Saturday, April 26, 2008

ஓரு கம்யூனிச துரோகியின் மரணசாசனம்.


முன்னுரையாக.........

தலைவர்களின் துரோகங்களும் புரட்சிகர அணிகளின் தியாகங்களும் நிறைந்தது - இந்தியக் கம்யூனிச இயக்க வரலாறு.


இதிலே டாங்கேவா, நம்பூதிரிபாடா, ராமமூர்த்தியா? ரணதிவேவா, ராஜேஸ்வரராவா, ஜோதிபாசுவா? பசவபுண்ணையாவா, கல்யாணசுந்தரமா, அரிகிஷன்சிங் சுர்ஜித்தா? என்று நீண்டு கொண்டே போகும் இந்தத்துரோகிகளின் பட்டியலில் யாருக்கு முதலிடம்?


முடிவு செய்ய முடியாத அளவுக்கு ஒருவரை ஒருவர் விஞ்சி நின்ற சமயத்தில் திருவாளர் பி.ராமமூர்த்தியின் வாக்குமூலம் ஒன்று வெளிவந்தது. "ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்" என்கிற நூலை எழுதி வெளியிட்டார். கம்யூனிசப் போர்வையில் ஒளிந்து கொண்டிருந்த ராமமூர்த்தி அடிப்படையில் தான் ஒரு காந்தீய - காங்கிரசு - பார்ப்பனியவாதி என்பதை உறுதிப்படுத்துவதாகவே, ஒப்புக் கொள்வதாகவே அந்த நூல் அமைந்திருந்தது.


ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளுக்கும், அதன் அடிவருடிகளான தரகு அதிகார வர்க்க முதலாளிகள் - நிலப்பிரபுக்களுக்கும் ஊழியம் செய்வதிலும், அதனால் அரசியல் ஆதாயம் அடைவதிலும் நீதிக் கட்சியுடன் பார்ப்பனிய ஆதிக்கத்திலிருந்த காங்கிரசுக் கட்சி நடத்திய போட்டியையே தேசிய விடுதல்ப் போராக ராமமூர்த்தி அந்த நூலில் சித்தரிக்கிறார். நீதிக் கட்சியின் ஏகாதிபத்திய சேவைகளை வரிசைப்படுத்திச் சாடும் ராமமூர்த்தி, காந்திய - காங்கிரசின் துரோகங்களையெல்லாம் "இயல்பான வர்க்கத் தன்மைகள்" என்று மழுப்புகிறார்; வர்ணாசிரமப் பார்ப்பனியச் செயல்களையெல்லாம் ஏதோ ஒரு "சிலரது வைதீகப் பித்து" என்று மூடி மறைக்கிறார். "சர்வ கட்சியினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கைதேர்ந்த அரசியல் தரகர்தான் ராமமூர்த்தி" என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான சாட்சியங்கள் கொடுக்கிறார்.


ராமமூர்த்தியின் காந்திய - காங்கிரசு - பார்ப்பனிய வாதங்களையே - வாக்குமூலங்களையே வாய்ப்பாகக் கொண்டு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, நீதிக் கட்சியின் ஏகாதிபத்திய சேவைகளை நியாயப்படுத்தும் விமர்சன நூல் ஒன்றை எழுதினார். 1987 டிசம்பரில் ராமமூர்த்தி இறந்து போனார். அவரது சாவுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பாக அவரது நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. (இத்தொடரை எழுதும்போது) ராமமூர்த்தியின் நூல் வெளிவந்து நான்கு ஆண்டுகளாகி விட்டன(தற்போது 21 ஆண்டுகளாகி விட்டன). அவர் உயிருடன் இருந்தபோதே விமர்சிப்பதும், பதிலளிக்க வாய்ப்பளிப்பதும்தான் நியாயமானது. ஆனால் சிறு பத்திரிக்கைக்குரிய வரம்புகள் காரணமாக அப்போது அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.


இருப்பினும், கம்யூனிச இயக்கத்துக்குள் ராமமூர்த்தி போன்றவர்களின் துரோகத்தனத்துக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அதற்கு வாரிசுகளும் இருக்கிறார்கள். குறிப்பாக ராமமூர்த்தியின் நூல் அவரது காந்திய - காங்கிரசு - பார்ப்பனிய வாரிசுகளுக்கு அவர் கையளித்த உயில் - ஒரு கம்யூனிச துரோகியின் மரணசாசனம்! அதை வரித்துக் கொள்பவர்கள் அதன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். எனவே தாமதமானாலும், தவிர்க்கக்கூடாத காரணங்களால் அதை விமர்சிக்கிறோம். கம்யூனிச துரோகிகளை மட்டுமல்ல, நீதிக்கட்சியின் வாரிசுகளையும் இனங்கண்டுகொள்வதற்கு இது அவசியமாக உள்ளது.

- ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
110, இரண்டாம் தளம்,63,
என்.எஸ்.கே சாலை(அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024.

தொலைபேசி: 94446 32561
விலை ரூ 40

நன்றி புத்தகப் பிரியன்.

0 comments: