Wednesday, April 30, 2008

மே நாளில் சூளுரைப்போம்!
மே நாளில் சூளுரைப்போம்!
பன்னாட்டுக் கம்பெனிகளையும் அம்பானி, டாடா, பிர்லாக்களையும்
அடித்து வீழ்த்துவோம்!
தனியார்மயம், தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்!

உயரும் விலைவாசியை விழ்த்த
வேறு வழி இல்லை... இல்லை... இல்லவே இல்லை!

பேரணி, பொதுக்கூட்டம்
மே - 1, மணலி, சென்னை.


அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

விசம் போல ஏறிக் கொண்டிருக்கிறது விலைவாசி. விலைவாசியைக் கட்டுப்படுத்து என்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் அரசிடம் கூப்பாடு போடுகின்றனர். மத்திய மாநில அரசுகளும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது போல நடிக்கின்றன. ஆனால் விலைவாசி உயர்வுக்கான காரணம் என்ன என்பதைப் பற்றி மட்டும் யாரும் பேசுவதில்லை.

கடந்த 15 ஆண்டுகளாக எல்லா கட்சி அரசாங்கங்களும் தீவிரமாக அமல்படுத்தி வரும் தனியார்மய - தாராளமய - உலகமயக் கொள்கைகளும், அவற்றின் விளைவாக விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டிருப்பதும்தான் இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்று நாங்கள் ஆணித்தரமாகக் கூறுகிறோம். கடந்த 15 ஆண்டுகளில் உலக வங்கியின் ஆணைப்படி விவசாயத்துக்கான மானியத்தை அரசு வெட்டியிருக்கிறது. விதை உரம் பூச்சிமருந்து விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டிருக்கின்றன. வங்கிக் கடன் நிறுத்தப்பட்டு விட்டதனால் விவசாயிகள் கந்துவட்டிக் கும்பல்களின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். தானியக் கொள்முதலையும் படிப்படியாக அரசு நிறுத்திவிட்டது.

புதிய அணைக்கட்டுகளோ பாசனத் திட்டங்களோ கிடையாது. ஏரிகள், குளங்கள் கால்வாய்கள் போன்ற விவசாய கட்டுமானங்களின் பராமரிப்பையும் அரசு நிறுத்திவிட்டது. பாசனத்தண்ணீர் இல்லாத காரணத்தாலேயே பாதி விவசாயம் செத்துவிட்டது. மீதியுள்ள விளைநிலங்களைச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிற்சாலைகளும் ரியல் எஸ்டேட்டுகளும் ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கமே திட்டம் தீட்டித் தருகிறது.

விவசாயம் செய்தால் கடந்தான் மிச்சம் என்று பட்டுத் தெரிந்து கொண்ட விவசாயிகள் பிழைப்புக்கு நகர்ப்புறம் நோக்கி ஓடுகிறார்கள். கடன் பட்ட விவசாயிகளோ இலட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவற்றின் விளைவாக விவசாய உற்பத்தி வீழ்ச்சி அடைந்து சோற்றுக்கு கப்பலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டது.

இவை போதாதென்று உணவு தானியச் சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற சூதாட்டத்தை நடத்துவதற்கும் அரசு அனுமதித்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தக சூதாடிகள் செயற்கையாக தானிய விலைகளை ஏற்றி மக்களைக் கொள்ளையடிக்கிறார்கள். இன்னொரு புறம், எரிபொருள் தேவையைச் சமாளிப்பது என்ற பெயரில், கரும்பு, சோளம், எண்ணெய் வித்துக்கள் போன்ற உணவுப் பொருட்கள் உயிரி எரிபொருள் தயாரிப்புக்குத் திருப்பி விடப்படுவதால், உலகம் முழுவதும் உணவு தானியப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இது வெறும் விலைவாசிப் பிரச்சனை அல்ல. விவசாயத்தின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் தொடுத்திருக்கும் தாக்குதல். இதன் விளைவாக இன்று உலகம் முழுவதும் உணவு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துவருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை மேலும் மேலும் உயரும் என ஐ.நா. மன்றமே அபாயச்சங்கு ஊதியிருக்கிறது.

பெட்ரோல் டீசல் விலையேற்றம் பல்வேறு பொருட்களில் விலை உயர்வை மேலும் தீவிரப் படுத்தியிருக்கிறது. இராக்கின் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்புப் போர்தான் இதற்குக் காரணம். இதன் விளைவாக வளைகுடா நாடுகளின் மக்கள் அமெரிக்காவுக்கு எதிராகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். வளைகுடாப் பகுதி முழுவதும் பதற்றம் கூடிக்கொண்டேயிருப்பதால், அதிகரித்து வரும் எண்ணெய்த் தேவைக்கு ஏற்ப புதிய கிணறுகளைத் தோண்டவோ உற்பத்தியை விரிவுபடுத்தவோ அந்நாட்டு அரசுகள் அஞ்சுகின்றன. இதன் விளைவாகத்தான் கடந்த 4 ஆண்டுகளில் எரி எண்ணெயின் விலை 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. வளைகுடாவின் எண்ணெய் வளம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற அமெரிக்காவின் ஆதிக்க வெறிதான் இந்த விலையேற்றத்துக்குக் காரணம்.

மொத்தத்தில், ஏகாதிபத்தியங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் உலகப் பொருளாதாரத்தின் மீது செலுத்திவரும் ஆதிக்கம்தான் நாம் சந்தித்து வரும் இந்த விலை உயர்வுக்குக் காரணம். பன்னாட்டு முதலாளிகளும் அவர்களுடைய கூட்டாளிகளான டாடா, அம்பானி போன்ற இந்தியத் தரகு முதலாளிகளும்தான் மக்களின் உழைப்பையும் ஊதியத்தையும் உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைகள். இவர்களை ஒழித்துக் கட்டாமல் விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாது. இவர்களுக்குச் சேவை செய்யும் ஓட்டுக் கட்சிகளால் விலைவாசியைக் குறைக்கவோ தடுக்கவோ ஒருக்காலும் முடியாது.

விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் என்பது பன்னாட்டு முதலாளிகலுக்கு எதிரான போராட்டம். நாட்டை மீண்டும் அடிமையாக்க முயலும் ஏகாதிபத்தியங்கலுக்கு எதிரான போராட்டம். ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான தரகு முதலாளிகளுக்கு எதிரான போராட்டம். இவர்களுக்கு சேவகம் செய்து பங்கு வாங்கும் தேசத்துரோக ஓட்டுப் பொறுக்கிகளுக்கு எதிரான போராட்டம். விலைவாசி உயர்வுக்கு எதிரான நமது போராட்டத்தை இந்த எதிரிகளை நோக்கித் திருப்புவோம்!


இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னனி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி
சென்னை - வேலூர்.
நன்றி! போர்முரசு வலைதளம்.

நடுங்காதே நடராசா!!!
தில்லை நடராசா!
தீட்சிதனிடம் மாட்டிக் கொண்டு
நீ படும்பாட்டைச் சொல்வதென்ன லேசா!

நீ.... காலைத் தூக்கி நிற்பது
ஆடவா? இல்லை
ஊளையிடும் பார்ப்பானின்
உபத்திரவம் தாங்காமல் ஓடவா?

ஒருவேளை
குஞ்சிதபாதத்தின் கொலுசு திருடு போனதை,
காலைத்தூக்கிக் காட்டுகிறாயா?
"அதோ! அந்தத் தீட்சிதந்தான் திருடியது" என்று
கைகளை ஜாடையாய் நீட்டுகிறாயா!

ஷ்டப்பட்டு,
இரண்டு கண்ணோடு, மூன்றாவது கண்ணை
நீ முகத்தில் வைத்திருந்தும்,
உன் 'ஹஸ்த ராஜாவின்'
அரைஞான் கயிற்றையே
உன்னால் காப்பாற்ற முடியவில்லையே!
துஷ்ட தீட்சிதர்களின்
திருவிளையாடலுக்கு முன்னே,
உன் பொண்டாட்டி தாலியைத் திருடியவனையே
உன்னால் பிடிக்க முடியவில்லையே! பாவம்.

பிரணவ மந்திரத்தின் அர்த்தம் விளங்காமல்
நீ உன் பிள்ளையிடம்
பாடம் கேட்டது பழங்கதை.

அன்றலர்ந்த முட்டைகளைக் கொய்து;
பீர்பாட்டில் அபிஷேகம் செய்து;
பிரியாணிப் பொட்டலத்தின்
அர்த்தம் விளங்க
கருவறைக்குள் நீ ஓடி ஒளிந்தது
சோகக் கதை.

தீர்த்த குளமல்ல
அது பலரையும் 'தீர்த்த' குளம் என்பது
தெரிந்ததனால்
வியர்த்து நடுநடுங்கி
விரிந்த சடையோடு
அபயம் வேண்டி நிற்கும் நடராசா!
அஞ்சாதே! உனை ஆட்கொள்ள
வந்துவிட்டோம் நாங்கள்.

ன்னன் பராந்தகன்
தங்கத்தால் பொற்கூரை வேய்ந்ததா
உனக்குப் பாதுகாப்பு?

மனித உரிமை பாதுகாப்பு மையமும்
மக்கள் கலை இலக்கியக் கழகமும்
தமிழால் உனக்கு
போர்க்களம் அமைத்ததே சிறப்பு.

ன்றுதான்..... மார்ச்சு இரண்டுதான்
உழைக்கும் தமிழனின்
தமிழ் கேட்கும் பாக்கியம்
உன் செவிகளுக்கு வாய்த்தது.
திரை விலக்கி,
உழைக்கும் வர்க்கத்தின் முகத்தைப் பார்க்கும்
தரிசனம் உனக்குக் கிடைத்தது.
இனி.... நடுங்காதே நடராசா
நல்ல வழி காட்ட
நாங்கள் இருக்கிறோம்
நக்சல்பாரிகள் இருக்கிறோம்!.


- துரை. சண்முகம்.

Tuesday, April 29, 2008

சூதாடிகளுக்கு சோரம் போன கிரிக்கெட் கழிசடைகள் தேசப்பற்றாளர்களா?

சூதாடிகளுக்கு சோரம் போன கிரிக்கெட் கழிசடைகள் தேசப்பற்றாளர்களா?


Saturday, April 26, 2008

ஓரு கம்யூனிச துரோகியின் மரணசாசனம்.


முன்னுரையாக.........

தலைவர்களின் துரோகங்களும் புரட்சிகர அணிகளின் தியாகங்களும் நிறைந்தது - இந்தியக் கம்யூனிச இயக்க வரலாறு.


இதிலே டாங்கேவா, நம்பூதிரிபாடா, ராமமூர்த்தியா? ரணதிவேவா, ராஜேஸ்வரராவா, ஜோதிபாசுவா? பசவபுண்ணையாவா, கல்யாணசுந்தரமா, அரிகிஷன்சிங் சுர்ஜித்தா? என்று நீண்டு கொண்டே போகும் இந்தத்துரோகிகளின் பட்டியலில் யாருக்கு முதலிடம்?


முடிவு செய்ய முடியாத அளவுக்கு ஒருவரை ஒருவர் விஞ்சி நின்ற சமயத்தில் திருவாளர் பி.ராமமூர்த்தியின் வாக்குமூலம் ஒன்று வெளிவந்தது. "ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்" என்கிற நூலை எழுதி வெளியிட்டார். கம்யூனிசப் போர்வையில் ஒளிந்து கொண்டிருந்த ராமமூர்த்தி அடிப்படையில் தான் ஒரு காந்தீய - காங்கிரசு - பார்ப்பனியவாதி என்பதை உறுதிப்படுத்துவதாகவே, ஒப்புக் கொள்வதாகவே அந்த நூல் அமைந்திருந்தது.


ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளுக்கும், அதன் அடிவருடிகளான தரகு அதிகார வர்க்க முதலாளிகள் - நிலப்பிரபுக்களுக்கும் ஊழியம் செய்வதிலும், அதனால் அரசியல் ஆதாயம் அடைவதிலும் நீதிக் கட்சியுடன் பார்ப்பனிய ஆதிக்கத்திலிருந்த காங்கிரசுக் கட்சி நடத்திய போட்டியையே தேசிய விடுதல்ப் போராக ராமமூர்த்தி அந்த நூலில் சித்தரிக்கிறார். நீதிக் கட்சியின் ஏகாதிபத்திய சேவைகளை வரிசைப்படுத்திச் சாடும் ராமமூர்த்தி, காந்திய - காங்கிரசின் துரோகங்களையெல்லாம் "இயல்பான வர்க்கத் தன்மைகள்" என்று மழுப்புகிறார்; வர்ணாசிரமப் பார்ப்பனியச் செயல்களையெல்லாம் ஏதோ ஒரு "சிலரது வைதீகப் பித்து" என்று மூடி மறைக்கிறார். "சர்வ கட்சியினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கைதேர்ந்த அரசியல் தரகர்தான் ராமமூர்த்தி" என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான சாட்சியங்கள் கொடுக்கிறார்.


ராமமூர்த்தியின் காந்திய - காங்கிரசு - பார்ப்பனிய வாதங்களையே - வாக்குமூலங்களையே வாய்ப்பாகக் கொண்டு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, நீதிக் கட்சியின் ஏகாதிபத்திய சேவைகளை நியாயப்படுத்தும் விமர்சன நூல் ஒன்றை எழுதினார். 1987 டிசம்பரில் ராமமூர்த்தி இறந்து போனார். அவரது சாவுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பாக அவரது நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. (இத்தொடரை எழுதும்போது) ராமமூர்த்தியின் நூல் வெளிவந்து நான்கு ஆண்டுகளாகி விட்டன(தற்போது 21 ஆண்டுகளாகி விட்டன). அவர் உயிருடன் இருந்தபோதே விமர்சிப்பதும், பதிலளிக்க வாய்ப்பளிப்பதும்தான் நியாயமானது. ஆனால் சிறு பத்திரிக்கைக்குரிய வரம்புகள் காரணமாக அப்போது அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.


இருப்பினும், கம்யூனிச இயக்கத்துக்குள் ராமமூர்த்தி போன்றவர்களின் துரோகத்தனத்துக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அதற்கு வாரிசுகளும் இருக்கிறார்கள். குறிப்பாக ராமமூர்த்தியின் நூல் அவரது காந்திய - காங்கிரசு - பார்ப்பனிய வாரிசுகளுக்கு அவர் கையளித்த உயில் - ஒரு கம்யூனிச துரோகியின் மரணசாசனம்! அதை வரித்துக் கொள்பவர்கள் அதன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். எனவே தாமதமானாலும், தவிர்க்கக்கூடாத காரணங்களால் அதை விமர்சிக்கிறோம். கம்யூனிச துரோகிகளை மட்டுமல்ல, நீதிக்கட்சியின் வாரிசுகளையும் இனங்கண்டுகொள்வதற்கு இது அவசியமாக உள்ளது.

- ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
110, இரண்டாம் தளம்,63,
என்.எஸ்.கே சாலை(அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024.

தொலைபேசி: 94446 32561
விலை ரூ 40

நன்றி புத்தகப் பிரியன்.

அவதூறு நாயகன் 'செல்வப் பெருமாளுக்கு' (சந்திப்பு) அசுரனின் பதிலடி......

அவதூறு நாயகன் 'செல்வப் பெருமாளுக்கு' (சந்திப்பு) அசுரனின் பதிலடி......
http://santhipu.blogspot.com/2008/04/blog-post_23.html


சந்திப்பு அல்லது அவரது தளத்தில் எழுதும் CPM நபர் முதல் முறையாக ஒரு சின்ன முயற்சி செய்துள்ளனர் பாராட்டுக்கள். அதற்கான நமது எதிர்வினை.

//சோசலிசத்திற்கான பாதைiயாக சமாதான நாடாளுமன்றப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்களது துரோகத்தனத்தை சோசலிசத்திற்கான இந்தியப் பாதை என்று வர்ணிக்கிறார்கள். வர்க்கமற்ற அரசியல், வர்க்கமற்ற சோசலிசம் என்று வழிகாட்டுதல் நமது நாட்டின் பரந்துபட்ட மக்களை புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து திசை திருப்பும் முதலாளியத் தந்திரமாகும்....//

//சி.பி.எம். தனது கட்சித் திட்டத்திலோ அல்லது கொள்கை அறிக்கையிலே இவ்வாறு எதையும் கூறவில்லை.//

மேலேயுள்ள ம க இகவின் கருத்திற்கு மறுப்பு எழுதியுள்ள CPM நபர் இவை CPMன் கட்சித்திட்டத்தில் இல்லையென்கிறார். நல்லது, CPMண் கட்சித்திட்டத்தில் நந்திகிராம்கள், சிங்கூர்கள் எல்லாம் உள்ளதா என்று பார்த்துச் சொல்லிவிட்டால் நமது வேலை மிச்சம். ஏனேனில் தோழர்கள் CPM கட்சியின் நடைமுறையைவிட அதன் கட்சித்திட்டத்தையே CPMஆக கருதுகிறார்கள் என்று தெரிகீறது. எப்படி பெயரில் மட்டும் மார்க்ஸிஸ்டு உள்ளதோ அதே போல கட்சிதிட்டத்திலும் மார்க்ஸியத்தை தழுவி ஏதாவது இருப்பதே இவர்களுக்கு போதுமானது. CPM போன்ற கட்சிகள் சமாதான நாடாளுமன்ற பாதையை காட்டுவதாகத்தான் கூறியுள்ளனர்.

//இவர்களது வாதப்படியே யார் வர்க்கமற்ற அரசியல் என்று சொல்கிறார்கள்? சமாதானமான நாடாளுமன்றப் பாதை மட்டுமே புரட்சிகரப் பாதை என்று வர்ணித்துள்ளார்கள்? என்று நமக்குத் தெரியவில்லை!//

CPMன் பாதையில் சங்கராச்சாரியார் CPMன் நட்பு நந்திகிராம், சிங்கூர் மக்கள் எதிரி. எனில் மார்க்ஸியம் பேசிக் கொண்டு சந்த்ரப்பவாத நடைமுறை கொண்ட இவர்கள்தான் வர்க்கமற்ற அரசியல் செய்கிறார்கள். ஏனேனில் இவர்களின் நடவடிக்கையை தீர்மானிப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமே. சந்தர்ப்பவாதம் என்பது வர்க்க அரசியல் அல்ல. நாடாளுமன்ற பாதையின் புனிதம் காக்கும் சோம்நாத் சாட்டார்ஜியே இவர்களின் நாடாளுமன்ற பாதைக்கு சாட்சி.

//முதலாளித்துவப் பாராளுமன்றங்களையும், இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிலும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்த ஆகவேண்டும்//

மேலேயுள்ள லெனினின் கூற்றை யாரும் மறுக்கவில்லை. இதுதான் நேபாள மாவொயிஸ்டுகளின் நிலைப்பாட்டை நாம் ஆதரிக்க உதவுகிறது. சரி இந்தியாவுக்கு இது பொருந்துமா என்பது குறித்து அந்த சந்திப்பு தளத்தின் CPM நபர் விளக்குவாரா? இந்தியா ஒரு முதலாளித்துவ பாராளுமன்றத்தை கொண்டுள்ளதா?

உலக வங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு அரட்டை மடம் என்பதை தாண்டி அதில் ஜனநாயகம் என்ற அம்சத்தில் எதுவுமே இல்லை என்கிற போது அதனை எந்த அர்த்தத்தில் முதலாளித்துவ பாராளுமன்றத்துடன் ஒப்பிடுகிறார்கள்? குறைந்த பட்சம் இந்த நேர்மை சீலர்கள் இந்திய ஜனநாயகம் ஒரு போலி என்பதை அம்பலப்படுத்தி அசுரன் உள்ளிட்ட தளங்களில் வந்துள்ள கட்டுரைகளின் ஏதேனும் ஒன்றே ஒன்றை மறுத்து வாதம் செய்தால் கூட இவர்களின் நேர்மை குறித்து நாம் பரிசீலிக்க ஏதுவாகும் அப்படி எதுவுமே செய்யாமல் ஆளும் வர்க்கத்தின் பிரச்சாரமாகிய இந்திய ஜனநாயகம் என்ற பொய்யை தமது வாதத்திற்கு அடிப்படையாக நம்பியிருப்பதே இந்த போலிகளை புரிந்து கொள்ள உதவும்.

//பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். //

தோழிலாளர்களை என்று லெனின் சும்மா பொத்தாம் பொதுவாக குறிப்பிடுவதாக சந்திப்பு போன்ற CPM பித்தலாட்டக்காரகள் நம்ப விரும்புகிறார்கள். இந்தியாவில் தொழிலாளர்கள் எத்தனை பேர் என்ற கணக்கையும் இவர்கள் கொடுத்துவிட்டால் ரொம்ப புன்னியமாகப் போகும். இந்திய ஒரு பின் தங்கிய விவசாய நாடு என்பதை சுத்தமாக மறைத்துவிட்டு அப்படியே ரஸ்யாவுடன் பொருத்தும் மொள்ளமாறித்தனமதான் சிறுபிள்ளைத்தனமதான் இங்கு வெளிப்படுகிறது.

மீண்டும் இங்கு ஒரு முதலாளித்துவ சமூகத்தின் இயல்புகளுக்கான நடைமுறைகளை இந்தியா போன்ற அரை நிலபிரபுத்துவ சமூகத்திற்க்கு பொருத்தும் பித்தலாட்டத்தை செய்கிறது இந்த் கும்பல்.

//ஆயுதப் புரட்சி என்று பேசுவது தொழிலாளி வர்க்கத்தின் குரலை வெளிப்படுத்துவதாக அமையாமல் தங்களின் உள்ளுனர்வு அடிப்படையில் இயங்கும் கற்பனாவாத தத்துவத்தைதான் ம.க.இ.க.வினரிடம் காண முடிகிறது. இது குறித்து தோழர் லெனின் கூறுவதை நோக்குங்கள்.//

லெனின் குறிப்பிட்டுள்ளதோ மக்களை திரட்டி போராடுவதை மட்டுமே மாறாக ஆயுத போராட்டம் குறித்த பிரச்சாரத்தை நிராகரித்து அவர் எங்கும் எதுவும் கூறியதில்லை. ஆயினும் பித்தலாட்டாக்கார CPM கும்பல் லெனினை திரித்து புரட்டி தமது சந்தரப்ப்வாத கருத்துக்களை நியாயப்படுத்துகீறார்கள். இவர்களை குறித்து லெனின் என்ன சொல்கிறார் என்று கிழே பார்க்கலாம்:

"பலாத்கார புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியமென்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸின் போதனை அனைத்தின் ஆணி வேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது நடப்பிலுள்ள சமூக-தேசியவெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்துவரும் துரோகமானது, இந்த போக்குகள் இத்தகைய பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கைவிட்டுவிட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது".-லெனின் (அரசும் புரட்சியும், அத்தியாயம் 1, 4. அரசு உலர்ந்து உதிர்வது...)"

லெனின் சொல்லாததை சொன்னதாக சொல்வது, லெனின் வார்த்தைகளை பிய்த்து போட்டு தவறான பொருளில் இயந்திரகதியில் வசதிப்படி பொருத்தி பொருள் காண்பது இவை இவர்களின் ரத்தத்தில் ஊறிய்து.

சரி உண்மையில் மக்களை புறக்கணிப்பது யார்? உலகமய அரசியலையும் சரி, மார்க்ஸிய அரசியலையும் சரி மக்களிடம் கொண்டு செல்லாமல் புறக்கணிப்பது யார்? மக்களின அடிமைத்தனத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் வோட்டு பொறுக்கிகள் யார்? அது வேறு யாருமல்ல சந்திப்பு சார்ந்த CPM பாசிஸ்டு கட்சிதான் அது.

ம க இக நக்சில கும்பல் சாதித்ததில் ஒரு மசிரளவு கூட CPM சாதித்ததில்லை என்பது விந்தையான ஒரு உண்மை.

லெனின் புரட்சிகர புறநிலையிலலாதது பற்றி பேசுகிறாரே அன்றி புரட்சிகர் நடைமுறையை கைகழுவி சந்தர்ப்பவாத நடைமுறைக்கு போகச் சொல்லி எதுவும் சொல்லவில்லை ஆயினும் CPM பாசிஸ்டுகள் அப்படி லெனின் சொன்னதாக பின் குறிப்பாக தமது சொந்த நிலைப்பாட்டை சேர்த்துக் கொள்கிறார்கள்.

மீண்டும் ஜனநாயகமான விவாதச் சூழலும், மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முதலாளித்துவ பாராளுமன்றம் குறித்தே பேசுகீறார் லெனின். ஆயினும் இந்தியா ஒரு முதலாளித்துவ பாராளுமன்றம் இல்லை என்பதை நாம் எத்தனையோ முறைகள் ஆதாரப் பூர்வமாக பலரிடமும் விவாதம் செய்து நிறுவியுள்ளோம். காமரேடுகளோ அப்படி ஒரு நிருப்பிக்கப்பட்ட உண்மையின் கீழ் விவாதம் செய்ய அஞ்சி அது போன்ற் முயற்சிகள் எதிலும் ஈடுபடுவதில்லை. இதுதான் லெனின் குறிப்பிடும் சிறுபிள்ளைத்தனம்.

இதே CPM கும்பல் நேபாளத்தின் மன்னராட்சிக்கு உட்பட்ட போலி ஜனநாயக அரசையும் கூட முதலாளித்துவ பாராளுமன்றம் என்றே தூக்கி வைத்து ஆடினர். ஏனேனில் அங்கு அதனை எதிர்த்து உண்மையான ஜனாநாயக வழிப்பட்ட முதலாளித்துவ அரசை கொண்டு வர போராடிக் கொண்டிருந்தது நேபாள் மாவொயிஸ்டுகள் என்ற கும்பல்லல்லவா? அது CPM மாதிரியோ அல்லது நேபாள காங்கிரஸ் மாதிரியோ அல்லது நேபாள UML மாதிரியோ பெரிய கட்சியில்லையல்லவா?

வேண்டுமானால் இந்தியா ஒரு முதலாளித்துவ ஜனநாயகம் என்று நிரூபிக்கட்டும் காமரேடுகள். பிறகு உள்ளதெல்லாம் சரி காமெடியாக CPM பித்தலாட்டங்கள்.

முதலாளித்துவ பாராளுமன்றம் என்று சொல்லும் CPM நபர் கட்டுரையின் கடைசி பகுதியில் இப்படி குறிப்பிடுகிறார்:

//பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்தவ - நிலப்பிரபுத்துவ சமூகத்தை தூக்கியெறிந்து //

அதென்ன பெரு முதலாளிகள்? இது வெறுமே அளவை மட்டுமே குறிக்கிறது இவர்களின் கணக்கில் அப்படியென்றால் இதே பெரு முதலாளிதான் அமெரிக்காவிலும் ஆட்சி செய்கிறான்.

BJP என்ன பெரு முதலாளி கட்சியா?

அதெப்படி நிலபிரபுத்துவ சமூகத்தை முதலாளித்துவம் பேணி பாதுகாக்கும் விந்தை? ஒரு வேளை மார்க்ஸியமே தவறோ?

//மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்க அரசை ஆட்சியில் அமர்த்துவது என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்றுகிறது.//

மக்கள் ஜனநாயக புரட்சி என்றால் என்னவென்பது ஒரு தனி கேலி கூத்து குறைந்தது அந்த செயல் தந்திரத்தில் காமரேடுகள் முன்னேறியுள்ளனரா என்றால் அதுவும் இல்லை., கட்சி திட்டத்தை மட்டும் ரீ பிரிண்டு போட்டுக் கொண்டு நடைமுறையில் மக்கள் ஜனநாயக புரட்சி என்பதற்க்கு எதிர்திசையில் சென்று கொண்டுள்ளனர் சுய முரன்பாட்டு முத்தண்ணாக்கள். இவர்களின் தற்போதைய கூட்டாளிகள் யார் என்று பார்த்தால் இது தெரிய வரும்:

#1) இந்தோனேசிய சலிம் கும்பல், டாடா, அம்பானி.
#2) அமெரிக்க அதிகார வர்க்கம், அரசியல் தலைமைகள்
#3) சங்கராச்சாரி, பில்லி சூனிய கும்பல்
#4) பார்ப்ப்னியமே எமக்கு முதல் என்ற வெளிப்படையாக அறிவித்து விட்டே அமைச்சராக தொடர்வது.

நல்ல நடைமுறை தந்திரம்.

//மேலும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை அவர்களது கூடாரத்திற்குள்ளே நின்று வெகுவாக அம்பலப்படுத்த முடியும் என்பதோடு//

இந்த அம்சத்தில் முற்றிலும் அம்பலப்பட்டு போய் இன்று கம்யுனிஸத்திற்கு கரும்புள்ளீ குத்தும் நடைமுறை தந்திரமாக் இருப்பது CPM னுடையதுதான்.

//இரண்டு முறை பிரதமர் பதவி உட்பட மத்திய மந்திரிப் பதவிகள் தேடி வந்த போது அதை வேண்டாம் என்று உதறித் தள்ளிய கட்சி சி.பி.எம்.! //

கடைசியில் மிஞ்சியது இதுதான். இந்த வரையறைப்படி சோனியா காந்தி கூட நல்ல கம்யுனிஸ்டுதான்.

CPMன் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஊழல்களுக்கு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வசூல் வேட்டைகளுக்கு ஆதாரங்களை அளவிட முடியாத அளவு இருப்பினும் இவையெதையும் சட்டை செய்யாம வாய் சவாடால் அடிக்கிறார் இந்த CPM நபர். ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் தந்திரம்தான் இது. நாம் ஆதாரங்களை வைத்தால் கள்ள மௌனம் சாதித்து ஓடிவிடுவதும் இதற்க்கு முன்பும் நடந்துள்ளது.

தொழிலாளி வர்க்கம் என்று தனது வாதத்தை நடைமுறையை சுருக்கிக் கொள்ளும் CPM இந்தியாவில் பெரும்பான்மை வர்க்கம் எது என்ற ரகசியத்தை கொஞ்சம் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

அசுரன்Related Articles:

"பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!"==> http://poar-parai.blogspot.com/2008/02/cpm.html

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத...
http://poar-parai.blogspot.com/2008/03/blog-post_24.html

சி.பி.எம். - இன் மதச்சார்பின்மை : நரியின் சாயம் வெளுத்தது http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/march/PJ_2008_3_11.html

போதையில் நடந்த மாநாடு :மார்க்சிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சி http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/march/PJ_2008_3_08.html

காவிமயமாகும் சி.பி.எம். http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/feb/PJ_2008_2_03.html

ஜனநாயகம் என்றால் என்ன? http://tamilcircle.net/unicode/general_unicode/104_general_unicode.html


குறிப்பு: மேற்கண்ட விளக்கங்களை எனது முந்தைய பதிவில் (http://yekalaivan.blogspot.com/2008/04/blog-post_20.html) தோழர் அசுரன் பதிந்திருந்த பின்னூட்டத்தை இங்கே மீள்பதிவாக வெளியிட்டுள்ளேன். நிச்சயமாக சந்திப்பு நமது தளங்களில் வந்து விவாதிக்க மாட்டார். ஆனால் அவருடைய சக சி.பி.எம். தோழர்கள், தோழர். ஜெயக்குமார் போன்றவர்களுக்காகவே இதனை இங்கு மீள்பதிவிட்டுள்ளேன். அவர்களாவது விவாதத்தைத் தொடருவார்களா?! பொறுத்திருந்தே பார்ப்போம்.......

தோழமையுடன்,
ஏகலைவன்.

Friday, April 25, 2008

இது 'சூத்திர ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?

தாழ்த்தப்பட்ட இளைஞர் வாயில் மலம் திணிப்பு!·தேவர் சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் போலீசு!இது 'சூத்திர ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?

"சமூக நீதி'யின் தாயகம் எனச் சித்தரிக்கப்படும் தமிழகத்தில், சமூக அநீதிகளும் தாழ்த்தப்பட்டோர் மீது மிகக் குரூரமான வன்கொடுமைத் தாக்குதல்களும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2002ஆம் ஆண்டு திண்ணியத்தில் இராமசாமி, முருகேசன் எனும் இரண்டு தாழ்த்தப்பட்டோர் வாயில் ஆதிக்க சாதி வெறியர்கள் மலத்தைத் திணித்தனர். அதே ஆண்டில், திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியில் சங்கன் என்ற தாழ்த்தப்பட்டவரை நடுவீதியில் அடித்து உதைத்த ஆதிக்க சாதிவெறியர்கள், அவர் வாயில் சிறுநீரைக் கழித்தனர். 2003ஆம் ஆண்டில், மதுரை மாவட்டம் கீழஉரப்பனூரில் முத்துமாரி என்ற தலித் பெண், மலத்தைக் கரைத்துக் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டார். இந்த வரிசையில் இப்போது புதிதாக இன்னுமொரு வன்கொடுமைத் தாக்குதல் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் வைகை நகரைச் சேர்ந்த, சட்டப்படிப்பு முடித்துள்ள தாழ்த்தப்பட்ட இளைஞரான சுரேஷ்குமார் என்பவரை கடந்த 26.9.07 அன்று இரவு சுற்றி வளைத்துத் தாக்கிய 9 பேரைக் கொண்ட தேவர் சாதிவெறியர்கள், அவரது ஆடைகளைக் கிழித்தெறிந்து உள்ளாடையுடன் தெருவில் ஓடவிட்டு அடித்து நொறுக்கி, தெரு ஓரத்தில் கிடந்த மலத்தை அள்ளி அவர் வாயில் திணித்ததோடு, சாக்கடையை அள்ளி அவர் மேல் ஊற்றி இழிவுபடுத்தியுள்ளனர். உடலெங்கும் பலத்த காயங்களோடு மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள தலித் இளைஞர் சுரேஷ்குமார், இப்படி வெறித்தனமாகத் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் அளவுக்கு அப்படி என்ன குற்றத்தைச் செய்து விட்டார்?

தேவர்சாதி வெறியரான கிள்ளிவளவன், சமயநல்லூர் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர். தற்கால நிழல் தலைவரும் இவர்தான். (பெண் தொகுதியாக அறிவிக்கப்பட்டதால், தனது தம்பி மனைவியைத் தலைவராக்கி விட்டு, இவர் நிழல் தலைவராக செயல்பட்டு வருகிறார்.)
சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதி தனித் தொகுதியாகும். இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிதான், தமிழக அரசில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக உள்ளார். எனினும், சமயநல்லூரில் செல்வாக்கு செலுத்துவது தேவர் சாதியினர் தான். அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு வருவதும் தேவர் மற்றும் சேர்வார் சாதியினரே. இப்போட்டியில் கடந்த 15 ஆண்டுகளில் வெற்றி பெற்று வருவதும் தேவர் சாதியைச் சேர்ந்த கிள்ளிவளவன் கும்பலே.

இவ்வதிகாரப் போட்டியின் விளைவாக அடிக்கடி அடிதடிகளும், வெட்டுக் குத்துக்களும் நிகழ்வது வாடிக்கை. ஆனால், அத்தகைய அடிதடிகளிலெல்லாம் யாரும் சுரேஷ் அளவிற்கு மோசமாக இழிவுப்படுத்தப்பட்டதில்லை.
சுரேஷ், சமயநல்லூர் தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக செயல்பட்டு வந்துள்ளார். கிள்ளிவளவனும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்தான். கடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் சேர்வார் சாதியைச் சேர்ந்த தனது நண்பர்களுக்காக வேலை செய்தார் சுரேஷ். எதிர்த்துப் போட்டியிட்ட கிள்ளிவளவன், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களை ஆள் வைத்து அடிக்க ஏவினார். இதில் அவர்கள் தப்பி விட்டனர்.

பின்னர், அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மலையாளம் மூலம், தான் குடியிருந்த வைகை நகர் பகுதியில் சிமெண்ட் ரோடு போடச் செய்தார் சுரேஷ். ""அந்தப் பகுதிக்கு சிமெண்ட் ரோடு போடக் கூடாது'' எனத் தடையாக நின்ற கிள்ளி வளவனைப் பொதுமக்கள் ஆதரவோடு முறியடித்துள்ளார் சுரேஷ்.

இவைதான் கிள்ளிவளவனுக்கும் சுரேஷ்க்கும் இடையிலான பகை வளரக் காரணமான சம்பவங்கள். ஆனால், சுரேஷ் ஆதரிக்கும் சேர்வார் சாதியினரையோ பிற சாதி இந்துக்களையோ தாக்கி, வாயில் மலத்தை திணிக்கும் கொடூரத்தைச் செய்ய கிள்ளி வளவன் முற்படவில்லை. ""ஒரு பள்ளப் பயல், தனக்கு எதிராக செயல்படுவதா'' என்ற சாதிவெறியே சுரேஷ் மீதான தாக்குதலுக்குக் காரணம்.

சமமான அந்தஸ்துள்ள சாதியினரைத் தாக்குவதற்கும், ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதனாலேயே வாயில் மலத்தைத் திணித்து தாக்குவதற்குமான சாதிவெறியின் கொடூர முகத்தை எளிதில் உணர முடியும். ஆனால், கொலைவெறியோடு தாக்கிய அந்த சாதிவெறி கும்பலின் மீது கொலை முயற்சி வழக்குக் கூடப் பதிவு செய்யாமல், கொலை மிரட்டல் விடுத்ததாக மட்டும் வழக்குப் பதிவு செய்துவிட்டு, சுரேஷ் மீது மாடு திருடியதாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசு துறையை இயக்குவது எது?

இரவு 11.30 மணிக்கு தாக்கப்பட்டு, 1 மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷை, மறுநாள் மதியம் 3 மணி வரை நேரில் சந்தித்து வாக்குமூலத்தைப் பெற போலீசு துறை முயற்சிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரில் கணேஷ், செந்தில் அரசு ஆகிய இரண்டு பேரை மட்டும் பெயரளவிற்குக் கைது செய்து விட்டு, பிற குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிய போலீசு உதவியது. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தாழ்த்தப்பட்ட மக்கள், பகுஜன் சமாஜ் கட்சி தலைமையில் சமயநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது அவர்களைப் பேசவிடாமல் தடுத்தும், ஒலிபெருக்கியை முடக்கச் செய்தும் அடாவடித்தனம் செய்தது போலீசு. கிள்ளிவளவனோ ஆர்ப்பாட்டத்திற்கு எதிரில் திமிராக நின்று புகைப் பிடித்துக் கொண்டிருந்தான். பின்னர் ஆர்.டி.ஓ. விசாரணை, தாசில்தார் விசாரணை எல்லாம் முடிந்த பிறகு, மற்ற குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்து, உடனடியாகப் பிணையில் வெளிவரவும் உதவியுள்ளது போலீசு. நீதித்துறையும் இதற்குத் துணை போயுள்ளது.

கிள்ளிவளவன் உட்பட குற்றவாளிகள் 9 பேரும் சுதந்திரமாக வெளியே திரிகின்றனர். அவர்கள் மீது சுரேஷûக்குக் கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்கு நடந்து வருகிறது. சுரேஷ் மீது மாடு திருடிய வழக்கும் நடந்து வருகிறது. குற்றவாளிகள் ஊருக்குள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஊருக்குள் போனால் மீண்டும் தாக்கப்படலாம் என்பதால், சுரேஷ் ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார். தி.மு.க. தலைமையோ, தனது கட்சி ஊழியர் இப்படி வன்கொடுமைக்கு ஆளான பின்னரும் சாதிவெறியர்களுக்கு எதிராக வாய் திறக்க மறுக்கிறது.

திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டோர் வாயில் மலத்தைத் திணித்து வன்கொடுமையை ஏவிய சாதிவெறியர்கள் மீதான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனை மட்டுமே அளித்து நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், சுரேஷ்குமார் மீது வன்கொடுமையை ஏவிய தேவர் சாதிவெறியர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று நம்ப முடியுமா?

சட்டம், நீதிமன்றம், போலீசு, அதிகார வர்க்கம், ஓட்டுப் பொறுக்கிகள் அனைத்துமே தாழ்த்தப்பட்டோரை வஞ்சித்து ஏய்க்கும்போது, இனி தாழ்த்தப்பட்டோர் தமது சமூக உரிமைகளுக்காக அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து ஆதிக்க சாதிவெறிக் கும்பலைத் தனிமைப்படுத்தி, அக்கும்பலின் வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து சிவில் உரிமைகளையும் ரத்து செய்யுமாறு, சட்ட வரம்புகளை மீறித் தெருப் போராட்டங்களில் இறங்குவதைத் தவிர, வேறென்ன வழி இருக்கிறது?

பு.ஜ. செய்தியாளர், மதுரை.

மேலும் பல விரிவான கட்டுரைகளுக்கு தமிழரங்கம் இணையத்தளம் செல்க

Thursday, April 24, 2008

விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்? (தொடர்ச்சி....)

விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்? (தொடர்ச்சி....)
அழிக்கப்படுகிறது விவசாயம்!

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசும் பாரதிய ஜனதாவும் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் பின்பற்றி வரும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகள் திட்டமிட்டே நமது நாட்டின் விவசாயத்தைக் கொலை செய்திருக்கின்றன. "விவசாயத்துக்கான மானியங்களை வெட்டுவது, பாசனப் பராமரிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துவது, தானியக் கொள்முதலை நிறுத்தி இந்திய உணவுக் கழகத்தை மூடுவது, ரேசன் விநியோகத்தை நிறுத்துவது, உணவுத் தற்சார்பை அழித்து, தானிய உற்பத்தி - கொள்முதல் - சந்தை அனைத்தையுமே பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது" என்ற கொள்கைகள் உலகவங்கி, ஐ.எம்.எப்., உலக வர்த்தகக் கழகம் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களால் திணிக்கப்பட்டு, இந்திய அரசால் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதன் விளைவாக விவசாயத்துறையில் இந்தியாவின் தனிநபர் சராசரி உற்பத்தி, 1943 வங்கப்பஞ்சத்தின் போது இருந்த நிலைக்கு வீழ்ந்திருக்கிறது. 1973-74 இல் சராசரியாக ஆண்டொன்றுக்கு ஒரு இந்தியனுக்கு சாப்பிடக் கிடைத்த தானியத்தின் அளவு 154.24 கிலோ. 2004-05 இல் அது 132.58 கிலோவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று கூறுகிறது தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு. அதாவது நாளொன்றுக்கு 360 கிராம் தானியம்!
தேசிய வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றுக்கு 8.5% என்று பீற்றிக் கொள்கிறார் சிதம்பரம். விவசாயமோ கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 0.5% தான் வளர்ச்சி அடைந்திருக்கிறது. நிகர தேசிய உற்பத்தியில் (GDP) விவசாயத்தின் பங்கு 1980 இல் 36.4% ஆக இருந்தது. 2006-07 இல் அது 18.5% ஆக வீழ்ந்திருக்கிறது. சேவைத்துறையின் பங்கோ 55% ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த வீழ்ச்சி தானாக நேர்ந்தது அல்ல. விவசாயம் திட்டமிட்டே வீழ்த்தப்பட்டிருக்கிறது.


ஆறு வழிச்சாலைகள், நவீன விமான நிலையங்கள், துறைமுகங்கள், மேம்பாலங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்; என்று பன்னாட்டு முதலாளிகளுக்கும் அம்பானி, டாடா போன்ற தரகு முதலாளிகளுக்கும் தேவையான கட்டுமான வசதிகளைச் செய்து கொடுக்க பல இலட்சம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை அரசு வாரி இறைக்கிறது. ஆனால், நீர்ப்பாசனத்துக்கான ஒதுக்கீடு வெட்டப்பட்டிருக்கிறது.

1990 வரை ஆண்டுக்கு 3% என்ற அளவிற்காவது வளர்ந்து வந்த நீர்ப்பாசனம் அதன் பின் 1.2% என வீழ்ச்சி அடைந்தது. இந்தியாவின் விளைநிலங்களில் பாசன வசதி உள்ளவை வெறும் 40% மட்டுமே. இந்நிலையில் புதிய பாசனத் திட்டங்கள் இல்லாதது மட்டுமல்ல, இருக்கின்ற பாசன வசதிகளைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்தும் அரசு கழன்று கொண்டு விட்டது. 'பயனீட்டாளர்களே பராமரிப்பது' என்ற உலக வங்கித் திட்டத்தின் கீழ், அந்தச் சுமையையும் விவசாயிகளின் தலையிலேயே அரசு தள்ளிவிட்டது. நிலத்தடி நீருக்காகக் கிணறு தோண்டியே கடனில் ஆழப்புதைந்து வருகிறார்கள் விவசாயிகள்.


எந்தவொரு நாட்டிலும் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப விவசாய உற்பத்தி அதிகரித்தால்தான் உணவுப் பஞ்சத்தைத் தவிர்க்க முடியும். இந்தியாவிலோ பயிரிடும் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. நீர் வளமிக்க பல இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசு தாரை வார்த்திருக்கிறது. சுமார் ஒரு கோடி ஏக்கர் விளைநிலம் நகரங்களால் விழுங்கப்பட்டிருக்கிறது. விளைநிலங்களின் பரப்பு குறையக் குறைய விவசாய உற்பத்தியும் குறைந்து கொண்டே போகிறது.


விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் அரசு அக்கறை காட்டவில்லை. இந்தியாவைக் காட்டிலும் பெரிய நிலப்பரப்பை சீனா பெற்றிருந்தாலும், விளைநிலங்கள் சீனத்தைக் காட்டிலும் இந்தியாவில் தான் 1.5 மடங்கு அதிகம். எனினும் ஒரு ஹெக்கேரில் சராசரியாக 5 டன் தானியம் விளைவிக்கிறது சீனம். இந்தியாவிலோ இது 2.5 டன். பசுமைப் புரட்சி புகுத்திய உரம் பூச்சி மருந்துகளின் விளைவாக நிலம் மலடாகித் தவிக்கிறார்கள் விவசாயிகள். பூச்சி மருந்துக்கான செலவு 1980இல் இருந்ததைக் காட்டிலும் 20 மடங்கு அதிகரித்திருப்பதாக ஆந்திர விவசாயிகள் குமுறுகிறார்கள். இந்நிலையில் மண்ணின் தரத்தை மேம்படுத்தவோ, மாற்றுப் பயிர்களை அறிமுகப்படுத்தவோ, புதிய விதைகளைக் கண்டுபிடிக்கவோ அரசு எதுவும் செய்யவில்லை.


இருக்கின்ற அரசாங்க விதைப் பண்ணைகளும் அவற்றின், ஆய்வுகளும் முடக்கப்பட்டு விட்டன. அவை பன்னாட்டு விதைக் கம்பெனிகளின் எடுபிடிகளாகவே வேலை செய்கின்றன. மான்சாண்டோ நிறுவனத்தின் பி.டி.காட்டன் என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதை 64% சந்தையை விழுங்கிவிட்டது. போலி விதைகளை வாங்கி விளைச்சல் இல்லாமல் ஏமாந்து குமுறுகிறார்கள் விவசாயிகள்.


உரமானியமும் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படுவதிலை. ஆண்டு தோறும் 2 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உரமானியத்தைத்தின்று உரக் கம்பெனி முதலாளிகள்தான் கொழுக்கிறார்கள். விவசாயிகளுக்கான கடன் - மானியம் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. கூட்டுறவு வங்கிகள் மூடப்படுகின்றன. நாளுக்கு ஒரு கிளை வீதம் கடந்த 15 ஆண்டுகளில் நாடெங்கும் 4750 கிராமப்புற வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, கந்துவட்டிக் கும்பலின் பிடியில் 60% விவசாயிகள் தள்ளப்பட்டு விட்டார்கள். நாட்டின் 82% விவசாயக் குடும்பங்கள் மீளவே முடியாத கடனில் சிக்கியிருப்பதாக அரசே நடத்தியுள்ள ஆய்வுகள் ஒப்புக் கொள்கின்றன. விவசாயம் செய்யச் செய்ய கடன்தான் உயரும் என்பதால் விவசாயத்தை விட்டே ஓடுகிறார்கள் விவசாயிகள்.


எந்தந்த தொழிலிலும் பொருளை உற்பத்தி செய்பவன்தான் அதன் விலையைத் தீமானிக்கிறான். விவசாயிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. விவசாய உள்ளீடு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் உணவு தானியத்தின் கொள்முதல் விலையை மட்டும் உயர்த்த மறுக்கிறது அரசு.


கோதுமை விலை கட்டுபடியாகாமல் பஞ்சாப் விவசாயிகளும், பருத்தி விலை கட்டுப்படியாகாமல் மகாராட்டிர விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விலை கட்டுப்படியாகாமல் விளைந்த கரும்பைத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள் கரும்பு விவசாயிகள். குவிண்டால் நெல்லுக்கு 1000 ரூபாய் தரவேண்டும் என்று அரசு நியமித்த குழுவே சிபாரிசு செய்திருந்த போதும், 775 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுக்கிறது அரசு.


கொள்முதல் ரத்து, உணவு இறக்குமதி!


கடந்த 15 ஆண்டுகளில் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருக்கும் அரசு படிப்படியாக விலகிக் கொண்டுவிட்டது. அந்த இடத்தை கார்கில், மான்சாண்டோ, ஐடிசி போன்ற பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிகளும் கைப்பற்றி வருகிறார்கள். சில்லறை வணிகத்தை விழுங்கி வரும் ரிலையன்ஸ் அம்பானி, பிர்லா, வால்மார்ட் போன்ற நிறுவனங்கள், உணவு தானியங்கள் - காய்கனிகள் கொள்முதலிலும் இறங்கியிருக்கிறார்கள். 1980களின் இறுதியில் 45% தானியக் கொள்முதலை இந்திய உணவுக் கழகம் செய்தது. இன்று நாட்டின் தானியக் கொள்முதலில் 75% தனியார் முதலாளிகளின் பிடிக்குச் சென்றுவிட்டது. இவர்களுடைய 'சுதந்திர வர்த்தகக் கொள்ளை'க்கு வசதி செய்து கொடுக்கத்தான் உலக வங்கியின் ஆணைப்படி தானியக் கையிருப்புகளைக் காலி செய்து, இந்திய உணவுக் கழகத்தின் கிட்டங்கிகளை இழுத்து மூடி அவற்றை ரியல் எஸ்டேட் சந்தையில் விற்று வருகிறது அரசு.


இவ்வாறாக இந்திய விவசாயத்தையும் உணவுத் தற்சார்பையும் அழிக்க ஏகாதிபத்தியங்கள் வகுத்துக் கொடுத்த சதித்திட்டங்கள் அனைத்தையும் காங்கிரசு, பா.ஜ.க. அரசுகள் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றன.

(தொடரும்........
எமது அமைப்புகள் வெளியிட்டிருக்கும் "விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்?" என்ற வெளியீட்டிலிருந்து இதனை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
மேற்கண்ட கட்டுரைக்குத் தொடர்புடைய பிற கட்டுரைகள்:

http://tamilarangam.blogspot.com/2008/04/blog-post_24.html

Wednesday, April 23, 2008

விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்?அன்பார்ந்த தோழர்களே!


மீண்டுமொரு கடுமையான உணவுப் பஞ்சத்தை மூன்றாந்தர நாடுகள் அனுபவிக்கத்துவங்கிவிட்டன. சுமார் என்பது ஆண்டுகளுக்கு முன்னால் உலகை உலுக்கிய அதே பஞ்சப் புயல் இன்று உலகமயமாக்கலின் விளைவால் பெரும் சூறாவளியாக உருமாறி வந்துகொண்டிருக்கிறது.

உலகமயமாக்கலை ஏற்காத நாடுகளுக்கு, புறந்தள்ளிய நாடுகளுக்கு, எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளும், போர்முனைத் தாக்குதலும் ஏற்படுத்திய பாதிப்புகளைக் காட்டிலும், உலகமயமாக்கலை ஏற்றுக் கொண்ட நாடுகளிலும், அவற்றால் விளைந்திருக்கும் பாதிப்புகள், பசி, பட்டினிச் சாவுகளின் ஓலம் இன்று மிகமிகக் கொடூரமாகக் கேட்கத் துவங்கியிருக்கிறது.


இந்தியாவிலும் அதன் தாக்கம் மிகக் கடுமையாகவே இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக நம்முடைய மக்கள் அனுபவித்துவரும் விலைவாசி உயர்வு, அதன் விளைவாக உயர்ந்து வரும் பட்டினிக் கொடுமைகள், தற்கொலைச் சாவுகள் இதுபற்றிய செய்திகளே எல்லாப்புறமும் கேட்கின்றன.


ஆனால், நம்முடைய நாடாளுமன்றப் பன்றிகள், விரைவில் விலைவாசி குறைந்துவிடும் என்று ஆருடம் சொல்லிவருகின்றன. விலைவாசியைக் குறைக்கும் மந்திரம் தங்களிடமே இருப்பதாகக் கொக்கரிக்கிறார்கள் ஜெயாமாமி - அத்வானி கம்பெனியைச் சார்ந்தவர்கள். ''மூன்றாவது அணியமைத்து இதனை நாங்கள் நிச்சயமாக குறைத்துக் காட்டுவோம்'' என்று சவடால் அடிக்கிறார்கள் யெச்சூரி - டி.ராஜா போன்ற காமெடியன்கள்.


இந்நிலையில், இந்தியா விரைவில் எதிர்கொள்ளவிருக்கும் கடும் பஞ்சத்தை முன்னறிவிக்கும் விதமாகவே இந்த விலையேற்றத் துன்பத்தை நாம் பார்க்கவேண்டும் என்பதையும், உலகமயமாக்கலால் வலுக்கட்டாயமாக நம்மீது ஏவப்பட்டிருக்கும் இத்தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்வது, என்பதனையும் வலியுறுத்தும் வகையில், எம்முடைய அமைப்புகளின் சார்பில் ஒரு சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டிருக்கிறது.


அதன் தலைப்பு "விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்?", விலை ரூ.5/-.


பிரதிகள் கிடைக்குமிடம்:
இரா. சீனிவாசன்,
புதிய கலாச்சாரம்,
எண்:- 18, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 600083.
தொலைபேசி:- 044-23718706.


விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்?

இதுவரை காணாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது விலைவாசி, அரிசி கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கோதுமையின் விலையோ இரண்டு மடங்காகியிருக்கிறது. கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் அனைத்தும் கிலோவுக்கு 20ரூபாய் விலை ஏறியிருக்கின்றன. நல்லெண்ணெய் விலை இரண்டு பங்காகியிருக்கிறது. பருப்பு வகைகள் அனைத்துமே விலை உயர்ந்துவிட்டன. பால் விலை உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது.


கடந்த மூன்றே மாதங்களில் ஏழை நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவு சராசரியாக மாதம் 1000 ரூபாய் வரை அதிகரித்து விட்டது. இந்த விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் ஏழைக் குடும்பங்கள் ஒரு வேளைச் சோற்றைக் குறைக்கின்றனர். அத்தியாவசியமான செலவுகளைக் கூடக் குறைக்கின்றனர். பரம ஏழைகளோ பட்டினிச்சாவுக்குத் தள்ளப்படுகின்றனர்.


உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் இந்த விலை உயர்வும் பணவீக்கமும் 33 நாடுகளில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று அபாயச் சங்கு ஊதியிருக்கிறது உலகவங்கி. எகிப்து, மொராக்கோ, செனகல், காமரூன், இந்தோனேசியா போன்ற நாடுகளில் விலை உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்துள்ளன.


வங்காளதேசம் பெரும் பஞ்சத்தின் விளிம்பில் நிற்கிறது. சீனா, அர்ஜெண்டினா, கஜகஸ்த்தான், வியத்நாம் போன்ற பலநாடுகல் தானிய ஏற்றுமதிக்குத் தடை விதித்திருக்கின்றன. விளைந்த நெல் திருடு போய்விடுமோ என்று அஞ்சி இரவு முழுவதும் வயலிலேயே படுத்துறங்குகிறார்கள் தாய்லாந்தின் விவசாயிகள்.


'விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவேண்டும்' என்று கூக்குரலிடும் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் விலைவாசி உயர்வென்பது ஏதோ பல மர்மமான காரணங்களால் ஏற்படுவதைப் போலச் சித்தரிக்கின்றனர். எதிர்க்கட்சிகளோ இதனை ஆளும் கட்சியின் நிர்வாகத் திறமையின்மையாகக் காட்டுவதன் மூலம், அடுத்த தேர்தலில் ஓட்டுப் பொறுக்க அடிபோடுகின்றனர்.


சுனாமியைப் போன்ற யாருமே எதிர்பார்க்காத, யாராலும் கட்டுப்படுத்த இயலாத ஒரு இயற்கைப் பேரழிவாக விலைவாசி உயர்வைச் சித்தரிக்கிறது காங்கிரசு அரசு. தற்போது உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்திருப்பதால் தவிர்க்க முடியாமல் இந்தியாவிலும் விலை உயர்வதாகவும் அதற்குத் தாங்கள் அமல்படுத்திய கொள்கைகள் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்பது போலவும் சிதம்பரம் - மன்மோகன் - அலுவாலியா கும்பல் நாடகமாடுகிறது. விலைவாசி உயர்வு ஒரு தற்காலிகமான பிரச்சினை என்பது போலவும் சித்தரிக்கிறது.


இவை அனைத்தும் பொய், தற்போது நாம் சந்திக்கும் விலை உயர்வும், பணவீக்கமும், உணவுப் பஞ்சமும் யாருமே எதிர்பார்த்திராத பேரழிவுகள் அல்ல. உலகப் பணவீக்கத்தின் காரணமாக மட்டுமே உருவனவையும் அல்ல. இவை இந்திய அரசாலும் ஆளும் வர்க்கங்களாலும் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட பேரழிவுகள். உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி, இந்த நிலைமை உருவானதற்குத் திட்டவட்டமான பல காரணங்கள் இருக்கின்றன.


(தொடரும்..........

Monday, April 21, 2008

சி.பி.எம். என்ற ‘சல்லடைப் படகு’ கரையேறுமா??????????


சி.பி.எம். என்ற ‘சல்லடைப் படகு’ கரையேறுமா??????????


“இருபதாம் நூற்றாண்டின் இனையற்ற சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ்” என்றது பி.பி.சி.யின் ஆய்வு முடிவுகள். “அப்படியெல்லாம் கிடையாது நாங்கள் தான் அனைவரையும் விஞ்சும் சிந்தனையாளர்கள்” என்கிறார்கள் மார்க்சை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மார்க்சிய துரோகிகளான சி.பி.எம். கட்சியினர். இந்துத்துவத்தை மிதவாதமாகவும், கம்யூனிசத்தை சமரசவாதமாகவும் கொண்டு ஒருங்கே சேர்த்துப் பிசைந்து வடித்த கலவைதான் இவர்கள்.

முதலாளித்துவத்தின் சிறப்பு கண்காணிப்போடு, “பகையாளிக் குடும்பத்தை உறவாடிக் கெடுக்கும்” பேடித்தனமான யுக்தியோடு, கம்யூனிச வேடம் பூண்டு பாசிச வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்புதான் இந்திய சி.பி.ஐ/எம் ஆகிய கட்சிகள். இந்த உலகில் ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாக தன்மீதான விமர்சனத்தை மறுக்கும் ஒரு கூட்டம் உண்டென்றால் அது மேற்கண்ட இப் போலிக் கயவர் கூட்டம்தான். விமர்சனங்களையும் சுய பரிசீலனைகளையும் அடியோடு மறுப்பது அறிவியலுக்கு எதிரானது மட்டுமல்ல, அறிவியலையும் ஒருகூறாக தனக்குள் கொண்டுள்ள மார்க்சியத்துக்கும் புறம்பானதாகும்.

சி.பி.ஐ/எம் கட்சிகளின் மீது நாம் வைத்த விமர்சனங்கள், அவர்களின் சுயபரிசீலனைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன. தன்னன ஒரு கம்யூனிச அமைப்பாக அவர்கள் சொல்லிக் கொள்வதினால் மட்டுமே அவர்களின் செயல்கள் நம்மால் விமர்சிக்கப்பட்டன. அவ்விமர்சனங்கள் அனைத்துமே அவர்களால் அடியோடு அலட்சியப் படுத்தவும்பட்டன.

கம்யூனிஸ்டு கட்சி என்ற பெயருடன் இங்கே களத்தில் நின்றாலும், பெரியாரின் பெயரை, கொள்கைகளை, விற்றுப் பிழைக்கும், அவருடைய வாரிசுகளான அனைத்து திராவிடக் கட்சிகளின் பண்புகளுக்கும் சற்றும் குறையாத கொள்கைகளோடு செயல்படும் இந்த போலிக் கம்யூனிஸ்டு கட்சியின் மீது (மற்ற சாதாரண ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளை அனுகும் முறைக்கு மாற்றாக) துவக்கத்தில் விமர்சனங்களைப் பதித்து வந்தன புரட்சிகர அமைப்புகள். ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப்போல், இந்த போலிக் கூட்டம் கம்யூனிசத்திலிருந்து பாசிசமாக சீரழிந்துத்தான் போயிற்று. எனவே, தொடக்கத்தில் அனுகிய அதே முறையில் இன்றும் இவர்களை (கம்யூனிஸ்ட் கட்சிதானேயென்று) விமர்சிக்க முடியாது அல்லவா. அதனால் தான் எம்முடைய இன்றைய விமர்சனங்கள், அவர்களின் மீதான சுயபரிசீலனையை முன்னிறுத்துவதைத் தவிர்த்து, மக்கள் முன் அம்பலப்படுத்தலாக வெளிப்படுகின்றன.

இந்தியாவில், 1957லேயே கேரளாவில் ஆட்சியைப் பிடித்த அக்கட்சி, பின்னர் மே.வங்கத்திலும், தொடர்ந்து திரிபுராவிலும் ஆளும் கட்சியாக பரினமித்திருக்கின்றபோதிலும், மக்கள் மத்தியில் தம்முடைய இருத்தலை நிலைநிறுத்திக் கொள்ளவே இன்றும் படாதபாடு படுகின்றன. காரணம், ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியாக உழைக்கும் மக்களோடு நிற்கவேண்டிய, தமது அடிப்படையான பணியை மறுதலித்து, முதலாளிவர்க்க விசுவாசிகளாக மாறிப்போனதினால்தான்.

அறுபதுகளின் முடிவில் மே.வங்கத்தில் முதன் முதலாக ஆட்சியைப் பிடித்த சி.பி.எம்., அரியனையேறியதும் தம்முடைய வாலை நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவாக அசைத்தது. அதே காலகட்டத்தில் தமிழகத்தில் கீழத்தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நிலவுடைமையாளர்களுக்கு எதிராக களத்தில் நின்ற அக்கட்சி, தாம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மே.வங்கத்தில், நக்சல்பரி என்ற கிராமத்தில், அங்குள்ள நிலவுடைமையாளர்களுக்கு எதிராக விவசாயத் தொழிலாளர்களுக்குத் தலைமையேற்று போராடிய தமது கட்சியின் அணிகளளயே சுட்டுக் கொல்லும் அளவுக்கு போனது.
கீழத்தஞ்சையின் கீழ்வெண்மனியில் குடிசைக்குள் வைத்து கொலைசெய்யப்பட்ட 44 தலித் சமூகத்தைச் சார்ந்த விவசாயக் கூலிகளுக்காக நீலிக் கண்ணீர் வடித்த அக்கட்சியின் தலைமை, அதே சமயம் மே.வங்கத்தில் நடைபெற்ற கொலைபாதகத்தை தானே முன்னின்று அரங்கேற்றியது. இதுதான் இவர்களது வர்க்கப்பார்வை. நல்லவேளையாக தமிழகத்தில் அப்போது அக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இல்லை. இருந்திருந்தால் மே.வ ஜோத்திதார்களுக்கு ஆதரவளித்தது போல கோபாலகிருஷ்ண நாயுடுவின் பாக்கெட்டில் அமர்ந்து சேவையாற்றியிருப்பார்கள்.
சி.பி.ஐ.யிலிருந்து விலகி, சற்று தீரமான புரட்சிகரவாதிகளாக காட்டிக் கொண்ட சி.பி.எம். கட்சி, ஆட்சிப் படிக்கட்டில் ஏறுவது என்ற தமது இலக்கை அடைந்தவுடன், புரட்சியையும் கம்யூனிசத்தையும் ஆழக்குழிதோண்டி, தம்மால் சுடப்பட்டு இறந்த அத்தோழர்களின் உடல்களோடு இட்டுப் புதைத்தும் விட்டது.

அதன் நீட்சியாக இதோ இன்றுவரை முதலாளித்துவ கைக்கூலியாக, தமது சேவைகளை அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுடனும் இணைந்து செவ்வனே செய்து வருகிறது. மார்க்சியம் வலியுறுத்தும் சமூகமாற்றத்திற்கான புரட்சித்தீயை மக்களிடம் உருவாக்கி, அதையே ஒரு பவுதீக சக்தியாக மாற்றி வழிநடத்த வேண்டிய பொறுப்பை மறுதலித்து, தமது கட்சியின் அணிகளுக்குள்ளே வேர்விட்டிருந்த புரட்சிக் கனலை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

சித்தாந்தத் தெளிவின்மையினால், கட்சியை முறையாக விமர்சித்து வளர்த்தெடுக்கவோ அல்லது வெளியேறவோ முடியாமல் பரிதவித்து நிற்கின்றன, அக்கட்சியின் நேர்மையான அணிகள். அதையும் தாண்டி, சுயமான உந்துதலில் தமது கட்சியின் தலைமையை எதிர்த்து கேள்விகேட்கும் எந்தவொரு தோழரையும் “இவன் ஒரு நக்சலைட்” என்று ஒரு முத்திரை குத்தி கட்சியை விட்டு தூக்கியெறிந்து விடுகிறது. அதற்கும் மேலாக வெளியேற்றப்பட்ட அத்தோழர் அடங்கிப் போகவில்லையெனில், அவருக்கு அருகாமையிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தானே வலிய சென்று, போலீசிடம் “மேற்படி தோழர் நக்சல் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததால் எங்கள் கட்சியிலிருந்து விலக்கிவிட்டோம், நீங்கள் சற்று கூர்ந்து கண்காணிக்கவும்” என்று வலியுறுத்தவும் தயங்குவதில்லை.
இத்தகைய கீழ்த்தரமான செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட தோழர்கள் ஏராளம். திரிபுராவின் முன்னாள் முதல்வராக இருந்த தோழர்.நிரூபன் சக்கரவர்த்தி போன்றவர்கள் கூட கட்சியிலிருந்து அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட காட்சிகள் ஏராளம். இறுதியில் அவர் ஒரு மனநோயாளி, பைத்தியக்காரன் என்று வெறுப்பேற்றப்பட்டு, சாகடிக்கவும்பட்டார் என்ற வேதனை மிகுந்த செய்தியும் உண்டு. இந்த லட்சனத்தில், பொறுமையிழந்து கட்சியைவிட்டு வெளியேற முயலும் ஊழியர்களை, “இதையெல்லாம் உட்கட்சிப் போராட்டத்தில் தான் சாதிக்கமுடியுமென்று” அறிவுறுத்துகிற சப்பைக்கட்க்கள் வேறு.

இப்படி தம்முடைய பிழைப்புவாதப் போக்கை விமர்சிக்க கட்சியின் உறுப்பினர்களையே அனுமதிக்காத அக்கட்சி, “நம்முடைய விமர்சனங்களை ஏறெடுத்துப் பார்க்கும் என்று நம்பிக்காத்திருப்பது மடமைத்தனம். மாறாக இவர்களின் இத்தகைய கொடுஞ்செயல்களை வெகுவேகமாக அம்பலப்படுத்தி வேலைசெய்யவேண்டிய கடமையும் நம்முன் இருக்கிறது”, என்பதுதான் அக்கட்சியிலிருந்து வெளியேறிய எனது படிப்பினை.

சாதாரண ஓட்டுக்கட்சிகளைப் புறக்கனித்து, சி.பி.எம்., கட்சியில் வந்து தன்னை இணைத்துக் கொண்டு செயபட விரும்பும், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற உந்துதல் எப்படிப்பட்டது? எதனால் ஏற்படுகிறது?. அது சமூக அவலங்களை எதிர்க்கும் ஒரு தனிமனிதனின் நேர்மையான வெளிப்பாடாகத்தான் இருக்கமுடியும். இத்தகைய எண்ணங்களுடன் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒருவரை மேன்மேலும் வளர்த்தெடுப்பதற்கு மாற்றாக, மழுங்கடிக்கும் வேலைகளை மேற்கொள்ளும் அக்கட்சி, உறுப்பினர்களின் நேர்மையை அலட்சியப்படுத்தும் / அவமதிக்கும் இவ்வமைப்பு எப்படி ஒரு கம்யூனிச அமைப்பாக இருக்கமுடியும்?

தம்முடைய செயல்களை விமர்சன ரீதியாக எதிர்ப்பவன், தனது கட்சிக்காரனாக இருந்தாலும் ம.க.இ.க. வைச் சார்ந்த தோழர்களாக இருந்தாலும், வேறு எவராக இருந்தாலும் அனைவரையும் ‘தீவிரவாதிகள் / பயங்கரவாதிகள் / நக்சலைட்டுகள்’ என்று தூற்றுவது இந்த பாசிஸ்டுகளின் வழக்கமான முறை.

இந்துத்துவ பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பரிவாரங்கள் கூட எம்முடைய நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ள முடியாமல், மேற்கண்ட சி.பி.எம்., பானியிலேயே நமக்கு ‘பயங்கரவாதிகள்’ பட்டம் சூட்டுகின்றன. மூவாயிரம் அப்பாவி மக்களை கொன்று புதைத்த இந்துவெறிக் கொலைகாரன் நரேந்திரமோடி முதல் அத்வானி வரை எவனும், சி.பி.எம்.மின் பொலிட்பீரோ உறுப்பினர் அல்ல, ஆனால் அவர்களது குரல், நமக்கெதிராக வெளிப்படும்போது மட்டும் பொலிட்பீரோவின் குரலையொத்து வெளிப்படுவது எவ்வாறு?

இவர்கள் நமக்கு இத்தகைய பட்டங்களை வாரிவழங்குவது எதற்காக, நம்மை தேசதுரோகிகளாக இவர்கள் சித்தரிக்க முனைவது எதற்காக, மக்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்துவதற்காக மட்டுமே. உண்மையான பாட்டாளி வர்க்க அமைப்பாக நம்முடைய வளர்ச்சி, இவர்களை அச்சுறுத்துவத்தால்தான் அவர்கள் அனைவரும் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். "எங்கே இவர்களால் தாம் அம்பலப்படுத்தப்பட்டு விடுவோமோ" என்ற இழிநிலைதான் இவர்களை துரோகிகளாக வெளிக்காட்டுகிறது.

தோழர். பகத்சிங் கூட தமது இறுதிக் காலகட்டங்களில் “நாங்கள் தீவிரவாதிகளோ / பயங்கரவாதிகளோ அல்ல” என்றும் “எங்களைவிட இந்நாட்டு மக்களை அதிகம் நேசிப்பவர் வேறு யாரும் இருக்கமுடியாது” என்றும் அதிகமாக வலியுறுத்திப் பேசவேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார். அவருடைய போராட்டத்தின் பெரும்பகுதி, மக்களிடமிருந்து தாம் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்ப்பதாகத்தான் இருக்கவேண்டியதாயிற்று. காந்தி என்ற போலிஅகிம்சாவாதியின் பிம்பம்தான் தியாகி பகத்சிங்கை இந்திலைக்கு ஆளாக்கியது.. அவர் அனைவருக்கும் எதிரியாக சித்தரிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது, அவருடைய சமரசமற்ற பாட்டாளி வர்க்க சித்தாந்த ரீதியிலான செயல்பாடுகள்தான்.

ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தோழர். பகத்சிங்கின் வாரிசுகளாக இன்றும் களத்தில் நிற்பது நாம்தான். அவர் சந்தித்த அதே துரோக அரசியலை நாமும் இப்போது சந்தித்தே தீரவேண்டும் என்பதுகூட இயங்கியல் ரீதியானதுதான். துரோகத்தை எதிர்கொண்டு வெற்றிகரமாக முறியடிப்போம். போலிக் கூட்டத்தை மூடி மறைத்திருக்கும் சிவப்புக் கொடியைத் அடித்து வெளுத்து இதுவும் ஒரு காவிக்கும்பல்தான் என்பதை மக்களுக்குக் காட்டுவோம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

Wednesday, April 16, 2008

இணையக் கோமாளி சி.பி.எம். சந்திப்புக்கு ஒரு பகிரங்க நோட்டீஸ்.......


இணையக் கோமாளி சி.பி.எம். சந்திப்புக்கு ஒரு பகிரங்க நோட்டீஸ்.......இதுவரை ம.க.இ.க. காட்டிலிருந்து வேலைசெய்வதாகவும், மக்களோடு அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை என்பதாகவும் பேசிவந்த சி.பி.எம்.மின் இணைய வடிவமான கோமாளி சந்திப்பு, அந்த புளுகு மூட்டைகள் எமது புரட்சிகர செயல்பாடுகளினால் மக்கள் மத்தியிலும் வலையுலகிலும் அடித்து துவைக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டன.

இப்போது அதே அழுகி நாறிய பிற்போக்கு வாதங்களை வேறொருவடிவத்தில், மெருகேற்றிக் கொண்டு கொள்கை முழக்கமிட இங்கே வந்து பல்லிலிக்கிறார் இந்த சந்திப்பு என்கிற செல்வப் பெருமாள். கொள்கைகளையும் சித்தாந்த விசயங்களையும் விவாதிக்கத் திராணியற்று பலமுறை எம்மிடம் தோற்று விலகி ஓடி ஒளிந்துகொண்ட இந்த விவாதப் புலி, எமது தோழர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் இன்று வரை பதிலலிக்காமல் அம்மனமாக நின்று கொண்டிருக்கிற இந்த கிணற்றுத் தவளை, சிறிதும் வெட்கமின்றி யோக்கிய வேடம் பூண்டு இப்போது மறுபடியும் வந்திருக்கிறது.

இப்போது எம்முடைய வேண்டுகோளெலாம் என்னவென்றால், வழக்கம்போலல்லாமல் இந்த முறையாவது யோக்கியமாக வாதிடவேண்டுமென்று சந்திப்பு அவர்களை சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்வதுதான். எமது அடுத்தடுத்த சிறப்புப் பதிவுகள் இவ்விவாதங்களின் தொடர்ச்சியாக இங்கே வலையுலகில் மீண்டும் வலம் வரவிருக்கின்றன. அனைத்தும் சந்திப்புக்காவவும் அவர் சார்ந்திருக்கிற பாசிச போலி கம்யூனிஸ்டு கட்சிக்காகவும்தான் என்பதை இங்கே தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்.
இதன் துவக்கமாக தமிழரங்கம் வலைதளம் வெளியிட்டிருந்த ஒரு சிறிய பதிவை இங்கே பதிப்பித்திருக்கிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

//////ம.க.இ.க. வின் பிறப்பு குறித்து புரளி பேசுபவன் யார்?

மக்களுக்கு துரோகம் செய்து, கொள்கை ரீதியாக சோரம் போனவர்கள் தான். மக்களுக்காக, அவர்களின் நலன்களை முன்வைக்க அரசியல் ரீதியாக வக்கற்று போனவர்கள். மக்களை பிறப்பில் வைத்தே பிளக்கும் நயவஞ்சகத்தைத் தவிர வேறு அரசியல் அற்றவர்கள், இவர்கள் தான்.

1. ஆண் பெண் பால் பிரிவினையை பிறப்பில் வைத்தே, ஆணாதிக்கமாக்கும் வக்கிரத்தின் சொந்தக்காரர்கள்.
2. மதப் பிளவை பிறப்பில் வைத்தே பிளக்கும் இழிதனத்தைக் கொண்டவர்கள்.
3. சாதியை பிறப்பில் வைத்தே சூதாடும் பார்ப்பனியத்துக்கு பாய் விரிப்பவர்கள்.
4. நிறம் குறித்த ஓடுக்குமுறையை செய்யும் ஓட்டுண்ணிகள்.
5. விபச்சாரியின் குழந்தையை பிறப்பு சார்ந்து விபச்சாரம் செய்ய தூண்டும் பொறுக்கிகளின் அற்பத்தனத்தை செய்பவர்கள்.

இப்படி அநேக ஒடுக்குமுறையை பிறப்பால் அடையாளப்படுத்தி, செழிப்பவர்கள் இவர்கள். மக்களின் அப்பட்டமான விரோதிகள் இவர்கள்.

இப்படி மக்களைப் பிளந்து, அவர்களை குழிதோண்டி புதைக்க வெளிக்கிடும் கும்பலைச் சேர்ந்தவர்கள். ஒரு விவாதத்தில் அப்படியும் இப்படியுமாக புணர்ந்து, அவர்களே அறியாது பாசிசத்தை புலம்புபவர்கள். இப்படி பிறப்பு குறித்து ம.க.இ.க. வை தமது சொந்த முகாந்திரத்துடன் புணர முனைகின்றனர். இப்படிக் காட்டுகின்ற பாசிச வன்மம் எனன்வென்றால், அவர்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சும், மக்களை ஓடுக்குகின்ற வர்க்க பிரதிநிதிகளின் நடத்தையாக வெளிப்படுகின்றது.

இவர்கள் ம.க.இ.க வின் கொள்கையை விவாதிக்க முடியாதவர்கள். அதில் உள்ள தனிநபர்களின் பிறப்பு குறித்து புலம்புகின்றனர். இதுவும் ஒரு அரசியலோ.

பாட்டாளி வர்க்கப் பிரதிநிதிகள், மனித இனத்தில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை.

1. ஆண் பெண் பாகுபாடு பார்ப்பதில்லை.
2. சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை.
3. நிறப் பாகுபாடு பார்ப்பதில்லை.
4. இனப் பாகுபாடு பார்ப்பதில்லை.
5. மதப் பாகுபாடு பார்ப்பதில்லை.

இப்படி எந்தப் பாகுபாடும் மனிதர்களுக்கு இடையில் பார்ப்பதில்லை. இதனால் தான் இது சர்வதேசியமாக இருக்கின்றது. உலகெங்கும் அதனிடம் ஒருமித்த நிலைப்பாடு உள்ளது. மக்கள் நலன் சார்ந்த கொள்கையுடன், மனிதர்களை அணுகுகின்றது. அது பிறப்பில் பார்ப்பானையும், பிறப்பில் முதலாளியையும், பிறப்பில் சக்கிலியனையும், பிறப்பில் பெண்ணையும், பிறப்பில் எதுவாக இருந்தாலும், மனிதர்களுக்கு இடையில் வேறுபாடு காட்டுவதில்லை. அது கொள்கை ரீதியாக மட்டும் தன்னை ஒழுங்கமைக்கின்றது. அதாவது மனிதத் தன்மையை மட்டும் அளவுகோலாக கொள்கின்றது. வேறுபாடு காட்டாத மனிதத்தன்மையை மட்டும் அது கோருகின்றது. வேறுபாடு காட்டும் அனைத்து ஒடுக்குமுறையையும் அது எதிர்க்கின்றது. நீ யார்? நான் யார் என்று பிறப்பில் அது பிரிவனை காட்டுவது கிடையாது.

இதற்கு மாறாக உண்மையில் பிறப்பு குறித்து அணுகுகின்ற கோட்பாடு பார்ப்பனியமாக இருக்கின்றது. அதாவது சாதியக் கோட்பாடாக உள்ளது. ம.க.இ.க வில் உள்ள நபரின் பிறப்பு குறித்து ஆராய்வதே கடைந்தெடுத்த பார்ப்பனியம் தான். அதை காவடியாக தூக்கும் மனித விரோதிகளையே இது அம்பலமாக்குகின்றது.

இப்படி பிறப்பில் இருந்து ஆராய்கின்ற மனிதம் எப்படிப்பட்டது என்றால், உள்ளடக்க ரீதியாக பாசிசமே. ஜெர்மனிய நாசிகளின் பிறப்பு குறித்த ஆரியக் கோட்பாடு, யூதர்களின் பிறப்பு குறித்த அடையாளம் ஊடாகவே கொன்றது. இந்தியாவில் அதுவே பார்ப்பனியமாகி சாதியமாக உள்ளது. இதை தூக்கும் தமிழினவாதிகள் பிறப்பில் இருந்து காண்பது மனிதவிரோதமேயன்றி அது வேறு எதுவுமல்ல. இதுவே இலங்கையில் புலிப் பாசிசப் படுகொலையாக நடக்கின்றது. மனிதத் தன்மையற்ற கண்ணோட்டம் இதன் மூலவேராக உள்ளது.

பி.இரயாகரன்13.07.2007Friday, 13 July 2007 22:08
மேலும் பல விரிவான கட்டுரைகளுக்கு தமிழரங்கம் இணையத்தளம் செல்க////////

Saturday, April 12, 2008

வீஈஈஈஈஈஈஈஈரத்துறவி நாமகட்டி கோபாலன்ஜி வழங்கும் அருள்மிகு.'நமீதா'ம்பிகை!!!!!......

வீஈஈஈஈஈஈஈஈரத்துறவி நாமகட்டி கோபாலன்ஜி வழங்கும் அருள்மிகு.'நமீதா'ம்பிகை!!!!!......

இந்துவெறிப் பஜனை எதிர்பார்த்த அளவுக்கு எடுபடாமல் போனதால், கருநாடகக் காவிக்கும்பலுக்கு இப்போது கன்னட இனவெறி கொஞ்சம் உதவி செய்திருக்கிறது. மதவெறி பாசிச பா.ஜ.க.வின் எடியூரப்பாவை முதல்வராக்க நம்முடைய தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்ட மக்கள் தொண்டை வறண்டு சாகவேண்டுமென்று அக்கட்சி அறிவித்திருக்கிறது.இதனால் நம்ம தமிழக பா.ஜ.க. இப்போது தமிழக மக்களிடையே அம்மனமாக நிற்கிறது. இதை எப்படியாவது மறைத்துவிட எண்ணி, எல கணேசன் என்கிற பார்ப்பன பொறுக்கிமுதல், தமிழகத்தை குஜராத்தாக மாற்றத் துடிக்கும் பார்ப்பன சகுனி 'சோ'வரை எல்லோருமே ஒருசேரக் கூவி வருகின்றனர்.


முல்லைப் பெரியாறு பிரச்சினையை உருவாக்கிய போலிகம்யுனிஸ்டுகளையும், கிருஷ்ணா, பாலாறு போன்ற நதிப்பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் ஆந்திரக் காங்கிரசையும்விட தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்தாகவேண்டிய நெருக்கடியிலும், தமிழகத்தில் தங்கள் கட்சியின் இருத்தலை தக்கவைத்துக் கொள்கிற நிர்பந்தத்திலும்தான் தமிழகக் காவிக்கும்பல் இன்று நின்றுகொண்டிருக்கிறது.


அதனால் இப்பிரச்சினையின் துவக்கத்திலேயே எல கணேசன் ஒரு அறிக்கைவிட்டான். "கருநாடக மாநிலப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே இத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், மற்ற அரசியல் வாதிகளின் தூண்டுதலின் பேரில்தான் எடியூரப்பாவும் இதுபோன்ற பிராந்திய'க் கட்சியைப் போன்று செயல்பட நேர்ந்துவிட்டது" என்று, எடியூரப்பாவின் அறிவுக்கே எட்டியிருக்க முடியாத இந்தத் தகவலை எல கணேசன் வெளியிட்டான். இதுதான் பச்சையான பார்ப்பன பசப்புத்தனம் என்பது. எடியூரப்பாவக் கண்டிச்சித் திட்டுடான்னா, அவன எவனோ தூண்டிவிட்டான்னு திசைத்திருப்பி, 'தூண்டிவிட்டவனை'த்திட்டுகிற பேடித்தனம் பார்ப்பானுக்கே உரியது. நம்ம இணைய 'நாமகட்டிகள்' அதற்கும் மேலாகச் சென்று "நீங்கள் காங்கிரசை ஏன் திட்டுவதில்லை" என்று எழுதிவருகின்றன.இதற்கிடையில் கடந்த ஏப்ரல்'4ஆம் தேதி சென்னையில் நடிகர்கள் சார்பில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்தியராஜ் மட்டும் கொஞ்சம் தமிழுனர்வோடு பேசினார். சகநடிகனான கன்னட வெறியன் ரஜினியை (மேடை நாகரிகம் கருதி) மறைமுகமாகச் சாடிப் பேசினார். தமிழர்களின் மீது எப்போதும் வன்முறைகளை ஏவிவரும், வாட்டாள்.நாகராஜ், மகாராஷ்டிர இந்துவெறிக்காலிகளின் தலைவன் பால்தாக்கரே போன்றவர்களையும், கடலுக்கடியில் கிடக்கும் மணல் திட்டை ராமர் பாலம் என்று திரித்துக் கூறி, சேதுக்கால்வாய்த் திட்டத்தை வைத்து அரசியல் நடத்தும் இந்துவெறி பாசிசக்கும்பலையும் கடுமையாகச் சாடினார். "இதற்கெல்லாம் காரணம் தமிழனின் இளிச்சவாய்த் தனம்தான்" என்றும் சுட்டிக்காட்டிய சத்தியராஜ், "தமிழர்கள் இனி சாமி கும்பிடுவதானாலும்கூட, தமிழ் தெய்வங்களான முருகன், சுடலைமாடன், முனியய்யா பொன்ற சாமிகளைத்தான் கும்பிடவேண்டும்" என்றும், "தமிழர்களுக்கு வடநாட்டு ராமன் தேவையில்லை, புள்ளயார் தேவையில்லை இவையெல்லாம் கலவர சாமிகள்" என்றும் அறிவுறுத்திப் பேசினார்.


இதுபோதாதா நம்ம பார்ப்பன கோஷ்டிகளுக்கு?! இதற்காக நடிகர் சத்தியராஜ் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பிள்ளையார் மூலம் மதக்கலவரம் செய்யும் தொழில் நுட்பத்தை வடநாட்டிலிருந்து தமிழகத்துக்குக் கூட்டிவந்த வீரத்(??!!!)துறவி நாமகட்டி கோபாலன் என்கிற கூமுட்ட கோபாலன், மேற்கண்ட சத்தியராஜின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் நோக்கில் "வடநாட்டு தெய்வங்களை மறுக்கச்சொல்லும் நடிகர் சத்தியராஜ், வடநாடு நடிகைகளோடுமட்டும் நடிக்கலாமா?" என்று தனது கூஜாக்களின் பலத்த கைத்தட்டலுக்கு இடையில் இதனைத் தெரிவித்துப் பேசியிருக்கிறார். இங்கே 'இந்துக்களின் புனிதமான' (
என்று இவர்களால் கொண்டாடப்படும்) தெய்வங்களை 'நமீதா' ரேஞ்சுக்கு ஒப்பிட்டுப் பார்த்து இழிவுபடுத்தியிருப்பதுதான் இவர் சொல்லும் தெய்வபக்திபோலும்.


இந்த அளவிற்கு எந்த நாத்திகர்களும் தெய்வங்களை இழிவுபடுத்தியது கிடையாது. தங்களுடைய மதவெறி அரசியலுக்காக, இவர்களால் பயன்படுத்தப்படும் கடவுள்களின் நிலைமையே இவ்வளவு கேவலமாக இருக்கிறதென்றால், மேற்கண்ட மதவெறிக் கலவரங்களுக்காக பயன்படுத்தப்படும் நமது தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களின் நிலைமை???


ஆனால் இப்போது நம்முடைய உழைக்கும், சாதாரண மக்களிடம் இவர்களது கலவர பஜனை தோல்வியடைந்து வருவது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும். கோவை அருகில் ஒரு தாழ்த்தப்பட்ட பகுதியிலுள்ள கோயிலுக்குச் சென்ற, மதவெறி நாரதன் நாமகட்டி கோபாலனை, அப்பகுதி மக்கள் காறி உமிழ்ந்து விரட்டியடித்ததை சென்ற 'புது விசை' இதழ் எழுதியிருந்தது. இந்த நெருப்பு தமிழகமெங்கும் பரவி மதவெறித் துரோகிகளை வேறோடு பிடுங்கியெறியும்வரைத் தொடரவேண்டும். தொடரும்.

நன்றி!

தோழமையுடன்,
ஏகலைவன்.

Wednesday, April 2, 2008

பார்ப்பனக்கூலி 'சுக்ரீவன்'எஸ்.வி.ராஜதுரையும் 'புதுவிசை'யும்........

பார்ப்பனக்கூலி 'சுக்ரீவன்'எஸ்.வி.ராஜதுரையும் 'புதுவிசை'யும்........

வாழ்ந்த காலம் முழுவதிலும் தான் சார்ந்த பார்ப்பனீயத்துக்கு காவடி தூக்கியாடிய பாரதி. இடையிடையே 'இடம், பொருள், ஏவல்' ஆகிய மூன்று சந்தர்ப்பவாத முறைகளையும் தவறாது பயன்படுத்தி அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப‌ சாதிய, பெண்ணீய கருத்துக்களையும் தேசவிடுதலைப் புராணங்களையும் பாடினான். அவ்வளவேதான், இதனைக்கொண்டே அவனை தேசிய‌க்கவியாகவும், மகாகவியாகவும் வானுயர உருவகப்படுத்தியதோடு, அவனை இலாவகமாக நம் அனைவரின் தலையிலும் ஏற்றிவைத்தது பார்ப்பனக்கூட்டம்.

பாரதி செத்தபிறகு, அவனை தம் அக்கிரகாரத்திற்கே உரிய நேர்த்தியுடன் மிகப்பிரமான்டமாக ஜோடித்து நம்ம 'காம்ரேடு'களின் தோள்களில் ஏற்றித் தெருத்தெருவாக ஊர்வலம் விட்டது குடுமி கம்பெனி. அந்த காலகட்டங்களில் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளோடு ஊடல் கொண்டிருந்த, அப்போதைய, 'சர்வகட்சி உறுப்பினர்' என்ற உயர்ந்த! அந்தஸ்த்தில் இருந்த 'மூத்த காம்ரேடு' ஜீவாவின் வாயாலேயே பாரதி புகழ் பாடவைப்பதன் மூலம், தந்தை. பெரியாரை அவதூறு செய்யமுடியும் என்று தீர்க்கமாக நம்பியது பார்ப்பனக் கூடாரம். ஜீவாவும் அந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொண்டார்.

'எதிரிக்கு எதிரி, நண்பன்' என்ற மாபெரும் கொள்கையினை மனதில் தாங்கியபடியே ஜீவா பார்ப்பனர்களின் கைப்பாவையாக மாறிப்போனார். வர்ணாசிரம குற்றவாளி் இராமனைப் பெரியார் எதிர்த்து இயக்கம் நடத்திய‌போது ஜீவா இராமனுக்கு துதிபாடுகின்ற இயக்கங்களை நடத்திக்கொண்டிருந்தார். அதன் நீட்சியாகத்தான் ஜீவா பாடிய பாரதிபுராணமும்.

அதன் விளைவாகத்தான் இன்று வரை போலிகம்யூனிஸ்டுகள் பாரதியைப் போற்றி பாடித்திரிகின்றனர். ஜீவாவைப்பற்றியே சரியான மதிப்பீடு செய்துகொள்ள விரும்பாத இந்த பிழைப்புவாதிகள், ஜீவாவால் கொண்டாடப்பட்ட பாரதியைப் பற்றியா பரிசீலிக்கப்போகிறார்கள்?!.

தொடர்ந்து பெரியாரிய கருத்துக்களை புறந்தள்ளிவந்த இந்த போலிக்கூட்டம், இப்போது தங்கள் இயக்கத்துக்குள்ளிருக்கும் சிலரது வாயாலேயே பெரியாரியக் கருத்துக்களை ஆதரித்துப்பேச அரிதாரம் பூசி இறக்கிவிட்டிருக்கிறது. அத்தகையவர்களில் ஒருவர்தான் 'தத்துவப்புலி' எஸ்.வி.ராஜதுரையும், 'தலித்படைப்பாளி' ஆதவன் தீட்சன்யாவும்.

நான் என்னுடைய முந்தைய ஒரு பதிவிலேயே குறிப்பிட்டிருந்த, ஆதவன் தீட்சன்யாவின் அதே (நான் ஒரு மநு விரோதன்) புத்தக வெளியீட்டுவிழாவில், அவருக்கு ஒரு கேள்வி வைக்கப்பட்டிருந்தது. கீற்று டாட் காம்(http://www.keetru.com/) என்ற இணைய தளத்தைச் சார்ந்த மிணர்வா, "எங்களுடைய இணையதளத்தின் சார்பில் நாங்கள் ஆதவனை நேர்கானல் செய்த போது பலவிதமான கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலலித்த அவர் (ஆதவன் தீட்சன்யா) பாரதி குறித்த அவரது மதிப்பீடு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலலிக்க மறுத்துவிட்டார், அதுதான் ஏனென்று தெரியவில்லை" என்று குறிப்பிட்டுப் பேசினார்.

