Friday, February 26, 2010

உ.ரா.வரதராசனின் மரணம்: சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும், பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்!! - பாகம் ஒன்று.

சி.பி.எம். கட்சியின் உயர்மட்ட்த் தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் ரிசர்வ் வங்கி அதிகாரியுமான உ.ரா.வரதராசன் மாயமாகி பின் மரணமடைந்த செய்திகள் கடந்த பத்துநாட்களுக்கும்மேலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவர் இரண்டு கடிதங்களை எழுதிவைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு, தேடுதல் நிலையில் இருந்தபோதே, கட்சியின் உயர்மட்ட பதவிகள் முதல் அடிப்படை உறுப்பினர் பதவி வரை அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து போரூர் ஏரியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட உடல் உ.ரா.வரதராசனுடையதுதான் என்று அவரது மனைவி மற்றும் கட்சி சகாக்களால் அடையாளம் காட்டப்பட்ட்து. இதனை மேலும் ஊர்ஜிதப்படுத்தும்வகையில் அறிவியல் பூர்வமான ஆதாரம் தேவை, அதாவது கைரேகை ஆய்வு, டி.என்.ஏ.ஆய்வு போன்றவற்றின் மூலம் உறுதிப்படுதவேண்டும் என்று அக்கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்ட்து. உ.ரா.வரதராசன் மாயமானதற்கும் மரணமடைந்ததாக அறியப்பட்ட்தற்கும் இடைப்பட்ட காலத்தில், அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ஜி.ராமகிருஷ்ணன் தான் மேற்கண்ட வேண்டுகோளை போலீசுக்கு வைத்தார்.

அதற்கு மறுநாளே, அமெரிக்க தூதரகத்தில் முன்னரே பதிவு செய்யப்பட்டு வைக்கைப்பட்டிருந்த உ.ரா.வரதராசனின் கைரேகையினைப் பெற்று, போலீசு அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. ஒருவழியாக எல்லாம் முடிவுக்கு வந்தாகிவிட்டது. சுமார் 35ஆண்டுகாலம் அக்கட்சியின் முழுநேர ஊழியராக வேலைபார்த்து, உயரிய பல பதவிகளிலும் இருந்த அவரது மரணம், வெறும் தற்கொலைதான் என்று அறுதியிட்டு அறிவிக்கப்படாத குறையாக, ஃபைலை மூடியாகிவிட்டது. இனி ‘செவ்வணக்கம்’ செலுத்தி அடக்கம் செய்யப்படும் வேலைதான் மிச்சமிருக்கிறது என்கிற நிலை. கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், கீழ்மட்ட்டத் தோழர்கள் மத்தியில், இது தற்கொலையா கொலையா என்கிற விவாதமும், அதனை அறியவேண்டிய கட்டாயமும் இருப்பதாகச் சற்றே சலசலப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏரியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு அவர் பலவீனமானவரும் அல்ல, ஒரு ஆள் விழுந்தவுடன் செத்துவிடுவதற்கு போரூர் ஏரியும், மற்ற நீர்த்தேக்கங்களைப் போல் அபாயமானதுமல்ல, என்பது தோழர்களின் கருத்து.


மூன்றுமாத்த்திற்கு ஒருமுறை கன்னியாக்குமரி கடலில் சென்று, விவேகானந்தர் பாறைக்கு நீந்தியே சென்று திரும்புவதை வழக்கமாக்க் கொண்டவர் அவர், இந்த சிறு ஏரி நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார் என்பதை ஏற்கமுடியவில்லை என்று நக்கீரன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்திருக்கிறார், உ.ரா.வரதராசனின் சகோதரி பவானி. அவர் வசித்துவந்த அண்ணாநகர் பகுதியை ஒட்டிய ஷெனாய்நகர் கார்ப்பரேஷன் நீச்சல் குளத்தில் அன்றாடம் 1000 மீட்டர் நீந்துகின்ற பயிற்சியுடையவர் உ.ரா.வரதராசன் என்று அவருக்கு நெருக்கமான தோழர்கள், அதே நக்கீரன் செய்தியாளரிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்ற கருத்துக்கள், அதாவது அவரது மரணம் அவரது குடும்பத்தினரும், கட்சித் தலைமையும் அறிவித்த்தைப் போன்ற தற்கொலையால் நேர்ந்ததா, அல்லது அவரைக் கொலைசெய்து ஏரியில் வீசியிருக்க வாய்ப்பிருக்கிறதா, என்கிற அடிப்படையில்தான் பெரும்பான்மையான தோழர்கள் மத்தியில் பேச்சு நடைபெற்றுவருகிறது. அவர் மாயமான ஒரு வாரத்திற்குள்ளாகவே உயிரற்ற உடலாக்க் கண்டெடுக்கப்பட்ட்துபோல், இதன் பின்னணியில் ஏராளமான திரைமறைவு செய்திகள் அடுத்தடுத்து வெளிவந்தாலும் ஆச்சரியப்ப்டுவதற்கில்லை.


நம்மைப் பொருத்தவரை அவரது மரணம் குறித்த ஆய்வு கொலையா தற்கொலையா என்கிற கோணத்தில் நட்த்தப்படுவதைவிட, அது எதுவாகிலும் அதற்கான பொறுப்பு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் முழுநேரமாகப் பணியாற்றிய கட்சிக்கு உண்டு என்கிற கோணத்தில் ஆய்வு செய்தல் அவசியம் என்று கருதுகிறேன். ஒருவேளை இது தற்கொலைதான் என்று ஏற்கும் பட்சத்தில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் அகில இந்திய செயலாளராக இருந்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தலைமைப் பீடத்தில் இருந்த ஒருவர், குடும்பத்தில் நிகழும் சிறுசிறு அற்ப சச்சரவுகளுக்காக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு பலவீனமானவராக இருக்கமுடியுமா? உயர்மட்டத் தலைவரே இப்படியென்றால் அவருக்குக் கீழுள்ளவர்களின் நிலைமை?! என்கிற கேள்வி ஒருபுறம் எழுகிறது. மேலும், அவரது மனைவி சரஸ்வதி சுட்டிக்காட்டியதைப் போல, கட்சியில் அவரை நடத்தியவிதத்தையோ அல்லது அவருக்கு எதிரான கோஷ்டி அரசியல் நடைமுறைகளோ, பதவிச்சண்டைகளோதான் அவரது தற்கொலைக்குக் காரணமா, என்கிற கேள்வி மறுபுறமும் இயல்பாகவே எழுகிறது.


ஈழப்போராட்டம் உச்சத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கைக்கூலி ஊடகங்களால் தமிழகம் ‘அமைதிப்பூங்கா’வாக இருக்கவைக்கப்பட்டிருந்த்து. அந்த ‘அமைதி’யைக் குலைக்கவேண்டும் என்கிற முடிவோடு மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து, எரிந்து தீக்கிரையாகிப்போன தனது உடலை ஒரு துருப்புச்சீட்டாக மாற்றி போராட்ட்த்தைத் தொடரச் சொல்லி அறைகூவல் விடுத்து மாண்டுபோனார். அந்த முடிவு தான் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல, தமிழக மக்களின் அமைதிதான் தன்னை இப்படி ஒருமுடிவெடுக்க்க் காரணமாக அமைந்த்து என்று தனது மரணசாசனத்தில் அறிவித்திருந்தார், முத்துக்குமார். அவரது இறுதி ஊர்வலம் லட்சக்கணக்கான மக்கள் திரளுடன் நடைபெற்றது. அந்த லட்சக்கணக்கானோரையும் அங்கே திரட்டியது வேறு யாருமல்ல அவர் தன்மீது தீவைத்துக் கொள்வதற்கு முன் வீசியெறிந்த துண்டறிக்கைதான் திரட்டியது. அந்த லட்சக்கணக்கானோரில் யாரும் முத்துக்குமாரின் முடிவை, அவர் தன்னைத் தீவைத்துக்கொண்டு மாண்டுபோனதை ஏற்றுக்கொண்டு அங்கு வந்து திரளவில்லை, அவர் தனது மரணத்தின்மூலம் அறிவித்த செய்திகளையும் போராட வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகத்தான் அங்கு திரண்டிருந்தனர். மாவீரன் முத்துக்குமாருடைய அந்த அளப்பரிய தியாகத்தை, வெறும் தற்கொலை என்று கொச்சைப்படுத்தியதோடு, அவரது மரணம் ஏற்படுத்திய எழுச்சியை இருட்ட்டிப்பு செய்து, “இளைஞர் தற்கொலை” என்கிற அடைமொழியுடன் சிறுபெட்டி செய்தியாக, செய்தி வெளியிட்ட்து சி.பி.எம். கட்சியின் தீக்கதிர் நாளேடு. அவரது தியாகம் குறித்து பேசுபவர்கள் எல்லோரும் இளைஞர்களை தவறாக வழிநட்த்துவதாகவும் ஊளையிட்டது சி.பி.எம்.மின் வலைதளமான சந்திப்பு.


முத்துக்குமாரின் தியாகத்தை, சாதாரண தற்கொலையாக உருவகப்படுத்தி சிறுமைபடுத்திய சி.பி.எம். கட்சி, தனது கட்சியின் உயர்மட்ட்த் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணத்தை ஏதோ பெரிய வர்க்கப்போராட்டத்தில் நேர்ந்த்தைப் போன்று ஜோடிக்கிறது. அற்பகாரணங்களாலும், கோஷ்டி மோதல்களாலும் நேர்ந்த அவரது மரணத்துக்கு “செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம்” செலுத்துவதாகப் பிதற்றுகிறது. டாட்டாவுக்கும், சலீமுக்கும், ஜிண்டாலுக்கும் கால் மிதியடியாக செங்கொடியை விரித்துவைத்த காம்ரேடுகள், திடீரென்று சென்னையில் ‘தற்கொலை’ செய்துகொண்ட வரதராசனுக்காகச் சற்றுத் தாழ்த்துவதாகச் சொல்வதை ஏளனம் செய்யாமல் தவிர்க்கமுடியவில்லை.


அவரது இறுதி அஞ்சலிக்கூட்ட்த்தில் பேசிய, அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு (பொலிட்பீரோ) உறுப்பினரான இன்னொரு வரதராஜன் (கே.வரதராஜன்), “உ.ரா.வரதராஜன் மரணத்திலிருந்து நமக்கு எதிராக எது கிடைக்கும் என்று அலையும் நபர்களை நாம் அரசியல் உறுதியுடன் எதிர்கொள்ளவேண்டும்” என்று அறிவித்ததன்மூலம் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல எதையோ சொல்லிவைத்தார். அவரது மரணத்திற்கு யாராவது பொறுப்பேற்கவேண்டும் என்கிற மன உளைச்சலில், கட்சி அவரது குடும்ப்ப் பிரச்சினையையும் அவரது மனைவியையும் பொறுப்பாளியாக்கி தான் ஒதுங்கிக்கொள்ளப்பார்க்கிறது. பதிலுக்கு, நீண்டகால கட்சி உறுப்பினரும், அக்கட்சியின் மாதர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளில் ஒருவருமான அவரது மனைவியோ, அவரது மரணத்திற்கு முழுபொறுப்பு கட்சிதான், என்று அறிவிக்கிறார். எந்தவிதமான சுயவிமர்சனத்திற்கும் இடமின்றி, இந்த போட்டா போட்டி சிறிதும் நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறது.


சி.பி.எம். கட்சியின் தமிழ்மாநில மாநாடு சென்றமுறை கோவையில் நடைபெற்றபோது, மாநிலச் செயலாளராக நான் போட்டியிடுவேன், என்று பல்வேறு தடைகளுக்கு மத்தியில் உ.ரா.வரதராசன் அறிவித்திருக்கிறார். அவரது அந்த அறிவிப்பை அதிர்ச்சியாக உள்வாங்கிய எதிர்கோஷ்டியைச் சார்ந்த பிற தலைவர்கள், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பழைய மாநிலச் செயலாளரே மீண்டும் பொறுப்பில் தொடருவார் என்று அறிவித்து, அந்த கோஷ்டி சண்டையை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவந்தனர். அம்மோதலைத் தொடர்ந்து மத்தியக் குழுவில் அவருக்கு எதிராக பல்வேறு விஷயங்கள் கிளப்ப்ப்பட்டு துளைத்தெடுக்கப்பட்டார். பிரமிளா என்கிற பெண்ணுடன் அவருக்கிருந்த தவறான தொடர்பு புகாராக மத்தியக்குழுவால் விசாரிக்கப்பட்டு, சென்ற நவம்பர் மாதம் உ.ரா.வரதராசனிடம் விளக்கம் கோரப்பட்ட்து. எதிர்கோஷ்டி யோக்கியவான்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தன்னை வசமாகச் சிக்கவைத்த நிலையில் பின்வாங்கவும் முன்னேறவும் முடியாத வரதராசன், குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாத நிலையில் தனது விளக்கக் கடித்தைக் கொடுத்தார். அதனையடுத்து கடந்த 6-பிப்’2010 –ல் நடந்த மத்தியக்குழு கூட்டத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு பொறுப்புகளிலிருந்து மெல்ல விடுவிக்கப்பட்டார்.

இந்த அளவிற்கு கட்டுப்பாடும் கண்ணியமும் நிறைந்த கட்சியா சி.பி.எம். என்கிற கேள்வி எழலாம். முப்பதுவருஷங்களுக்கும் மேலாக கூடவே இருந்த ஒருவர், ஏதோ முந்தாநேத்துதான் கெட்டுவிட்டார் என்பதைப்போல, மத்தியக்குழு தனது சின்சியாரிட்டியைக் காட்டிக்கொண்டது. ஒழுக்க சீலர்கள் மட்டுமே நிரம்பிய கட்சியில் உ.ரா.வரதராசன் தான் தவறான மனிதராக இருந்து, கட்சிக்கு அவப்பெயரைத் தேடித்தருகிறார், என்பாத ஜோடிக்கப்பட்டது. ஆனால், அது அப்படியில்லை என்பதை உணர்த்தும் வகையில், வேறு சில தோழர்களின் தவறான நடவடிக்கையும் அவர்களிடத்தில் கட்சி நடந்துகொண்ட விதத்தையும் தேவைகருதி இங்கே குறிப்பிடுகிறேன்.

ஒன்று :

கடலூர் மாவட்ட்த்தைச் சேர்ந்த சித்ரா என்கிற மாதர்சங்கத்தைச் சார்ந்த தோழருக்கும் அவரது முறைப்பையனும் டைஃபி (dyfi) என்கிற சி.பி.எம்.மின் இளைஞர் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளருமான கார்த்தி என்கிற நபருக்கும், புரோகிதப்பார்ப்பான் முன்னிலையில் தாலிகட்டியும், பிறகு கட்சியின் தலைமைப் புரோகிதர்கள் புடைசூழவும் ‘புரட்சி’த் திருமணம் செய்துவைக்கப்பட்ட்து. அத்திருமணம் நடைபெற்று சரியாக ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் அதே மாவட்ட்த்தைச் சேர்ந்த சிதம்பரத்தில் அதே கார்த்திக்குக்கு வேறொரு பெண்ணுடன் இரண்டாவது திருமணமும் கட்சித் தலைவர்களின் முன்னிலையில் நட்த்திவைக்கப்பட்டது. தான் பெரிதும் மதிப்பு வைத்திருந்த தனது கட்சியின் தலைவர்களாலேயே தனது கணவனுக்கு இரண்டாவது திருமணம் நட்த்திவைக்கப்பட்ட செய்தியறிந்து கொதிப்படைந்த சித்ரா, மாதர் சங்கத்தில் முறையிட்டார். ஏமாற்றுக்காரனான சித்ராவின் கணவனுக்கு எதிராக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகமட்டும் உறுதியளித்து, அந்த அக்கிரமத்தில் பங்கெடுத்த தலைவர்களைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்ட்து அக்கட்சியின் மாநிலத்தலைமை. இருப்பினும் தனக்காதரவான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்தப் பெண் சமாதானப்படுத்தப்பட்டதுதான் மிச்சம்.

இரண்டு :

சென்னையில் உள்ள சி.ஐ.டி.யூ. மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்த நபர் (கிட்ட்தட்ட 50 வயதுகளைக் கடந்த நிலையில்) வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். அக்கட்சியின் உறுப்பினரும், ரிசர்வ் பேங்க் ஊழியருமான அவரது மனைவிதான் கட்சித் தலைமையிடம் இந்தப் புகாரைக் கொடுத்தார். காம்ரேடுகள் உடனடியாகப் பொங்கியெழுந்து, தமது கட்சியின் கடமையையும்! கண்ணியத்தையும்!! கட்டுப்பாட்டையும்!!! அவருக்கு உணர்த்துவதற்காகச் சென்றார்கள் தலைவர்கள், “நான் கட்சியில் இருக்கவேண்டுமா, வேண்டாமா...” என்று ஒரேயொரு எதிர்க்கேள்வி எழுப்பினார் சம்பந்தப்பட்ட அந்த நபர். இந்த ‘சாதாரண’ குடும்ப்ப் பிரச்சினைக்காக லட்சக்கணக்கில் கட்சிக்கு நிதிதிரட்டித் தரும், அந்த பொண்முடையிடும் வாத்தை அறுப்பதற்கு மனமின்றி, கடமையையும் கண்ணியத்தையும் அவர் காலடியில் சமர்ப்பித்துவிட்டு கட்டுப்பாட்டுடன் திரும்பினார்கள், தலைவர்கள்.


இதுதான் இவர்களது ஒழுக்கமுறைகளின் லட்சனம். இவர்களது போலியான கட்டுப்பாட்டுக் கோவன்ங்கள் அறுந்து தொங்கும் பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்ட முடியும், பதிவின் நீளம் கருதி சுருக்கவேண்டியுள்ளது. புரட்சி பேசி கட்சி வளர்த்த சி.பி.எம். இதுபோன்ற சீரழிவுக்குச் சென்றதற்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் காரணமல்ல, அக்கட்சியின் அரசியலற்ற பிழைப்புவாத நடைமுறைகள்தான் முதன்மையான காரணமாக இருக்கிறது.


தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறும் அரசியல் ஆபாசங்களைக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவர்கள் குடும்பவாழ்க்கையிலும் ஆபாசமாக நடந்துகொள்வதுவும், அதனை ஏதோ சம்பந்தப்பட்ட தனிநபர்களின் பிரச்சினைபோல வெட்கமின்றிச் சித்தரித்துவிட்டு விலகிச்செல்வதுவும், அக்கட்சியின் மோசடியான நடைமுறையின் நிதர்சனமான அடையாளங்கள். ஆனால், ஒழுக்கத்திலும் நேர்மையிலும் அக்கட்சியின் தலைவர்களுக்கே வழிகாட்டும் அளவிற்கு நேர்மையான அணிகள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் உட்கட்சி போராட்டத்தின் மூலம் எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம் என்று நம்பும் அளவுக்கு அப்பாவிகளாகவும், ஏமாளிகளாகவும் இருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க என்று தேர்தலுக்குத் தேர்தல் அணிமாற்றமும், அதற்கான தலைமையின் வியாக்கியான்ங்களும் அறிவிக்கப்படும்போது, அதனை எதிர்த்து நிற்கும் அணிகள், தலைமையின் இப்படிப்பட்ட இழிவான அரசியல் நடைமுறைகளில் சிறு துறும்பைக்கூட அசைக்கமுடியாமல் ஒவ்வொருமுறையும் தோற்கிறார்கள்.


சமூக நெருக்கடியிலும் சாதிய ஒடுக்குமுறையிலும் பாதிக்கப்பட்டு, அக்கட்சி சமூக விடுதலைக்காக போராடக்கூடிய கட்சி என்கிற எதிர்ப்பர்ப்போடு, கட்சிக்குள் வருகின்ற நபர்களின் சமூக உணர்ச்சிகள் மழுங்கடிக்கப்பட்டு, வெறும் மந்தைகளாகப் பராமரிக்கப்படுகிறார்கள். கந்துவட்டி, கட்டைப்பஞ்சாயத்து கும்பலும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும் கட்சிக்குள் ’கௌரவமாக’ நுழைந்து ஏனைய சாதாரன ஊழியர்களைப் பின்தள்ளுகிறார்கள். பல்வேறு இடங்களில், அரசு மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களில் இடம்பெற்றுள்ள ‘மேன் மக்களுக்கு’ சேவையாற்றுவதற்கு ஆட்டோ ஊழியர்கள், சுமைப்பணி ஊழியர்கள் பணிக்கப்படுகிறார்கள். இவற்றிலிருந்து, பொதுவாக சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடு கட்சிக்குள்ளேயே நிறைந்திருப்பது அம்பலமாகிறது. பாட்டாளி வர்க்கத்தினரை அணிதிரட்டி வர்க்கமற்ற சமூகத்தைப் படைக்கவேண்டிய கம்யூனிஸ்டு கட்சி, தனது கட்சிக்குள்ளேயே வர்க்கபேதங்களைப் பராமரிப்பது அதன் போலித்தனத்துக்கு சான்றாக அமைகிறது.

எனவே, கட்டுப்பாடு, ஒழுக்கநெறி பற்றியெல்லாம் வாய்கிழிய பேசுவது, எஞ்சியிருக்கும் நேர்மையான அணிகளை ஏமாற்றித் தக்கவைப்பதற்கான முயற்சிதானேயொழிய வேறொன்றுமில்லை. உண்மையில், அ.தி.மு.க.வில் ஜெ விதிக்கும் பெயரளவுக்கான கட்டுப்பாடுகூட சி.பி.எம்.மில் கிடையாது. உ.ரா.வரதராஜன் விஷயத்தில், அக்கட்சியின் தலைமை கடமை தவறாமல் நடந்துகொண்டது, அவர்கள் மத்தியில் நிலவிய பதவிப் பூசலின் விளைவுதானேயொழிய வேறொரு வெங்காயமுமில்லை. உண்மையில் உ.ரா.வரதராஜனின் நெறிதவறிய செயல் அவரது எதிர்கோஷ்டிக்குத்தான் ஆகப் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.


பொதுவாக கட்சியின் பொலிட்பீரோ, அதற்கடுத்த நிலையிலுள்ள மத்தியக் குழு போன்ற உயர்மட்டங்களில், சமூகப் பிரச்சினைகள்தான் அலசி ஆராயப்படுவதாக நம்பவைக்கப்பட்டிருந்த கீழ்மட்ட அணிகளுக்கு, அங்கே இதுபோன்ற கட்டைப் பஞ்சாயத்துகளும், பதவிக்கான குழாயடி சண்டைகளும்தான் நடைபெறுகிறது என்கிற இச்செய்தி ஆச்சர்யமூட்டுபவையாகவும் அதிர்ச்சியளிப்பதாவதும் இருக்கும். இருப்பினும் அச்சுதானந்தனுக்கும் பினராயி விஜயனுக்கும் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் சக்களத்தி சண்டைகள் குறித்த செய்திகளை மீண்டுமொருமுறை படித்துப்பார்த்தால் சற்று தெளிவு கிடைக்கும்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் உழைப்பாளி மக்களின் விடுதலைக்காகப் போராடவேண்டிய ஒரு கட்சியில் கோஷ்டி சண்டைகள், பதவிச் சண்டைகள் நிகழ்ந்தால் அக்கட்சி உருப்படுமா? அக்கட்சியினை அட்டியின்றி ஏற்றுக்கொண்டு நாம் பாட்டாளிவர்க்க விடியலைச் சாதிக்கமுடியுமா?

