Saturday, May 24, 2008

பூக்காயம்

பூக்காயம்

பூக்களை சும்மா
புகழ்ந்து தள்ளாதீர்கள்
ரெண்டுவேளை பாடுக்காய்
மணிக்கணக்கில் பூ கட்டி
நகக் கணுக்கள் வலியெடுக்க
அதைவிட பயங்கர ஆயுதம்
அப்போது வேறேதுமில்லை.

மல்லிகையை சரம் தொடுத்து
மரிக்கொழுந்தை காம்பொடித்து
சில்லரைக்கு ஏங்கி நிதம்
வெய்யலிலே காய்கையிலே
மனம் வாடும், பூ சுடும்

கருவகுச்சி ஒடிச்ச கையில்
கனகாம்பரம் கட்டும்போது
உரசும் பூ இதழ்கள்
உள்ளங்கையை நோகடிக்கும்

முல்லரும்பு எனக் கூவி
முடுக்கெல்லாம் சுற்றிவந்து
நல்லவிலை விற்பதற்குள்
நாடி நரம்பெல்லாம் - பூ வலிக்கும்

ஈரவிறகை ஊதி ஊதி
இடையிடையே பூத்தொடுத்து
சோறுதிங்க கையெடுத்தால்
பூவாசம் குமட்டும்

தண்ணீர் தெளித்துவைத்து
தருகின்ற பூக்களெல்லாம்
கண்ணீரால் கட்டியதால்
கசங்காமல் இருக்குதென்று
காரணம் அறிவீரா!

பூத்தொடுக்கும் போதே
முரண்டு பிடிக்குது மொட்டுகள்
வாழ்க்கை போர் தொடுத்தபோதும்
பொறுமையாய் இருக்கச் சொல்லி
யாரும் எங்களுக்கு பூ சுற்றவேண்டாம்.

-துரை. சண்முகம்.

Thursday, May 15, 2008

நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!




நந்திகிராம் பிரச்சினையை ஒட்டி கல்கத்தா வந்து சென்றார் அத்வானி. வந்தவர் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் தனது நண்பர் CPM(டாடாயிஸ்ட்) முதலமைச்சர் புத்ததேவுவை பார்க்காமல் சென்று விட்டார். ஆயிரம் பிரச்சினை என்றாலும் ஒரு அடிப்படை நாகரிகம் வேண்டாம்? ஒரு நண்பரை அவ்வளவு தூரம் வந்துவிட்டு பார்க்காமல் சென்று விடுவதா?

மனம் வெதும்பி பத்திரிகைகளில் புலம்பினார் புத்ததேவு. ‘நண்பர் அத்துவானி இம்புட்டு தூரம் வந்துபிட்டு என்ன பாக்காம போயிட்டாரு… ரொம்ப காண்டாக்கீது” என்று. உடனே அத்துவானிக்கு ரொம்ப பொச்சரிப்பா.. ஸாரி புல்லரிப்பாப் போச்சி. அவர் சொன்னார் “நண்பர் புத்ததேவு சந்திக்காம போனது வருத்தந்தான். நான் அவர சந்திக்கிறத எங்க கட்சி தொண்டர்கள் சரியா புரிஞ்சிக்க மாட்டாய்ங்க” அப்படின்னு.

இந்த ரெண்டு பேரோட நட்பு செண்டிமெண்டு மேற்கு வங்க கூரையை பிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் ஓடுச்சு. அந்த செண்டிமெண்டு எபெக்ட் ஆறாருதுக்கு முன்னெயே நாடாளுமன்றத்துல காம்ரேடு பிருந்தாகரத்தும், சுஸ்மாசுவராஜ் அப்படியே கட்டிப் பிடிச்சி உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்காத குறையாக தமது நட்பை, பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். படம் பத்திரிகைகளில் வெளிவந்து மூன்று காட்சிகளும் ஹவுஸ் புல்லாக நூறு நாள்கள் ஓடும் அளவு பிரபலமாகியது. படத்த என்னால கண் கொட்டு பாக்க முடியல.. கண்ணு முழியெல்லாம் ஒரே கண்ணீரு…. (போட்டோ வுல கூட பின்னாடி ஒருத்தர் இந்த பாசப்பினப்ப பாத்து பீலிங்ஸ் ஆகி நிக்கிறாரு).

தூ… வெக்கங்கெட்ட நாயிகளா…. பார்ப்பன பயங்கரவாத படு கொலைகாரர்களுடன், மனித குல விரோதிகளுடன் வெட்கமின்றி பொது இடங்களில் ஒட்டி உறவாடும் இவர்கள் கம்யுனிஸ்டு என்று தமது கட்சிக்கு பெயர் வைத்து கம்யுனிசத்தின் மீதும் ஒணுக்கு அடிக்கின்றனர். விட்டால் பாஜகவை இடதுசாரி கட்சிகள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் போல தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகள் லிஸ்டில் பாஜக இருந்தால் என்ன CPM இருந்தால் என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய பாசிச மட்டைகள்தான்.

- செய்தி ரசம்.

பெய்யெனப் பெய்யும் மழை!

அலுத்துப் படுத்து
விழித்துப் பார்க்க
கடிகாரமுள் கண்ணைக் குத்தும்.

கருக்கலின் மார்பில்
ஆவின் சுரக்கும்
பெண்ணின் கனவுகள்
நெஞ்சில் வரளும்
தவிக்கும் குழந்தைக்கு
அழுத்திப் பால் கொடுக்க
கிழக்கில் இரத்தம் கட்டும்.

பரபரக்கச் சோறு பொங்கி
பேருந்து பிடிக்க
'அன்னநடை' தொலைந்து போகும்.

நெருக்கும் பயணத்தில்
நடக்கும் பாதையில்
கண்களின் வக்கிரம்
உடற்தோல் உரிக்கும்

பாத்திரம் துலக்கி
துணி வெளுத்து
ஓய்ச்சலின்றி அடங்கும் விசும்பலில்
பெய்யெனப் பெய்யும் 'கற்பின் மழை'

கணவனுக்கு, குழந்தைக்கு
குடும்பத்துக்கு
பங்குபோட்டபின்
மீதமிருக்கும் இரத்தம்
சம்பளத்தில் வடியும்.

கல்லாய் மண்ணாய்
கருதிய கணவன்
ஒண்ணாந்தேதி உவமை சொல்வான்,

"காந்தள் மலர்க் கைகள்
உன் கைகள்"

- துரை. சண்முகம்
புதிய கலாச்சாரம் பிப்'96 இதழிலிருந்து....

Wednesday, May 14, 2008

நக்சல்பாரிகளை ஓழிக்க முடியுமா?




"வர்க்கப் பகைவர்களைக் கொன்றொழித்து அவர்களின் இரத்தத்தில் கை நனைப்பவர்களே இறுதியில் புரட்சியாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.ஆகவே நீங்கள் கிராமங்களுக்குச் செல்லுங்கள் கிராமங்களில் ரகசிய குழுக்களை அமைத்து ஏழை எளிய மக்களிடம் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து சொத்தைப் பறிப்பவர்கள்,மோசமான நிலப்பிரபுக்கள்,பள்ளி,கோவில் நிலம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை அபகரிப்பவர்களை அழித்தொழிக்க வேண்டும்.அழித்தொழிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்."

1969-ல் இரண்டாவது முறையாக தமிழகத்துக்கு வந்த நக்சல்பாரிகளின் நாயகன் சாருமஜூம்தார் தமிழகத்துக்கு வந்த போது தங்கள் தோழர்களிடம் ஆற்றிய உரையின் சாரம்தான் இது.சாருமஜூம்தாரின் வருகைக்குப் பிறகு தமிழகம் முழுக்க பண்ணை முதலாளிகள்,கந்து வட்டிக்காரர்கள்,பெண் கொடுமை செய்யும் மைனர்கள் என பலரும் அழித்தொழிக்கப் பட்டார்கள்.ஒடுக்கப்பட்ட விவாசாயக் கூலிகளோடு நக்சல்பாரிகள் இணைந்து நிகழ்த்திய இந்த கொலைகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த போலீஸ்சுக்கும் நக்சல்பாரிகளுக்குமான மோதல் தொடங்கியது.எழுபதுகளில் தொடங்கிய நக்சல்பாரிகளின் போராட்டத்தை ஒடுக்க போலீஸ் அதன் பிரதான தலைவர்களை வேட்டையாடியது.தமிழகத்தில் எல்.அப்பு,ஏ.எம்.கோதண்டராமன்,புலவர் கலியபெருமாள் போன்றோரின் தலைமையில் துவங்கிய நக்சல்பாரிகளின் புதிய ஜனநாயக் புரட்சி போலீசால் ஒடுக்கப்பட்டு கால் நூற்றாண்டு காலம் கழிந்து விட்டது.எண்பதுகளோடு முடிந்து போனதாக சொல்லப்பட்ட நக்சல்பாரிகள் தேனி மாவட்டத்தின் முருகமலை வனப்பகுதிகளிலும் வருசநாட்டு மலைப் பகுதிகளிலும் வேர் விட்டிருக்கிறார்கள்.என பதறிப்போய் அவர்களை மீண்டும் வேட்டையாட கிளம்பியிருக்கிறது தமிழக போலீஸ்.


இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர்‘‘இயர்க்கைப் பேரிடர்களின் போது எல்லா கட்சிகளும் இணைந்து ஒன்றாக செயல்படும்.அதைப் போலவே தீவீரவாதம் தலையெடுக்கும் போது அதைத் தவிர்க்கவும் தடுக்கவும் எல்லாக் கட்சிகளும் முன் வரவேண்டும்’’என்ற முதல்வர்.அவர்கள் ஏன் இந்த நிலைக்கு ஆளானார்கள்? அவர்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பதற்கு இருப்பதற்கு என்ன காரணம்?வசதி இல்லை.வசதி இல்லாததற்கு என்ன காரணம் அதை ஆழமாக அந்த ஆணி வேரை தோண்டிப் பார்த்து அறிய வேண்டும்.அது அகற்றப்பட்டால் வருங்கால சமுதாயம் புரட்சிகர இளைஞர்களாக மாறாமல்.புதிய நாட்டை உருவாக்குகிற இளைஞர்களாக மாறுவார்கள்"என்றிருக்கிறார் முதல்வர்.

நக்சல்பாரி புரட்சியாளர்கள் பொதுவாக கம்யூனிஸ்டுகளாலும்.அரசதிகார மட்டங்களால் நக்சலைட்டுகள் என்றும் அழைக்கப்படும் ஆயுதமேந்திய இந்த இளைஞர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றால் அது இந்திய பொது உடமைக் கட்சியின் நீண்ட வரலாறு.இரத்தத்தாலும் தியாகத்தாலும் தோய்த்தெடுக்கப்பட்ட வீர வரலாறு என்றுதான் ஒரு தரப்பு மக்களால் இன்றும் நம்பப்படுகிறது.

1968-ல் மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டணி அரசில் கம்யூனிஸ்டுகளும் இடம் பெற்றிருந்த போது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்திலிருந்து வெடித்த அந்தக் குரல் சாருமஜூம்தாருடையது.கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவராக இருந்த சாருவின் குரலை அவரது கட்சியே எதிர்பார்க்கவில்லை.பணக்காரர்களிடம் இருக்கும் நிலங்களைப் பிடுங்கி ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.விவாசாயிகளே நேரடி நடவடிக்கையில் ஈடு பட்டு தங்களின் நிலத்தை பணக்காரர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வார்கள்.என அதிரடியாக அறிவிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது.சாருவின் இந்த அறிவிப்பு ஆயிரமாயிரம் இளைஞர்களை உரமேற்ற அவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறி மார்க்சிய லெனினிய கட்சியான நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார்கள்.பல இளைஞர்கள் குடும்பங்களைத் துறந்து வெளியேறினார்கள்.சாருமஜூம்தாரின் இந்த அதிரடி அறிவிப்பை அப்போது கொண்டாடியது சீன கம்யூனிஸ்ட் கட்சி.சாரு மஜூம்தாரின் இந்த அறிவிப்பை "வசந்தத்தின் இடி முழக்கம்"என பெயரிட்டு கௌரவப்படுத்தியது சீன கம்யூனிஸ்ட் கட்சி.வரலாறும் சாருமஜூம்தாரின் அந்த நக்சல்பாரி எழுச்சியை "வசந்தத்தின் இடி முழக்கம்"என்றே இன்று வரை பதிவு செய்கிறது.

ரஷ்யப் புரட்சியாளர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் இருபத்தி இரண்டாம் தேதி கல்கத்தவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நீண்ட கால மக்கள் யுத்தத்தை பிரகடனப்படுத்தி மார்க்ஸ்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சாருமஜூம்தார் துவக்கி வைத்து இன்று நாற்பதாண்டுகளுக்கு மேலாகி விட்டது.தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தைப் பொறுத்த வரையில் அது எவளவு வேகமாக எழுந்து வந்ததோ அதே வேகத்தில் ஒரு பக்கம் பிளவைச் சந்தித்தது.இன்னொரு பக்கம் ஈரமிக்க அந்த தோழர்கள் போலீசால் வேட்டையாடப்பட்டார்கள்.சாருமஜூம்தார் தமிழகத்துக்கு வந்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் துரிதம் தேவை என அறிவித்த பிறகு பரவலாக பலர் அழிதொழிக்கப்பட கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் அப்பு காவல்துறையினரால் வேட்டையாடப்பட்டார்.நகச்ல்பாரிகள் சந்தித்த முதல் இழப்பும் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பும் அதுதான்.கோதண்டராமன் போன்ற பக்குவம் மிக்க தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட சீராளன்,பாலன்,கோவிந்தன்,கண்ணாமணி போன்றோர் அடுத்தடுத்து போலீஸ் மோதலில் பலியாகி விழுந்தார்கள்.நக்சல்பாரிகளின் மூர்க்கமும் போலீசின் மூர்க்கமும் மோதிக் கொண்டது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் வேட்டையாடப்பட்டார்கள் அந்த வேட்டைக்கு தலைமை தாங்கியது முன்னாள் போலீஸ் அதிகாரியான தேவாரம்.இந்நிலையில் நக்சல்பாரி இயக்கத்தைத் தொடங்கிய சாருமஜூம்தார் 1972&ல் காவல்துறை மோதலில் கொல்லப்பட கட்சி உடைந்தது.தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒழித்து விட்டதாக நிம்மதி பெருமூச்சு விட்டது தமிழக காவல்துறை.

அழித்தொழிப்பு கொள்கைக்கும் கட்சியின் சித்தாந்தத்துக்கும் போர் தொடங்கியது.நீங்கள் கிராமங்களுக்கு செல்கிறீர்கள் விவசாயக் கூலிகளோடு இணைந்து பணி செய்து ரகசியக் குழு அமைத்து விவசாயக் கூலிகளின் உதவியோடு பண்ணையாகளை கொல்கிறீர்கள்.பின்னர் அந்த கூலி விவசாயிகளை கட்சியில் இணைந்து கொண்டு தலைமறைவாகி விடுகிறீர்கள்.நீங்கள் எப்படி உங்கள் குடும்பங்களைத் துறந்து புரட்சிக்காக கிராமங்களுக்கு வந்தீர்களோ அப்படியே அந்த விவாசயக்கூலிகளும் குடும்பங்களை நிராதரவாக விட்டு விட்டு உங்களுடன் வந்து விடுகிறார்கள்.முன்னணி தோழர்கள் கொல்லப்படுகிறார்கள்.இது புரட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு.ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது சித்தாந்தமல்ல.மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக் இருக்கும் என முரண்பட்டு நின்றவர்கள்.நக்சல்பாரி அமைப்பின் அனுபவங்களோடு s.ஷீ.நீ என்றழைக்கப்படும் மார்க்ஸிய லெனினிய சித்தாந்த அடிப்படையிலான மாநில அமைப்புக் கமிட்டியை நிறுவினார்கள்.ஆயுதங்களை சுமந்து திரியும் சாகசவாதங்களை நம்பாமல் இவர்கள் கிராமங்களுக்குப் போய் மக்களை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரட்டுகிறார்கள்.

இந்தியா முழுக்க நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்த காலமது.கேரளாவில் அது முழுக்க தோல்வியைத் தளுவியது.இந்நிலையில்தான் ஆந்திராவில் கொண்டப்பள்ளி சீத்தாராமைய்யாவின் தலைமையில் இயங்கிய மக்கள் யுத்தக்குழுவும் பீஹாரைத் தலைமையிடமாக கொண்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டரும் இணைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட் என்கிற இந்தியா முழுமைக்குமான பரந்து பட்ட அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.முன்னர் நக்சல்பாரிகள் என்றழைக்கப்பட்டவர்கள் இன்று மாவோயிஸ்டுகள் என்று அறியப்படுகிறார்கள்.

"இந்தியாவின் 16 மாநிலங்களில் 172 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் தாக்கம் உள்ளது.இது ஒட்டு மொத்த இந்தியப் பரப்பளவில் 48 சதவீதமாகும்" என தெஹல்கா இதழ் தெரிவிக்கிறது.அதிரடியாக கடந்த பத்தாண்டுகளில் மவோயிஸ்டுகள் வளர என்ன காரணம் என்றால்.எழுத்தாளர் அருந்ததிராய் இப்படிச் சொல்கிறார்."சாத்வீக அஹிம்சா அமைப்புகள் நமது ஜனநாயக அமைப்பின் கதவுகளை ஆண்டுக் கணக்கில் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.அவ்வாறு தட்டித் தட்டி அவர்கள் கண்டது என்ன?போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போராட்டமும் நர்மதை பாதுகாப்பு பிரச்சனையையும் எடுத்துக் கொள்ளுங்கள் வேறு எந்த பிரச்சனையையும் விட இந்த இரண்டுக்கும் ஊடகங்களின் ஆதரவும் பிரபலமான தலைமையும் இருந்தும் என்ன பிரயோஜனம் போராடியவர்களால் வெற்றிபெற முடியவில்லையே.அந்த மக்கள் போராட்ட வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார்கள்.மற்ற எல்லா வழிகளையும் முயன்று விரக்திதான் மிச்சம் என்ற நிலையில் மக்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் போது நாம் அவர்களை கண்டிக்க முடியுமா?நந்திகிராம் மக்கள் தர்ணா நடத்திக் கொண்டு பாட்டுப்பாடிக் கொண்டு இருப்பார்களேயானால் மேற்கு வங்க அரசுதான் பணிந்திருக்குமா?"என்று கேட்கிறார் எழுத்தாளர் அருந்ததிராய்.

