அன்பார்ந்த தோழர்களே!
மீண்டுமொரு கடுமையான உணவுப் பஞ்சத்தை மூன்றாந்தர நாடுகள் அனுபவிக்கத்துவங்கிவிட்டன. சுமார் என்பது ஆண்டுகளுக்கு முன்னால் உலகை உலுக்கிய அதே பஞ்சப் புயல் இன்று உலகமயமாக்கலின் விளைவால் பெரும் சூறாவளியாக உருமாறி வந்துகொண்டிருக்கிறது.
உலகமயமாக்கலை ஏற்காத நாடுகளுக்கு, புறந்தள்ளிய நாடுகளுக்கு, எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளும், போர்முனைத் தாக்குதலும் ஏற்படுத்திய பாதிப்புகளைக் காட்டிலும், உலகமயமாக்கலை ஏற்றுக் கொண்ட நாடுகளிலும், அவற்றால் விளைந்திருக்கும் பாதிப்புகள், பசி, பட்டினிச் சாவுகளின் ஓலம் இன்று மிகமிகக் கொடூரமாகக் கேட்கத் துவங்கியிருக்கிறது.
இந்தியாவிலும் அதன் தாக்கம் மிகக் கடுமையாகவே இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக நம்முடைய மக்கள் அனுபவித்துவரும் விலைவாசி உயர்வு, அதன் விளைவாக உயர்ந்து வரும் பட்டினிக் கொடுமைகள், தற்கொலைச் சாவுகள் இதுபற்றிய செய்திகளே எல்லாப்புறமும் கேட்கின்றன.
ஆனால், நம்முடைய நாடாளுமன்றப் பன்றிகள், விரைவில் விலைவாசி குறைந்துவிடும் என்று ஆருடம் சொல்லிவருகின்றன. விலைவாசியைக் குறைக்கும் மந்திரம் தங்களிடமே இருப்பதாகக் கொக்கரிக்கிறார்கள் ஜெயாமாமி - அத்வானி கம்பெனியைச் சார்ந்தவர்கள். ''மூன்றாவது அணியமைத்து இதனை நாங்கள் நிச்சயமாக குறைத்துக் காட்டுவோம்'' என்று சவடால் அடிக்கிறார்கள் யெச்சூரி - டி.ராஜா போன்ற காமெடியன்கள்.
இந்நிலையில், இந்தியா விரைவில் எதிர்கொள்ளவிருக்கும் கடும் பஞ்சத்தை முன்னறிவிக்கும் விதமாகவே இந்த விலையேற்றத் துன்பத்தை நாம் பார்க்கவேண்டும் என்பதையும், உலகமயமாக்கலால் வலுக்கட்டாயமாக நம்மீது ஏவப்பட்டிருக்கும் இத்தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்வது, என்பதனையும் வலியுறுத்தும் வகையில், எம்முடைய அமைப்புகளின் சார்பில் ஒரு சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அதன் தலைப்பு "விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்?", விலை ரூ.5/-.
பிரதிகள் கிடைக்குமிடம்:
இரா. சீனிவாசன்,
புதிய கலாச்சாரம்,
எண்:- 18, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 600083.
தொலைபேசி:- 044-23718706.
இதுவரை காணாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது விலைவாசி, அரிசி கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கோதுமையின் விலையோ இரண்டு மடங்காகியிருக்கிறது. கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் அனைத்தும் கிலோவுக்கு 20ரூபாய் விலை ஏறியிருக்கின்றன. நல்லெண்ணெய் விலை இரண்டு பங்காகியிருக்கிறது. பருப்பு வகைகள் அனைத்துமே விலை உயர்ந்துவிட்டன. பால் விலை உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது.
கடந்த மூன்றே மாதங்களில் ஏழை நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவு சராசரியாக மாதம் 1000 ரூபாய் வரை அதிகரித்து விட்டது. இந்த விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் ஏழைக் குடும்பங்கள் ஒரு வேளைச் சோற்றைக் குறைக்கின்றனர். அத்தியாவசியமான செலவுகளைக் கூடக் குறைக்கின்றனர். பரம ஏழைகளோ பட்டினிச்சாவுக்குத் தள்ளப்படுகின்றனர்.
உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் இந்த விலை உயர்வும் பணவீக்கமும் 33 நாடுகளில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று அபாயச் சங்கு ஊதியிருக்கிறது உலகவங்கி. எகிப்து, மொராக்கோ, செனகல், காமரூன், இந்தோனேசியா போன்ற நாடுகளில் விலை உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்துள்ளன.
வங்காளதேசம் பெரும் பஞ்சத்தின் விளிம்பில் நிற்கிறது. சீனா, அர்ஜெண்டினா, கஜகஸ்த்தான், வியத்நாம் போன்ற பலநாடுகல் தானிய ஏற்றுமதிக்குத் தடை விதித்திருக்கின்றன. விளைந்த நெல் திருடு போய்விடுமோ என்று அஞ்சி இரவு முழுவதும் வயலிலேயே படுத்துறங்குகிறார்கள் தாய்லாந்தின் விவசாயிகள்.
'விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவேண்டும்' என்று கூக்குரலிடும் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் விலைவாசி உயர்வென்பது ஏதோ பல மர்மமான காரணங்களால் ஏற்படுவதைப் போலச் சித்தரிக்கின்றனர். எதிர்க்கட்சிகளோ இதனை ஆளும் கட்சியின் நிர்வாகத் திறமையின்மையாகக் காட்டுவதன் மூலம், அடுத்த தேர்தலில் ஓட்டுப் பொறுக்க அடிபோடுகின்றனர்.
சுனாமியைப் போன்ற யாருமே எதிர்பார்க்காத, யாராலும் கட்டுப்படுத்த இயலாத ஒரு இயற்கைப் பேரழிவாக விலைவாசி உயர்வைச் சித்தரிக்கிறது காங்கிரசு அரசு. தற்போது உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்திருப்பதால் தவிர்க்க முடியாமல் இந்தியாவிலும் விலை உயர்வதாகவும் அதற்குத் தாங்கள் அமல்படுத்திய கொள்கைகள் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்பது போலவும் சிதம்பரம் - மன்மோகன் - அலுவாலியா கும்பல் நாடகமாடுகிறது. விலைவாசி உயர்வு ஒரு தற்காலிகமான பிரச்சினை என்பது போலவும் சித்தரிக்கிறது.
இவை அனைத்தும் பொய், தற்போது நாம் சந்திக்கும் விலை உயர்வும், பணவீக்கமும், உணவுப் பஞ்சமும் யாருமே எதிர்பார்த்திராத பேரழிவுகள் அல்ல. உலகப் பணவீக்கத்தின் காரணமாக மட்டுமே உருவனவையும் அல்ல. இவை இந்திய அரசாலும் ஆளும் வர்க்கங்களாலும் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட பேரழிவுகள். உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி, இந்த நிலைமை உருவானதற்குத் திட்டவட்டமான பல காரணங்கள் இருக்கின்றன.
(தொடரும்..........
1 comments:
"Post Comment" is not visible. So change your template.
Good Article.
Asuran
Post a Comment