Friday, October 17, 2008

'மான்கராத்தே' கட்சியாக மேல்நிலையாக்கமடைந்தது 'மார்க்சிஸ்ட்'கட்சி: தற்போதைய உபயதாரர் - திருவாளர் டி.கே.ரெங்கராசன்!

குறிப்பு: மேலே படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பவர் சிபிஎம் கட்சியின் எம்.பி.யும் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் டி.கே.ரெங்கராசன் தான்.

தமது அரசியல் நிலைப்பாடுகள் மீது பதியப்படும் நியாயமான விவாதங்களைத் தவிர்ப்பதும், விமர்சனங்களைக் கண்டு பம்முவதும், எதிர்வரும் கேள்விகளை இருட்டடிப்பு செய்து 'தப்பித்து'க் கொள்வதுவும் ஏதோ நம்ம சந்திப்பு போன்றவர்களின் வழக்கமாகத்தான் நாம் பார்த்து வந்துள்ளோம். ஆனால், அக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் ஒருவர்கூட இதுவரை தமது கட்சியின் அரசியல் செயல்பாடுகள் மீதான எந்த விமர்சனத்துக்கும் நேர்மையாக பதிலளித்தது கிடையாது என்று அறியவருகிறோம்.

பார்ப்பன சேவகியாகவே வாழ்ந்து கழித்த கே.பி.சுந்தராம்பாளுக்கும், பார்ப்பனீயத்தின் வேரினில் தனது முற்போக்குக் கலைகளின் மூலம் அமிலம் பாய்ச்சியழித்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுக்கும் ஒரே நேரத்தில் நூற்றாண்டு விழா எடுக்கப் போவதாக அறிவித்து, அதற்காக பல்வேறு கூட்டங்களை நடத்திவருகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (சிபிஎம் கட்சியினைச் சார்ந்த அமைப்பு).

"இது சரியா?" என்பது நண்பர் கலைவேந்தன் என்பவருடைய கேள்வி. அதற்கான நேர்மையான பதிலைப் பதிவு செய்வதில் அக்கட்சியின் தலைவர் எப்படி பொறுப்பற்று நடந்து கொள்கிறார் என்பதனைச் சுட்டிக்காட்டி,
தோழர் மதிமாறன் தனது வலைதளத்தில் பதிவிட்டிருந்த கீழ்கண்ட பதிவினை இங்கே மீள்பதிவிடுவது அவசியம் என்று கருதுகிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.
-------------------------------------------------------------------------------------------------

கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்"


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கே.பி.சுந்தராம்பாளுக்கு விழா எடுப்பதைப் பற்றி திரு.கலைவேந்தன் என்பவர் நமக்கு ஒரு கேள்வி அனுப்பியிருந்தார்.அதற்கான பதிலை நாம் எம்.ஆர். ராதாவும் - கே.பி. சுந்தராம்பாளும் - தமுஎசவும் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தோம்.( http://mathimaran.wordpress.com/)

அந்தப் பதிலை மார்க்சிஸட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. டி.கே. ரங்கராஜனுக்கு திரு.கலைவேந்தன் அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கு திரு. ரங்கராஜன் அளித்த பதிலும், பதிலுக்கு திரு.கலைவேந்தன் அளித்த பதிலும்.

திரு.கலைவேந்தன் இதை நமக்கு அனுப்பியிருந்தார். அதை உங்கள் பார்வைக்காக வெளியிட்டிருக்கிறேன்.

அன்பும், பாசமும் உள்ள கலைவேந்தன் அவர்களுக்கு,

எவரையும் விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் கடமையை நீங்கள்செய்திருக்கிறீர்கள். நடிகவேள் எம்.ஆர். இராதாவைப் பற்றிக்கூட இறுதிக்காலத்தில் அவருடைய நடைமுறை பழக்க வழக்கங்களில் பெரிய மாறுதல் வந்ததாகவும்திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். அது எந்த அளவுக்குஉண்மை என்பது எனக்குத் தெரியாது.


எப்படியிருப்பினும் நடிகவேள் சுயமரியாதைகருத்துக்கு செய்த பணி என்றும் அனைவராலும் பாராட்டப்படும். அதேபோல்,கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றிவிவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை.

ஆனால், சுதந்திரப் போராட்டக்காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்செய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.அன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார். மதனைப் பற்றிநான் எதுவும் கூறவிரும்பவில்லை.

வாழ்த்துக்கள்
நன்றி
வணக்கம்.
டி.கே. ரெங்கராஜன்




நண்பர் டி. கே. ரங்கராஜன் அவர்களுக்கு, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இதுபோன்ற எளியோரின் மின்னஞ்சல்களை கவனத்தில் கொண்டு பதிலளித்ததற்கு நன்றி! பாராட்டுக்கள்! நான் மிகத்தாமதமாக பதிலளிக்க நேர்ந்ததற்கு மன்னிக்கவும்.உங்களுடைய பதில் தெளிவில்லாமலும் பொறுப்பற்றதாகவுமே இருக்கிறது.

************கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றிவிவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை. ஆனால், சுதந்திரப் போராட்டக்காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்செய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.அன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார். ****************

ஏகாதிபத்திய எதிர்ப்பில் சுந்தராம்பாள் ஈடுபட்டதாக நான் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். நான் அவ்வாறு எங்கேயும் குறிப்பிடவில்லை, அது உங்களது கற்பனையில் மட்டுமே உதித்தது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

உங்களுடைய பார்ப்பன சேவகத்தை நான் விமர்சிக்கவில்லை. அது உங்களது உரிமை. ஆனால், எம்.ஆர்.ராதாவை விட்டுவிடுங்கள் என்பதுதான் எமது கோரிக்கையும் தோழர் மதிமாறனுடைய கோரிக்கையுமாகும்.

பாரதி குறித்த விமர்சனங்களுக்கே இன்னும் மழுப்பல்களையும் கள்ள மவுனத்தையுமே பதிலாகத்தரும் உங்களது கட்சியினர் சுந்தராம்பாள் விடயத்தில் எத்தகைய கருத்தாக்கத்தில் இருப்பார்கள் என்பதில் எனக்கேதும் சந்தேகம் இல்லை. நான் தெளிவு படுத்த விரும்புவது மற்றவர்களுக்குத்தான்.

நல்லவேளையாக “விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கெல்லாம் விழா எடுப்போம்” என்று வீர சவர்க்கருக்கோ அல்லது நாற்பது பேரைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாயிக்கோ விழா எடுக்காமலிருந்தால் சரி.

என்னைப்பொருத்தவரை பாரதிக்கு, விழா எடுப்பதற்கும் சவர்க்கருக்கு விழா எடுப்பதற்கும் வேறுபாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.தங்களது மேலான பதிலை நாடி நிற்கும்,
- கலைவேந்தன்.

இந்தப் பதிலுக்கு எந்த பதிலும் திரு. ரங்கராஜன் அளிக்கவில்லை.

Friday, October 3, 2008

போலிகளை விமர்சிப்பவர்கள் அறிவுஜீவியாவதற்கு ஆசைப்படுபவர்கள் - சிபிஎம் புரட்டு கும்பலின் புதிய கண்டுபிடிப்பு(!)


“சி.பி.எம். போன்ற ‘வளர்ந்த’ கட்சியை விமர்சிப்பதால் தனக்கு ‘அறிவுஜீவி’ அந்தஸ்து கிடைக்கும் என்கிற ஆசையில்தான் எல்லோரும் எங்கள் கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் பேராசிரியர் அ.மார்க்ஸ்க்கு அந்தத் தேவையில்லை. ஏனென்றால் அவர் ஏற்கெனவே அந்த ‘அறிவுஜீவி’ என்கிற ‘அந்தஸ்த்தை’ப் பெற்றுவிட்டவர்.” இது சிபிஎம் என்கிற போலிகம்யூனிச கட்சியின் தீக்கதிர் நாளேட்டின் ‘பொறுப்’பாசிரியரான சு.பொ.அகத்தியலிங்கத்தின் பொறுப்பற்ற பதில்.

அ.மார்க்ஸ் எழுதிய வரலாறு-மக்கள்-மாவோயிஸ்டுகள்-நேபாளம் என்கிற நூலின் வெளியீட்டுவிழா நேறு (02/10/2008) மாலை சென்னை தி.நகரில் நடைபெற்றது. நேபாள மாவோயிஸ்டுகளின் அரசியல், இராணுவ செயல்கள் குறித்தான பல்வேறு விமர்சனங்களைக் கொண்டிருக்கும் இந்திய புரட்சிகர அமைப்புகளையும், நேபாள தோழர்கள் மன்னனுக்கு எதிராக களத்தில் நின்றபோது, அந்த மன்னனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த துரோக/போலிகம்யூனிச கும்பலான சிபிஐ/சிபிஎம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஒரே மேடையில் விவாதிக்க அழைத்திருந்தார்கள். அந்த மேடையில் தமது கட்சிக்கு எதிராக பதியப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்ல திராணியற்ற சிபிஎம் கட்சியின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட அகத்தியலிங்கத்தின் பதில்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிவப்புக் கொடியையும், கட்சியின் பெயரில் மட்டும் கம்யூனிசத்தையும் வைத்துக்கொண்டு புரட்சி செய்யமாட்டோம் என்று சொல்லித்திரிவதோடு புரட்சிக்கு எதிராக வேலை செய்துவரும் போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி ஒழிக்க வேண்டும்” என்ற, அகில இந்திய நேபாளி மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பாக கலந்து கொண்ட தோழர் சந்திர பகதூர் முதல், நேபாள மாவொயிஸ்டுகளை பாசிச இந்துவெறியன் அத்துவானியின் வார்த்தைகளில் விமர்சித்த சிபிஐ கட்சியின் தலைமைத் தரகன் ஏ.பி.பரதனை அம்பலப்படுத்திப் பேசிய தமிழ் தேசிய முன்னணியின் தோழர் தியாகு வரை போலிக் கும்பலுக்கு எதிராக தமது கருத்துக்களை நயமாகவும், உறுதியாகவும் பதிந்து சென்றவர்கள் பலர். அதேபோல ‘பின்நவீனத்துவம்’ என்ற ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு சரடுவிட்டுத் திரியும் அ.மார்க்ஸ் மீதும் அந்த புத்தகத்தில் அவர் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளையும் கடுமையாக தோழர்கள் விமர்சித்துப் பேசினர்.

ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே பின்னால் அமர்ந்திருந்த அ.மார்க்ஸ் தன்மீதான விமர்சனங்களைப் பொறுப்போடு குறிப்பிடுத்துக்கொண்டாலும் இறுதியில் ஏற்புரையின் போது மழுப்பலாகவும் மொன்னைத்தனமாகவுமே பதிலளித்து அமர்ந்தார். போலிக்கும்பலின் பிரதிநிதியான அகத்தியலிங்கத்தின் நிலையோ அ.மார்க்ஸைவிடப் பரிதாபகரமாயிற்று. தமது அரசியலின் மீதான மிகச் சாதாரண விமர்சனங்களைக் கூட எதிர்கொள்ளக் கையாலாகாத நிலையிலையை அவரது பேச்சு அம்பலப்படுத்தியது. பாவம் அகத்தியலிங்கம் என்ன செய்வார். நம்பூதிரிபாடு முதல் யெச்சூரிவரை ஒருத்தனும் பதிலளிக்காத கேள்விகளுக்கு அகத்தியலிங்கத்தால் மட்டும் எப்படி பதில் சொல்லிவிடமுடியும்? உமாநாத், பி.ராமமூர்த்தி போன்ற கம்யூனிசதுரோகிகளின் ‘வாழ்க்கை’யை கதையாக எழுதித்தரும் வேலையை மட்டும் பார்த்துவந்த அகத்தியலிங்கத்துக்கு, அதனாலேயே சில பல பொறுப்புகளையும் ‘கவுரவங்களை’யும் பெற்றுக் கொண்டு பிழைப்புநடத்திவரும் அவருக்கு சித்தாந்த ரீதியிலான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் துனிவும் தேவையும் எப்படி வரும்?

ஊழல் கொள்ளைக்காரி, பார்ப்பன பயங்கரவாத கும்பலின் பங்காளியுமான ஜெயலலிதாவின் காலடியிலேயே பாட்டாளி வர்க்க சின்னமான அறிவாள் சுத்தியலை வைத்து ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பு நடத்தும் கும்பலிடம் ஏதாவது சித்தாந்தமோ, கொள்கையோ மிச்சமிருக்க முடியுமா? இதுபோன்ற பிழைப்புவாத கும்பலிடமிருந்து விமர்சனங்களுக்கான பதில்களை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? இருப்பினும், புரட்சியை எட்டிய சமீபத்திய வெற்றியாளர்களான நேபாள மக்களின் பிரதிநிதியாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர் சந்திரபகதூர் மேலே வலியுறுத்தி சொன்னதைப் போல, இந்த போலி / கபட வேடதாரிகளைத் திரைகிழித்து அவர்களது கட்சியின் கீழ்மட்ட அணிகளுக்கு அம்பலப்படுத்தாமல், கம்யூனிசத்தின் பெயரால் ஏகாதிபத்திய சேவையாற்றும் இந்தக் கயவர் கூட்டத்தை இச்சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தாமல்; சமுகமாற்றத்துக்கான களத்தில் நாம் வேறெதைச் சாதிக்க முடியும்?

நேபாள மாவோயிசக் கட்சி கடந்த 1996 முதல் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு நீண்டகால மக்கள் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த வேளைகளில், நேபாள மன்னனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்திய அரசின் அடியொட்டியே கிடந்த இந்த சிபிஎம் போலிக் கும்பலும் அதன் தலைவனும் இப்போது நேபாள மாவோயிஸ்டுகளுக்காக தாங்கள் தோள்கொடுத்ததாகச் சொல்லுவது பித்தலாட்டமன்றி வேறென்ன?

நேபாள மாவோயிசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் சி.பி.கஜுரேல் அவர்கள் சென்னையில் கைத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ‘கஜுரேல் உயிர் பாதுகாப்புக் குழு’ என்கிற ஒரு அமைப்பாக இங்குள்ள பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து களத்தில் நின்ற போது சி.பி.எம். கொண்டிருந்த நிலைப்பாடு என்ன என்பது நாம் அனைவருக்கும் தெரியும். மூன்றுமாதத்தில் அவருக்கு பிணையானை பெற்று விடுவிக்கப் போகும் நேரத்தில் போலிகளின் மேற்குவங்க அரசின் சார்பில் ‘ஜல்பைகுறி’ நீதிமன்றத்திலிருந்து ஒரு பிடியாணையைக் கொண்டுவந்து தோழர் கஜுரேல் அவர்களின் பிணையை முடக்கி தொடர்ந்து மூன்றாண்டுகள் அவரைச் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்து துரோகமிழைத்த கும்பல்தான் இந்த போலிகள். இந்நிலையில் நேபாள புரட்சியையும் மாவோயிசப் பாதையையும் பெருமை பொங்கக் கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தமன்றி வேறென்ன?

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் முதல் வால்மார்ட், ரிலையன்ஸ் வரை அமெரிக்க அடிமையாகிவிட்ட இந்திய அரசின் அத்தனை நாசகார பொருளாதாரக் கொள்கையையும் தமது கட்சி ஆட்சி செய்யும் மே.வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் அட்டியின்றி ஏற்றுச் செயல்படும் இக்கூட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நேபாள மாவோயிஸ்டுகளின் அரசியல் பாதையை நினைத்து புளகாங்கிதமடைவது எதற்காக? புரட்சியின் ஈர்ப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் தமது கட்சியின் ஒரு சில கடைகோடி ஊழியர்கள் மாவோயிசப் பாதையை நோக்கித் திரும்பிவிடாமல் தடுத்து தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டும்தான். ‘புரட்சி வரவே வராது’ என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு புரட்டு வேலைகளைச் செய்துவரும் தமது சிபிஎம் கட்சியின் தலைமையை, புரட்சியை நடத்திட ஏங்கும் அணிகள் கேள்வி எதுவும் கேட்டுவிடாமல் இருப்பதற்காகத்தான் இந்த சந்தர்ப்பவாத நடைமுறையைக் கையாள்கிறார்கள்.

இந்திய மாவோயிஸ்டுகளுக்கு இவர்கள் புத்தி சொல்வதற்குப் பதிலாக, நேபாள மாவோயிஸ்டுகளுக்கு இவர்கள் துரோகமிழைத்ததற்கான யோக்கியமான மன்னிப்பைப் பதிவு செய்திருக்க வேண்டுமா இல்லையா? இதுவரை செய்யவில்லை. ஜெயலலிதாவோடு இணைவதற்கு இவர்கள் சொல்லும் காரணத்தைப் போன்றதுதான் நேபாள மாவோயிஸ்டுகளை இவர்கள் ஏற்பதற்காகச் சொல்லும் காரணமும்.

இப்படிப்பட்ட விவாதிக்கவேண்டிய, நேர்மையான விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொல்லத் திராணியற்ற நிலையில் நேற்றைய கூட்டத்தில் அசடு வழிந்த சிபிஎம் கட்சி, தனக்குத் துணையாக அந்த அரங்கில் ஒருவர் கூட இல்லாதநிலையில் அ.மார்க்ஸ் என்கிற பிழைப்புவாதியை ‘அறிவுஜீவி’ என்று அடையாளப்படுத்தி தனக்கு அணிசேர்த்துக் கொண்டது. நேபாள மாவோயிஸ்டுகளோடு தோளோடு தோள்நிற்பதாக சொல்லிக்கொண்டிருந்த அகத்தியலிங்கத்தை பார்வையாளர் மட்டத்திலிருந்து எமது தோழர் ஒருவர் இடைமறித்து “தோழர் கஜுரேலைக் கைது செய்து துரோகமிழைத்ததற்கு பதில் சொல்லுங்கள்” என்று கேட்டபோது ‘அறிவுஜீவி’ அ.மார்க்ஸ் எமது தோழரை இடைமறித்து பேசவிடாமல் செய்து அகத்தியலிங்கத்துக்கு தனது நன்றியைக் காட்டினார். ஆனால், கடைசிவரை தமது கட்சியின் பித்தலாட்ட அரசியலின் மீது பதியப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் மேடையிலிருந்து ‘தப்பித்த’ அகத்தியலிங்கத்தின் கால்களின் பாய்ச்சல்களுக்கு இடையில் துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்தது தோழர்களின் கேள்விகளும் போலிகளின் தோல்வியும்.

புரட்சிகர வணக்கங்களுடன்,
ஏகலைவன்.