நாடு முழுக்க ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகு மத்திய அரசு 60,000 கோடி பெருமான முள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறது.நாடெங்கிலும் விவசாயிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுக் கிடக்க தமிழகத்தில் தருமபுரி,சேலம்,மதுரை என எல்லா இடங்களிலும் வாழும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கையையே குலைக்கும் கோர அரக்கனாக கந்து வட்டிக் கும்பல் கிராமங்கள் தோறும் முளைத்திருக்கிறது.சாதா வட்டியில் துவங்கிய இவர்களின் இந்த வட்டித் தொழில் மீட்டர் வட்டியாக வளர்ந்து இன்று ஆம்புலன்ஸ் வட்டியாக விவசாயிகளின் கழுத்தை நெறிக்கிறது.இவர்கள் வெறும் கந்து வட்டிக் கும்பல் அல்ல ரியல் எஸ்டேட் தொழில்தான் இவர்களுக்கு பிரதானம் வட்டிக்கு கொடுப்பது போல் கொடுத்து அதை ஆம்புலன்ஸ் வேகத்தில் எகிற வைத்து விவசாயியால் வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலை வரும் போது அவர்களிடம் இருந்து இருக்கிற நிலங்களையும் பிடுங்கிக் கொள்வதுதான் இந்த கந்துவட்டிக் கும்பலின் நோக்கம்.கந்துவட்டிக் கும்பலுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக இருந்தும் இவர்கள் சர்வசாதாரணமாக கிராமங்களில் ஏழை விவசாயிகளின் கழுத்தை நெறிக்கிறார்கள்.விளைவு நஷ்டப்பட்ட விவசாயம் கைமீறிப்போன கடன் என குடும்பத்தோடு தங்களின் பூர்வீக நிலத்திலிருந்து வெளியேறும் சூழல் இன்று தமிழக கிராமங்கள் முழுக்க நடக்கின்றன.

நிலரீதியிலான பிளவு மட்டுமல்ல சாதியால் பிளவு பட்ட தமிழ்ச் சமூகத்தின் நோய் கொஞ்சம் கூட சரியாக வில்லையோ என்றுதான் இன்றும் தோன்றுகிறது மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள உத்தப்புரத்தில் தலித்துக்களையும் சாதி இந்துக்களையும் பிரிக்கும் பத்தடிக்கும் மேலன உயரமுள்ள தடுப்புச் சுவர் மனித குலத்தின் அவமானச் சின்னமாக உயர்ந்து நிற்கிறது.1990 களில் எழுப்பப்பட்ட அந்தச் சுவருக்கு மேலே இப்போது இப்போது மின்சார வேலி அமைத்திருக்கிறார்கள்.தீண்டாமை புதிய புதிய முறையில் காலவளர்ச்சிக்கேற்ப நாவீனப்படுத்தப்பட்டு வருவதற்கு உத்தப்புரம் சாட்சி.

ஒரு காலத்தில் சாதி ஒடுக்குமுறையாலும் பொருளாதாரத்தாலும் பின்தங்கிய மாவட்டம் என அடையாளம் காணப்பட்ட தருமபுரிதான் நக்சல்பாரிகளின் கூடாரமாக இருந்தது.இன்று தமிழகம் முழுக்க மவோயிஸ்டுகள் பரவியிருக்கிறார்கள் என்றால் வறுமையும் ஏழ்மையும் எல்லா மாவட்டங்களையும் பின் தங்கிய மாவட்டங்களாக மாற்றியிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.அதிமுக ஆட்சியில்தான் இந்நிலை அல்லது திமுக ஆட்சியில்தான் இந்நிலை என்றில்லை. உலகமயச் சூழலுக்குள் எப்போது இந்தியா அடியெடுத்து வைத்ததோ அப்போதே இந்தியச் சமூகம் சமுகம் பிளவுபடத் துவங்கிவிட்டது எனக் கருதுகிற சமூக ஆர்வலர்களும் உண்டு.

நிலம்,சாதிஆதிக்கம்,மறுக்கப்படும் நீதி,பாரபட்சமான கல்வி,வறுமை என எத்தனையோ சமூகக் காரணங்கள் மவோயிஸ்டுகளின் பெருக்கத்துக்கு பின்னணிக் காரணமாக அறியப்பட்டாலும் இவைகளை சரி செய்து விட்டால் நக்சல்பாரிகளோ,மாவோயிஸ்டுகளோ அழிந்து விடுவார்கள் என்கிற அரசின் கருத்துக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.ஏனென்றால் சாருமஜூம்தார் சோற்றுக்கிலாமல் பட்டினி கிடந்ததில்லை.மக்களின் பட்டினியைப் பார்த்துத்தான் அவரும் அவரை பின்பற்றிய இளைஞர்களும் விவாசாயிகளிடம் போனார்கள்.இது மாவோயிஸ்டுகளுக்கும் பொருந்தும்.தங்களின் சிகப்புச் சிந்தனையை உலகம் முழுக்க ஒரே குரலில்தான் பாடுகிறார்கள் இப்படி,

"பட்டினிக் கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பாரில் கடையரே எழுங்கள்
வீறு கொண்ட தோழர்காள்!
கொட்டு முரசு கண்ட நம்
முழக்கம் எங்கும் முழங்கிட
பாடுவீர் சுயேட்சை கீதம் விடுதலைப் பிறந்தது"

பிரெஞ்ச் கவிஞன் யூஜின் பட்டியரின் இந்த பாடல் உலகத்தில் ஏழ்மையும் பாரபட்சமும் இருக்கும் வரை இந்தப் பாடல் பாட்டாளிகளால் அதன் நிறம் மாறாமல் பாடப்பட்டுக் கொண்டுதானே இருக்கும்.

டி.அருள் எழிலன்
http://athirai.blogspot.com/2008/05/blog-post.html

மேலும் பல விரிவான கட்டுரைகளுக்கு தமிழரங்கம் இணையதளம் செல்க.

Tuesday, May 13, 2008

செய்திகளுக்கிடையே............

ஆயுதங்களைப்பற்றி
அதிகம் கவலைப்படுகிறார்கள்
அதன் தயாரிப்பாளர்கள்!

மயிற்பீலி விசிறிகளுக்கிடையே
மல்லாந்தும்
இமை செருக முடியாமல்
விழிபிதுங்கும் கெட்டகனவுகளால்
விரட்டப்படுகிறார்கள்.

அந்தப்புரத்தில் ஆசையாய் வளர்க்கும்
பூச்செடிகளின்
மொட்டு வெடிக்கும் ஓசையையும்
ரசிக்க முடியாத சந்தேகம்
விண்மீன்களோ
பழிவாங்கத் துடிக்கும் விழிகளால்
துன்புறுத்துகின்றன.