பொய்யும் பித்தலாட்டமும் போலித்தனமும் நிறைந்துள்ள அக்கட்சியை, ஏனைய ஓட்டுக்கட்சிகளையே விஞ்சுமளவிற்கு மோசடிகள் நிறைந்த சமூக பாசிஸ்ட் கட்சியாக சீரழிந்துவிட்ட சி.பி.எம்.ஐ, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி நிர்மூலமாக்காமல், சமூக மாற்றத்தையோ புரட்சியையோ சாதிக்கமுடியாது என்பதை அக்கட்சியில் எஞ்சியிருக்கும் நேர்மையான தோழர்கள் உணரவேண்டும்! விரைவில் உணருவார்கள்!!

தோழமையுடன்,
ஏகலைவன்.
yekalaivan@gmail.com

8 comments:

said...

சிபிஎம் தாதாக்களிடம் வேறென்ன எதிர்பார்த்தீர்கள்? மென்மையிலே கவிதை வடிப்பார்கள்; கண்ணீர் வழிப்பார்கள் ... அதுவும் கட்சி மேலிடத்திலே உத்தரவு வாங்கிக்கொண்டுதான்.

ஆங்கிலத்திலே மட்டும் பேசும் மேல்மட்ட அயோக்கியசிகாமணிகளுக்காகக் கண்ணீர் துளிர்ப்பதே கீழ்மட்டத்தமிழ்ச்சிபிஎம்செல்வர்களின் சிறப்பு. இத்தகு தீட்சண்யம் மிக்காரை இங்குப் பெறுதற்கு நும்நிலம் என்ன மாதவம் செய்ததுவோ?

said...

[[[பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் உழைப்பாளி மக்களின் விடுதலைக்காகப் போராடவேண்டிய ஒரு கட்சியில் கோஷ்டி சண்டைகள், பதவிச் சண்டைகள் நிகழ்ந்தால் அக்கட்சி உருப்படுமா? அக்கட்சியினை அட்டியின்றி ஏற்றுக்கொண்டு நாம் பாட்டாளிவர்க்க விடியலைச் சாதிக்க முடியுமா?]]]

நியாயமான கேள்விதான் ஸார்..!

இருப்பதிலேயே இந்தக் கட்சிதான் ஏதோ மக்களையும் ஒரு உயிருள்ள ஜீவனாக மதித்து நடந்து கொள்கிறார்கள்.. உண்மையாகவே தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் ஓடோடி வருவார்கள் என்று நினைத்து பெருமிதப்படுகிறோம்..

இவர்களுக்குள்ளேயே கோஷ்டிப் பூசலும், பதவி வெறியும் தலைவிரித்தாடுகிறது என்பதை நினைத்தால் வேதனையாகத்தான் உள்ளது.

உ.ரா.வரதராசன் மரணத்தை நோக்கி தான் உயிருக்குயிராக நேசித்த கட்சியினராலே தள்ளப்பட்டார் என்பதுதான் உண்மை..!

Anonymous said...

மரண அடி

அருமையான கட்டுரை தோழர்

//தற்கொலைதான் என்று ஏற்கும் பட்சத்தில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் அகில இந்திய செயலாளராக இருந்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தலைமைப் பீடத்தில் இருந்த ஒருவர், குடும்பத்தில் நிகழும் சிறுசிறு அற்ப சச்சரவுகளுக்காக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு பலவீனமானவராக இருக்கமுடியுமா? உயர்மட்டத் தலைவரே இப்படியென்றால் அவருக்குக் கீழுள்ளவர்களின் நிலைமை?! //

சிறப்பான வரிகள்.

said...

வெகு நாட்கள் கழித்து... வருக வருக! உதாரணங்களோடும், அவசியமான கோணத்திலுமான எழுத்து! நன்றி.

said...

இனம் அழிந்தால் என்ன!
மொழி ஒழிந்தால் என்ன!

இசம் என்ற,
பித்து மட்டும்,
பிடித்திருந்தால் போதும்,
வேறு தகுதி தேவையில்லை.

பிறகென்ன,
உனக்கான....
மூக்கனாங்கயிறையோ,
கடிவாளத்தையோ..
கழுத்துப்பட்டையையோ ...
கட்சி பார்த்துக்கொள்ளும்.

"இது...
பொலிட் பீரோ
முடிவென்று"
தாயைப்புணர ச்சொன்னால் கூட,
தயாராக வேண்டும்.

ஆம் ..என்றால்,
காம் ரெட்.
முடியாது என்றால்,
அடிமாடு தான்.

கடைசி வரை....
உள்கட்சி,
பயங்கர வாதத்திற்கும்,
தப்பிப்பிழைக்கவேண்டும்.

எதிர்த்துப்போரிட்டால்,
இறுதியில்,
இரண்டே வாய்ப்புகள்,
எஞ்சி நிற்கும்.

நடை பிணமாய் திரிந்தலைவது....
உயிர்க்கொடை செய்துகொள்வது....

இதில் உனக்கு...
எது வாய்த்திருக்கிறது?
என் உயிர் தோழா.

said...

நண்பர்கள் பெயரிலி (முதல் பின்னூட்டமிட்டவர்...) அவர்களுக்கும்; உண்மைத் தமிழன் (இரண்டாவதாக....) அவர்களுக்கும், வருகைக்காகவும் புரிதலுக்காகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

தோழர்கள் மரண அடி, போராட்டம் ஆகியோருடைய வருகைக்கும் நன்றிகள்!

தாமதமாக பின்னூட்டங்களைப் பதிப்பித்தமைக்கு வருந்துகிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

நண்பர் ஜெரி ஈசானந்தாவின் கருத்துக்கள் எதைச் சொல்ல வருகின்றன என்பது புரியவில்லை. இனமும் மொழியும் இசங்களால் அழிக்கப்படுவதாக அவர் புலம்புவதாகத் தோன்றுகிறது.

இதுபற்றி விவாதிக்க இப்பதிவு ஏற்றதல்ல. இனவாதம் குறித்த எனது முந்தைய கட்டுரையில் வேண்டுமானால் விவாதிப்போம். கொஞ்சம் தெளிவான கேள்விகளுடன் வாருங்கள், ஈசானந்தா.

மேலும், உ.ரா.வரதராசன் என்கிற அப்பாவி; பொலிட்பீரோ முடிவினால் மரணமெய்தியதாகக் குறிப்பிடுகிறாரோ என்றும் தோன்றுகிறது. அது அப்படியல்ல.

பொலிட்பீரோ, தாயைப் புணரச் சொன்னால்... என்று எதையோ சொல்ல வருகிறார். ஒருவேளை அவருடைய பெயரின் பின்பகுதியில் வரும் அந்த (ஈசா)னந்தா! என்கிற பெயரும், தாயைப் புணரச்சொல்லுவதாக அவரது கற்பனையும் சாமியார்களின் உணர்ச்சிமட்டத்தை நினைவுபடுத்துவதாகத் தோன்றுகிறது.

அதற்கு நான் காரணமல்ல, மன்னிக்க வேண்டும் ஈசானந்தா....