அதற்கு பதிலலிக்க வந்த ஆதவன் தீட்சன்யா, " பாரதி எந்தகாலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கிடையாது. எனவே அவருக்கு வக்காலத்து வாங்கிப் பேசவேண்டிய அவசியம் இடது சாரிகளுக்கோ, த.மு.எ.ச.விற்கோ கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பாரதிதாசனைப்பற்றி எஸ்.வி.ராஜதுரை எழுதிய மிகக் கடுமையான விமர்சனக்கட்டுரையை எங்கள் 'புது விசை'யில் பதிவு செய்திருக்கிறோம். பாரதியைப் பற்றி மிகப் பிரமாண்டமான பிம்பம் ஒன்று இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக மதிமாறன் போன்றவர்கள் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த விமர்சனம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு என்னால் பாரதியைப்பற்றிய விமர்சனத்தை வைத்துவிடமுடியாது. அதை நான் முழுமையாக வாசித்த பிறகுதான் இதுபற்றிய கருத்தினை தெரிவிக்க முடியும்" என்று மழுப்பலாக பதிலலித்து அனைவருக்கும் நல்லபிள்ளையாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

தோழர். வே.மதிமாறன், ஆதவன் சொன்ன 'பாரதி என்ற மிகப்பிரமான்டமான பிம்பத்தை' தனது ஆய்வுகளின் மூலம் தகர்த்து எழுதிய "பாரதி'ய ஜனதா பார்ட்டி' என்ற தலைப்பிட்ட கட்டுரைகள் கடந்த ஏப்ரல்'2000 முதல் ஜனவரி'2001 வரை 'தலித்முரசு' இதழில் வெளிவந்திருக்கிறது. வேறெந்த பத்திரிக்கையும் இத்தகைய செய்திகளை வெளியிடத் தயங்கியபோது 'தலித்முரசு' செய்த இத்தகைய பணி மிகவும் பாராட்டுக்குரியது. அது நூல் வடிவிலும் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்பட்டு, பலவிதமான (நேர்மறையான/எதிர்மறையான) விமர்சனங்களையும் கடந்திருக்கிறது. பொங்கியெழுந்து ஆர்ப்பரித்துவந்த முற்போக்கு வேடமனிந்த பலவிதமான பாரதி அபிமானிகளின் கேள்விகளும் மதிமாறனின் ஆதாரப்பூர்வமான வாதத்தை எதிர்கொள்ளமுடியாமல் ஓடி ஒளிந்து கொண்டன.


மாபெரும் கம்யூனிஸ தலைவர்கள் முதற்கொண்டு அம்பேத்கர், பெரியார் வரை அனைவரும் பலமுறை இழிவுபடுத்தப்பட்ட போதும் உணர்ச்சியற்றுக்கிடந்த, த.மு.எ.ச.வின் முற்போக்கு வேடதாரிகள், பாரதியைப் பற்றிய விமர்சனத்தை பொறுக்கமாட்டாமல், உடனடியாக‌ மதிமாறனுடைய இந்த நூலுக்கு கண்டனக்கூட்டம் ஒன்றை திருவல்லிக்கேனி பாரதி இல்லத்தில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதோ இத்தனையாண்டுகள் கழிந்த பின்னரும் ஆதவன் போன்ற முற்போக்கு(!)வாதிகள் 'முழுமையாக வாசித்துவிட்டு சொல்கிறேன்.....' என்று பசப்பிவருவது இவர்களது இயலாமையையே காட்டுகிறது. ஆனால் பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகளையும், பார்ப்பன இந்துமத எதிர்ப்பையும், வீரிய வித்துக்களாய் இம்மண்ணில் தனது கவிதைகளின் மூலம் விதைத்திட்ட புரட்சிக்கவி.பாரதிதாசனைப் பற்றி மட்டும் கடுமையாக‌ விமர்சிப்பதற்கு இவர்களால் முடிவது நமக்கு ஏளனத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

பொதுவுடைமை வாதிகளாக தங்களைக்காட்டிக் கொள்ளும் இவர்கள், பாரதி ரஷ்யாவைப்பாடியதாலேயே அவனை நேசிப்பதாகக் கூறும் இவர்கள், பொதுவுடைமையைப் பாடியபடி களத்தில் நின்ற‌ பாரதிதாசனை பாலியல் வக்கிரம் பிடித்தவனாக உருவகப்படுத்துகிறார்கள். இதிலிருந்தே இவர்களின் வேசைத்தனத்தை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

//////‘மங்கை ஒருத்தி தரும் சுகமும்,
எங்கள் மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்’
தமிழை ஒப்பிடுவதற்குக் கவிஞரால் அதிகபட்சம் பார்க்க முடிந்தது ‘மங்கை ஒருத்தி தரும் சுகம்’ தான்!//////

என்று புதுவிசையில் எழுதுகிறார் ஒரு மாமாமாமாமாமா.....பெரும் எழுத்தாளப்புலி எஸ்.வி.ராஜதுரை. பாரதியின் பார்ப்பனச் சார்புநிலை அம்பலப்பட்டுக்கிடப்பதை, பாரதிதாசனை இழிவுபடுத்ததுவதன் மூலமாகஇவர் மறைத்துவிடத் துடிக்கிறார். அதற்கு பாரதிதாசனை பாலியல் வக்கிரம் பிடித்த எழுத்தாளர் என்ற அளவிற்கு கீழ்மைப்படுத்த முயற்சிக்கிறார்.

பார்ப்பனீய இந்து மதக் கருத்துக்களுக்கு எதிராக‌ இருந்திட்ட சித்தர்களைக்கூட பார்ப்பனர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்;
'இந்த‌ சித்தர்கள் பெண்களைப்பற்றி எப்படி தவறாகப் பாடியிருக்கின்றனர் பாருங்கள்' என்றுதான் அங்கலாய்த்தார்கள். மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் வருகின்ற ஒரு பாடல் வரியில்கூட‌,
"பெண்கள் கூட்டம் பேய்களென்று பாடற்சொன்ன சித்தர்களும்,
ஈன்றதாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே!"
என்று எழுதியவர் யார் தெரியுமா?
போகிற வருகிற இடங்களிலெல்லாம் பெண்களால் 'காலி' என்று அவமானப்படுத்தப்பட்ட 'வாலி'தான் வேறு யாருமல்ல‌. வாலியுடைய பெண்கள் மீதான அக்கரையைப் பற்றி நாம் புதிதாக எதுவும் கண்டுபிடித்துச் சொல்லத்தேவையில்லை. அது ஏற்கெனவே சந்திசிரிச்ச விஷயம் தான்.

பாரதியைக் காப்பாற்ற பார்ப்பனக்கூலி எஸ்.வி.ராஜதுரையும், சித்தர்களை இகழ்ந்த அதே பார்ப்பன வசனங்களை இப்போது பாரதிதாசன் மீது வாரியிறைக்கிறார். இவரும் அந்த வாலிக்கு சற்றும் சளைக்காத 'சுக்ரீவனின்' வேலையை மிகச்சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது தான் இதிலிருந்து நமக்குக் கிடைக்கின்ற செய்தியாக இருக்கும்.

பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒரு விஷயத்தைத் தவிர மற்ற எல்லா இந்துமத‌ விஷயங்களையும் ஏற்று செயல்பட்டுவந்த நீதிக்கட்சித் தலைவர்களைப்பற்றி மட்டும் சரியக பார்க்கத்தெரிந்த இந்த 'அறிவாளி' ராஜதுரை பாரதிதாசனை விமர்சிப்பதற்கு மட்டும் பார்ப்பனக்கண்களை இரவல் வாங்கிக்கொள்கிறார்.

'சரி பாரதிதாசன் மட்டும் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?' என்று கூட இவர்கள் திருப்பிக்கேட்கலாம். பாரதிதாசனைக் குறித்து இவர்களைவிட ஆழமான அழுத்தமான விமர்சனங்கள் எமக்கும் உண்டு. அவரைப் பற்றிய மிகச் சரியான விமர்சனம் என்று சொன்னால், பெரியாரின் சுயமரியாதைப் பாசறையில் இருந்துகொண்டே பார்ப்பனவெறி பிடித்த பாரதியை ஏற்றுச் செயல்பட்டதைச் சொல்லமுடியும். பாரதிதாசனின் இத்தகைய துரோகம் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தின் செயல்களுக்கு பெருந்தடையாகவும் இருந்தது என்பதுகூட, அப்போதைய இயக்கத் தோழர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இருப்பினும் பாரதிதாசனுடைய பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களும் இந்துமத எதிர்ப்புச் செயல்களும்தான் அவரை ஏற்றுக்கொள்ளத் தூண்டுபவையாக இருக்கின்றன. பாரதியின் மொழிநடையினை மட்டும் வியந்து போற்றிட்ட பாரதிதாசன், தனது கவிதைகளில் பாரதியின் பார்ப்பனீயக் கருத்துக்களுக்குத் துளியும் இடம் கொடாமல், அதற்கு எதிரான‌ பெரியாரின் சிந்தனைகளைத்தான் வெளிப்படுத்தினார் என்பதுவும் பாரதிதாசனுடைய சிறப்பல்லவா?

"சீரங்க நாதனையும் தில்லைநடராசனையும்
பீரங்கி வைத்துப் பிளக்கும் நன்நாள் எந்நாளோ!"

என்ற இந்துமத எதிர்ப்புப் பாடல் வரிகளும்,

பார்ப்பான் பால் படியாதீர்; - சொற்குக் கீழ்ப் படியாதீர்;

பார்பபான்; தீதுறப் பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் -
எப்போதும் பார்ப்பான் ஆர்ப்பான் நம் நன்மையிலே

ஆர்வம் மிக உள்ளவன்போல்! நம்ப வேண்டாம்
பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானையே பார்ப்பான்

தின்னப் பார்ப்பான் தமிழன் பேர் சொல்லி மிகு
தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்

தமிழழித்துத் தமிழர் தம்மைத் தலை தூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான் அமுதாகப் பேசிடுவான்

அத்தனையும் நஞ்சென்க நம்ப வேண்டாம்
தமிழர்கடன் பார்ப்பானைத் தரை மட்டம்

ஆக்குவதேஎன்றுணர்வீர்!

போன்ற பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களை வலியுறுத்தும் கவிஞரின் வீரிய வரிகளைப் போல் தமிழில் இதுவரை வேறெந்தக் கவிஞனும் பாடியதில்லை, என்பதை மறுக்கமுடியுமா?

"சித்திரச் சோலைகளே!
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே .... முன்னர்
எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே!"

என்ற வரிகளில் பொதிந்திருக்கும்
உழைப்பாளிவர்க்கச் சிந்தனையைப் போல பாரதி எங்காவது பாடியிருக்கிறானா?

இந்து வெறியை தனது கவிதைகளின் மூலம் ஊட்டிவளர்த்திட்ட பாரதி விமர்சிக்கப்பட வேண்டியவரா?, அல்லது அதற்கும் அப்பாற்பட்டு கொண்டாடப்படவேண்டியவரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக‌ பதிலலிக்காமல் ''நாங்கள் பாரதிதாசனை விமர்சித்திருக்கிறோம்'' என்று சொல்லும் பித்தலாட்டத்தைத்தான் அறிவுஜீவித்தனம் என்று சொல்லிக்கொள்கிறார்கள் இவர்கள்.

தலித் எழுத்தாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற ஆதவன் தீட்சன்யாவோ, 'ஈன பறையர்கள்' என்று தலித் மக்களைத் தூற்றிட்ட பார்ப்பனவெறியன் பாரதியைப் பற்றி விமர்சிக்கப் பம்முகிறார். இதுதான் இவரின் தலித்பார்வையோ?

இன்றைக்கு பார்ப்பன பயங்கரவாதம் கொலைவெறியோடு அலைகின்ற சூழலில்கூட நமது மதிப்பிற்குரிய‌ முற்போக்கு(!)வாதிகளின் இத்தகைய பிற்போக்கு வாதங்கள், பார்ப்பனியத்துக்கு மேலும் வலுசேர்ப்பதற்காகவே அமைகின்றன. சிறிதும் வெட்கமின்றி, பாரதியைப்பற்றிய விமர்சனங்களுக்கு பதிலலிக்க வக்கற்ற இவர்கள், பாரதிதாசனை இகழ்வதன் மூலமாக சரிசெய்துவிடமுடியும் என்று பிறருக்குப் போதித்தும் வருகின்றனர். பாரதிதாசனை கடுமையாக விமர்சிப்பதைக் காட்டிலும், தங்களுடைய பாரதி ஆதரவு நிலைதான் பெரியாருக்கு இவர்கள் செய்யும் முழுத் துரோகமாகும். அறிவுலக நண்பர்கள் இதனைச் சரியாக அடையாளம் கண்டு உடனடியாக இந்த விமர்சனத்தைத் துவக்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
.......................................................................
தோழமையுடன்,
ஏகலைவன்.

குறிப்பு: இது குறித்த தனது கருத்துக்களை, சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியில் நேர்கானல் அளித்த தோழர்.வே.மதிமாறன் அவர்களுடைய, அந்த வீடியோ பதிவு இப்போது அவருடைய வலைதளத்தில்(http://mathimaran.wordpress.com/) வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்வமிருப்பவர்கள், இதற்காக ஒரு பதினைந்து நிமிடம் மட்டுமாவது செலவிட முடிந்தவர்கள், இதனை எந்த இன்டெர்நெட் சென்டரிலும் சென்று பார்க்க முடியும்.