தில்லை நடராசா!
தீட்சிதனிடம் மாட்டிக் கொண்டு
நீ படும்பாட்டைச் சொல்வதென்ன லேசா!
நீ.... காலைத் தூக்கி நிற்பது
ஆடவா? இல்லை
ஊளையிடும் பார்ப்பானின்
உபத்திரவம் தாங்காமல் ஓடவா?
ஒருவேளை
குஞ்சிதபாதத்தின் கொலுசு திருடு போனதை,
காலைத்தூக்கிக் காட்டுகிறாயா?
"அதோ! அந்தத் தீட்சிதந்தான் திருடியது" என்று
கைகளை ஜாடையாய் நீட்டுகிறாயா!
கஷ்டப்பட்டு,
இரண்டு கண்ணோடு, மூன்றாவது கண்ணை
நீ முகத்தில் வைத்திருந்தும்,
உன் 'ஹஸ்த ராஜாவின்'
அரைஞான் கயிற்றையே
உன்னால் காப்பாற்ற முடியவில்லையே!
துஷ்ட தீட்சிதர்களின்
திருவிளையாடலுக்கு முன்னே,
உன் பொண்டாட்டி தாலியைத் திருடியவனையே
உன்னால் பிடிக்க முடியவில்லையே! பாவம்.
பிரணவ மந்திரத்தின் அர்த்தம் விளங்காமல்
நீ உன் பிள்ளையிடம்
பாடம் கேட்டது பழங்கதை.
அன்றலர்ந்த முட்டைகளைக் கொய்து;
பீர்பாட்டில் அபிஷேகம் செய்து;
பிரியாணிப் பொட்டலத்தின்
அர்த்தம் விளங்க
கருவறைக்குள் நீ ஓடி ஒளிந்தது
சோகக் கதை.
தீர்த்த குளமல்ல
அது பலரையும் 'தீர்த்த' குளம் என்பது
தெரிந்ததனால்
வியர்த்து நடுநடுங்கி
விரிந்த சடையோடு
அபயம் வேண்டி நிற்கும் நடராசா!
அஞ்சாதே! உனை ஆட்கொள்ள
வந்துவிட்டோம் நாங்கள்.
மன்னன் பராந்தகன்
தங்கத்தால் பொற்கூரை வேய்ந்ததா
உனக்குப் பாதுகாப்பு?
மனித உரிமை பாதுகாப்பு மையமும்
மக்கள் கலை இலக்கியக் கழகமும்
தமிழால் உனக்கு
போர்க்களம் அமைத்ததே சிறப்பு.
அன்றுதான்..... மார்ச்சு இரண்டுதான்
உழைக்கும் தமிழனின்
தமிழ் கேட்கும் பாக்கியம்
உன் செவிகளுக்கு வாய்த்தது.
திரை விலக்கி,
உழைக்கும் வர்க்கத்தின் முகத்தைப் பார்க்கும்
தரிசனம் உனக்குக் கிடைத்தது.
இனி.... நடுங்காதே நடராசா
நல்ல வழி காட்ட
நாங்கள் இருக்கிறோம்
நக்சல்பாரிகள் இருக்கிறோம்!.
- துரை. சண்முகம்.
0 comments:
Post a Comment