Tuesday, March 3, 2009

பாரதி பக்தர்களும், வி.பி.சிங்கின் ரசிகர்களும் இணைந்த கள்ளக் கூட்டணிதான் பெ.தி.க. மற்றும் சி.பி.எம். கூட்டணி!....

அன்பார்ந்த தோழர்களே!

ஈழம் கொலைக்களமாகி தகிக்கிறது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பிணங்களைக் கொன்று சிங்கள பேரினவாத பாசிஸ்டுகளும் - இந்திய மேலாதிக்க பார்ப்பனக் கும்பலும் களிப்பில் இருக்கின்றனர். மறுபுறம் இந்தக் கேடுகளுக்கு எதிராக, தமிழகத்தில் வழக்கறிஞர்களின் போராட்டங்கள் நாளுக்கொரு வடிவமாக வீரியத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டங்கள் ஏற்படுத்திய தகிப்புகள் உயர்நீதிமன்ற, காக்கிச்சட்டை ரவுடிகளின் தாக்குதலுக்குப் பிறகு இன்னும் வேகமாகப் பற்றிப் படர்ந்து தமிழகம் முழுவதும் நீதித்துறை முடக்கப்பட்டு கிடக்கிறது. நம்முடைய களமும் அங்குதான் இருக்கின்றது என்று எண்ணி, செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில்; இணையத்தில் சண்டமாருதம் செய்யச் சொல்லி நம்முடைய சக்தியை, நேரத்தைக் களவாடத் துடிக்கிறது ஒரு கூட்டம்.

தமது அமைப்பின் பெயரில் மட்டும் பெரியாரை வைத்துப் பாதுகாக்கும் தமிழினவாத பொய்யர்கள், தம்மோடு கருத்துமோதல் கொள்வோருக்கெல்லாம் பார்ப்பன பட்டம் சூட்டி காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கின்றன. வருண-சாதி இழிநிலைகளின் குறியீடுதான் பார்ப்பன பண்பாடு என்று பெரியாரியமும் அம்பேத்கரியமும் அறுதியிட்டுச் சொன்ன பிறகும், அவர்களது வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அவற்றுக்கு புதிய வியாக்கியானத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், இப்போது பார்ப்பனியவாதி என்று ஒருவரை வரையறுப்பதற்கு வேறு பல இழிவான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அளவுகோல்களே இவர்களின் பார்ப்பன ஆதரவுத் தன்மையினை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன. அதைப்பற்றி பார்ப்போம்.....

ஒரு சமூக சீர்திருத்தக் கொள்கை என்று கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு, அடித்தட்டு உழைப்பாளி மக்களுக்கு எந்தப் பயனையும் விளைவிக்காத கொள்கையும், ‘சமூகநீதி பேசுகின்ற ஓட்டுப்பொறுக்கிகளின்’ அரசியல் வாழ்வையும் ஆதிக்க சாதி இந்துக்களின் குடிகளையும் மட்டும் செழிப்புறச் செய்யும் வகையில் வடிவமைத்துப் பாதுகாக்கப்படும் கொள்கையுமான ‘இடஒதுக்கீடு...’ என்கிற வெற்றுக்காகிதத்தைப் பற்றி கேள்வி கேட்டால், நாம் பார்ப்பனவாதிகளாம். அல்லது....

பார்ப்பன ஆதிக்கவெறி இந்துமதக் கும்பலுக்கு ஆதரவாக வாழ்ந்து, ராஜீவின் பீரெங்கி பேர ஊழல்களின்போது துணைநின்று, புதிய பொருளாதாரக்கொள்கையின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாட்டை எழுதிக்கொடுத்த துரோகிகளில் ஒருவராக அங்கம்வகித்து; தமது அரசியலின் அந்திமக்காலத்தில், பிரதமர் பதவிநாற்காலி கனவில், ஓட்டுப்பொறுக்கி பிழைப்பதற்கு ‘சமூகநீதி’ வேடம்போட்ட வி.பி.சிங் என்கிற ஒரு அற்பமனிதனின் மீது முற்போக்காளர்களால் போர்த்தப்பட்டிருக்கும் புனிதபிம்பத்தை அம்பலப்படுத்தி விமர்சித்தால் நாம் பார்ப்பனவாதிகளாம். அல்லது.....