நிலவிலும் ரத்தக்கறை பீதி
கட்டுக்கு அடங்காமல் கைமாறி
ஆயுதங்கள் திரும்பும்போது
அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம்...
"அகிம்சை... மனிதாபிமானம்....
நீதிபோதனை..."

பறிக்கும் கைகள்
பாடம் சொல்கின்றன
"ரோஜாக்களே முட்களை
போட்டுவிடுங்கள்"

தேனடை திருடவந்தவர்கள்
பேசிக் கொள்கிறார்கள்
"தேனீக்கள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றன"

மிதிக்கும் கால்கள்
கடிக்கும் எறும்புகளை கண்டிக்கின்றன
"இது பண்பாடல்ல"

பதுங்கியிருந்த பூனைகள்
பசியாறியவுடன் வெளியேற்றும்
கவுச்சி வெறுத்த வார்த்தைகள்
"எதையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்"

புரிகிறது வரலாறு
ஆயுதங்களின் சத்தத்தை விடவும்
அகிம்சாவாதிகளின் அலறலே
'பொது அமைதிக்கு' பங்கம்.

உறைந்த இரத்தத்தில்
உருவப்பட்ட சேலைகளில்
மதக்குறி தேடிய நிர்வாணத்தில்
இன்னும் புரியவில்லையா
இந்த ஜனநாயகத்தின் பொருள்?

காரணமறிந்தும் கருத்துத் தளம் தேடும்
கைக்கூலிகளே

முதலில் நிராயுதபாணிகளிடம்
நீதிபோதனை செய்வதை நிறுத்துங்கள்

ஆயுதபாணிகளிடம்....
அவர்கள் "ஜோதியில்"
நீங்கள் வெளிச்சம் தேடுங்கள்

நெருப்பு மூட்டும் வேலை
நிறைய இருக்கிறது எங்களுக்கு.

-துரை. சண்முகம்.

புதிய கலாச்சாரம் அக்'93 இதழிலிருந்து....

Monday, May 12, 2008

மக்கள் போராட்டம் என்றால் என்ன?



மக்கள் போராட்டம் என்றால் என்ன?


பி.இரயாகரன் - 2008


மக்கள் எதிரிக்கு எதிராக தனக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஐக்கியப்படுதலாகும். மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு, தமது சொந்த விடுதலைக்காக தாம் போராடுவது தான் மக்கள் போராட்டம்.


இது தனக்குள்ளான ஒடுக்குமுறைகளை அனுமதிக்காது. அதாவது தனக்குள்ளான முரண்பாடுகளை களையும் போராட்டத்தை நடாத்திக் கொண்டு, எதிரியை தனிமைப்படுத்தி தனது சொந்த விடுதலையை அடையப் போராடுவது தான் மக்கள் போராட்டம்.


இப்படி போராடாத, போராட முனையாத அனைத்துமே மக்கள் விரோதப் போராட்டம் தான். இப்படி குறைந்தபட்சம் மக்கள் போராட்டம் இருக்க, மக்களை பிளவுபடுத்தி அதை அரசியலாக பாதுகாக்கும் மக்களின் எதிரிகள் எல்லாம், தாம் மக்கள் போராட்டம் நடத்துவதாக கூறிக்கொள்கின்றனர்.


தாம் மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு தான், ஜோஷ் புஸ் முதல் பின்லாடன் வரை மக்களின் தொண்டைக்குழியையே அறுக்கின்றனர். புலிகளாக இருக்கலாம், புலியெதிர்ப்பாளனாக இருக்கலாம், போலிக் கம்ய+னிஸ்ட்டாக இருக்கலாம், அரசியல் கருத்தற்றவராக கூறிக்கொள்பவராக இருக்கலாம், ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனமாக இருக்கலாம், இப்படி பற்பலவிதமானவர்கள் எல்லாம் மக்களின் விரோதிகளாகவே உள்ளனர். ஆனால் இவர்கள் தாம் நடத்துவது, மக்கள் போராட்டம் என்கின்றனர்.


பணத்தை, ஆயுதத்தை, அதிகாரத்தை வைத்துக் கொண்டும், சமூக பிளவுகளை விதைத்துக் கொண்டும் தான், இவர்கள் மக்களின் வாழ்வை அழித்தொழிக்கின்றனர். மக்கள் வாழ்வின் உண்மையை அறிந்து விடாது இருக்கும் வண்ணம், தம்மைச் சுற்றி போலியானதும் கவர்ச்சியானதுமான மலிவான முலாம் மூலம் கவசமிட்டு வைத்துக்கொள்கின்றனர். இதன் மூலம் சிறிதொரு பிரிவின் நலன்களுக்காக, அனைத்தையும் வளைத்துப் போடுகின்றனர்.


இவர்களால் தான் உலகெங்குமுள்ள மக்கள் தம் வாழ்வை இழக்கின்றனர். வெறும் நுகர்வு மந்தையர்களாக, அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். இவர்களின் கோட்பாடோ, மக்கள் தமக்காக தாமே போராட முடியாது. மாறாக தம்மை மீட்பாளராக, மக்கள் தமது மந்தைக் குணத்துடன் ஏற்க வேண்டும். இதை மீறினால், சாமபேதம் பாராது எதையும் எப்படியும் கையாள்கின்றனர்.


விடுதலைப்புலிகளின் பாசிசமாகட்டும், பிள்ளையானின் கிழக்கு ரவுடித் தனமாகட்டும், தாலிபானின் இஸ்லாமிய கொடூரமான ஆட்சியாகட்டும், இந்தியாவின் போலி கம்யூனிஸ்டுக்களின் (உதாரணம் நந்திக்கிராம்) வக்கிரமாகட்டும், ஜே.வி.பியின் பச்சையான இனவாதமாகட்டும், இப்படி மக்களின் பெயரில் இவர்கள் செய்யும் மக்கள் விரோத செயல்களையே மக்களின் விடுதலை என்கின்றனர்.


மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தமது சொந்த விடுதலையை அடைதல் தான். இதை மறுப்பதோ, மிகமோசமான அயோகியத்தனமாகும். மக்களின் விடுதலை என்பது, தம் மீதான அடக்குமுறைகளை களைதல் தான். அது சமூகத்தில் எந்த விதத்தில் எப்படி வந்தாலும், அது எந்த முரண்பாடாக இருந்தாலும், அதைக் களைந்து மக்கள் தமது விடுதலையை அடைதல் தான் மக்கள் போராட்டம். இதுதான் மக்களின் விடுதலையை அடிப்படையாக கொண்ட, விடுதலைப் போராட்டம். இது சக மனிதனை ஒடுக்காது. சக மனிதன் மீதான ஒடுக்குமுறைகளைக் களைய தானே முன்னின்று போராடும்.


இப்படி மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தம் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலையை அடைவதற்காக போராடுவதை அடிப்படையாக கொண்டது. இந்த மக்கள் போராட்டத்தை யாரும் குத்தகைக்கு எடுக்க முடியாது. தாம் விடுதலை பெற்றுத் தருவதாக, ஒரு குழு கூற முடியாது. மாறாக அந்த மக்கள், தமது சொந்த விடுதலைக்காக போராடுவது தான் மக்கள் போராட்டம். இப்படி மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தாம் தெரிவு செய்கின்ற எந்த வழியிலாவது தமது சொந்த விடுதலையை அடைதல் தான்.


தலைமைகள் என்பது, மக்கள் தமது போராட்டத்தின் தேவைக்கு ஏற்ப, உருவாக்கும் அமைப்பு வடிவங்கள் தான். மக்களின் சொந்த நலனுக்கு வெளியில், மக்கள் தலைமைகள் இருக்க முடியாது. இது மக்கள் போராட்டத்தில் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இப்படித்தான் மக்கள் தலைமைகள் உருவாகின்றது. சமூகம் எதிர் கொள்ளும் முரண்பாடுளை தீர்க்கின்ற போராட்டத்தில் தான், உண்மையான மக்கள் தலைமைகள் உருவாகின்றது.



சமூகத்துக்கு எதிரான முரண்பாடுகள் எவை?


மனித இனம், தனது சொந்த விடுதலையை நாடி நிற்கின்றது. இதை கோட்பாட்டு ரீதியாகவே, இந்த உலக ஒழுங்கு மறுக்கின்றது. மக்கள் தனது சொந்த விடுதலையை நாடுகின்றது என்றால், தனக்கு எதிரான அனைத்து முரண்பாட்டையும் களையக் கோருகின்றது. இதுவல்லாத விடுதலைப் போராட்டம் அல்லது தீர்வுகள் அல்லது மனித வாழ்வு என்பது, அந்த மக்களை ஓடுக்குவது தான்.


வர்க்கப் போராட்டமாக இருக்கலாம், தேசிய போராட்டமாக இருக்கலாம், சாதிப் போராட்டமாக இருக்கலாம், பெண்ணிய போராட்டமாக இருக்கலாம், இவை எதுவாக இருந்தாலும், இதில் ஒன்று சமூகத்துக்கும் சரி தனிமனிதனுக்கும் சரி முதன்மை முரண்பாடாக அமைவது எதார்த்தம். இந்த எதார்த்தம் என்பது இதில் இருந்து விடுவிக்கும் போராட்டமாக மாறும் போது, அது தன்னைச் சுற்றியுள்ள மக்களின் மொத்த விடுதலையை பற்றி கவனத்தில் கொள்ளுகின்றது. தனித்து விடுதலை அடைதல் சாத்தியமில்லை. இதைக் கவனத்தில் கொள்ளாது போராடினால், அது இயல்பாக மக்களையே ஒடுக்குகின்ற போராட்டமாக சீரழிந்து விடுகின்றது. எதை பிரதான முரண்பாடாக கருதியதோ, அது மக்களிள் விடுதலைக்குரிய ஒன்றாக இருப்பதை மறுக்கத் தொடங்குகின்றது. இதை உலகம் முழுக்க நாம் காணமுடியும்.



தமிழ் தேசியம் எப்படி பாசிசமானது?


தமிழ் தேசியம் தன் மீதான இனவொடுக்குமுறைக்கு எதிராக தேசிய முரண்பாட்டை களைய முற்பட்ட போது, தமிழ் மக்களின் உள்ளான சமூக முரண்பாட்டை களைய மறுத்ததன் மூலம் தான், அது தன்னைப் பாசிசமாக்கிக் கொண்டது. இதை நாம் புலிகள் மீது மட்டும் குறிப்பாக குற்றம்சாட்ட முற்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி முதல் சகல குழுக்களும் (ஒரு சில சிறு குழுக்களைத் தவிர) சமூக முரண்பாடுளை களைந்து, தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த மறுத்தன. மாறாக சமூக முரண்பாடுகளைப் பாதுகாத்து, சமூக பிளவுகளை விதைத்து, தமிழ் தேசியத்தையே சுடுகாடாக்கினர். மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிரியாக்கினர். புலிகளோ இதை பல பத்தாயிரம் சகோதாரப் படுகொலைகள் மூலம் அரங்கேற்றினர்.


தமிழ் தேசியத்தில் மக்களை ஜக்கியப்படுத்துவதற்கு பதில், மக்களைப் பிளந்து, மக்களையே ஈவிரக்கமின்றி கொன்றனர். மக்கள் போராட்டம் என்பதற்கான சகல அடிப்படைகளையும் தகர்த்தனர்.


தமிழ் மக்கள் ஒன்றுபட்டு பேரினவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டிய மக்கள் போராட்டம், ஒரு குழுவின் நலன்சார்ந்த போராட்டமாக குறுகிப்போனது. மக்கள் மத்தியில் உள்ள சமூக முரண்பாட்டைப் பயன்படுத்தி, குழுவின் குழுப் போராட்டமாக்கியது.


மறுபக்கத்தில் பேரினவாதம் தமிழ் மக்களை முழுவீச்சில் ஒடுக்கியது. ஆனால் தமிழ் மக்களின் மக்கள் போராட்டம், சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் ஒரு மக்கள் போராட்டமாக உருவாகவில்லை. ஒரு குழு நலன் சார்ந்த போராட்டமாய் சீரழிந்தும், படிப்படியாக மாபியாத்தன்மை பெற்றும் அது பாசிசமாகியது.


தமிழ் சமூகம் ஒன்றுபட்டு எழுந்து நிற்க வேண்டும் என்றால், தமிழ் சமூகத்தின் உள்ளான தனது சொந்த முரண்பாடுகளை களைந்து இருக்க வேண்டும். இதுதான், ஒன்றுபட்ட மக்கள் தேசியத்தையும், மக்கள் போராட்டத்தையும் உருவாக்கியிருக்கும்.


தமிழ் தேசியத்தின் சொந்தக் குரல் கூட இதுதான். மக்கள் அதைத் தான் விரும்பினர். இதனால் தான் அனைத்து இயக்கமும் இதை தமது தேசிய வேலைத்திட்டத்தில் பெயரளவிலாவது குறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இப்படி மக்களை தாம் முரண்பாடுகளைக் களைந்து ஒன்றுபடுத்துவதாக காட்டிக் கொண்ட இயக்கங்களின் தேசியம், மக்களின் முதுகிலேயே குத்தி ஏமாற்றினர்.


எத்தனை நாளைக்குத் தான் மக்களை ஏமாற்ற முடியும். விளைவு படிப்படியாக மக்களை எதிரியாக கருதி, அவர்களை ஒடுக்கத் தொடங்கினர். பின் அதுவே கொலைக் களமாகியது. இப்படி மக்களை ஒன்றுபடுத்த தடையாக இருந்த முரண்பாடுகளை களைய மறுத்து, அதே முரண்பாடுகளை மேலும் ஆழமான பிளவுகளாக விதைத்தனர். இப்படி மக்களின் ஐக்கியம், தேசியம் என்றவை கருவிலேயே சிதைக்கப்பட்டது. தனிமனித நலன் சாhந்து, குழு நலனாக அவை முதன்மை பெற்றறு. இது மக்களையே எதிரியாக்கியது. அனைத்தும் தனிமனிதர் சார்ந்த குழு நலனுக்கு உட்பட்டதாக பார்த்து, தேசியத்தையே அதற்கு ஏற்ப நலமடித்தனர்.


இப்படி ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்துக்கான, அரசியல் அடிப்படையே மறுதலிக்கப்பட்டு வந்தது. தமிழ் தேசியம் தமிழர்களை ஒன்றுபடுத்துவதற்கு பதில், அவர்களை பல கூறாக பிளந்தனர். இங்கு மக்கள் போராட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாது போனது.


குழுவின் நலன் முதன்மை அம்சமாகி, அதுவே போராட்டமாகியது. குழுநலன் முதன்மையாக, தமிழ் மக்கள் என்ற பொது அடையாளம் மறுப்புக்குள்ளானது. தனக்குள் இருந்த ஒடுக்குமுறைகளைக் களைய மறுத்தது. மாறாக பிளவை பாதுகாத்து, தனது சொந்த குழுநலனை முதன்மைப்படுத்தியது. தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதில், அவர்களைப் பிளந்தது. பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்தது. இப்படி மக்கள் போராட்டம் என்பது குழுப் போராட்டமாகி விட, மக்களை பலாத்காரமாக யுத்த முனையில் ஈடுபடுத்தி அழிக்கின்றது.



புலித் தேசியமோ, மக்கள் விரோதப் போராட்டமாகிவிட்டது


1. தமிழ் என்ற மொழி ஊடான தமிழ் தேசிய அடையாளத்தின் கீழ் வாழ்ந்த முஸ்லீம் மக்களை, தமிழ் தேசியத்தின் பெயரில் இயங்கிய குழுக்கள் என்ன செய்தனர்? முஸ்லீம் மற்றும் தமிழ் மக்கள் இடையேயான முரண்பாடுகளை எப்படிக் களைய முனைந்தனர். தமிழ் மொழி என்ற அடையாளம் மூலம் ஐக்கியத்தை வளர்த்தார்களா? அல்லது பிரித்தார்களா? இங்கு முஸ்லீம் மக்களையே தமிழ் தேசியத்துக்கு எதிரான எதிரியாக நிறுத்தியது. இதையே மக்கள் போராட்டம் என்று சொல்லுகின்றவர்களை, விவாத அரங்கிலும் நாம் காண்கின்றோம்.


2. எமது போராட்டம் பிரதேசவாத பிளவுகளை ஒழித்துக்கட்டியதா ? இல்லை. மாறாக அதை வளர்த்து. பிரதேசவாத பிளவுகளை ஆழமாக்கியது. மக்களை பிளந்து ஐக்கியத்தையே சிதறடித்துள்ளது. இந்த நிலையில் எப்படித் தான் மக்கள் போராட்டம் நடக்கும்.


3. தமிழ் தேசமே எழுந்து நிற்கும் வண்ணம், அது மக்கள் போராட்டமாக மாற வேண்டும் என்றால், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் குரல்களையும் தேசியம் உள்வாங்க வேண்டும். மக்கள் தமது கருத்துச் சுதந்திரத்தை, செயல் சுதந்திரத்தை, வாழ்வியல் சுதந்திரத்தை பேணும் ஐக்கியத்தை, எமது தேசியம் கொண்டிருந்ததா? இல்லை, எமது போராட்டம் அதை மறுத்தது. மாறாக சர்வாதிகார வடிவங்களில், பாசிச உள்ளடகத்தில் இதற்கு பதில் கொடுத்தது. தமிழ் தேசியத்தின் ஆன்மாவோ, குடலுடன் உருவப்பட்டது.


4. மக்கள் போராட்டம் எப்படி சகோதரப் படுகொலைகள் நடத்தும். ஒரு குழுவின் சர்வாதிகாரமே போராட்டமாகியதால், அது பல பத்தாயிரம் தமிழ் மக்களையே கொன்று குவித்தது. இதுவா மக்கள் போராட்டம்!


5. மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தாமே தீர்மானங்களை எடுக்கவும், வழிகாட்டவும் கூடிய வகையில், தமது சொந்த போராட்டமாக போராட்டத்தை வழிநடத்துவர். மாறாக ஒரு குழு தான் விரும்பியதை, மக்கள் மேல் திணிப்பதா மக்கள் போராட்டம்.


6. தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட சாதியத்தைப் பாருங்கள். நாங்கள் தமிழ் மக்கள் என்று கூறிக்கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் சாதிய பிளவை வைத்துக்கொண்டு, எப்படி ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த முடியும். நாம் இந்துகள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனியம், தனக்குள் தீண்டத்தகாதவனை உள்ளடக்குவது போல் தான் இதுவும். இப்படி எமது போராட்டம் இதைக் களைய மறுத்து, சாதிய பிளவுகளை வளர்க்கின்ற வகையில் தான், அந்த மக்களுக்கும் எதிராகவும் சீரழிந்தது.


7. தமிழ் மக்களின் போராட்டம் என்பது தேசியத்தை அடிப்படையாக கொண்டது. இந்த தேசியம் என்பது, தேசத்தை நிர்மாணம் செய்யும் தேசிய பொருளாதார கட்டுமானத்தை அடிப்படையாக கொண்டது. இப்படி தேசிய பொருளாதாரம் என்பது, தேசிய முதலாளிகளை ஆதாரமாக கொண்டது. இப்படி தேசிய முதலாளித்துவத்தையா, எமது போராட்டம் உருவாக்கியது? தேசியத்துக்கு எதிரான நிலபிரபுத்துவ, தரகு முதலாளித்துவ கட்டமைப்பை பாதுகாத்துக்கொண்டு, தேசிய முதலாளித்துவ கூறுகளை அழித்தொழித்தது. இப்படி இருக்க, இங்கு உழைக்கும் வர்க்கத்தின் மேலான ஒடுக்குமுறை சொல்லிமாளாது. இப்படி போராட்டம் என்பது மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கு பதில், இதற்கு எதிராகிப் போனது.


8. சக மனிதனின் உழைப்பை சதா சுரண்டித் தின்னும் ஒருவனுக்கும், அதை பறிகொடுத்தவனுக்கும் இடையில் எப்படி ஒன்றுபட்ட போராட்டம் எழும். இதை களைகின்ற போராட்டம் தான், மக்கள் போராட்டம்.இப்படி பல.இப்படி மக்களுக்கு எதிரான அரசியலை ஆணையில் வைத்துக் கொண்டு, மக்களைப் பிளந்தன் மூலம் மக்கள் போராட்டத்தை தடுத்தி நிறுத்தினர். ஒரு குழுவின் பாசிச மாபியாத்தன்மையை மக்கள் போராட்டம் என்று சொல்லுகின்றனர். இப்படி எதிர்புரட்சியையே புரட்சி என்கின்ற மாயை நீண்டகாலம் மக்கள் முன் நீடிப்பதில்லை. அதனால் தான் மக்கள், தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படுகின்றனர்.



பி.இரயாகரன்07.05.2008



மேலும் பல விரிவான கட்டுரைகளுக்கு தமிழரங்கம் இணையத்தளம் செல்க

Thursday, May 1, 2008

"நேபாளம்: வீழ்ந்தது மன்னராட்சி! மலர்கிறது மக்களாட்சி!!" - புதிய ஜனநாயகம் இதழ் மே'2008













நேபாளம் : வீழ்ந்தது முடியாட்சி! மலர்கிறது மக்களாட்சி!---------அட்டைப்பட சிறப்புக்கட்டுரை

நேபாளம்: இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!
--------- தேர்தல் முறைகேடுகளோ, வன்முறைகளோ இன்றி நடந்து முடிந்துள்ள நேபாளத் தேர்தல், அமெரிக்க - இந்தியச் சதிகாரர்களின் முகங்களில் கரியைப் பூசிவிட்டது.

தனியார்மயம்... தாராளமயம்... உலகமயம்... போதைமயம்!
---------- சென்னையில் பி.பி.ஒ., கால் செண்டர் நிறுவனங்கள் பெருகுவதற்கு ஏற்ப, போதை மருந்துப் பழக்கமும் அதிகரித்து வருகிறது.

விலைவாசி உயர்வு: தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்!
---------- தனியார்மயத்திற்கு ஆதரவாக இருக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கு, விலைவாசி உயர்வை எதிர்க்கும் அருகதை கிடையாது.

தில்லைப் போராட்டம்: "தமிழர் கண்ணோட்ட"த்தின் அற்பவாதம்
---------- தில்லைப் போராட்டத்தில் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் அடைந்துள்ள வெற்றியை பூசி மெழுகும் "தமிழர் கண்ணோட்ட"த்தின் அற்பத்தனமான முயற்சி சந்தி சிரிக்கிறது.

மக்கள் சக்தி எழுந்தது! சிறப்புப் பொருளாதார மண்டலம் வீழ்ந்தது!
---------- சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நாட்டை வீட்டே துரத்தியடிக்க முடியும் என்பதற்கு கோவா மக்களின் போராட்டம் முன்னுதாரணமாக விளங்குகிறது.

தீவிரவாத ஒழிப்பும் போலீசின் அத்துமீறல்களும்
---------- குண்டு வெடிப்புகள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் அப்பாவி முசுலீம்கள் சிக்கவைக்கப்பட்டிருப்பது அம்பலமாகி வருகிறது.

தமிழக விவசாயத் துறை: பன்னாட்டு நிறுவனங்களின் தரகன்!
--------- "வேளாண் தொழில்நூட்ப மேலாண்மை முகமை" என்ற திட்டம் தமிழக விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்க உதவுகிறது.

கொசவோ: தேசிய இன விடுதலையா? ஏகாதிபத்தியங்களின் ஏவலாட்சியா?
--------- செர்பிய இனவெறி ஆதிக்கத்திலிருந்து மீள, அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தயவில் தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டுள்ள கொசாவோவின் விடுதலை உண்மையானதா? ஊனமானதா?

திபெத்திய கலகம்: தேசிய இனவிடுதலைப் போரா?
---------- கடந்த மார்ச் இறுதியில் திபெத்தில் நடந்த கலகம், சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அல்ல, சீன ஆட்சியாளர்கள் மீதான திபெத்திய மக்களின் அதிருப்தியை பிற்போக்கு சக்திகள் அறுவடை செய்து கொண்டு ஆதாயமடைகின்றன.

பசுவின் புனிதம் ஓட்டுப்பொறுக்கும் தந்திரம்
---------- பா.ஜ.க கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற இந்து மதவெறியைத் தூண்டி விடுகிறது.

சி.ஐ.டி.யு: தொழிற்சங்கமா? குண்டர் படையா?

தீண்டாமைச் சுவர்: தமிழகத்தின் இழிவு


புதிய ஜனநாயகம்
மார்க்சிய - லெனினிய அரசியல் ஏடு
தொகுதி 23
இதழ் 7
மே2008
விலை ரூ7


புதிய ஜனநாயகம்,
எண்: 110, இரண்டாம் தளம்,
63,என்.எஸ்.கே சாலை(அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
தொலைபேசி: 94446 32561


நன்றி: புத்தகப் பிரியன் வலைதளம்.