Showing posts with label சந்திப்பு.. Show all posts
Showing posts with label சந்திப்பு.. Show all posts

Monday, April 21, 2008

சி.பி.எம். என்ற ‘சல்லடைப் படகு’ கரையேறுமா??????????


சி.பி.எம். என்ற ‘சல்லடைப் படகு’ கரையேறுமா??????????


“இருபதாம் நூற்றாண்டின் இனையற்ற சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ்” என்றது பி.பி.சி.யின் ஆய்வு முடிவுகள். “அப்படியெல்லாம் கிடையாது நாங்கள் தான் அனைவரையும் விஞ்சும் சிந்தனையாளர்கள்” என்கிறார்கள் மார்க்சை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மார்க்சிய துரோகிகளான சி.பி.எம். கட்சியினர். இந்துத்துவத்தை மிதவாதமாகவும், கம்யூனிசத்தை சமரசவாதமாகவும் கொண்டு ஒருங்கே சேர்த்துப் பிசைந்து வடித்த கலவைதான் இவர்கள்.

முதலாளித்துவத்தின் சிறப்பு கண்காணிப்போடு, “பகையாளிக் குடும்பத்தை உறவாடிக் கெடுக்கும்” பேடித்தனமான யுக்தியோடு, கம்யூனிச வேடம் பூண்டு பாசிச வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்புதான் இந்திய சி.பி.ஐ/எம் ஆகிய கட்சிகள். இந்த உலகில் ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாக தன்மீதான விமர்சனத்தை மறுக்கும் ஒரு கூட்டம் உண்டென்றால் அது மேற்கண்ட இப் போலிக் கயவர் கூட்டம்தான். விமர்சனங்களையும் சுய பரிசீலனைகளையும் அடியோடு மறுப்பது அறிவியலுக்கு எதிரானது மட்டுமல்ல, அறிவியலையும் ஒருகூறாக தனக்குள் கொண்டுள்ள மார்க்சியத்துக்கும் புறம்பானதாகும்.

சி.பி.ஐ/எம் கட்சிகளின் மீது நாம் வைத்த விமர்சனங்கள், அவர்களின் சுயபரிசீலனைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன. தன்னன ஒரு கம்யூனிச அமைப்பாக அவர்கள் சொல்லிக் கொள்வதினால் மட்டுமே அவர்களின் செயல்கள் நம்மால் விமர்சிக்கப்பட்டன. அவ்விமர்சனங்கள் அனைத்துமே அவர்களால் அடியோடு அலட்சியப் படுத்தவும்பட்டன.

கம்யூனிஸ்டு கட்சி என்ற பெயருடன் இங்கே களத்தில் நின்றாலும், பெரியாரின் பெயரை, கொள்கைகளை, விற்றுப் பிழைக்கும், அவருடைய வாரிசுகளான அனைத்து திராவிடக் கட்சிகளின் பண்புகளுக்கும் சற்றும் குறையாத கொள்கைகளோடு செயல்படும் இந்த போலிக் கம்யூனிஸ்டு கட்சியின் மீது (மற்ற சாதாரண ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளை அனுகும் முறைக்கு மாற்றாக) துவக்கத்தில் விமர்சனங்களைப் பதித்து வந்தன புரட்சிகர அமைப்புகள். ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப்போல், இந்த போலிக் கூட்டம் கம்யூனிசத்திலிருந்து பாசிசமாக சீரழிந்துத்தான் போயிற்று. எனவே, தொடக்கத்தில் அனுகிய அதே முறையில் இன்றும் இவர்களை (கம்யூனிஸ்ட் கட்சிதானேயென்று) விமர்சிக்க முடியாது அல்லவா. அதனால் தான் எம்முடைய இன்றைய விமர்சனங்கள், அவர்களின் மீதான சுயபரிசீலனையை முன்னிறுத்துவதைத் தவிர்த்து, மக்கள் முன் அம்பலப்படுத்தலாக வெளிப்படுகின்றன.

இந்தியாவில், 1957லேயே கேரளாவில் ஆட்சியைப் பிடித்த அக்கட்சி, பின்னர் மே.வங்கத்திலும், தொடர்ந்து திரிபுராவிலும் ஆளும் கட்சியாக பரினமித்திருக்கின்றபோதிலும், மக்கள் மத்தியில் தம்முடைய இருத்தலை நிலைநிறுத்திக் கொள்ளவே இன்றும் படாதபாடு படுகின்றன. காரணம், ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியாக உழைக்கும் மக்களோடு நிற்கவேண்டிய, தமது அடிப்படையான பணியை மறுதலித்து, முதலாளிவர்க்க விசுவாசிகளாக மாறிப்போனதினால்தான்.

