல என்பது விடுதலை ராசேந்திரனுக்குத் தெரியாது; நமக்குத்தான் தெரியும்.

பிறகு ஏன், பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் ‘புடம்போடப்பட்ட(!)’ விடுதலை ராசேந்திரன் இவ்வாறு எழுத வேண்டும், என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

’சமூக நீதி’க் காவலராக திராவிடக் கட்சிகளாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் ’தலித்’ அரசியல் பேசுபவர்களாலும் போற்றப்படும் வி.பி.சிங்கின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் “காக்கை குயிலாகாது...” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அக்கட்டுரை வி.பி.சிங்கிற்கு எதிராக வைத்திருக்கும் கேள்விகளில் சிலவற்றை இங்கே (தேவை கருதி) பட்டியலிடுகிறேன்.

1. சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?

2. காங்கிரசில் இருந்தபோது அவசரநிலை பாசிச ஆட்சியை அவர் தீவிரமாக ஆதரித்ததையோ, அவருடைய குருநாதர் சஞ்சய்காந்தி காட்டுமிராண்டித்தனமாக முசுலிம்கள் மீது பாய்ந்து குதறியபோது அதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததையோ, மனித உரிமை பேச காஷ்மீர் வரை போகும் அ.மார்க்ஸ் ஏன் கண்டுகொள்வதில்லை?

3. அவசரநிலைப் பாசிச ஆட்சிக் காலத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்ட போதிலும், வி.பி.சிங்கின் அவசரநிலை ஆதரவை தி.மு.க. ஏன் விமர்சிப்பதில்லை?

4. 1980இல் இவர் உ.பி. முதல்வராக இருந்தபோதுதான், உ.பி. அரசின் ஆயுதப்படை போலீசு மொராதாபாத் முசுலிம்களை இனப்படுகொலை செய்து, இந்தியாவின் மதக்கலவர வரலாற்றில் புதுப்பரிணாமத்தை உருவாக்கியது. இவரின் ஆட்சியில்தான் ஆதிக்க சாதிப் பண்ணையார்களின் சட்டவிரோத ஆயுதப்படைகள் தாழ்த்தப்பட்டோர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தன. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் "நிலைமை விரைவில் சரிசெய்யப்படும்' என்ற வெற்று அறிக்கையைத் தவிர, இவர் செய்தது எதுவுமில்லை. கான்பூருக்கு அருகேயுள்ள தஸ்தம்பூர் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, 1982இல் இவர் பதவி விலகவேண்டி வந்தது. 1984 சீக்கியப் படுகொலைக்காக 1989இல் மன்னிப்புக் கேட்ட வி.பி.சிங், தனது ஆட்சியில் கொலையுண்ட முஸ்லிம்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோருக்காகவோ மன்னிப்பு எதையும் கேட்டதில்லை என்பது தொல்.திருமாவுக்கோ, தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்திற்கோ தெரியாதா?

இன்னும் ஏராளமான, உறுதியான தருக்கங்களுடன் புதிய ஜனநாயகத்தின் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. (நேரமிருப்பவர்கள் மேற்கண்ட சுட்டியை அழுத்தி படித்துக் கொள்ளலாம்) இக்கட்டுரைக்கு மறுப்பு என்கிற பெயரில் ”வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்” என்கிற தலைப்பில் ‘பார்ப்பனவாதி’ என்று எமது தோழர்களை வசைபாடியிருக்கிறார், விடுதலை ராசேந்திரன். ஆனால், அவருடைய அந்த நீண்ட பதிவினூடாக மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மேற்கண்ட பு.ஜ. கேள்விகளுக்கு [வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.] என்கிற வரிகளைத்தான் தனது அதிகபட்ச பதிலாகத் தந்திருக்கிறார்.

இடஒதுக்கீட்டையும், அதனைச் சாதித்தார் என்று வி.பி.சிங்கையும், ‘காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் அதனால் அவர்தான் தேசத் தந்தை’ என்று சொல்வதைப் போல உருவகப்படுத்தி முட்டுக்கொடுத்து நிறுத்தப் படாதபாடுபட்டிருக்கிறார். அதன் பொருட்டு தான் பு.ஜ.வுக்கு பார்ப்பன பட்டம் சூட்டி, அகமகிழ்ச்சி கொள்ள முயன்றிருக்கிறார் பாவம்!

பார்ப்பன-வருணாசிரம படிநிலைகளில், பார்ப்பனன், சத்திரியன், வைசியன் ஆகிய வருணத்தாருக்கு சேவை செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்தனர் சூத்திர, பஞ்சம, சண்டாள வருணங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள். அந்த உழைக்கும் மக்களை சட்ட நிருவாகத்தின் மூலம் மிரட்டிப் பணியவைத்து, உழைப்பையும் உடமைகளையும் சுரண்டிக் கொடுத்து பார்ப்பன சேவையாற்றியதைத் தவிர வேறொன்றும் செய்யாத பிறவருணத்தவர்களை இடஒதுக்கீட்டின் மூலம் சூத்திரர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தந்ததுதான் இவர்கள் வழிபடும் நீதிகட்சி முதல் வி.பி.சிங் வரையிலான ‘சமூக நீதி’ அரசுகளின் சாதனையாக இருக்கிறது. அதேநேரத்தில் வெகுசில பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இதன்மூலமாக சலுகைகளைப்(உரிமைகளை) பெற்றிருந்தாலும், இதனைச் சாதனையாக ஏற்கமுடியாது, இவை வெறும் சீர்திருத்தம் மட்டுமே. இந்த சீர்திருத்தத்தால் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. இதனாலேயே இவர்கள் முன்னிறுத்தும் இடஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்பது பு.ஜ.வின் அழுத்தமான நிலைப்பாடு. இதனை, இடஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை என்கிற சிறு வெளியீட்டின் மூலம் ஏற்கெனவே நேரடியாகப் பதிவு செய்திருக்கிறது புதிய ஜனநாயகம்.

ஆயிரமாண்டுகளாக நமது சமூகத்தை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்திய பார்பன கும்பலுக்கும், அவர்களின் எடுபிடிகளாக, அடியாளாக இருந்து கொண்டு நம்மக்களை அடிமை படுத்திவந்த ஆதிக்கசாதிக் கூட்டத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் இந்த ‘இட ஒதுக்கீடு’ குறித்த குழாயடி சண்டையில் புரட்சிகர அமைப்புகளுக்கு என்ன வேலை இருக்க முடியும்? ஆளூம் வர்க்கச் சேவையாற்றுவதற்கு நடக்கின்ற போட்டா போட்டியில், இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை துடைத்தெறிவதற்கு போராடும் புரட்சிகர அரசியல் இவ்விருகூட்டத்தையும் முற்றாக அழிப்பதைத்தான் முன்னிறுத்த முடியும். முன்னிறுத்துவோம்; இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.

இடஒதுக்கீட்டையும் அதனூடாக வி.பி.சிங்கையும் மேன்மை படுத்தி எழுதியிருக்கும் விடுதலை ராசேந்திரன், புரட்சிகர அமைப்புகளின், இடஒதுக்கீடு குறித்த மேற்கண்ட நிலைப்பாடுகளை குறைந்த பட்ச அறிவு நாணயத்தோடு பரிசீலித்திருக்கிறாரா என்கிற ஐயத்தையே அவரது பதிவு ஏற்படுத்துகிறது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பது நமது நோக்கமல்ல என்று தெளிவாக, அழுத்தமாக புதிய ஜனநாயகம் தெரிவித்திருக்கிறது. அதனை ஆதரிப்பதில் உள்ள பிரச்சினைகளையும் தொகுத்தளித்திருக்கிறது. அதன் மீதான விடுதலை ராசேந்திரனின் கருத்துக்கள் எதையும் நான் படித்ததில்லை. அவ்வாறு எதேனும் அவர் இதற்கு முன்னதாக எழுதியிருப்பாரேயானல் எனக்கு யாராவது அறியத்தாருங்கள்.


இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை சுக்கு நூறாகப் பிளப்பதன் பொருட்டு வேலை செய்துவரும் புரட்சியாளர்கள், அதே ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரும்பான்மையான கேடுகளுக்கும் துணை நின்ற, ஆளுவர்க்கப் பிரதிநிதியாகவே வாழ்ந்து மறைந்த வி.பி.சிங்கை மண்டல் பரிந்துரை என்கிற ஒன்றைக் கொண்டு ஒருபோதும் புனிதப்படுத்த முடியாது. போபர்ஸ் பீரங்கி ஊழல் என்றும் மண்டல் கமிசனென்றும் வி.பி.சிங் கூச்சலிட்டது ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டும்தான். இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு சிறு துரும்பளவேனும் பலனில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்காதரவாக குரல் கொடுப்பது முற்றிலும் பலனற்றது.

