Thursday, April 24, 2008

விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்? (தொடர்ச்சி....)





விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்? (தொடர்ச்சி....)
அழிக்கப்படுகிறது விவசாயம்!

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசும் பாரதிய ஜனதாவும் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் பின்பற்றி வரும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகள் திட்டமிட்டே நமது நாட்டின் விவசாயத்தைக் கொலை செய்திருக்கின்றன. "விவசாயத்துக்கான மானியங்களை வெட்டுவது, பாசனப் பராமரிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துவது, தானியக் கொள்முதலை நிறுத்தி இந்திய உணவுக் கழகத்தை மூடுவது, ரேசன் விநியோகத்தை நிறுத்துவது, உணவுத் தற்சார்பை அழித்து, தானிய உற்பத்தி - கொள்முதல் - சந்தை அனைத்தையுமே பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது" என்ற கொள்கைகள் உலகவங்கி, ஐ.எம்.எப்., உலக வர்த்தகக் கழகம் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களால் திணிக்கப்பட்டு, இந்திய அரசால் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதன் விளைவாக விவசாயத்துறையில் இந்தியாவின் தனிநபர் சராசரி உற்பத்தி, 1943 வங்கப்பஞ்சத்தின் போது இருந்த நிலைக்கு வீழ்ந்திருக்கிறது. 1973-74 இல் சராசரியாக ஆண்டொன்றுக்கு ஒரு இந்தியனுக்கு சாப்பிடக் கிடைத்த தானியத்தின் அளவு 154.24 கிலோ. 2004-05 இல் அது 132.58 கிலோவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று கூறுகிறது தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு. அதாவது நாளொன்றுக்கு 360 கிராம் தானியம்!
தேசிய வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றுக்கு 8.5% என்று பீற்றிக் கொள்கிறார் சிதம்பரம். விவசாயமோ கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 0.5% தான் வளர்ச்சி அடைந்திருக்கிறது. நிகர தேசிய உற்பத்தியில் (GDP) விவசாயத்தின் பங்கு 1980 இல் 36.4% ஆக இருந்தது. 2006-07 இல் அது 18.5% ஆக வீழ்ந்திருக்கிறது. சேவைத்துறையின் பங்கோ 55% ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த வீழ்ச்சி தானாக நேர்ந்தது அல்ல. விவசாயம் திட்டமிட்டே வீழ்த்தப்பட்டிருக்கிறது.


ஆறு வழிச்சாலைகள், நவீன விமான நிலையங்கள், துறைமுகங்கள், மேம்பாலங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்; என்று பன்னாட்டு முதலாளிகளுக்கும் அம்பானி, டாடா போன்ற தரகு முதலாளிகளுக்கும் தேவையான கட்டுமான வசதிகளைச் செய்து கொடுக்க பல இலட்சம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை அரசு வாரி இறைக்கிறது. ஆனால், நீர்ப்பாசனத்துக்கான ஒதுக்கீடு வெட்டப்பட்டிருக்கிறது.

1990 வரை ஆண்டுக்கு 3% என்ற அளவிற்காவது வளர்ந்து வந்த நீர்ப்பாசனம் அதன் பின் 1.2% என வீழ்ச்சி அடைந்தது. இந்தியாவின் விளைநிலங்களில் பாசன வசதி உள்ளவை வெறும் 40% மட்டுமே. இந்நிலையில் புதிய பாசனத் திட்டங்கள் இல்லாதது மட்டுமல்ல, இருக்கின்ற பாசன வசதிகளைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்தும் அரசு கழன்று கொண்டு விட்டது. 'பயனீட்டாளர்களே பராமரிப்பது' என்ற உலக வங்கித் திட்டத்தின் கீழ், அந்தச் சுமையையும் விவசாயிகளின் தலையிலேயே அரசு தள்ளிவிட்டது. நிலத்தடி நீருக்காகக் கிணறு தோண்டியே கடனில் ஆழப்புதைந்து வருகிறார்கள் விவசாயிகள்.


எந்தவொரு நாட்டிலும் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப விவசாய உற்பத்தி அதிகரித்தால்தான் உணவுப் பஞ்சத்தைத் தவிர்க்க முடியும். இந்தியாவிலோ பயிரிடும் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. நீர் வளமிக்க பல இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசு தாரை வார்த்திருக்கிறது. சுமார் ஒரு கோடி ஏக்கர் விளைநிலம் நகரங்களால் விழுங்கப்பட்டிருக்கிறது. விளைநிலங்களின் பரப்பு குறையக் குறைய விவசாய உற்பத்தியும் குறைந்து கொண்டே போகிறது.


விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் அரசு அக்கறை காட்டவில்லை. இந்தியாவைக் காட்டிலும் பெரிய நிலப்பரப்பை சீனா பெற்றிருந்தாலும், விளைநிலங்கள் சீனத்தைக் காட்டிலும் இந்தியாவில் தான் 1.5 மடங்கு அதிகம். எனினும் ஒரு ஹெக்கேரில் சராசரியாக 5 டன் தானியம் விளைவிக்கிறது சீனம். இந்தியாவிலோ இது 2.5 டன். பசுமைப் புரட்சி புகுத்திய உரம் பூச்சி மருந்துகளின் விளைவாக நிலம் மலடாகித் தவிக்கிறார்கள் விவசாயிகள். பூச்சி மருந்துக்கான செலவு 1980இல் இருந்ததைக் காட்டிலும் 20 மடங்கு அதிகரித்திருப்பதாக ஆந்திர விவசாயிகள் குமுறுகிறார்கள். இந்நிலையில் மண்ணின் தரத்தை மேம்படுத்தவோ, மாற்றுப் பயிர்களை அறிமுகப்படுத்தவோ, புதிய விதைகளைக் கண்டுபிடிக்கவோ அரசு எதுவும் செய்யவில்லை.