அமைப்பின் பொறுப்பில் இருக்கும் ஒரு நபர், பிறப்பால் மட்டும் பார்ப்பனராக இருக்கும் பட்சத்திலும் நாம் பார்ப்பனவாதிகளாம். இவையெல்லாம் பெரியாரியத்தின் குத்தகைதாரர்கள் பார்ப்பனியத்திற்குச் சொல்லும் நவீன வரையறை. நம்மால் முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனத்தைப் பரிசீலிக்க பம்மிக்கொண்டு இருப்பவர்கள், விமர்சித்தவரின் பிறப்பை ஆராய்ந்து பதில் தேடுகின்ற கேவலமான பிழைப்புவாதிகளாக மாறிப்போனது இவ்வாறுதான்.

அதாவது இதுதான் பச்சையான பார்ப்பனப் பார்வை. பிறப்பைச் சொல்லி ஒருவரை இழிவுபடுத்தும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையின் அச்சுஅசலான வாரிசுகளாக பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், பகுத்தறிவு பேசுபவர்கள் சீரழிந்திருக்கிறார்கள். பெரியாரியத்தை பிழைப்புக்காக பேசாமல், உணர்வுரீதியாகப் பேசுபவர்களாக இவர்கள் இருப்பார்களேயானால், நாம் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் இவர்களால் பேசியிருக்க முடியும். என்ன செய்வது, வீரமணியினால் புகட்டப்பட்ட ‘மானமிகு’ அம்சங்கள் இவர்களிடத்தில் மிச்சமிருந்த பகுத்தறிவை உறிஞ்சி காழ்ப்புணர்வை விதைத்திருக்கிறது. இதில் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பார்ப்பனியத்திற்குச் சொல்லும் புதிய வரையறையை ஆதரித்து நிற்பவன், “பார்ப்பனன்” என்கிற வார்த்தையை ’கன்னியக் குறைவான சொல்’, “ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை இழிவுபடுத்தும் சொல்...” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அச்சொல்லை கனவில் கூட உச்சரிக்கவிரும்பாத போலி கம்யூனிச சி.பி.எம்.

ம.க.இ.க.வின் சமரசமற்ற செயல்பாடுகளும், அதன்பொருட்டு தெரிந்த எதிரிகளான சுரண்டல்வாதிகளையும், அவர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் வெட்கமற்று சேவையாற்றும் துரோகிகளான திரிபுவாதிகளையும் கேள்விக்குட்படுத்துவதால், தமக்குள் இருக்கும் சிறு சிறு சச்சரவுகளை மறந்து துரோகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, தமது பதிலுரைக்கமுடியாத, கையாளாகாத தனத்தை கூட்டாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற நேரம் இதுதான். பார்ப்பனிய ஆதரவு போலி கம்யூனிஸ்டுகளும் பெரியாரியத்தின் குத்தகைதாரர்களும் ஒன்றிணைந்து நிற்கும் புள்ளியும் இதுதான்.

தான் வாழும் காலம் முழுதும் தான்சார்ந்த பார்ப்பன சமூகத்துக்கு கண்ணும், கருத்துமாகச் சேவையாற்றிய பாரதி முற்போக்காளர்களால் “பெண்ணடிமையை எதிர்த்துப் பாடியவன், சாதி ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தவன், மதவெறி எதிர்ப்பின் முன்னோடி,....” என்றெல்லாம் கொண்டாடப்பட்டதை எதிர்த்து, பாரதியின் பால் கட்டியெழுப்பிய போலி முற்போக்கு பிம்பத்தை உடைத்து சுக்குநூறாக்குவதற்கு பாடுபட்டவர்கள்தான், பிழைப்புவாதத்தை அரசியலாகக் கொண்டிருந்த வி.பி.சிங்கை பாரதி அளவுக்கு உயர்த்திப்பிடிக்க முயல்கிறார்கள். ”வி.பி.சிங்கை விமர்சிப்பது பெரியாரையும் அம்பேத்கரையும் விமர்சிப்பது போன்றது” என்று சொல்லி நம்மை ‘தெய்வகுற்றம் செய்துவிட்டவர்கள்’ என்பதைப் போல மிரட்டுகிறார்கள். ”தவறென்றால் என்னையும் விமர்சனத்துக்குட்படுத்துங்கள்...” என்று தைரியமாகச் சொன்ன பெரியாரின் வழிவந்தவர்கள், நமது விமர்சனங்களைக் கண்டு ஆற்றமாட்டாமல் தன்நிலை மறந்து பிதற்றுகிறார்கள். வி.பி.சிங்கைக் காப்பாற்ற பெரியாரையும் அம்பேத்கரையும் கேடயமாகப் பயன்படுத்தி அவ்விருதலைவர்களையும் இழிவுபடுத்துவதும் இவர்கள்தான்.

பாரதிக்கு போலிகம்யூனிஸ்டுகள் கட்டிவிட்ட புனித பிம்பத்தை இவர்கள் வி.பி.சிங்கின் மீது கட்டுகிறார்கள். இதன் விளைவாக பாரதி விடயத்தில் எதிரும் புதிருமாக இருந்த இவ்விரு முகாமும் இப்போது ஒத்தகருத்துடையவர்களாகக் கைகுலுக்கிறார்கள். இவர்களுக்குள் மோசடியாகப் பொதிந்திருக்கும் எந்தவிதமான அரசியல் அடிப்படையுமில்லாத ’ரசிக மனோபாவம்’தான் இவர்களை இணைத்திருக்கிறது. இந்த கருத்தொற்றுமை வி.பி.சிங்கில் தொடங்கி நம்மை பார்ப்பனவாதி என்று முத்திரை குத்துவதுவரை நீளுகிறது.

பார்ப்பனியத்தை ஆதரித்து வாழ்ந்த பாரதி சாதிஎதிர்ப்பு நாடகம் நடத்தியது போலதான், மக்கள் விரோத ஆளும்வர்க்கத்தில் அங்கம் வகித்த வி.பி.சிங் சமூகநீதி நாடகம் நடத்தினார். இன்று பாரதியும் இல்லை வி.பி.சிங்கும் இல்லை. இவ்விருவரது உண்மையான வாரிசுகள் தாங்கள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கோமாளிகள்தான் முற்போக்கு முகமூடியுடன் அவர்களை உயர்த்திப்பிடித்தவாறு திரிகிறார்கள். ஆனால், பாரதியின் உண்மையான வாரிசுகள் ஆர்.எஸ்.எஸ்.ஆகவும் வி.பி.சிங்கின் உண்மையான வாரிசுகள் ஆதிக்கசாதிவெறியர்களாகவும் ஒன்றுபட்டு தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கிறார்கள். இந்தக் கேவலத்தை எதிர்க்கத் தொடைநடுங்கும் இந்த யோக்கியர்கள், எதிர்த்து நிற்கும் புரட்சியாளர்களை இழிவாக விமர்சிக்கிறார்கள். பார்ப்பன எதிர்ப்பை மட்டும் ஒரு ‘அடையாள அரசியலாக’ நிகழ்த்திக் கொண்டிருப்பவர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று வரும்பட்சத்தில் கவனமாக மவுனம் காக்கிறார்கள்.

இதற்கிடையில், பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியைக் காட்டிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக பார்ப்பன ஆதரவு ஞாநியை விமர்சித்து ஒரு பதிவினை தோழர் மதிமாறன் பதிந்துள்ளார். அப்பதிவில், ”தோழமையானவராக இருக்கிறார்” என்பதனாலேயே விடுதலை ராசேந்திரனும் கொளத்தூர் மணியும் ’பெருந்தன்மையோடு’ பார்ப்பன பயங்கரவாதி ஞாநியை விமர்சிப்பதைத் தவிர்த்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஞாநியைக் கண்டித்து இதுவரை பெ.தி.க.வின் பத்திரிக்கையான ’பெரியார் முழக்கம்’ எதையும் எழுதவில்லை என்றும் எழுதியிருந்தார்.

இடஒதுக்கீடு குறித்தும் வி.பி.சிங் குறித்தும் தனது மாற்றுப் பார்வைகளைப் பதிவு செய்ததற்காக புதிய ஜனநாயகத்துக்கு பார்ப்பன பட்டம் கொடுத்து மோசடியாக எழுதி தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திய விடுதலை ராசேந்திரன், பார்ப்பன ஆதரவை ஒரு தொழிலாகவே செய்துவரும் ஞாநியை ‘தோழமை கருதி’ விமர்சிக்காமல் விட்டதனைக் கண்டித்து எழுதத்தூண்டியது; தோழர் மதிமாறனின் அப்பதிவு. எமது தோழர்கள் பலரும் மதிமாறனின் அப்பதிவில் தமது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுவரை பெ.தி.க.வின் ஆதரவாளராக இருக்கும் தோழர் மதிமாறனிடத்திலிருந்துகூட அவற்றுக்கு எந்தப் பதிலும் பதியப்படவில்லை.

எதற்கெடுத்தாலும் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனை அவரது பிறப்பைக் கொண்டு வசைபாடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது, இக்கூட்டணி. ஆனால், இந்த யோக்கியர்கள், பகுத்தறிவுப் புலிகள், பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசியதை, எழுதியைக் காட்டிலும், போராடியதைக் காட்டிலும் ம.க.இ.க.வின் தோழர்களும் தோழர் மருதையனும் களத்தில் அதிகமாக இயங்கியிருக்கிறார்கள். தில்லைப் போராட்டத்தில் தீட்சிதப் பார்ப்பன ரவுடிகளுடன் கொல்லைப்புறமாக உறவு வைத்திருந்த யோக்கியர்களெல்லாம், இந்த கூட்டத்தோடு கோவிந்தா போட்டுக்கொண்டு “பார்ப்பன தலைமை...” புராணம் பாடிவருவது கேவலத்திலும் கேவலமாக இருக்கிறது.

இறுதியாக, ம.க.இ.க.விற்கு பார்ப்பன பட்டம் சூட்டுவதற்கு இவர்கள் கற்பனையால் உருவாக்கிவைத்திருக்கும் முகாந்திரங்களையும் அவற்றை அடித்து நொறுக்கும் வகையிலான எமது தோழர்களின் எதிர்வினைகளையும், இவர்களில் எவராவது ஒருவராவது யோக்கியவானாக இருந்தால், நேர்மையாகப் பரிசீலித்து விவாதிக்க முன்வரட்டும். குறைந்த பட்சமாக இடஒதுக்கீடு: ஒரு மார்க்சிய-லெனினியப் பார்வை, என்கிற புதிய ஜனநாயகத்தின் வெளியீட்டையும், காக்கை குயிலாகாது -என்கிற வி.பி.சிங் மீதான விமர்சனக் கட்டுரைக்கும் தெளிவான மறுப்புகளை முன்வைக்கட்டும். விடுதலைராசேந்திரனின் புரட்டுக்களை மறுக்கும் எனது முந்தைய பதிவு குறித்தும் ஏதாவது மறுப்பு தெரிவிக்கட்டும். இவற்றுக்குப் பிறகு எங்களை எவ்வளவு கீழாக வேண்டுமானாலும் விமர்சித்துக்கொள்ளட்டும். நமது பதில்களை ஏறெடுத்தும் பார்காமல், முற்றாகப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் இதுபோன்ற அவதூறு புராணம் பாடவந்தால் சரியான பாடம் புகட்ட நாமும் தயாராவோம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

குறிப்பு:

பெரியார் திராவிடர் கழகம், பார்ப்பன எதிர்ப்பு எனும் பம்மாத்து நாடகத்தில் சி.பி.எம். என்கிற போலிகம்யூனிஸ்டுகளோடு சிந்தைரீதியாக சோரம்போனது அம்பலமாகிவிட்டபடியால், அவர்களிடத்திலிருந்து இனி யோக்கியமான எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, பெ.தி.க.வை நாம் விமர்சிக்கும்போது கடைபிடிக்கும் ‘அவைநாகரீகத்தை’த் தவிர்த்து கடுமையாகவே சந்திக்கலாம்; என்பது எனது கருத்து. இதற்கு தோழர்களும் தங்களது கருத்துக்களைப் பதியலாம்.தொடர்புடைய பதிவுகள்:

1. இடஒதுக்கீடு: ஒரு மார்க்சிய-லெனினிய பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு

2. விசுவநாத் பிரதாப்சிங்: காக்கை குயிலாகாது - புதிய ஜனநாயகம் கட்டுரை

3. விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி!...

4. இடஒதுக்கீடு: சாதி இந்துக்கள்-இனவாதிகளின் அவதூறும் நமது நிலைப்பாடும்...

5. உள் ஒதுக்கீட்டு கோரிக்கையும், தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்