அறுபதுகளின் முடிவில் மே.வங்கத்தில் முதன் முதலாக ஆட்சியைப் பிடித்த சி.பி.எம்., அரியனையேறியதும் தம்முடைய வாலை நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவாக அசைத்தது. அதே காலகட்டத்தில் தமிழகத்தில் கீழத்தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நிலவுடைமையாளர்களுக்கு எதிராக களத்தில் நின்ற அக்கட்சி, தாம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மே.வங்கத்தில், நக்சல்பரி என்ற கிராமத்தில், அங்குள்ள நிலவுடைமையாளர்களுக்கு எதிராக விவசாயத் தொழிலாளர்களுக்குத் தலைமையேற்று போராடிய தமது கட்சியின் அணிகளளயே சுட்டுக் கொல்லும் அளவுக்கு போனது.
கீழத்தஞ்சையின் கீழ்வெண்மனியில் குடிசைக்குள் வைத்து கொலைசெய்யப்பட்ட 44 தலித் சமூகத்தைச் சார்ந்த விவசாயக் கூலிகளுக்காக நீலிக் கண்ணீர் வடித்த அக்கட்சியின் தலைமை, அதே சமயம் மே.வங்கத்தில் நடைபெற்ற கொலைபாதகத்தை தானே முன்னின்று அரங்கேற்றியது. இதுதான் இவர்களது வர்க்கப்பார்வை. நல்லவேளையாக தமிழகத்தில் அப்போது அக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இல்லை. இருந்திருந்தால் மே.வ ஜோத்திதார்களுக்கு ஆதரவளித்தது போல கோபாலகிருஷ்ண நாயுடுவின் பாக்கெட்டில் அமர்ந்து சேவையாற்றியிருப்பார்கள்.
சி.பி.ஐ.யிலிருந்து விலகி, சற்று தீரமான புரட்சிகரவாதிகளாக காட்டிக் கொண்ட சி.பி.எம். கட்சி, ஆட்சிப் படிக்கட்டில் ஏறுவது என்ற தமது இலக்கை அடைந்தவுடன், புரட்சியையும் கம்யூனிசத்தையும் ஆழக்குழிதோண்டி, தம்மால் சுடப்பட்டு இறந்த அத்தோழர்களின் உடல்களோடு இட்டுப் புதைத்தும் விட்டது.

அதன் நீட்சியாக இதோ இன்றுவரை முதலாளித்துவ கைக்கூலியாக, தமது சேவைகளை அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுடனும் இணைந்து செவ்வனே செய்து வருகிறது. மார்க்சியம் வலியுறுத்தும் சமூகமாற்றத்திற்கான புரட்சித்தீயை மக்களிடம் உருவாக்கி, அதையே ஒரு பவுதீக சக்தியாக மாற்றி வழிநடத்த வேண்டிய பொறுப்பை மறுதலித்து, தமது கட்சியின் அணிகளுக்குள்ளே வேர்விட்டிருந்த புரட்சிக் கனலை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

சித்தாந்தத் தெளிவின்மையினால், கட்சியை முறையாக விமர்சித்து வளர்த்தெடுக்கவோ அல்லது வெளியேறவோ முடியாமல் பரிதவித்து நிற்கின்றன, அக்கட்சியின் நேர்மையான அணிகள். அதையும் தாண்டி, சுயமான உந்துதலில் தமது கட்சியின் தலைமையை எதிர்த்து கேள்விகேட்கும் எந்தவொரு தோழரையும் “இவன் ஒரு நக்சலைட்” என்று ஒரு முத்திரை குத்தி கட்சியை விட்டு தூக்கியெறிந்து விடுகிறது. அதற்கும் மேலாக வெளியேற்றப்பட்ட அத்தோழர் அடங்கிப் போகவில்லையெனில், அவருக்கு அருகாமையிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தானே வலிய சென்று, போலீசிடம் “மேற்படி தோழர் நக்சல் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததால் எங்கள் கட்சியிலிருந்து விலக்கிவிட்டோம், நீங்கள் சற்று கூர்ந்து கண்காணிக்கவும்” என்று வலியுறுத்தவும் தயங்குவதில்லை.
இத்தகைய கீழ்த்தரமான செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட தோழர்கள் ஏராளம். திரிபுராவின் முன்னாள் முதல்வராக இருந்த தோழர்.நிரூபன் சக்கரவர்த்தி போன்றவர்கள் கூட கட்சியிலிருந்து அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட காட்சிகள் ஏராளம். இறுதியில் அவர் ஒரு மனநோயாளி, பைத்தியக்காரன் என்று வெறுப்பேற்றப்பட்டு, சாகடிக்கவும்பட்டார் என்ற வேதனை மிகுந்த செய்தியும் உண்டு. இந்த லட்சனத்தில், பொறுமையிழந்து கட்சியைவிட்டு வெளியேற முயலும் ஊழியர்களை, “இதையெல்லாம் உட்கட்சிப் போராட்டத்தில் தான் சாதிக்கமுடியுமென்று” அறிவுறுத்துகிற சப்பைக்கட்க்கள் வேறு.

இப்படி தம்முடைய பிழைப்புவாதப் போக்கை விமர்சிக்க கட்சியின் உறுப்பினர்களையே அனுமதிக்காத அக்கட்சி, “நம்முடைய விமர்சனங்களை ஏறெடுத்துப் பார்க்கும் என்று நம்பிக்காத்திருப்பது மடமைத்தனம். மாறாக இவர்களின் இத்தகைய கொடுஞ்செயல்களை வெகுவேகமாக அம்பலப்படுத்தி வேலைசெய்யவேண்டிய கடமையும் நம்முன் இருக்கிறது”, என்பதுதான் அக்கட்சியிலிருந்து வெளியேறிய எனது படிப்பினை.

சாதாரண ஓட்டுக்கட்சிகளைப் புறக்கனித்து, சி.பி.எம்., கட்சியில் வந்து தன்னை இணைத்துக் கொண்டு செயபட விரும்பும், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற உந்துதல் எப்படிப்பட்டது? எதனால் ஏற்படுகிறது?. அது சமூக அவலங்களை எதிர்க்கும் ஒரு தனிமனிதனின் நேர்மையான வெளிப்பாடாகத்தான் இருக்கமுடியும். இத்தகைய எண்ணங்களுடன் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒருவரை மேன்மேலும் வளர்த்தெடுப்பதற்கு மாற்றாக, மழுங்கடிக்கும் வேலைகளை மேற்கொள்ளும் அக்கட்சி, உறுப்பினர்களின் நேர்மையை அலட்சியப்படுத்தும் / அவமதிக்கும் இவ்வமைப்பு எப்படி ஒரு கம்யூனிச அமைப்பாக இருக்கமுடியும்?

தம்முடைய செயல்களை விமர்சன ரீதியாக எதிர்ப்பவன், தனது கட்சிக்காரனாக இருந்தாலும் ம.க.இ.க. வைச் சார்ந்த தோழர்களாக இருந்தாலும், வேறு எவராக இருந்தாலும் அனைவரையும் ‘தீவிரவாதிகள் / பயங்கரவாதிகள் / நக்சலைட்டுகள்’ என்று தூற்றுவது இந்த பாசிஸ்டுகளின் வழக்கமான முறை.

இந்துத்துவ பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பரிவாரங்கள் கூட எம்முடைய நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ள முடியாமல், மேற்கண்ட சி.பி.எம்., பானியிலேயே நமக்கு ‘பயங்கரவாதிகள்’ பட்டம் சூட்டுகின்றன. மூவாயிரம் அப்பாவி மக்களை கொன்று புதைத்த இந்துவெறிக் கொலைகாரன் நரேந்திரமோடி முதல் அத்வானி வரை எவனும், சி.பி.எம்.மின் பொலிட்பீரோ உறுப்பினர் அல்ல, ஆனால் அவர்களது குரல், நமக்கெதிராக வெளிப்படும்போது மட்டும் பொலிட்பீரோவின் குரலையொத்து வெளிப்படுவது எவ்வாறு?

இவர்கள் நமக்கு இத்தகைய பட்டங்களை வாரிவழங்குவது எதற்காக, நம்மை தேசதுரோகிகளாக இவர்கள் சித்தரிக்க முனைவது எதற்காக, மக்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்துவதற்காக மட்டுமே. உண்மையான பாட்டாளி வர்க்க அமைப்பாக நம்முடைய வளர்ச்சி, இவர்களை அச்சுறுத்துவத்தால்தான் அவர்கள் அனைவரும் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். "எங்கே இவர்களால் தாம் அம்பலப்படுத்தப்பட்டு விடுவோமோ" என்ற இழிநிலைதான் இவர்களை துரோகிகளாக வெளிக்காட்டுகிறது.

தோழர். பகத்சிங் கூட தமது இறுதிக் காலகட்டங்களில் “நாங்கள் தீவிரவாதிகளோ / பயங்கரவாதிகளோ அல்ல” என்றும் “எங்களைவிட இந்நாட்டு மக்களை அதிகம் நேசிப்பவர் வேறு யாரும் இருக்கமுடியாது” என்றும் அதிகமாக வலியுறுத்திப் பேசவேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார். அவருடைய போராட்டத்தின் பெரும்பகுதி, மக்களிடமிருந்து தாம் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்ப்பதாகத்தான் இருக்கவேண்டியதாயிற்று. காந்தி என்ற போலிஅகிம்சாவாதியின் பிம்பம்தான் தியாகி பகத்சிங்கை இந்திலைக்கு ஆளாக்கியது.. அவர் அனைவருக்கும் எதிரியாக சித்தரிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது, அவருடைய சமரசமற்ற பாட்டாளி வர்க்க சித்தாந்த ரீதியிலான செயல்பாடுகள்தான்.

ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தோழர். பகத்சிங்கின் வாரிசுகளாக இன்றும் களத்தில் நிற்பது நாம்தான். அவர் சந்தித்த அதே துரோக அரசியலை நாமும் இப்போது சந்தித்தே தீரவேண்டும் என்பதுகூட இயங்கியல் ரீதியானதுதான். துரோகத்தை எதிர்கொண்டு வெற்றிகரமாக முறியடிப்போம். போலிக் கூட்டத்தை மூடி மறைத்திருக்கும் சிவப்புக் கொடியைத் அடித்து வெளுத்து இதுவும் ஒரு காவிக்கும்பல்தான் என்பதை மக்களுக்குக் காட்டுவோம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.