Sunday, March 30, 2008

திருக்கடையூர் புராணம் அல்லது 60 வது கண்டம்.

சித்தயோகம் அமிர்தயோகம் கூடிவர
ஜெட் விமானம் காத்திருக்க‌
வந்தேறியது மனிதக்கோளாறு.
பார்ப்பனக் கொழுப்பைச் சீரணிக்க முடியாமல் -
பாவம்
விமானத்திற்கு இயந்திரக் கோளாறு!


நல்லவேளை...
நடுவானில் எமனோடு போயிருக்க
வெண்டியவர்களை
மீட்டுக் காத்தருளி
விமானிக்கு ஆயுள் விருத்தியளித்த‌து
ஆயில் எஞ்ஜின்.
ஓ.பன்னீர்செல்வம் போல் உணர்ச்சியற்று
எந்திரமாய் இயங்கியதால்
அம்பாளின் சாபத்தீக்கு ஆளாகி
எரியாமல் தப்பித்தது ஏர் சர்வீஸ் விமானம்.


தமிழகத்தின் 'சகுனத்தடை' தரையிரக்கப்பட்டது
பத்திரமாய்.
வளிமண்டலத்திலேறிய தூசு துடைக்கப்பட்டதால் -
வழிமாறீ சாலை வழியே ஓடியது சாக்கடை.


ஒரே பரபரப்பு!
இரண்டு லோடு விசேடப் பொருட்கள்
ஒரு லோடு போயஸ் குண்டுடன்.....
திண்டிவனம் வழியே தீவிரவாதிகளின் ஊடுருவல்!
தமிழகத்தைக் கலக்கும் பார்ப்பனத் தீவிரவாதி
திருக்கடையூர் வருகை!


"பாதம் பணிந்தேன்....போதை தெளிந்தேன்...
பாவி, உனக்காகவே பட்டை அடித்தேன்....
கோயில் உனது! குடி உனது - என் ஆவியும் உனது!
ஆட்கொள்ள மாட்டாயோ!" - தருமை ஆதீனம்
உடுக்கெடுக்க.... பயந்து போன பிச்சைக்காரர்கள்
ஊரைவிட்டே ஓட்டம்!


பலத்த பாதுகாப்பு.......
துப்பாக்கிகளுடன் ஆயுதக் குழுக்கள் -
தர்ப்பைப் புல்லுடன் ஆரியக் குருக்கள்!
சேரப்போகும் மனித உணர்ச்சியற்ற தோள்கள் கண்டு
நடுங்கின பூக்கள்!
வேதபாஷையின் விளங்காத கலவரத்தால்
ஓடி ஒடுங்கின வவ்வால்கள்!
யாகக் குண்டம் புகை கிளப்ப.....
புற‌ப்பட்டது பூதம்.


கோ பூஜைக்கு வந்த ப‌சு குலை நடுங்கியது.
கறந்து விடுமோ கொள்ளைக்கரம் என்றஞ்சி
காம்புகள் ஒளித்து, மடிதனை மறைத்த‌து.


பார்ப்பன வெறி முகம்
பார்த்துத் தொலைத்தால்
மதம் பிடித்துவிடுமோ என்றஞ்சி
கலங்கி நின்றது கஜ பூஜைக்கு வந்த யானை!


பச்சைப் பட்டும் ஒட்டியாணமும் பூட்டி
இச்சை கொண்ட தேவியை
இழுத்துச் சென்று
இன்னுமொரு தோழியாக‌
மாலை மாற்றிவிட்டால்.....
என் செய்வேன் எனப் படாத பாடுபட்டு
அபிராமியை மீட்டார்
அமிர்தகடேஸ்வரர்.


அடித்த கொள்ளைக்கும்......
குடித்த இரத்தத்திற்கும்....
அறுபது வயசு பத்தாதாம்,
"ஆயுளைத்தா" என
ஆரிய பூதம் வருகிறது.


செத்துப் பிழைக்கும் தமிழகமே
அடுத்த குறி உனக்குத்தான்!



துரை. சண்முகம்.
புதிய கலாச்சாரம் மார்ச்'08 இதழில் வெளியானது.

0 comments: