Thursday, March 13, 2008

பால‌ஸ்தீனிய‌ன் நான், என்னில் வாழ்கிற‌து என் தேச‌ம்....

யாரும் பறித்துவிடமுடியாது என்னிடமிருந்து

என் அடையாளத்தை.

ஏனெனில் அது என்னுடையது.


நான் பாலஸ்தீனியன்.

என் மண்ணில் பெருகும் ஆறு நான்.

குழப்பங்களிலிருந்தும் அழிவுகளிலிருந்தும்

திமிறி நிமிர்ந்து நிற்கும் கம்பீரமான மலை நான்.


என் வளமை சூழ் பள்ளத்தாக்குகளில் ஒளிர்ந்து

என் வறண்ட பாலைகளை வாட்டும்

காலை சூரியனை எதிர்கொண்டு

அழைக்கிறேன் நான்.


இரத்தக்கறை படிந்த் என் மலைகளில்

முகிழ்க்கும்

செந்நிறக் கஞ்சாப்பூவும் மஞ்சள் மலரும் நான்.

என் தாழ்வாரங்களில் எதிரொளித்து

என் இருப்பின் ஒவ்வோர் இழையிலும் அதிரும்

சுதந்திரப் போர் முழக்கம் நான்.


பாலஸ்தீனியன் நான்.
ஆரஞ்சுத் தோட்டங்கள் எசுமிச்சை மலர்கள்

சுதந்திரத்தை ரீங்கரிக்கும் காட்டுத்தேனீக்கள்

இவற்றின் பெருமைமிகு உரிமையாளன் நான்.


நான் தான் அந்த பாலஸ்தீனியன்.

இஸ்ரேல் எனும் கோலியாத்தை எதிர்கொண்டு

கல் ஏந்தி நிற்கும் டேவிட் நான்.

உண்மை என் பக்கம் கடவுள் என் பக்கம்

அச்சமில்லாதவன் நான்.


இறப்பேனாகில்,

தேவதைகளின் கீத‌ம் என்னைக் கவுரவிக்கும்

பிறிதொரு நாள்
நீண்டு காத்திருக்கும் என் க‌ர‌ங்க‌ளைப் ப‌ற்றி

என்னுட‌ன் சொர்க்க‌த்தில் இணைவ‌ர்

என் பெற்றோர்.


க‌ண்ணீர் நான்.

ப‌றிகொடுத்த‌ பிள்ளைகளை எண்ணி

விசும்பும் தாய்மார்க‌ளின் க‌ண்ணீர் நான்.

எம்மைத் துன்புறுத்தி ந‌சுக்குவோர்

காண‌விருக்கும் பேர‌ழிவை

முன்ன‌றிந்து சொன்ன‌ தீர்க்க‌த‌ரிசிக‌ளின்

கால‌டித்த‌ன‌ம் நான்.


என் க‌ட‌ற்ப‌ர‌ப்பின் மீது சுத‌ந்திர‌மாய் நீந்தும்

புறாக்க‌ளும் இசைப்ப‌ற‌வைக‌ளும்

க‌ட‌ல்நாரைக‌ளும் என் சோத‌ர‌ர்க‌ள்.

நான் பால‌ஸ்தீனிய‌ன்,

என‌வே நான்.


இழிவுசெய்து என்னைக் கொல்ல‌வ‌ரும்

டாங்கிக‌ள், துப்பாக்கிக‌ள், குண்டுக‌ள்

எதுவும் யாரும்,

என் அடையாள‌த்தைப் ப‌றிக்க‌வே முடியாது.

என்னில் வாழ்கிற‌து என் தேச‌ம்.


சுத‌ந்திர‌த்தின் முழ‌க்க‌ம் நான்.

எதைவேண்டுமானாலும்

அவ‌ர்க‌ள் ப‌றித்துக் கொள்ள‌ட்டும்,

என் அடையாள‌த்தைப் ப‌றிக்க‌வே முடியாது.

என் க‌வுர‌வ‌த்தை ப‌றிக்க‌முடியாது.

பால‌ஸ்தீனிய‌ன் நான்.


இ. யாகி
ந‌ன்றி 'புதிய‌ க‌லாச்சார‌ம்'

0 comments: