மே நாளில் சூளுரைப்போம்!
பன்னாட்டுக் கம்பெனிகளையும் அம்பானி, டாடா, பிர்லாக்களையும்
அடித்து வீழ்த்துவோம்!
அடித்து வீழ்த்துவோம்!
தனியார்மயம், தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்!
உயரும் விலைவாசியை விழ்த்த
வேறு வழி இல்லை... இல்லை... இல்லவே இல்லை!
வேறு வழி இல்லை... இல்லை... இல்லவே இல்லை!
பேரணி, பொதுக்கூட்டம்
மே - 1, மணலி, சென்னை.
மே - 1, மணலி, சென்னை.
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
விசம் போல ஏறிக் கொண்டிருக்கிறது விலைவாசி. விலைவாசியைக் கட்டுப்படுத்து என்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் அரசிடம் கூப்பாடு போடுகின்றனர். மத்திய மாநில அரசுகளும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது போல நடிக்கின்றன. ஆனால் விலைவாசி உயர்வுக்கான காரணம் என்ன என்பதைப் பற்றி மட்டும் யாரும் பேசுவதில்லை.
கடந்த 15 ஆண்டுகளாக எல்லா கட்சி அரசாங்கங்களும் தீவிரமாக அமல்படுத்தி வரும் தனியார்மய - தாராளமய - உலகமயக் கொள்கைகளும், அவற்றின் விளைவாக விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டிருப்பதும்தான் இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்று நாங்கள் ஆணித்தரமாகக் கூறுகிறோம். கடந்த 15 ஆண்டுகளில் உலக வங்கியின் ஆணைப்படி விவசாயத்துக்கான மானியத்தை அரசு வெட்டியிருக்கிறது. விதை உரம் பூச்சிமருந்து விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டிருக்கின்றன. வங்கிக் கடன் நிறுத்தப்பட்டு விட்டதனால் விவசாயிகள் கந்துவட்டிக் கும்பல்களின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். தானியக் கொள்முதலையும் படிப்படியாக அரசு நிறுத்திவிட்டது.
புதிய அணைக்கட்டுகளோ பாசனத் திட்டங்களோ கிடையாது. ஏரிகள், குளங்கள் கால்வாய்கள் போன்ற விவசாய கட்டுமானங்களின் பராமரிப்பையும் அரசு நிறுத்திவிட்டது. பாசனத்தண்ணீர் இல்லாத காரணத்தாலேயே பாதி விவசாயம் செத்துவிட்டது. மீதியுள்ள விளைநிலங்களைச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிற்சாலைகளும் ரியல் எஸ்டேட்டுகளும் ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கமே திட்டம் தீட்டித் தருகிறது.
விவசாயம் செய்தால் கடந்தான் மிச்சம் என்று பட்டுத் தெரிந்து கொண்ட விவசாயிகள் பிழைப்புக்கு நகர்ப்புறம் நோக்கி ஓடுகிறார்கள். கடன் பட்ட விவசாயிகளோ இலட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவற்றின் விளைவாக விவசாய உற்பத்தி வீழ்ச்சி அடைந்து சோற்றுக்கு கப்பலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டது.
இவை போதாதென்று உணவு தானியச் சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற சூதாட்டத்தை நடத்துவதற்கும் அரசு அனுமதித்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தக சூதாடிகள் செயற்கையாக தானிய விலைகளை ஏற்றி மக்களைக் கொள்ளையடிக்கிறார்கள். இன்னொரு புறம், எரிபொருள் தேவையைச் சமாளிப்பது என்ற பெயரில், கரும்பு, சோளம், எண்ணெய் வித்துக்கள் போன்ற உணவுப் பொருட்கள் உயிரி எரிபொருள் தயாரிப்புக்குத் திருப்பி விடப்படுவதால், உலகம் முழுவதும் உணவு தானியப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இது வெறும் விலைவாசிப் பிரச்சனை அல்ல. விவசாயத்தின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் தொடுத்திருக்கும் தாக்குதல். இதன் விளைவாக இன்று உலகம் முழுவதும் உணவு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துவருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை மேலும் மேலும் உயரும் என ஐ.நா. மன்றமே அபாயச்சங்கு ஊதியிருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலையேற்றம் பல்வேறு பொருட்களில் விலை உயர்வை மேலும் தீவிரப் படுத்தியிருக்கிறது. இராக்கின் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்புப் போர்தான் இதற்குக் காரணம். இதன் விளைவாக வளைகுடா நாடுகளின் மக்கள் அமெரிக்காவுக்கு எதிராகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். வளைகுடாப் பகுதி முழுவதும் பதற்றம் கூடிக்கொண்டேயிருப்பதால், அதிகரித்து வரும் எண்ணெய்த் தேவைக்கு ஏற்ப புதிய கிணறுகளைத் தோண்டவோ உற்பத்தியை விரிவுபடுத்தவோ அந்நாட்டு அரசுகள் அஞ்சுகின்றன. இதன் விளைவாகத்தான் கடந்த 4 ஆண்டுகளில் எரி எண்ணெயின் விலை 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. வளைகுடாவின் எண்ணெய் வளம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற அமெரிக்காவின் ஆதிக்க வெறிதான் இந்த விலையேற்றத்துக்குக் காரணம்.
மொத்தத்தில், ஏகாதிபத்தியங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் உலகப் பொருளாதாரத்தின் மீது செலுத்திவரும் ஆதிக்கம்தான் நாம் சந்தித்து வரும் இந்த விலை உயர்வுக்குக் காரணம். பன்னாட்டு முதலாளிகளும் அவர்களுடைய கூட்டாளிகளான டாடா, அம்பானி போன்ற இந்தியத் தரகு முதலாளிகளும்தான் மக்களின் உழைப்பையும் ஊதியத்தையும் உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைகள். இவர்களை ஒழித்துக் கட்டாமல் விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாது. இவர்களுக்குச் சேவை செய்யும் ஓட்டுக் கட்சிகளால் விலைவாசியைக் குறைக்கவோ தடுக்கவோ ஒருக்காலும் முடியாது.
விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் என்பது பன்னாட்டு முதலாளிகலுக்கு எதிரான போராட்டம். நாட்டை மீண்டும் அடிமையாக்க முயலும் ஏகாதிபத்தியங்கலுக்கு எதிரான போராட்டம். ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான தரகு முதலாளிகளுக்கு எதிரான போராட்டம். இவர்களுக்கு சேவகம் செய்து பங்கு வாங்கும் தேசத்துரோக ஓட்டுப் பொறுக்கிகளுக்கு எதிரான போராட்டம். விலைவாசி உயர்வுக்கு எதிரான நமது போராட்டத்தை இந்த எதிரிகளை நோக்கித் திருப்புவோம்!
இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னனி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி
சென்னை - வேலூர்.
நன்றி! போர்முரசு வலைதளம்.
0 comments:
Post a Comment