////////ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா? //////////

இங்கே நான் குறிப்பிட்டுள்ள புதியஜனநாயகத்தின் இடஒதுக்கீடு மீதான மதிப்பீடுகளை அறவே புறக்கனித்து, திருவாளர் ராசேந்திரன் ‘’ஏற்கெனவே இருந்த சமூக நிலையைக் குலைத்துவிட்டாரே...” என்று புதிய ஜனநாயகம் புலம்புவதாக எழுதியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த, இப்போது இருக்கின்ற சமூக நிலைமைகளை அடியோடு புரட்டிப் போடுவதுதான் புதிய ஜனநாயகத்தின் அரசியல் என்பது விடுதலையாருக்குத் தெரியாது போலும்! சொல்வது அவதூறாக இருந்தாலும் கொஞ்சமாவது பொருந்தச் சொல்ல வேண்டாமா?

அடுத்து, ம.க.இ.க.வின் திட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு கைவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இது அவதூறுப் பதிவு என்பதற்கான ஒரு சோற்றுப் பதம். ”இந்து எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு போன்ற பல்வேறு சூழல்களில் களப்பணிகளில் இணைந்திருக்கிறோம்....” என்பதாக இக்கட்டுரையினைத் தொடங்கியுள்ள விடுதலையார்தான், ம.க.இ.க. பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகவும் திரிக்கிறார். இதில் எது உண்மை அய்யா?!

இவர் குறிப்பிட்டுள்ள 1998ஆம் ஆண்டிற்குப் பிறகு மட்டும் ம.க.இ.க. மேற்கொண்ட பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களை மொத்தமாக இருட்டடிப்பு செய்வதாக இருக்கிறது இவரது இந்த கருத்து. 2003 –ல் தான் ”பார்ப்பனிய, மறுகாலணிய பண்பாட்டுப் படையெடுப்பிற்கு எதிரான போராட்டமாக”, பார்ப்பனிய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இவர் மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்திற்குப் பிறகுதான் தில்லைப் போராட்டத்தினை ஆறுமுக சாமியைக் கொண்டு தொடங்கி இன்றுவரை அதே வேகத்தோடும் வீச்சோடும் நடத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களில் ம.க.இ.க.வின் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்களுக்குத் தெரியும், உங்கள் கட்சியிலுள்ள கீழ்மட்ட அணிகளுக்கும் நன்றாகவே தெரியும், பாவம் உங்களுக்குத்தான் தகவல் ஏதும் வரவில்லை போலும்!

///////"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள். //////

ம.க.இ.க. குறிப்பிட்டுள்ள அந்த மூன்று மலைகள், பொருளாதார ரீதியில் தேசத்தைச் அடிமைப்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது. அந்த சுரண்டல் வாத ஆளும் வர்க்கத்துக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் சேவை செய்யும் அமைப்பாகத்தான் பார்ப்பன பயங்கரவாதம் திகழ்கிறது, என்பதையும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும், மறுகாலணியத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கூர்மை படுத்தப்படவேண்டும் என்ற ம.க.இ.க.வின் அறைகூவலெல்லாம் விடுதலையாரின் செவிகளை எட்டவில்லை போலும்!

ம.க.இ.க.வின் திட்டத்தை சுருக்கி, வெட்டி ‘தேவைக்கேற்ற வகையில்’ பயன்படுத்துகின்ற விடுதலையாரின் பார்வையில் நிறைந்திருக்கும் காழ்புணர்ச்சிக்கு என்ன பெயர் சூட்டியழைக்கலாம்? இவரது பார்ப்பன எதிர்ப்பை, ம.க.இ.க., பு.ஜ., மீதான அவதூறுகளை பாராட்டுபவனைக் கொண்டு பார்த்தாலே இவரது கருத்துக்களின் தரம் எளிதாகப் புரியும். இவரது கட்டுரையினை அட்சரம் பிசகாமல் தனது தளத்தில் பதிவிட்டு, நன்றியையும் பொங்கி வழியவிட்டிருக்கிறான், சிபிஎம் கட்சியின் செல்வப்பெருமாள்.

வி.பி.சிங்கை பு.ஜ. விமர்சித்திருப்பது பார்ப்பனர்களைக் குளிர்வித்திருக்கிறது, என்று உருவகப்படுத்தும் விடுதலை ராசேந்திரனுக்கு ஒரேயொரு கேள்வி. உங்களுடைய இந்த கூற்று, பார்ப்பனியத்தில் கேவலம் பூநூலைக் கூட இழக்க மனமின்றி உழலும் சி.பி.எம். யோக்கியர்களைக் குளிர்வித்திருக்கிறதே, இதற்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா? உங்களின் கட்டுரை பு.ஜ.வை சிறுமைபடுத்தவில்லை, மாறாக அதனை சி.பி.எம். ஆதரிப்பதுதான் உங்களைக் கடுமையாகச் சிறுமை படுத்தியிருக்கிறது. உங்களை நோக்கி வரும் பாராட்டுக்களே உங்களுக்கு எதிர்வினையாக மாறியிருக்கிறது. இதையாவது கொஞ்சம் பகுத்தறிவு கண் கொண்டு பாருங்களேன்!

தோழமையுடன்,

ஏகலைவன்.

தொடர்புடைய பதிவுகளையும் கீழ்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி அவசியம் படியுங்கள் தோழர்களே!

1. ஆண்ட சாதிகளும், இடஒதுக்கீட்டின் உள் அரசியலும்...
2.புரளி பேசும் போலி தமிழ்தேசியவாதிகள்
3. இடஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?
4. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு: மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின் சமரசம்!!
5. குஜ்ஜார் போராட்டமும், சாதிக் கொழுப்பெடுத்த பார்ப்பனவெறி டைம்ஸ் ஆப்பு இந்தியாவும்!!

Friday, February 20, 2009

"சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” போலீசு என்கிற பார்ப்பனக் கூலிப்படை ஏவிய கொலைவெறித் தாக்குதல்.....

அன்பார்ந்த தோழர்களே!

நேற்றைய தினம் சென்னை - உயர்நீதி மன்ற வளாகத்தில், கருணாநிதி-பார்ப்பன அதிகார வர்க்கத்தின் கைக்கூலிப் படையான போலீஸ் கும்பல், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள், தத்தமது வழக்குகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் என ஒவ்வொருவரையும் திட்டமிட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். ”சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” என்று சொல்லிச் சொல்லியே காக்கியுடைதரித்த கூலிப்படையின் ஒவ்வொருவனும் எதிர்நின்றவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து நேற்றையதினம் ஏவிவிடப்பட்ட இந்த பொறுக்கி - போலீசு கும்பல் ‘தெளிவாக’ திட்டமிட்டு பார்ப்பன அதிகார மையத்தால் சுப்பிரமணிய சாமிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது தெளிவாகியுள்ளது.

சுப்பிரமணிய சாமி என்கிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உளவுத்துறைக் கைக்கூலியும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல், தில்லை ‘பொது’தீட்சித கிரிமினல்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பஜனைபாட வந்த போது, அழுகிய முட்டையால் நம்முடைய வழக்கறிஞர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. தமிழ் மக்களை தொடர்ந்து அவதூறாகப் பேசிவந்ததாலும், சேதுசமுத்திர திட்டத்தினை ராமன் பாலம் என்கிற டுபாக்கூறு காரணத்தைக் காட்டி நிறுத்திவந்ததாலும், இந்துமத வெறி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து இயங்கிவந்ததாலும் நமது மக்கள் அவனுக்கு வழங்க நினைத்த தண்டனையின் தன்மையை சுப்பிரமணியசாமிக்கு உணர்த்துவதற்காகவும், இனியாவது கொஞ்சம் நாவடக்கம் செய்து கொள்வான் என்கிற எதிர்பார்ப்போடும் ஒரு எச்சரிக்கைத் தாக்குதல் மட்டும்தான் (நீதிபதிகள் சாட்சியாக....) அவன் மீது நமது வழக்கறிஞர்கள் நடத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, சம்பந்தப் பட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதே நேரத்தில் நீதிமன்றத்திற்குள் சு.சாமி நமது வழக்கறிஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காகவும் ஒரு புகார் அளிக்கப்பட்டிருந்தும் அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், ”சு.சாமியை போயி மொதல்ல கைது செய்யுங்க... பிறகு எங்ககிட்ட வாங்க...” என்று சொல்லியிருக்கிறார்கள். அதுதான் தாமதம், இதற்கு முன்னதாகவே பார்ப்பன அதிகார மையத்தால் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டிருந்த கைக்கூலி காவல்பட்டாளம் கடுமையான வன்முறையை வழக்கறிஞர்களின் மீது ஏவியிருக்கிறது.சுமார் மூன்றரை மணிக்குத் தொடங்கிய இந்த போலீசு வன்முறையாட்டம் இரவு எட்டு மணிவரை தொடர்ந்து நடந்திருக்கிறது. இதற்கிடையில், உடனடியாக போலீஸ் கும்பல் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்கிற ‘மேலிட’ உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு தமது வெறியாட்டத்தைத் தொடர்ந்திருக்கிறது. வீரப்பனைப் பிடிக்கக் கையாளாகாத நிலையில் கேட்பாரற்ற அப்பாவி உழைக்கும் மக்களை, பெண்களை மேய்ந்த அந்த ‘அதிரடிப் படை’யைப் போல இங்கு குவிக்கப் பட்டிருந்த போலீசு கும்பலும் வழக்கறிஞர்களைச் சந்திக்க மாட்டாமல் அஃறினையாக அங்கு நின்ற வாகனங்களின் மீது தமது ‘வீரத்தை’க் காட்டியதையும் நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம்.

கலவரத்தை அடக்குவதாகச் சொல்லிக் கொண்ட போலீசு கும்பல்தான் நேற்று நடைபெற்ற வன்முறையின் காரணகர்த்தா என்பதற்கான ஆதாரங்கள் நேற்றைய தொலைக்காட்சிகளின் பதிவுகளில் நிறைந்திருந்த போதிலும், வன்முறையில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை காவல்துறை அடக்க முற்பட்டதாகத்தான் இன்றைய நாளேடுகள் தமது ‘பத்திரிக்கா தர்மத்தை’ வெளிப்படுத்தியிருக்கின்றன. “நடைபெற்ற போலீசு வன்முறையின் தொடக்கமாக, போலீசு உயரதிகாரி ஒருவருடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்த சீருடையணியாத, பொதுமக்களில் ஒருவரைப் போன்ற தோற்றத்துடன் இருந்த ஒரு மர்ம நபர்தான் ஒரு கல்லை எடுத்து போலீசு மீது எறிந்து கலவரத்தைத் தொடங்கிவைத்தார்” என்று வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்களில் ஒருவரான பிரபாகரன் தெளிவாக அறிவித்த பிறகும், நமது போலிகம்யூனிஸ்டுகள் நடத்துகின்ற ‘நடுவுநிலை’ நாளேடுகள் உள்பட அனைத்திலும், செய்திகள் நேர்மையாக வெளியிடப்படவில்லை.

சுப்பிரமணியசாமியின் குரல் பார்ப்பன-இந்து பயங்கரவாதிகளின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்துவந்த வேளையில், அவன் மீது விழுந்த அடியும் அழுகல் முட்டையும் ஒட்டுமொத்த பார்ப்பன சமூகத்தின் மீது விழுந்ததைப் போல் பார்ப்பன அதிகார வர்க்கம் துடித்திருக்கிறது. அதனால்தான், ராமனைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய ’சூத்திர’கருணாநிதியின் போலீசைக் கொண்டே மேற்கண்ட அவமானத்திற்கான எதிர்வினையை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது. கருணாநிதிக்கும் ’ராமன் அலை’யால் பாதிக்கப்பட்டதாக எண்ணிக்கொண்டிருந்த வாக்கு எண்ணிக்கையினைக் கொஞ்சம் சமன் செய்துகொள்ளலாம் என்கிற நப்பாசை துளிர்விட, போலீசு வன்முறை வெளிப்படையாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அதுதான் நேற்றைய பயங்கரத்தின் முக்கியக் காரணியாக இருந்துள்ளது.

‘சூத்திர’கருணாநிதியின் போலீஸே, நியாயமாக தண்டிக்கப்பட்ட ஒற்றைப் பார்ப்பனன் சு.சாமிக்கு ஆதரவாக இப்படி கண்மூடித்தனமான தாக்குதலை நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் மீதே ஏவிவிட முடிகிறதென்றால், நரேந்திரமோடியின் போலீசு இதைவிட எத்தனை மடங்கு கேவல்மாக நடந்திருக்கும் என்பதனையும் இப்பிரச்சினையைக் கொண்டே அளவிட்டு புரிந்து கொள்ளலாம்.

சாராயம் விற்பவனிடமும் சகல சமூகவிரோத செயல்களுக் செய்துவருபவர்களிடத்திலெல்லாம் நக்கிப் பிழைத்துவரும் காவல்நாய்கள், பொதுமக்களின் மீது, சமூக நலன் குறித்த விசயத்திற்காக போராடிக்கொண்டிருப்பவர்களின் மீது, தாக்க்குதல் நடத்தும்போதுதான் தனது எஜமான விசுவாசத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன. மக்களின் சுரனையற்ற தன்மையினை மட்டுமே மையமாக வைத்து பயன்படுத்திக் கொண்டு இத்தனை அட்டூழியங்களையும் செய்துவருகின்றன. இது கருணாநிதி-ஜெயலலிதா-பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. எது நடந்தாலும் கொஞ்சமும் சுரணையற்ற அஃறினைப் பொருளாக நடமாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சாமானியனுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுகின்ற தாக்குதல்கள்தான். நாம் உடனடியாக வீழ்த்தியழிக்க வேண்டிய எதிரி நம்முடைய இந்த அற்ப வாழ்முறைதான். இந்த ‘சகஜ நிலை’யை நம்மிடமிருந்து இல்லாதொழிக்கத் தவறும் வரை இப்படிப்பட்ட ஆளும்வர்க்க கேடுகளை நேரடியாக ஆதரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பொருள்.

கிளர்ந்தெழுவோம். ”அவர்களோ சிலர், நாமோ பலர்.....” என்கிற நமது முன்னோடிகளின் உச்சரித்த உணர்ச்சிகளை பிரயோகிக்கின்ற களத்தில் இணைவோம். பார்ப்பன-அதிகார வர்க்கத்தினை வேரறுப்போம்!

தோழமையுடன்,
ஏகலைவன்.

Saturday, February 14, 2009

’ஹிந்து’ராமின் கழிவுகளைப் பரிமாறும் சி.பி.எம்.மின் பத்திரிக்கைகள்...

//////////வள்ளுவப் பெருமகனார் பாடிய குறள். வெளிவரும் செய்திகளையும், கேட்கிற, படிக்கிற செய்தி களையும், ஆழமாகத் தெரிந்து அதற்குத் தீர்வு காணும் பாதையில் பயணிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அத்தகைய அறிவுத் தெளிவைக் கொடுப்பது சமூகத்தின் கடமை. சமூகம் தனது கடமையில் இருந்து தவறியமைக்கு உதாரணம் முத்துக்குமார். 28 வயது இளைஞன், பத்திரிகையாளன். ஆனால் சாஸ்திரி பவனுக்கு முன்னாள், ஆயிரக்கணக்கான மக்கள் நட மாட்டம் கொண்ட சென்னை மாநகரின் பொதுச்சாலையில் நெருப்புத் தனலுக்கு இரையாக்கிக் கொண்டது கொடுமை.////////////

அன்பார்ந்த தோழர்களே,

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியின் அல்லக்கை அமைப்பான DYFI நடத்துகின்ற ஒரு பத்திரிக்கையின் தலையங்கத்தின் தொடக்க வரிகள். அந்த இதழின், கிட்டத்தட்ட அனைத்து பக்கங்களிலும் முத்துக்குமாரின் வீரமரணத்தை விமர்சிக்கும் வரிகளை நாம் பார்க்க முடியும். முத்துக்குமார் ஏதோ தீக்குளிக்கும் கலாச்சாரத்தை இளைஞர்கள் மனதில் ஏற்படுத்திவிட்டதாகக் கதறுகிறது இக்கூட்டம்.

‘ஹிந்து’ராமின் கழிவுகளை ‘தேவாமிருதமாக’ உட்கொள்ளும் இக்கும்பலிடம் இருந்து வரும் கழிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு இவர்களின் எழுத்துக்கள் ஒரு பேருண்மையாக இருக்கிறது.

கீற்று இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த போலிகம்யூனிச பத்திரிக்கையின் தலையங்கத்தை எதிர்த்து அப்பக்கத்திலேயே கருத்து பதிந்துள்ள வசந்தி என்பவரது எதிர்விணையை நான் இங்கே தோழர்களின் பார்வைக்கு வைக்கிறேன். இந்த எதிர்வினை பதிவாகி இரண்டு நாட்களாகியும் நேர்மையான எந்த பதிலும் அதில் பதியப்படவில்லை. விமர்சனங்களை இருட்டடிப்பு செய்யும் போலிகளின் கலாச்சாரம் கீற்று தளத்தில் எடுபடாமல் போயிருக்கிறது.

தோழமையுடன்,
ஏகலைவன்.

---------------------------------------------------------------------------------------

முட்டாள்தனமான தலையங்கம் இது. வேலையில்லை சுகாதர வசதியில்லை என்பதற்காக நடப்பதல்ல ஈழ மக்களின் போராட்டம். உங்களுக்கு ஆயுத்ம்தான் பிரச்சினை என்றால் அதனை நேரடியாக சொல்லலாமே..ஏன் ஒளிவு மறைவு..


தேசிய இனங்கள் எந்த சூழலில் பிரிந்து செல்லலாம் என தோழர் லெனின் சொன்னது இது. ''எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மிகச் சிறு அளவுகூட ஒடுக்குமுறையோ அநீதியோ இருக்கக்கூடாது. இவைதாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும். (லெ.தொ.நூ. 19.91, ஒப்: 243).


வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள உலக மக்களில் பெரும்பான்மையோரது இயக்கம், முதலாளியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகத் திரும்பும் என்பதும், நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகக் கூடுதலான புரட்சிகரப் பங்கை வகிக்கக் கூடும் என்பதும் தெளிவாகிவிட்டது. (லெ.தொ.நூ. 32. 482).


தேசிய ஒடுக்குமுறையைத் துடைத்தெறிய, தன்னாட்சிப்பகுதிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம், அவை எவ்வளவு சிறியதாகவும் இருக்கலாம். இவை முற்றிலும் ஓரின மக்கள் தொகையினரைக் கொண்டவையாக இருக்க வேண்டும். நாடு முழுவதிலும் - ஏன் - உலகம் முழுவதிலுமே சிதறிக் கிடக்கின்ற அந்தந்த தேசிய இன மக்களை ஈர்க்கக்கூடிய பகுதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லாவகை உறவுகளையும் சுதந்திரமான இணைப்புகளையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடிய தன்னாட்சிப் பகுதிகளாக இருக்க வேண்டும். (லெ.தொ.நூ. 20.50).


ஐடியலான முரணற்ற முழுமையான ஜனநாயக குடியரசு பற்றிய லெனின் (லெ.தொ.நூ. 19.427) சொன்னது '' இவ் அடிப்படை சட்டம், எல்லா தேசங்களுக்கும் மொழிகளுக்கும் முழுச் சமத்துவத்தை உத்திரவாதம் செய்ய வேண்டும்; எந்த ஒரு கட்டாய ஆட்சி மொழியையும் ஏற்காததாக இருக்க வேண்டும். சொந்த மொழிகள் அனைத்திலும் கல்விபுகட்டுகிற பள்ளிகளை மக்களுக்கு வழங்குகிற ஒன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு தேசத்துகக்கும் தனிச்சலுகை வழங்குவதையும், தேசிய சிறுபான்மையினரின் உரிமைக்ள் மீது கை வைப்பதையும் தடை செய்கின்ற சட்டமாக இருக்க வேண்டும்.''


So லெனின் முட்டாள்தனமாக பேசி உள்ளாரா ? அல்லது நீங்களா ? என்பதை தெளிவு படுத்துங்கள்.


தொன்மை சமூகம் நாடாள வேண்டும என்ற ஆவலில் தோன்றியதா ஈழமக்களின் போராட்டம்? வரலாறு பாமர மக்களுக்கு தெரிந்த அளவு கூடவா தங்களை மார்க்சியவாதிகள் என்ச் சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியாது. அதிகாரத்தின் மீதான பற்று என நீங்கள் சொல்லியிருப்பது சுதந்திரத்திற்கான தாகத்தை. மேலே கண்ட லெனின் வாசகங்களை மீண்டும் படியுங்கள். நீங்கள் ஈழத்தை கேவலப்படுத்தவில்லை. மாறாக லெனினைக் கேவலப்படுத்தி உள்ளீர்கள்.


/“இதற்கும் மேலே சென்று’’ இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவது என்ற எதிர்பார்ப்பு ஒரு வித மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்./


இது உண்மையான கூற்று நீங்கள் எதனையும் புரிந்து கொள்ள மறுப்பது என்ற ஜனநாயப்பண்பை எப்போதே பெற்று உள்ளீர்கள். பிராந்திய வல்லரசாக, அமெரிக்காவின் தெற்காசியப் பேட்டை ரவுடியாக இந்தியா உள்ளது என அறிவுஜீவிகள் விமர்சித்தால் பாஜக வைவிட உங்களுக்குதான் கோபம் வரும்போல தெரிகின்றது. என்ன செய்ய உங்களது கொள்கையை விட சொம்நாத் சட்டர்ஜி காட்டிய நாடாளுமன்ற விசுவாசம் அதற்கு வவாய்ப்பு கிடைக்காத தங்களைப் போன்றோருக்கு தேசாபிமானமாக வெளிப்படுகின்றது, தேச ஆளும் வர்க்கம் ஒரு பேட்டை ரவுடியாக இருந்தால் கூட.


/ தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கிற சமூகக் கொடுமைகளில் ஒன்றாக தீக்குளிப்பும் நீடிக்கிறது. போராடி வெல்வது, வெல்வதற்காகப் போராடுவது, தமிழ் இலக்கிய சான்றாக இருக்கிறபோது, தன்னைத் தானே அழித்துக் கொல்வதும், அதை அரசியலாக்க முயற்சிப்பதும், இரைஞ்சுவதற்கு ஒப்பாகும்/

தீக்குளிப்பது சமூகக் கொடுமைதான் அது சதி என்ற வடிவில் வந்தால். சக மனிதர்கள் மீது இன ஒழிப்பு நடக்கும்போது வாளாவிருக்கும் உங்களைப் போன்ற இளைஞர் இயக்கங்கள் இருக்கும் தேசத்தில் தீக்குளித்துதான் ஒரு இளைஞன் உங்களது கள்ள மவுனத்தை உடைக்க முடிகின்றதென்றால் அதற்காக முத்துக்குமரன் வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. முத்துக்குமரன் இந்திய அரசுட்ன போராடவில்லை, கள்ள மவுனம் இன்றளவும் சாதிக்கும் போலி ஜனநாயக, கம்யூனிச வாதிகளின் மன்ச்சாட்சிக்கு எதிராகத்தான் போராடி உள்ளான். வரலாறு தெரிந்தால் வியத்நாம் புத்தபிக்குகள் அமெரிக்க ஏகாதிபத்திய போர்வெறிக்கு எதிராக அறுபதுகளில் நிகழ்த்திய தீக்குளிப்பு வடிவத்தை என்னவென்று சொல்வீர்கள்.


அதெல்லாம் இருக்கட்டும். தமிழக இளைஞர்களை வாயைக் கட்டி போராட்டம், நாமம் போட்டு போராடுவது, கழுதையிடம் மனுக் கொடுத்து அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடுவது, திருவோடு எடுத்து போராடுவது, கோவணம் கட்டிப் போராடுவது, ....இப்படி இரைஞ்சுகினற் வடிவங்களையெல்லாம் போராட்டம் என அழைத்துக் கொண்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் தாங்கள் என்பது மறந்துவிட்டதா?


/ “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம்” என்றான் பாரதி. இதற்கு முரணாக ஒருவன் அழிந்து தமிழனை காக்கலாம் என்பது, பகுத்தறிவு அற்றது./


சுய அறிவில்லாமல் அல்லது லாஜிக் இல்லாமல் எழுதப்பட்ட ஒரு வாக்கியம் பகுத்தறிவு பற்றிப் பேசுவது முரண்நகை. கடைசியாக பேச்சுவார்த்தை அதாங்க அரசியல் தீர்வுன்னு நீங்க சொல்ற கட்டப்பஞ்சாயத்துதான் வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் சமத்துவவாதிகள். இப்போரை ராஜபக்ஷ நிறுத்தவும் கோருவீர்கள் எனக் கருதுகிறேன். அது சரி... அதுக்கு யாரிடம் வலியுறுத்து போராடுவீர்கள். இந்தியாவிடமா? ஒரு நிமிசம். இந்தியாவும் டாங்கிகள், ரேடார்களோடு தனது ராணுவத்தையும் அனுப்பியுள்ளது. என்ன சொல்லி தப்பிக்க போறீங்க.

------------------------------------------------------------------------------------

Sunday, February 8, 2009

சி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம் - தீக்கதிர்!.... மற்றும் ’கோயபல்ஸ்’ செல்வப்பெருமாள்!!...

அன்பார்ந்த தோழர்களே!

ஈழப் போராட்டங்கள் குறித்தும், அங்கு சிங்கள பேரினவாத ராணுவத்துடன் கூட்டு சேர்ந்து இந்திய மேலாதிக்க அரசு நடத்திவரும் மாபெரும் தமிழின அழிப்பு பாசிச நடவடிக்கைகள் குறித்தும், விடுதலைப் போராட்டத்தில் மக்களுடன் ஒன்றுபடாமல், சிங்கள இனவெறி இராணுவத்தையொத்த பாசிச முகத்தோடு மக்களைப் பராமரித்து வரும் புலிகள் குறித்தும் தொடர்ந்து எதிர்த்துப் பேசவேண்டிய எழுதவேண்டிய, போராட வேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்து வருகிறேம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை எட்டப் போகும் இந்த இனவிடுதலைப் போரினை மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்தில், சரியான நிலைப்பாட்டில் அனுகுவதன் கடமையை உணர்ந்தே எமது தோழர்கள் இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில், போலி கம்யூனிச கட்சியாக இருந்து, டாடாயிஸ்ட், ரவுடியிஸ்ட், என்கிற படிநிலைகளில் ‘முன்னேறி’, குஜராத் இந்து பாசிஸ்டுகள் மக்கள் மீது ஏவிய பாலியல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளைக் கையாண்டு, கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டுப்போட்டு ஆதரித்துவந்த மேற்குவங்கது மக்கள் மீது பிரயோகித்ததன் மூலம் சி.பி.எம்.(மோடியிஸ்ட்)ஆக பரினமித்த போலிகள், இப்போது, போலித்தனமேயல்லாத, கலப்பில்லாத, ’அக்மார்க்’ பாசிஸ்ட்டாக ‘உயர்ந்திருக்கிறார்கள்’.

ஈழப் போராட்டம் குறித்த தமது கட்சியின் நிலைப்பாடு(!) ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த நிலைப்பாட்டைவிடக் கேவலமாக நாறிக்கொண்டிருக்கிறது; தமது கட்சியின் அணிகள் மத்தியில். கட்சியின் நேர்மையான அணிகள் பலர் சந்தடியில்லாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளதோடு, கட்சியில் செயல்படும் அணிகளும் கடுமையான அதிருப்தியோடு இருப்பதை எதிர்கொள்ளமுடியாத தலைமை, அவர்களுக்கு ‘வகுப்பு’கள் நடத்தி புரியவைக்கக் கோரியிருக்கிறதாம். ஜெயாமாமியுடன் இவர்கள் கொண்டுள்ள ‘மதச்சார்பற்ற’ கூட்டணி குறித்து பிறகு பேசலாம். ஈழ போராட்டம் பற்றி இவர்கள் பிதற்றி வருவது குறித்து இப்பதிவில் எனது கருத்துக்கள் சிலவற்றைப் பதியலாம் என்றிருக்கிறேன்.

சி.பி.எம். கட்சியின் தீக்கதிர் என்கிற கழிவறைக் காகிதத்தையும், கூலிக்கு அவதூறு பரப்பும் கோயபல்சு செல்வப்பெருமாளின் சில பதிவுகளையும் எடுத்துக் கொண்டு சுருக்கமாக இவ்விடயத்தை அனுகலாம் என்று நினைக்கிறேன்.

ஈழப் போராட்டத்தில் அப்பாவி மக்கள் யாரும் சாகடிக்கப்படவேயில்லை, இங்குள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சிலர்தான் மக்கள் சாகடிக்கப்படுவதாக பேசிவருகின்றனர், என்கிற ’ஹிந்து’ராமின் கருத்துக்களின் தமிழாக்கத்தைத்தான் தீக்கதிரின் பக்கங்களில் நாம் காணமுடிகிறது. ஈழ மக்கள் கேட்பாரில்லாமல் அழிந்து கொண்டிருக்கும்போது, இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி குறித்து சிலாகித்து எழுதுகிறான் தீக்கதிரில். அதுவும் முதல் பக்கத்திலேயே “யுவராஜ் சிங் அபார சதம்....” என்று படத்துடன் செய்தி வெளியிடுகிறான். அதனைப் பார்க்கும்போதே வயிறு பற்றியெறிகிறது. அங்குள்ள அப்பாவித் தமிழ்மக்களின் மரணஓலம் இவன் காதுக்கு கேட்கவில்லையாம், ’கிரிக்கெட் ரசிகர்களின்’ விசில் சத்தத்தைச் சிலாகிக்கிறான்.கேட்டால், “கிரிக்கெட் ரசிகர்களும் கட்சிக்குள் வந்து கம்யூனிஸ்டாகலாம் அல்லவா?.. அதற்காகத்தான் கிரிக்கெட் செய்திகள்” என்று சொல்கிறான். கிரிக்கெட் ரசிகர்கள் கம்யூனிஸ்டாகலாம், தமிழர்கள் கம்யூனிஸ்டாவதற்கு அருகதையற்றவர்களா? இங்குள்ள உணர்வுள்ள மக்களின் மீது மலம் கழிப்பதைப் போல்தான் அவன் வெளியிடும் கிரிக்கெட், சினிமாச் செய்திகள் இருக்கின்றன. அதனால்தான் அப்பத்திரிக்கையினை கழிப்பறைக் காகிதம் என்று சொல்கிறேன்.

அதேபோல சி.பி.எம்.மின் இணையக் கோமாளி ‘சந்திப்பு’ என்கிற கே.செல்வப்பெருமாள் வேறு, இப்போது எங்கெங்கேயோ சுற்றி மேய்ந்து லெனினிடத்தில் சரணடைந்து ’இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு’ என்கிற தலைப்பில் ஒரு பதிவினைப் பதிந்துள்ளான். அப்பதிவில் அவன் மேற்கோள் காட்டியுள்ள தோழர் லெனினின் வரிகளைத் தவிர மற்றவையத்தனையும் வடிகட்டிய பொய்களாகவும், பிதற்றலாகவுமே இருக்கின்றன. அவன் மேற்கோள் காட்டியுள்ள வரிகளிலிருந்தே தோழர் லெனின் சி.பி.எம்.மின் போலித் தேசிய நிலைப்பாட்டைத் துவைத்து வெளுக்கிறார்.

///////தேசங்களுக்குத் தன்னாட்சி உரிமை என்பதை எச்சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு பிரிந்து செல்வதற்கான தகுதி உண்டு என்பதுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. பிரிவினைப் பிரச்சனை ஒவ்வொன்றையும் சமூக வளர்ச்சி முழுவதன் நலன்கள், சோசலிசத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள் ஆகியவற்றுடன் அது பொருந்துகிறதா என்ற தகுதியை மட்டுமே கொண்டு சமூக ஜனநாயகக் கட்சி தீர்மானிக்க வேண்டும்.(லெ.தொ.நூ.19.429)
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை//// - இது அவன் குறிப்பிட்டுள்ள தோழர் லெனினின் மேற்கோள்களில் ஒன்று.

‘சோசலிசத்திற்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள்...’ என்பதைப் பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்குத் தகுதியிருக்கிறதா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஈழப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள், சிங்கள பேரினவாத அரசிடம் பொங்கி வழிவதாக இவர்கள் உருவகப்படுத்துகின்ற கேவலமான நிலையில், லெனினின் மேற்கோள்கள் இவர்களது தேசிய நிலைப்பாட்டின் மீது காறி உமிழ்வதாகத்தானே இருக்கிறது!

’மாநில சுயாட்சி...’ என்கிற இவர்களது பசப்பல்வாதம் இந்தியாபோன்ற ‘ஜனநாயகம் பூத்துக்குலுங்கும்’ நாட்டிலேயே சாத்தியப்படவில்லை என்பதை நாங்கள் சொல்வது ஒருபுறமிருக்கட்டும், அதை இவர்களது கட்சியே சொல்லிவருகிறதே! மே.வங்கத்தில் இவர்கள் கோட்டைவிட்ட துறைகளின் முன்னேற்றமில்லாத நிலை குறித்து கேள்வி கேட்டால், நேரடியாக மத்திய அரசைக் காட்டுகிறார்களே, அது ஏன்? இவர்கள் போதிக்கும் ‘மாநிலத்திற்கான சுயாட்சி...’ அங்கே அம்மனமாக நிற்கிறது. இதே நிலைதான் இந்திய தேசியம் என்கிற பார்ப்பன-இந்துதேசியத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து மாநிலத்தின் அவலநிலைகளாகக் காட்சியளிக்கின்றன. இவன் என்னடான்னா இலங்கை அரசிடமிருந்து மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள பரிந்துரை செய்கிறான், இதனால்தான் இவனைக் கோமாளி என்று சொல்ல வேண்டியுள்ளது.

தனி ஈழம் அல்லது ஒன்றுபட்ட இலங்கை என்கிற இருவேறு கருத்துக்களுக்கும் மத்தியில், தீர்வினை ஒடுக்கப்படுகின்ற மக்களின் சுயநிர்ணய உரிமையின் மூலமாகத்தான் எட்டமுடியும் என்று சொல்பவர்களெல்லோரும் திரிபுவாதிகளாம். சுயநிர்ணய உரிமை என்பது என்ன? ஒடுக்கப்படுகின்ற தமிழ் இனமக்கள், இத்தனையாண்டுகாலம் தம்மை ஒடுக்கியழித்த சிங்கள பேரினவாதத்தோடு இணைவதையோ அல்லது விலகுவதையோ தமது சொந்த அனுபவத்தின் மூலமாக முடிவு செய்வதுதான் சுயநிர்ணய உரிமையாகும். அது தனி ஈழக் கோரிக்கையினை ஆதரிக்கலாம், அல்லது எதிர்க்கலாம். அதேபோல் ஐக்கியத்தையும் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். சுய நிர்ணய உரிமை என்பது தனி ஈழத்தை மட்டுமே கோரிக்கையாகக் கொண்டது அல்லவேஅல்ல. இதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

சி.பி.எம்.செல்வப்பெருமாளோ, சுயநிர்ணய உரிமையை தனி ஈழக் கோரிக்கையோடு மட்டும் பொருத்தி தனது பிழைப்புவாத அரசியலுக்கு சுதிசேர்க்கத் துடிக்கிறான். மார்க்சிய ஆசான் லெனினது மேற்கோள்களை தமக்கேற்றவாறு சுருக்கி, வெட்டி எடுத்து மோசடியாக ஒட்டவைத்துக் கொள்கிறான். இவனைப் பொட்டிலறைவது போல தோழர் லெனின் தமது ‘தேசிய இனப்பிரச்சினை குறித்த விமர்சனக் குறிப்புகள்...’ எனும் நூலில் கீழ்கண்டவாறு சொல்கிறார்.

ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றூம் கருதுவது நமது உரிமையும், கடமையுமாகும்.” - லெனின். (தே.வி.பா.ச. - பக்கம்’ 245)

ஒடுக்கும் இனத்திலிருக்கும் தொழிலாளர்களின் சர்வதேசிய உணர்வினை வளர்த்து ஒடுக்கப்படுகின்ற இனத்திற்காகப் போராடச் செய்கின்ற வகையிலா இவர்கள் வழிபடும் ஜே.வி.பி. இருந்துவருகிறது? எனவேதான், ஜே.வி.பி.யின் அடியொற்றி நடக்கும் இப்போலிகளை ஏகாதிபத்தியவாதிகள் என்றும் கயவர்கள் என்றும் போலிகள் என்றும் நாம் உறுதியாகக் கூறுகிறோம். தோழர் லெனின் தான் நம்மை அவ்வாறு கருதச் சொல்கிறார்.

(பதிவின் நீளம் கருதி தோழர் இரயாகரன் அவர்களின் ‘தேசியம் எப்பொழுதும், எங்கும் முதலாளித்துவ கோரிக்கைய ஒழிய, பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல...’ என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு குறிப்புகளை இங்கே பதிவதைத் தவிர்க்கிறேன். அதேபோல தோழர் லெனின் சி.பி.எம். என்கிற திரிபுவாத கும்பலை அம்பலப்படுத்துவதற்காகவே எழுதிய குறிப்புகள் பலவற்றையும் தவிர்க்கிறேன்.)

பொதுவாக இனப்போராட்டங்கள் குறித்து இந்த போலிக்கும்பல் எடுக்கும் நிலைப்பாடுகள் பாட்டாளிவர்க்க நிலைப்பாடுகளாக இல்லாது பார்ப்பனவாத நிலைப்பாடுகளாக வெளிப்பட்டு அம்பலமாகிவிடுகிறது. பார்ப்பன-இந்து தேசியத்தினை இந்திய தேசமென்றும் தேசத்தின் புனிதமென்றும் ஏனைய பார்ப்பனிய-முதலாளித்துவ ’தேசிய’க் கட்சிகளான காங்கிரசு, பாஜக வோடு ஒத்த குரலெழுப்புவதில் போலிகளின் பங்கு கனிசமானது. காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இப்போலிக் கும்பல் கொண்டிருக்கும் நிலைப்பாடு பார்ப்பன-இந்துவெறி பாசிஸ்டுகளின் நிலைப்பாட்டோடு ஒன்றிப்போவதுதான் இதற்கான நேரடி சாட்சியாக இருக்கிறது. போதாக்குறைக்கு, விடுதலைக்காகப் போராடும் காஷ்மீர் மக்களை “பிரிவினைவாதிகள்...” என்று முத்திரைகுத்தி செய்திவெளியிடுகின்றன, இவர்களின் ஏடுகள்.

எனவே, ஈழப் போராட்டமும் இவர்களது பார்ப்பன-இந்து தேசியக் கண்ணோட்டத்தில்தான் விமர்சிக்கப்படுகிறதேயொழிய அதிலொன்றும் மார்க்சியக் கண்ணோட்டமுமில்லை, வேறெந்த மண்ணாங்கட்டியுமில்லை. இந்த பார்ப்பன அரிப்புதான் இலங்கையின் ஜே.வி.பி.யோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டே இல்லையென்று மோசடியாக மறுத்தும் வருகிறது. இதனை அம்பலப்படுத்தி போலிகளை நேர்மையானவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் அணிகளின் மத்தியில் கேள்வியெழுப்ப வேண்டும்.

கடைசியாக, முத்துக்குமாரின் மரணம் குறித்த இவர்களது மதிப்பீடுகள், அவரது தீக்குளிப்பை சாதாரண தற்கொலையாக்கி அவரது தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறது. தீக்குளிப்பதற்கு முன் அவர் வெளியிட்ட அந்த அற்புதமான மரணசாசனத்தை பெயரளவுக்கேனும் பரிசீலிக்கத் தயங்கி, அதனை மொத்தமாக புறக்கனிக்கிறது, இக்கும்பல். முத்துக்குமார் தன்னுடலை எரிப்பதற்கு வைத்த தீ, கண்டும் காணாதமாதிரியிருக்கும் இச்சமூகத்தின் அமைதியின் மேல் வைக்கப்பட்ட தீயாக இருப்பதால் பதறுகிறது இப்பாசிசக் கூட்டம். அவர் தன் மரணத்தின் மூலமாக சொல்கின்ற செய்தியினை உயர்த்திப்பிடிப்பவர்களை ‘பிணவாத அரசியல்’ நடத்துபவர்கள் என்று தூற்றுகிறது.

யார் பிணவாத அரசியல் நடத்துபவர்கள்? ஒரு இளைஞன், எந்தவிதமான தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அல்லாமல், சமூகத்தின் இழிநிலையைப் போக்க தன் உடலைக் கொளுத்திக் கொண்ட தீயை எடுத்து, அவனது புரட்சிகர விருப்பத்தினை ஏற்று, அத்தீயினை சமூக அற்பத்தனத்தின் மீது வைப்பது பிணவாத அரசியல் என்றால்; 44பேரை குழந்தைகள், பெண்கள் என்று தீயிலிட்டுப் பொசுக்கிய வெண்மணியினை வைத்து நீங்கள் நடத்துவது என்ன புரட்சிகர அரசியலா? இல்லை, அதுதான் பிணவாத அரசியல். வெண்மணியின் தாக்கத்தை நீங்கள் ஓட்டுகளாக்கிப் பொறுக்கியது அன்றி, அதனைக் கொண்டு வேறு ஏதேனும் சிறு துரும்பையேனும் இதுவரை அசைத்திருக்கிறீர்களா?

கூலி உயர்வுக்காக நிலப்பிரபுவுடன் களம் கண்ட வெண்மணியில் நீங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டை, கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், அப்போராட்டத்தினையொத்த போராட்டமாக வெடித்த நக்சல்பரியில் உமது கட்சி ஏன் மாறுபட்டு நின்றது? ஜோதிபாசு தன்னுடைய போலிசு துறையினைக் கொண்டு தமது சொந்த அணிகளையே சுட்டுத்தள்ள உத்தரவிட்டது எப்படி நேர்ந்தது? அதனால்தான் சொல்கிறேன், வெண்மணியில் நீங்கள் செய்தது பிணவாத அரசியல். அதனால்தான், வெண்மணிக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவை போற்றிப் பாதுகாத்த தி.மு.க.வோடு அடுத்த தேர்தலிலேயே கூட்டணி வைத்து சோரம்போக முடிந்தது உங்களால்.

44 பேரை பலிகொடுத்த உழைக்கும் மக்கள், கருக்கறிவாள், வேல்கம்புகளுடன் லட்சக்கணக்கில் திரண்டு நின்றபோது, சட்டப்போராட்டத்தின் மூலமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று பசப்பல்வாதம் பேசி அவர்களின் உணர்வுகளை மழுங்கடித்தீர்கள். ஆனால், நக்சல்பரியில் விதைக்கப்பட்ட தியாகிகளின் உடல்களிலிருந்து எழுந்த புரட்சித்தீ இன்றுவரை, (உங்கள் மொழியில் சொல்வதானால்) சுக்குநூறாகப் பிளவுண்டிருந்தாலும் ஆளூம்வர்க்கத்தை குலைநடுங்கச் செய்துகொண்டிருக்கிறது. எதிர்கால சமூகமாற்றத்திற்கும் நம்பிக்கையூட்டக்கூடியவர்களாக நக்சல்பரிகளே இருந்துவருகின்றனர்.

எனவே, ஓட்டுப்பொறுக்கி பிழைப்பதற்காக நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பிணவாத அரசியலை ஒருபோதும் மற்றவ்ர்கள்மீது நீங்கள் சுமத்த முடியாது. நீங்கள் மற்றவர்களின் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள், உங்களையே மீண்டும் மீண்டும் கேள்விக்குட்படுத்தி அம்பலப்படுத்துகின்றன.

ஈழப் போராட்டத்தில் ஹிந்து ராம் என்பவனோடு நீங்கள் வைத்திருக்கும் கருத்தொற்றுமையும், பார்ப்பன-இந்து தேசியப் பார்வையும் உங்கள் கட்சியின் சீரழிவிற்கு பெரும் பங்காற்றியிருக்கிறது. இதே சமகாலத்தில், ஜெயாவுடன் நீங்கள் கொண்டிருக்கும் கூட்டணியும் அதற்கு கூடுதல் பங்குவகிப்பதன் மூலமாக உங்களின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இன்னும் மிச்சமிருப்பது கொடியும் கோவணமும்தான். அதனை உருவி எறிகிற வேலைகளை எஞ்சியிருக்கும் நேர்மையான அணிகள் செய்வார்கள்.

புரட்சிகர வணக்கங்களுடன்!


ஏகலைவன்.

தொடர்புடைய பதிவுகள்.....

1. சி.பி.எம். கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட நிலைப்பாடும், டவுசர் கழன்ற சந்திப்பும்

2. இந்திய அரசே தலையிடாதே! சிபிஎம் பாசிஸ்ட்டே கோயபல்ஸ் தனத்தை நிறுத்து!!

3. ஈழ மக்கள் மீது மலம் கழிக்கும் சந்திப்பு: இந்திய மேலாதிக்கத்துக்கு கம்பளம் விரிக்கும் போலி கம்யூனிஸ்டுகள்...

4. ஈழம்: இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

5. ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!

6. மனித அவலத்தை நிறுத்த, யுத்த நிறுத்தம் ஒரு தீர்வா!? அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா?

Sunday, February 1, 2009

மாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் எழுச்சியும், துரோகிகளின் இகழ்ச்சியும்!...

”வாழ்க்கையில், எல்லா ஆசைகளும், நம்பிக்கைகளும் உடையவன் தான் நானும். ஆனால், தேவையான நேரத்தில், அவைகளை என்னால் உதறிவிட முடியும்; அதுதான் உண்மையான தியாகமாகும். மனிதனின் வாழ்க்கைப் பாதையில் அந்த விஷயங்களெல்லாம், ஒரு நாளும் குறுக்கே நிற்க முடியாது - அவன் நிஜமாகவே மனிதனாக இருக்கும் பட்சத்தில்....” - இது 1929’ஏப்ரலில், டெல்லி சட்டசபையில் குண்டுவீசிக் கைதாகி தூக்குத்தண்டனை கிடைத்தாலும் துணிவோடு சந்திக்கவேண்டும் என்கிற முடிவெடுத்த பிறகு மாவீரன் பகத்சிங் சொன்னது.

தேசத்திற்காக உயிரைக்கொடுப்பதை அரிய வாய்ப்பாகக் கருதி பெருமிதத்தோடு ஏற்று நிற்கிற பக்குவம், வெறும் 23வயதான பகத்சிங்க்கு எப்படி வந்தது? தான் தூக்கிலிடப்படப்போகிறோம் என்பதனை அறிந்தும், அன்றைய பார்ப்பன-சனாதான-போலி அகிம்சைகளின் இருளில் சொக்கிக்கிடந்த இந்திய மக்களின் ‘கேளாத செவிகள் கேட்கட்டும்’ என்று முழக்கமிட்டு (யாரையும் கொல்லாத வெற்று குண்டை வீசி) அனைவரது கவனத்தையும் ஈர்த்து, கைதாகி தூக்குக் கயிறைத் தொட்டுத்தழுவினான் அந்த வீரன்.

நம்முடைய சமகாலத்தில், சிங்களப் பேரினவாதத்தாலும் இந்திய மேலாதிக்கத்தாலும் மிகக் கொடூரமாக ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி சொல்லிமாளாத நிலை. 1983 ஜூலைப் படுகொலைகளுக்குப் பிறகு வீறு கொண்டெழுந்த தமிழ் விடுதலை இயக்கங்களை,போராளிக்குழுவாக இருந்த விடுதலைப் புலிகளை வெறும் கூலிப்படைகளாகச் சீரழித்தது பாசிச இந்திரா - எம்.ஜி.ஆர். கூட்டணி. அதிலிருந்து இன்று வரை, ஈழத் தமிழ்க் குழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள், வாலிபர்கள் என பல்வேறு அப்பாவித் தமிழர்கள் கொன்று வீசப்படுவதும். குண்டடிபட்டு செத்து விழுந்த பிறகும் அந்த பெண்ணுடல்களைப் புணரும் சிங்கள ராணுவத்தின் வக்கிற வெறியினையும் சிறிதும் பொருட்படுத்தாமல், கிரிக்கெட்டிலும், சினிமாவிலும், இன்னபிற கேளிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தின் கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்காகவே தனது உயிரைத் தீக்கிரையாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான் ஒரு சாதாரண தமிழ் இளைஞன் முத்துக்குமார்.

“என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்...” என்பதாக தனது மரண சாசனத்தில் சொல்லியிருக்கிறார் முத்துக்குமார். தனது மரணத்தின் மூலம் அற்ப அனுதாபத்தையோ வெற்றுக் கதறல்களையோ, சித்தாந்த வியாக்கியானங்களையோ மறுத்து நம்மிடமிருந்து போராட்டத்தை வேண்டுகிறார் முத்துக்குமார்.

பகத்சிங்கின் கடிதங்களையும், மருது சகோதரர்களின் திருச்சி பிரகடனத்தையும் ஏடுகளில் மட்டும் நாம் படித்திருக்கிறோம். அவர்களின் போராட்டங்களை, தியாகங்களை நேரில் பார்த்திருக்கும் வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இதோ நம் சமகாலத்தில், அகிம்சையும் அடிமைத்தனமும் பன்பாடாகத் திணிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இக்காலத்தில், அதன் விளைவாக போராட்டங்களும் ஆயுதங்களும் செயலற்றிருப்பதை உணர்ந்த காரணத்தால் தனது உடலை ”உயிராயுதமாய்.....” ஏந்துங்கள் என்று சொல்லிச் சென்ற அந்த சாதாரண இளைஞனின் தியாகம் மகத்தானது. அது சாதாரண நிகழ்வு அல்ல.

அறிவாயுதம் ஏந்திப் போராடுபவர்களுக்கு மத்தியில் தன்னால் முடிந்த உயிராயுதம் ஏந்தியிருப்பதாக முத்துக்குமார் குற்ப்பிட்டுள்ளது, அவரது முடிவினை விமர்சிப்பவர்களுக்கு அவர் முன்னறிந்து சொல்லிச் சென்ற பதிலாக இருக்கிறது. சாகும் தருவாயில் அவர் இச்சமூகத்துக்கு கொடுத்துச் சென்ற உயில் மட்டுமல்ல அது; சாதாரண ‘தற்கொலை’யாக அவரது முடிவை எடுத்துக்கொள்ள முடியாமல் இலட்சக்கணக்கான மக்களைக் கதறியழச் செய்த அற்புதப் படைப்பு அது. கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப எண்ணிக்கையிலான நபர்களே அவரை முன்னறிந்தவர்களாக இருந்திருப்பார்கள், இது உறுதி. மற்ற யாவரையும் அங்கே இழுத்துவந்தது அவரது அந்த இறுதிக் கடிதம் மட்டும்தான்.

கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தைத் தட்டி எழுப்புவதற்காக தனது உயிரையே கொடுக்கவேண்டியுள்ளதே என்று தனது கோபத்தை ஒட்டுமொத்தமாக மக்கள் மீது காட்டாமல், அவர்களுக்காக அனுதாபப்படுவதோடு, போலிப் பிரச்சினைகளோடு பிரிந்திருக்கும் எதிரிகளான இந்திய-தமிழக ஓட்டுப் பொறுக்கிகள் ஈழமக்களின் இன அழிப்பு நடவடிக்கையில் இணைந்திருப்பதை ஆழமாகச் சுட்டிக்காடி மக்களிடமிருந்து தனிமைப்படுத்திச் சாடியிருக்கிறார்; அவர்.

அவரது, அந்த சாடல்களை மெய்ப்பிக்கும் வகையில்தான் ஓட்டுப் பொறுக்கிகள் அனைவரும் நடந்து கொண்டனர். புலியாதரவு வேடம் போடும் வைக்கோ, திருமா, ராமதாசு போன்றோரும், புலியாதரவோடு பார்ப்பன பாசிசத்தைக் கலந்து ’போராடும்’ நெடுமாறன், (சசிகலா)நடராசன் போன்றோரும், எதற்காக இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதையும் எதற்காக முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறோம் என்பதையும் அறிந்திருக்காத சிபிஐ போலிகம்யூனிச தலைவர்களும் அங்கே ஆஜராகி, ‘எப்படியாவது இன்றைக்குள் முத்துக்குமாரை அடக்கம் செய்துவிட வேண்டும்...’ என்கிற ஆர்வத்தோடு தமது கைக்கூலித்தனத்தை வெளிக்காட்டி, அங்கு திரண்டிருந்த உணர்வாளர்களிடம் முறையாக வாங்கிக்கட்டிக் கொண்டார்கள்.

அங்கு வராமல், ஏது நடக்குமோ என்கிற உளைச்சலில் வயிற்றைப் பிசைந்து கொண்டு கிடந்த சத்தியமூர்த்தி பவனில் உள்ள பன்றிகளைப்பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. அவன் தெரிந்த எதிரி. தெரியாத துரோகிகளை என் செய்வது? “முத்துக்குமாரின் தியாகத்தை அரசியல் ஆக்காதீர்கள். அது நமது பன்பாடு அல்ல” என்று புலம்பிய கருணாநிதியைத்தான் தனது மரணசாசனத்தில் குற்றவாளிக் கூண்டில் முதன்மையானவராக நிறுத்திச் சென்றிருக்கிறான் முத்துக்குமார்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மற்றொரு போலி கம்யூனிச கூடாரமான சி.பி.எம். இவ்விடயத்தை எப்படிப் பார்த்தது என்பதை நாம் சொல்லியே ஆகவேண்டும். எங்கோ ஒரு சாலையோரத்தில் வாகனங்களில் அடிபட்டு செத்துக்கிடக்கும் சொறிநாயின் அளவுக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்கமுடியாத நாகேஷின் மரணத்தை பிரதானப்படுத்தி, இரண்டாவது நாளாக இன்றைக்கும் (01.02.09) படத்துடன் செய்திகள் வெளியிட்டு வரும் தீக்கதிர் நாளேடு மேற்படி போலிகள் நடத்துகின்ற ‘மக்கள்’ பத்திரிக்கை.

முத்துக்குமார் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட மறுநாள் இந்த போலிக்கயவர் கூட்டம் தி.நகரில் நாடகவிழா நடத்திக் கொண்டிருந்தது. இரண்டு மாதத்திற்கு முன் திட்டமிடப்பட்ட அந்த நாடகவிழா மழையின் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டதாம். சாதாரண மழைக்கு ஒத்திவைக்கப்பட்ட அந்த கேலிக்கூத்தை, முத்துக்குமார் தமிழக மக்களிடத்தில் எற்படுத்திய உணர்ச்சிகரமான சூழலைப் பொருட்படுத்தாமல் நடத்திக் கொண்டிருந்தது. தமது அன்றாட அரசியல் பிழைப்புவாதத்தையே நாடகமாக நடத்திக்கொண்டுள்ளதால் மக்களால் காறி உமிழப்பட்டுக் கிடக்கும் இந்த கயவர்கள் கூட்டம் தனியாக நாடகவிழா நடத்திக் கொண்டிருந்தது வெறும் கேலிக்கூத்தன்றி வேறென்ன?

அந்நிகழ்வில் கலந்து கொண்டு ‘வாழ்த்துக்களை’ வழங்கிச் சென்ற யோக்கியர்கள் பட்டியலில் முதலிடம் யாருக்குத் தெரியுமா? ஈழ மக்களின் போராட்டங்களையும் படுகொலைகளையும் கேலி செய்து செய்தி வெளியிடும் பார்பன-இந்துவெறியன் ‘ஹிந்து’ என்.ராம்.இவையனைத்தையும் தொகுத்து இத்தருணத்தில் நாம் பார்க்கவேண்டியது அவசியமாவதால்தான் இத்தனை விரிவாக இந்த கேவலங்களை நான் இங்கே பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்.

போதாக்குறைக்கு, இணையத்தில் அவதூறூகளை எழுதுவதற்காகவே தீணிபோட்டு போலிகளால் வளக்கப்படும் கே. செல்வப்பெருமாள் என்கிற சந்திப்பு, தோழர் முத்துக்குமாரின்
தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, “அது உணர்ச்சிவயப்பட்ட முடிவு....” என்றும் “இது ஒரு மூடப்பழக்கத்தின் ஒரு வடிவம்...” என்றும் தனது இழிவான கருத்துக்களை வலைதளத்தில் வெளியிட்டு வருகிறான்.

//////இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குரனின் செயல் கடும் வருத்தத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றே. எனினும், தனிநபரின் இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட முடிவு... மேலும் சில உணர்வுகளை கிளறிவிடப் பயன்படலாம்! முற்போக்கு விதை தூவப்பட்ட மண் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழகத்தில் இவ்வாறான அரசியல் தற்கொலைகளும் மூடப்பழக்கத்தின் ஒரு வடிவமாகவே கருதுகிறேன். அரசியல் ரீதியாக - தனது கருத்துக்கு ஆதரவாக மக்கள் எழாதபோது ஏற்படும் விரக்தி கலந்த - உணர்ச்சி இதனை நோக்கி தள்ளியதோ என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. கொள்கை ரீதியாகவும் - அரசியல் ரீதியாகவும் - தத்துவார்த்த ரீதியாகவும் விவாதங்கள் இல்லாதபோது வெறும் இனவாத உணர்ச்சி மட்டுமே மேலிடும். இத்துடன் தனிநபர் வழிபாடும் மேலோங்கியிருப்பதைதான் அவ்வப்போது நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றது./////

மேலும் ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் துரோகத்தை விமர்சிப்பது இலங்கைச் சுதந்திரத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் எழுதியிருக்கிறான். அதனை அவனுடைய வார்த்தைகளிலேயே படியுங்கள்...

///இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும்
கொச்சைப்படுத்துவதாகவே முடியும்.///


இந்த அசிங்கங்களைக் கண்டிக்கலாம் என்று அவனது வலைதளத்தில் பதியப்படும் மறுமொழிகளை அவன் யோக்கியமாக பதிப்பிப்பதில்லை. கூலிக்கு மாரடிக்கும் இந்த நாய் எழுதுவதை வானுயரப் புகழ்ந்து தள்ளும் ஒரு சில மண்டைவீங்கிகள், முத்துக்குமாரின் மரண சாசனத்தை ஏளனம் செய்கின்றது. மரணத்தினை முன்கூட்டியே முடிவு செய்துகொண்டு இப்படிப்பட்ட அற்புதமான இலக்கியத்தை எழுத சாதாரண ஒருவனால் முடியுமா? என்பதைக் கூட கொஞ்சமும் சிந்திக்க இந்தப் பிழைப்புக்காக எழுதும் ‘யோக்கியர்களுக்கு’த் தெரியவில்லை. இதனை நாம் கண்டும் காணாமல் விட்டுவிட முடியாது. முத்துக்குமார் குறிப்பிட்டுக் காட்டியுள்ள பாசிசக் கும்பலின் பிரதிநிதிகள்தான் இவர்கள். செங்கொடிக்குள் தனது பாசிசத்தை மறைத்துக் கொண்டு பிழைத்துவரும் ஈனர்கள்தான் இவர்கள். இந்த போலிக் கும்பலை மேன்மேலும் அம்பலப்படுத்தித் திரைகிழிப்போம்.

முத்துக்குமாரின் தியாகத்தைக் கூறுபோட்டு ஓட்டுப் பொறுக்க நினைக்கும் அனைத்து அரசியல் வியாபாரிகளையும் முறியடிப்போம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.