Wednesday, April 7, 2010

தொழிற்சங்கம் என்கிற முகமூடியணிந்து முதலாளிகளுக்கு கன்சல்டன்சி வேலை செய்யும் சி.ஐ.டி.யூ.வின் கைக்கூலித்தனம்!

அன்பார்ந்த தோழர்களே!

மேநாள் – 2010 நெருங்கிவிட்டது. போலிகம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., உள்ளிட்ட ஏனைய ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளின் தலைமையிலான முதலாளித்துவ ஆதரவு - பிழைப்புவாத தொழிற்சங்கங்கள் மேநாள் கொண்டாட்டத்தை வழக்கம்போல ஒரு சடங்காக, சம்பிரதாயமாக, தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வு ஏற்பட்டுவிடாதவாறு பாதுகாப்புடன், குடியும் கூத்துமாக கொண்டாடவிருக்கின்றன. தொழிலாளி வர்க்கமாக உணர்வுபெற்று களம் கண்ட சிகாகோ தொழிலாளர்கள், உலகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, தங்கள் இரத்தம் சிந்தி பெற்றளித்த கொடையான எட்டுமணிநேர உழைப்பு, எட்டுமணிநேர ஓய்வு, எட்டுமணி நேர உறக்கம் போன்ற அடிப்படையான உரிமைகள் பறிக்கப்பட்டு, இன்றையதினம் பத்துமணிநேரம், பனிரெண்டு மணிநேரம், பதினாறு மணிநேரம் என்று வேலை வாங்கப்பட்டு, கடுமையாக வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள், நமது தொழிலாளிகள்.

முதலாளித்துவ கொடுமையிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு அடிப்படையான தேவையான சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமைகூட இன்றைய மறுகாலனிய சூழலில் முற்றாக மறுக்கப்படுகின்ற அவலநிலையில்தான் நமது தொழிலாளி வர்க்கம் சிக்கியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் உள்நாட்டு முதலாளிகளை, சிறுதொழில்களை மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு, நூறு கோடி மக்களின் சந்தையைக் குறிவைத்து தினம் ஒரு கம்பெனியாக படையெடுத்துவருகின்ற பன்னாட்டு பகாசூர நிறுவன்ங்கள் ஒருபுறம்; மேலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, இந்தியாவின் வேலையற்ற கோடிக்கணக்கான இளைஞர்களின் உழைப்பை அற்ப கூலிக்கு சுரண்டுவதோடு, இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கான கோடி சலுகைகளும் பெற்று நமது தேசத்தை மொட்டையடித்துச் செல்லும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் இந்திய தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் மறுபுறமும், நமது மைய-மாநில போலி ஜனநாயக அரசுகளிடம் தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டப் ‘பாதுகாப்பையே’ முதன்மையான தேவையாகக் கோருகின்றன. ஏகாதிபத்தியங்கள் வீசுகின்ற எலும்புத்துண்டுகளுக்கு நாக்கைச் சுழற்றிக்கொண்டு, தாராளமயத்தை ஆதரிக்கும் நமது கைக்கூலி ஆட்சியாளர்கள் இதுபோன்ற ஒத்துழைப்புகளையும் தாராளமாக செய்துகொடுப்பதாகத்தான் ஒப்புக்கொண்டிருப்பார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கைக்கூலி ஆட்சியாளர்களுக்கும் பன்னாட்டு பகாசூர நிறுவனங்களுக்கும் இடையில் மோசடியாகப் போடப்படும் ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்களின் இரகசியப் பக்கங்களுக்குகிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது இந்தியத் தொழிலாளிகளின் வாழ்வுரிமை.

சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் வாயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய மேநாளில் ஏற்றப்பட்ட (போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியின்னைச் சார்ந்த) தொழிற்சங்கக் கொடியை அடியோடு பெயர்த்து உடைத்தெறிந்தனர் அக்கம்பெனியின் நிர்வாகிகள். கனிசமான எண்ணிக்கையிலான தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்ததோடு வெகுமூர்க்கமாக நடந்துகொண்டது ஹுண்டாய் நிர்வாகம். அந்நிர்வாகத்திற்கு சகலவிதமான ‘ஒத்துழைப்பை’யும் தந்து தொழிலாளிகளை ஒடுக்குவதற்கு தோள்கொடுத்து நின்றது கருணாநிதியின் போலீசு. இதுபோன்ற அடாவடியான நடவடிக்கைகளைச் செய்து முடித்தபிறகு அதற்கான காரணமாக அவன் சொன்னது, தொழிலாளிகளுக்கு சங்கம் வைத்துக்கொள்ளுகின்ற உரிமையெல்லாம் எமது நிறுவனத்திற்குள் கிடையாது, என்பதைத்தான். போலி கம்யூனிச சி.பி.எம். கட்சியின் தலைமை, ஹூண்டாயின் இப்படிப்பட்ட காட்டுத்தனமான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் பேர்வழியென்று கிளம்பி, கருணாநிதி ஆட்சி மட்டும்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று பிரச்சினையை திசைமாற்றி ஓட்டுக்களாக்கவே முயற்சிதத்து. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் நலன்களுக்காக தொழிலாளிகளின் உரிமைகள் சட்ட ரீதியாக பலியிடப்பட்டிருப்பது குறித்து இன்றுவரை வாய்திறக்க மறுக்கிறது அதன் கைக்கூலி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ. ஏனெனில் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சி தான் ஆளுகின்ற மாநிலங்களில் இதே மாதிரியான அல்லது இதைவிடக் கொடிய வகையில் முதலாளிகளுடன் ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டிருக்கிற இக்கட்சியை, இப்படிப்பட்ட மோசடிகளை இருட்டடிப்பு செய்யவேண்டிய ஆளும்வர்க்க கடமையுணர்ச்சிதான் பேசவிடாமல் தடுக்கிறது போலும்!

அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த நோக்கியா நிறுவனத்தில் கூட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் முறையான முன்னறிவிப்பின்றி, நியாயமான காரணமுமின்றி வேலையில்லை என்று சொல்லி திடீரென நடுவீதியில் தூக்கி வீசப்பட்டார்கள். தொழிலாளர்களின் தன்னிச்சையான போராட்டங்கள் கடுமையாக்கப்பட்டும் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் நோக்கியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட நிர்வாகம் மசியவில்லை. மூவாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால நேரம் பாராமல் உழைப்பதற்காக ஆயிரக்கணக்கில் ஆள் கிடைப்பதால், ஐயாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டு இத்தனையாண்டுகள் தமக்கு உழைத்தவனை சிறிதும் இரக்கமின்றி, ஏதேனும் ஒரு காரணம் சொல்லி தூக்கி வீசுகிறது (நண்பர் அதியமானின் ஆதரவு பெற்ற...) முதலாளித்துவம். இவையெல்லாம் நமது மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத பன்னாட்டு முதலாளிகள், அவர்களிடம் அற்ப சம்பளத்திற்கு உழைப்பை விற்று உயிர்வாழும் தமது தொழிலாளிகளுக்கு எதிராகச் செய்துவரும் ஒரு சில ‘சேவை’களுக்கான உதாரணங்கள்.

இவை தவிர, பெரும்பான்மையான (அரசு நிறுவன்ங்கள் உள்ளிட்ட) முதலாளித்துவ நிறுவனங்களில் கடந்த பத்து, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகத் தொழிலாளர்களாகவே வைத்து சுரண்டப்படுகின்ற, பணி நிரந்தரமின்றிக் கொத்தடிமைகளாகத் தவித்துவரும் இலட்சக்கணக்கான, தொழிலாளிகளும் நமது நாட்டில்தான் இருந்துவருகின்றனர். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் முதல் ரயில்வே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் உற்பத்தி நிறுவனங்கள் என்று நீண்ட பட்டியலாக அணிவகுத்து நிற்கும் அரசு நிறுவனங்கள் தமது உற்பத்திக்கு பல பத்தாண்டுகளாக அத்துக்கூலிகளாக, தற்காலிகப் பணியாளர்களாக சுரண்டப்பட்டுவரும் பெரும்பான்மையான தொழிலாளர்களை நம்பித்தான் இருக்கின்றன. மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்னமேயே, தமது சொந்த நிறுவன்ங்களிலேயே தொழிலாளிகளை ஒடுக்கியும் சுரண்டியும் வருகின்ற நமது அரசுகள், பன்னாட்டு நிறுவன்ங்கள் வீசுகின்ற சில எலும்புத்துண்டுகளுக்காக நமது தொழிலாளர் உரிமைகளை பலியிட ஒருபோதும் தயங்கியிருக்காது, என்பதன் நேரடியான விளைவுகளைத்தான் இன்றையதினம் (பெயரளவுக்கான) அனைத்து உரிமைகளையும் இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் அவல நிலையில் காண்கிறோம்.

இருப்பினும், இவையெல்லாம் எங்கோ ஒரு நிறுவனத்தில், உலகின் எங்கோ ஒரு மூலையில் அல்லது நமது ஏழை தேசமான இந்தியாவில் மட்டும் நடைபெறுகிற நிகழ்வுகளல்ல. உலக முதலாளித்துவமோ அல்லது ஏகாதிபத்தியத்தியமோ தொழிலாளர்களின் மீதான இத்தகைய கொடூரமான சுரண்டலில்தான் தம்மைத் தக்கவைத்துக் கொள்கிறது. முதலாளியத்தின் முதன்மையான, பெரும்பான்மையான மூலதனமே உழைப்புச் சுரண்டலில்தான் இருக்கிறது என்பதுவும், முதலாளி வர்க்கம் என்ற ஒன்று இருக்கும் வரை தொழிலாளி வர்க்கம் விடிவும் விடுதலையும் பெறமுடியாது என்பதுவும்தான் மார்க்சியத்தின் அரிச்சுவடி. இந்தியாவின் பெரும்பான்மையான நிறுவனங்களில் சுரண்டப்படும் தொழிலாளிகள், தம்மீதான முதலாளித்துவ சுரண்டலை முறியடிக்க முடியாமல் சிக்கியிருப்பதற்குக் காரணம் அவர்கள் போலி கம்யூனிச சங்கங்களால் வர்க்க உணர்வற்று பராமரிக்கப்படுவதுதான். கொடியிலும் பெயரளவிலும் மட்டும் சிவப்பு நிறத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர் விரோதமாகவும், வெளிப்படையான முதலாளித்துவ ஆதரவோடும் சங்கம் நடத்திவரும் போலிகள் தமது செந்நிறத்தைத் தக்கவைத்துக் கொவதற்காக மட்டும் கூலியுயர்வு, போனஸ், சீருடைகள், மருத்துவக் காப்பீடு போன்ற ஒரு சில பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து பெயரளவுக்கான போராட்டங்களை ‘புரட்சிகரமாக’ நடத்திவருகின்றனர். மேற்கண்ட பொருளாதார கோரிக்கைகள் ஒரு சில நிறுவன்ங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழங்கப்பட்டுவிட்ட போதிலும்கூட அந் நிறுவன்ங்களின் தொழிலாளிகளின் மீதான சுரண்டலிலோ, தொழிலாளிகளின் வாழ்நிலையிலோ எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை.

ஏனெனில், போலி கம்யூனிசக் கட்சியின் ஊதாரித் தலைவர்களுக்கு இப்படிப்பட்ட தொழிற்சங்கங்கள்தான் தங்கச் சுரங்கங்களாகக் காட்சியளிக்கின்றன. ஒரு தொழிற்சாலையில் சங்கம் தொடங்குவதற்கு முன்பே ஒரு பேரம், அப்பேரத்தில் சங்கம் தொடங்காமலிருக்க கைக்கூலிகளைப் பெற்றுக் கொண்டு ‘நா நயமாக’த் திரும்பிவிடுவது. ஒருவேளை பேரம் படியாவிட்டால் உடனே ஆலை வாயிலில் ‘புரட்சி’ தொடங்கிவிடும். போலிகள் அள்ளி வீசும், தொழிலாளிகளுக்கு ஆதரவான வார்த்தைச் சவடால்களை நம்பி சங்கமாகத் திரண்ட அப்பாவித் தொழிலாளிகள்தான் அடுத்த பலிகெடா. அப்படியே பேரம் படியும் வரை, அந்த முதலாளி எலும்புத்துண்டுகளின் எண்ணிக்கையைக் கூட்டும் வரை ‘புரட்சி’ பல்வேறு வடிவங்களில் (மொட்டையடித்துக்க்கொள்ளும் போராட்டம், கோவணம் கட்டும் போராட்டம், பாடை கட்டும் போராட்டம் என்று....) தொடரும். ஒருவழியாக முதலாளியே, இது கடிக்கின்ற நாய் அல்ல, குரைக்கின்ற நாய்தான் என்று புரிந்து கொண்டு, ”நமது செல்லப்பிராணியாக இருந்துவிட்டுப் போகட்டுமே...” என்று இறங்கி வந்து பேரத்தை நிறைவு செய்வான். உடனே சி.ஐ.டி.யூ.வின் ‘புரட்சி’ அம்முதலாளியின் காலடியில் சமர்ப்பிக்கப்படும். இவர்களை நம்பி வந்த தொழிலாளிகளுக்கு “இருக்கவேயிருக்கு செங்கொடி, அதையே ஈரத்துணியாக்கி வயிற்றில் சுற்றிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளுங்கள்...” என்கிற ‘புரட்சிகர’ யோசனைகள் வழங்கப்பட்டுவிடும்.

தோழர்களே! நகைப்பதற்காக நான் இவற்றை இங்கே குறிப்பிடவில்லை. இதுதான் நடைமுறையிலிருக்கும் உண்மையும்கூட. குந்தக்குடிசைகூட இல்லாமல் கட்சிக்குள் வந்து ஒரு சில ஆண்டுகளுக்குள் அடுக்குமாடிகள் கட்டி காரில் வலம் வரும் ‘காம்ரேடு’களின் திடீர் வளர்ச்சிக்குப் பின்னே ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் வாழ்க்கை பலியிடப்பட்டிருக்கிறது. ஏனைய ஓட்டுப்பொறுக்கி கட்சிகளைச் சார்ந்த திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் கூட இப்படிப்பட்ட கொலைபாதக வழிமுறையை கற்பனையும் செய்துபார்த்திருக்க மாட்டார்கள். வாட்டர் டேங்க், சாலைகள், கட்டிடங்கள், போன்ற காண்ட்ராக்ட்கள் மூலமாகவும் ரியல் எஸ்டேட் மாஃபியா தொழிலின் மூலமாகவும், கட்டைப்பஞ்சாயத்து – கந்துவட்டி மூலமாகவும் காசு பார்க்கும் இதர ஓட்டுப்பொறுக்கி கட்சிகளின் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளைவிட, தம்மை நம்பி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் ஈரக்குலையை அறுத்து காசுபார்க்கும் இந்த முதலாலிய கைக்கூலிகளின் நடவடிக்கைகள் ஆகக் கேவலமானவையாகக் கருதி அம்பலப்படுத்தப்பட்டு ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.

இந்நிலையில் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டி, தத்தமது சொந்த பிரச்சினைகளுக்காக மட்டும் போராடுவதை விடுத்து, தொழிலாளர்கள் மீதான சுரண்டலில் பொதிந்துள்ள சமூக அடித்தளத்தை உணர்த்தி, வர்க்கப் போராட்ட்த்திற்கு அணிதிரட்டப்படுகிற வகையில் செயல்படும் புரட்சிகர தொழிற்சங்கத்திற்கான தேவையை இன்றைய தினம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கிற எமது அமைப்பு நிறைவேற்றி வருகிறது. பு.ஜ.தொ.மு.வில் இணையும் பெரும்பான்மையான தொழிலாளிகள் ஏற்கெனவே ஏதேனும் ஒரு துரோக சங்கத்தினால் பழிவாங்கப்பட்ட்தை உணர்ந்து, தமது பிரச்சினைகளுக்கு வெறும் பொருளாதார – கவர்ச்சிகர கோரிக்கைகளைத் தவிர்த்து சமூகரீதியிலான கோரிக்கைகளையும் முன்வைத்து போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்ற, அத்தகைய புரட்சிகர போராட்டங்களினூடாகத்தான் நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்று அணிதிரட்டப்படுகின்ற காரணத்தினால்தான் இந்த மாற்றத்தைத் தேர்வு செய்கிறார்கள். தொடக்க நிலையிலிருந்தே மா-லெ முறைப்படி பயிற்றுவித்து வளர்க்கப்படும் அத்தொழிலாளிகள் வர்க்க உணர்வுடன் அணிதிரட்டப்படுவதோடு, இன்றைய மறுகாலணியச் சூழலையும் முதலாளித்துவ பயங்கரவாத்த்தையும் தமது சொந்த அனுபவத்தினூடாகப் புரிந்துகொள்கிறார்கள்.

பல்லாண்டுகளாக காண்ட்ராக்ட் தொழிலாளர்களாகவும், தற்காலிகப் பணியாளர்களாகவும் சுரண்டப்பட்டு நலிந்த தொழிலாளிகள், புது உற்சாகம் பெற்று பு.ஜ.தொ.மு.வின் தலைமையில் பணி நிரந்தரத்திற்கான போராட்டத்தைத் தொடங்கி, இத்தனையாண்டுகாலம் நீடித்த தம் மீதான உழைப்புச் சுரண்டலை எடுத்துச் சொல்லி நியாயம் கோருகிறார்கள். தமது வியர்வையையும் இரத்த்த்தையும் உறிஞ்சிக் கொழுத்த முதலாளியை வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு துணிந்து அம்பலப்படுத்தி வெட்கித் தலைகுணியச் செய்கிறார்கள். அப்பாவி மக்கள் மத்தியில் கோடீசுவர்ர்கள் என்றும் கொடை வள்ளல்கள் என்றும் உருவேற்றி செயற்கையாக மதிப்பை உயர்த்திக் கொண்ட முதலாளிகளின் கபட வேடங்கள் கலைக்கப்பட்டு, அவர்கள் இதுநாள்வரை செய்த அயோக்கியத்தனங்கள் நமது புரட்சிகரத் தொழிலாளிகளின் தொடர் போராட்டங்களின் மூலமாக அடுத்தடுத்து அம்பலப்படுத்தப்படுவதால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய போராட்டங்களை மூர்க்கமாக எதிர்கொள்ளும் முதலாளிகளுக்கு, தேவையேற்பட்டால் உழைத்துக் காய்த்த கரங்களின் வலிமையையும் கொஞ்சம் லேசாக உணர்த்துகிறார்கள்.

சுரண்டிக் கொழுக்கும் முதலாளிக்கு எதிராக நீறு பூத்த நெருப்பாகத் தொடர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் பகையுணர்வின் புரட்சிகரப் பரினாமம் இத்தகைய போராட்டங்களில்தான் வெளிப்படத் தொடங்குகிறது. தமது நியாயமான, அடிப்படையான கோரிக்கைகளை முன்வைத்து போராடத் துவங்கும் தொழிலாளிகள் தொடர்ந்து தொய்வின்றி முன்னேறுகிறார்கள். இது முதலாளிகளை ஏகமாக அச்சுறுத்துவதோடு, இதுநாள்வரை தான் பார்த்த பிழைப்புவாத சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு நேரெதிராக பு.ஜ.தொ.மு. நடந்துகொள்வதால் அதனை வீழ்த்த, திரும்பவும் சி.ஐ.டி.யூ. போன்ற சங்கங்களையே நாடுகிறார்கள். எமது புரட்சிகர அமைப்புகளால் ஏற்கெனவே மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் போலி கம்யூனிச முகாமும் இத்தகைய சுரண்டல்வாத முதலாளிகளோடு உவப்புடன் இணைந்துகொண்டு, தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிதும் கூச்சமின்றி ஈடுபட்டுவருகிறார்கள். பு.ஜ.தொ.மு.வின் தலைமையிலான தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்குவதற்கு சட்டரீதியிலான தொழிற்சங்க நுனுக்கங்களை முதலாளிகளுக்கு சொல்லித்தருகின்ற அரும்பணியை போலிகம்யூனிச சி.பி.எம்.மின் தலைவர்களே செய்கிறார்கள். பு.ஜ.தொ.மு. வீச்சாக செயல்படுகின்ற தொழிற்சாலைகளில் முதலாளிவர்க்கத்தின் எடுபிடிகளாகவும் கன்சல்டண்டுகளாகவும் புரோக்கர்களாகவும் (Consultants or Broker) மேல்நிலையாக்கமடைந்து சந்திசிரிக்கிறது சி.பி.எம்.மின் தலைமை.

முதலாளித்துவ வர்க்க எதிரிகளோடு கரம் கோர்த்துக் கொண்டு நமக்கெதிராக்க் களமிறங்கியிருக்கும் போலிகம்யூனிச துரோகிகளின் செயல்பாடுகள், எமது தொழிலாளத் தோழர்களின் உறுதியான போராட்டங்களுக்கு முன்னால் அம்மனமாக நிற்கின்றன. இவர்களை மேன்மேலும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேண்டிய நமது வேலையைக்கூட குறைத்து தம்மைத்தாமே அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் எதிரிகளும் துரோகிகளும். ’சி.ஐ.டி.யூ. கண்சல்டன்சி’ கம்பெனியின் அடுத்த கட்ட ‘பரினாமத்தை’ நம்ம ‘காம்ரேடு’களுக்கு காட்டியிருக்கிறது. விரைவில் தமது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சங்கங்களையும் கலைத்துவிட்டு, அந்தந்த முதலாளிகளுக்கு கண்சல்டன்சிகளாக மாற்றி, அத்தொழிலாளிகள் இனிமேலாவது வர்க்க உணர்வு பெறுவதற்கு உதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ‘சி.ஐ.டி.யூ. கன்சல்டன்சி’யின் மூலமாக நம்ம ‘காம்ரேடுகள்’ வெகு விரைவில் தமது கனவுலகத்தை எட்டிவிடலாம் என்று மேநாள்-2010ன் மூலமாக வாழ்த்துகிறேன்.

இதுகுறித்து ஒரு தோழருடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது “அட போங்க தோழர், போலி கம்யூனிஸ்டுகள் நமது பகுதிகளில், தமது கட்சியின் சின்னத்திலுள்ள அரிவாளுக்கும் சுத்தியலுக்கும் இடையிலேயே சுரண்டலைத் துவக்கி வைத்து அதிலும் ஒரு ’புரட்சி’ செய்துவருகிறார்களே உங்களுக்கு அது தெரியாதா...” என்று கேட்டு, கேட்க்க் கூசுகின்ற மேலும் சில அயோக்கியத்தன்ங்களை விவரித்தார். அதுகுறித்து மேலும் சில வரிகள் (இந்தப் பதிவோடு தொடர்புடையதாக இருப்பதால்) குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று எண்ணுகிறேன்.

இப்போது நெல் அறுவடைக்காலம். அனைத்து மாவட்டங்களிலும் அரசு கொள்முதல் என்பது பெயரளவுக்கே இருப்பதால், புரோக்கர்களின் கையிலேயே, அவன் கொடுக்கும் குறைவான காசை வாங்கிக் கொண்டு நெல்லை விற்கும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள், பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள். இந்த சிறு, குறு விவசாயிகள் போலி கம்யூனிச கட்சியின் செங்கொடியின் கீழ் விவசாயிகள் சங்கமாகவோ அல்லது விவசாயத் தொழிலாளிகள் சங்கமாகவோ இருக்கிறார்கள். இவர்களிடம், நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக படையெடுக்கும் புரோக்கர்களோடு செல்லும் லோடுமேன் எனப்படும் சுமை தூக்கும் தொழிலாளிகள் அதே செங்கொடியின் கீழ் சுமைதூக்கும் தொழிலாளிகளாக அணி திரட்டப்பட்டவர்கள். ஆனால், புரோக்கரோடு இணைந்து கொண்டு, அவன் கொடுக்கும் நூறு, இருநூறு பிச்சைக் காசுக்காக, எடைத்திருட்டு செய்து விவசாயியின் வயிற்றிலடித்துவருகிறார்கள். இம்மோசடியைக் கொஞ்சமும் கூசாமல் நியாயப்படுத்தி அந்த சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகளே நேரடியாக இத்திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயத் தொழிலாளர்களும் ஆலைத்தொழிலாளர்களும், வயிற்றுப்பாட்டுக்காக அறிவாள் பிடித்த கரங்களும் இரும்பைப் பிடித்த கரங்களும் ஒன்றினைந்துதான் புரட்சியைச் சாதிக்க் வேண்டும் என்பதை வலியுறுத்தித் தான் அறிவாள் சுத்தியலைத் தமது சின்னமாக உலக பாட்டாளி வர்க்கம் உயர்த்திப் பிடித்துவந்திருக்கிறது. அத்தகைய உன்னதமான உலகப்பாட்டாளி வர்க்க சின்னத்தை இரண்டு, மூன்று சீட்டுகளுக்காகவும் ஓட்டுப் பொறுக்கிப் பிழைப்பதற்காகவும் புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் சமர்ப்பித்து “அம்மாவின் ஆசிபெற்று....” இழிவுபடுத்தும் இப்போலிக் கம்யூனிசக் கயவாளிக் கும்பல் கிராமப்புறங்களில் செய்யும் அயோக்கியத்தனங்களைப் பாருங்கள். அறிவாள் பிடித்தவனின் குரல்வளையை நெறிக்க இரும்பைப் பிடித்த கரங்களை ஏவுகின்ற அயோக்கியத்தனத்தைக் கேளுங்கள். இத்தகைய எடைத்திருட்டு நடவடிக்கைகளில் மாட்டிக் கொண்டால், சொந்த கட்சித் தோழர்களாலேயே தாம் ஏமாற்றப்பட்டதை எண்ணி விவசாயிகளால் காறி உமிழப்படும் போது போலிகம்யூனிசக் கட்சியோடு சேர்த்து செங்கொடியும் அவர்கள் மத்தியிலிருந்து வெறுத்து ஒதுக்கப்படுகின்றது.

இதுபோன்ற சமூகத்தின் கடைமட்டத்தில் இருக்கும் உழைப்பாளிகளான சுமைதூக்கும் தொழிலாளர்களது வர்க்க உணர்வு, தன்னுடைய சொந்த வர்க்கமான விவசாயத் தொழிலாளர்களது வலியைக் கூட உணரமுடியாத அளவிற்கு சீரழிந்திருக்கிறது. போலி கம்யூனிச கட்சியின் அரசு ஊழியர் சங்கத்தில் இணைந்து கொண்டு லஞ்சம் வாங்கிப் பிழைக்கும் அதிகாரிகள், தாம் லஞ்ச-ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டால் காப்பாற்றிவிடுவதற்கு சங்கம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால்தான் அச்சங்கத்தைத் தேர்வு செய்கிறார்கள். மக்கள் மத்தியில் லஞ்சம் வாங்குவதற்காக சாதாரணமாகவே காறி உமிழப்படும் அரசு ஊழியர்களில் எண்ணிக்கையில் அதிகமானவர்களைக் கொண்ட பெரிய சங்கமே சி.பி.எம். கட்சியின் சங்கம்தான். இப்படியே பட்டியல் போட்டுக் கொண்டு சென்றால் பக்கங்கள் பல கடந்து செல்லுமேயொழிய போலிகளின் இழிநிலைப் பட்டியல் முடிவுக்கு வராது போலும்.

பிழைப்புக்காக எதையும் செய்யும் இத்தகைய கயமைக் கூட்ட்த்தை இனியும் நம்பிக் கொண்டிருப்பதற்கு ஏதேனும் ஒரு முகாந்திரத்தை நேர்மையான சி.பி.எம். கட்சியின் அணிகள் நமக்குக் காட்ட வேண்டும். இத்தகைய இழிநிலையைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாமல் தவிக்கும் சி.பி.எம். கட்சியின் நேர்மையான தோழர்களை புரட்சிகர அமைப்புகளின் இணைந்து செயலாற்ற மேநாள் – 2010ல் அறைகூவி அழைக்கிறோம்!

புரட்சிகர வணக்கங்களுடன்,
ஏகலைவன்.