இருக்கின்ற அரசாங்க விதைப் பண்ணைகளும் அவற்றின், ஆய்வுகளும் முடக்கப்பட்டு விட்டன. அவை பன்னாட்டு விதைக் கம்பெனிகளின் எடுபிடிகளாகவே வேலை செய்கின்றன. மான்சாண்டோ நிறுவனத்தின் பி.டி.காட்டன் என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதை 64% சந்தையை விழுங்கிவிட்டது. போலி விதைகளை வாங்கி விளைச்சல் இல்லாமல் ஏமாந்து குமுறுகிறார்கள் விவசாயிகள்.


உரமானியமும் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படுவதிலை. ஆண்டு தோறும் 2 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உரமானியத்தைத்தின்று உரக் கம்பெனி முதலாளிகள்தான் கொழுக்கிறார்கள். விவசாயிகளுக்கான கடன் - மானியம் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. கூட்டுறவு வங்கிகள் மூடப்படுகின்றன. நாளுக்கு ஒரு கிளை வீதம் கடந்த 15 ஆண்டுகளில் நாடெங்கும் 4750 கிராமப்புற வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, கந்துவட்டிக் கும்பலின் பிடியில் 60% விவசாயிகள் தள்ளப்பட்டு விட்டார்கள். நாட்டின் 82% விவசாயக் குடும்பங்கள் மீளவே முடியாத கடனில் சிக்கியிருப்பதாக அரசே நடத்தியுள்ள ஆய்வுகள் ஒப்புக் கொள்கின்றன. விவசாயம் செய்யச் செய்ய கடன்தான் உயரும் என்பதால் விவசாயத்தை விட்டே ஓடுகிறார்கள் விவசாயிகள்.


எந்தந்த தொழிலிலும் பொருளை உற்பத்தி செய்பவன்தான் அதன் விலையைத் தீமானிக்கிறான். விவசாயிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. விவசாய உள்ளீடு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் உணவு தானியத்தின் கொள்முதல் விலையை மட்டும் உயர்த்த மறுக்கிறது அரசு.


கோதுமை விலை கட்டுபடியாகாமல் பஞ்சாப் விவசாயிகளும், பருத்தி விலை கட்டுப்படியாகாமல் மகாராட்டிர விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விலை கட்டுப்படியாகாமல் விளைந்த கரும்பைத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள் கரும்பு விவசாயிகள். குவிண்டால் நெல்லுக்கு 1000 ரூபாய் தரவேண்டும் என்று அரசு நியமித்த குழுவே சிபாரிசு செய்திருந்த போதும், 775 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுக்கிறது அரசு.


கொள்முதல் ரத்து, உணவு இறக்குமதி!


கடந்த 15 ஆண்டுகளில் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருக்கும் அரசு படிப்படியாக விலகிக் கொண்டுவிட்டது. அந்த இடத்தை கார்கில், மான்சாண்டோ, ஐடிசி போன்ற பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிகளும் கைப்பற்றி வருகிறார்கள். சில்லறை வணிகத்தை விழுங்கி வரும் ரிலையன்ஸ் அம்பானி, பிர்லா, வால்மார்ட் போன்ற நிறுவனங்கள், உணவு தானியங்கள் - காய்கனிகள் கொள்முதலிலும் இறங்கியிருக்கிறார்கள். 1980களின் இறுதியில் 45% தானியக் கொள்முதலை இந்திய உணவுக் கழகம் செய்தது. இன்று நாட்டின் தானியக் கொள்முதலில் 75% தனியார் முதலாளிகளின் பிடிக்குச் சென்றுவிட்டது. இவர்களுடைய 'சுதந்திர வர்த்தகக் கொள்ளை'க்கு வசதி செய்து கொடுக்கத்தான் உலக வங்கியின் ஆணைப்படி தானியக் கையிருப்புகளைக் காலி செய்து, இந்திய உணவுக் கழகத்தின் கிட்டங்கிகளை இழுத்து மூடி அவற்றை ரியல் எஸ்டேட் சந்தையில் விற்று வருகிறது அரசு.


இவ்வாறாக இந்திய விவசாயத்தையும் உணவுத் தற்சார்பையும் அழிக்க ஏகாதிபத்தியங்கள் வகுத்துக் கொடுத்த சதித்திட்டங்கள் அனைத்தையும் காங்கிரசு, பா.ஜ.க. அரசுகள் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றன.

(தொடரும்........
எமது அமைப்புகள் வெளியிட்டிருக்கும் "விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்?" என்ற வெளியீட்டிலிருந்து இதனை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
மேற்கண்ட கட்டுரைக்குத் தொடர்புடைய பிற கட்டுரைகள்:

http://tamilarangam.blogspot.com/2008/04/blog-post_24.html

0 comments: