மார்ச் 2 -ஆம் நாளன்று காலை தில்லைச் சிற்றப்பல மேடையில் தமிழ் ஒலித்தது. கண்கள் மங்கி, கால்கள் தள்ளாடி, நடக்கும் ஆற்றலைக் கூட இழந்து விட்ட முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமி, சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடினார். "திலைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று பார்ப்பன அடிமைத் தொழில் செய்வதற்கு அந்த சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்தாகக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரத்தின் எந்த வரிகளை ஆறுமுகசாமி பாடினார் என்று யாருக்கும் கேட்கவில்லை. கலவரத்துக்கும் தீட்சிடப் பார்ப்பனர்களின் ஊளைச்சத்ததுக்கும் இடையில் அவர் அருகிலேயே நின்றிருந்த எமது தோழர்கள் கூட ஆறுமுகசாமியின் உதடு அசைந்த்தை மட்டும்தான் பார்க்கமுடிந்த்து.
ஆனால் அவர் பாடினார். தில்லையிலிருந்து சிலநூறு கல் தொலைவில் இருந்த எமக்கு மட்டும் ஆறுமுகசாமியின் குரல் தெளிவாகக் கேட்டது. "தில்லைவாழ் அந்தணர்க்கு நான் அடியார் இல்லை... இல்லை... இல்லவே இல்லை..." என்று சிற்றம்பல மேடையில் நின்றபடி அந்த தில்லை நடராசனுக்கு அறிவித்திருக்கிறார் ஆறுமுகசாமி. அவர் உதடுகளிலிருந்து வெளிப்பட்ட சொற்கள் எவையாக இருந்த போதிலும் அவை உணர்த்தும் பொருளும் உணர்வும் இதுதான். இது மட்டும் தான்.
அவர் மனம் உருகிப் பாடவில்லை, பாடியிருக்கவும் முடியாது என்பதை தொலைக்காட்சியில் அந்த நிடழ்வைப்பார்ட்த அறிவிலிகளும் கூடப் புரிந்து கொண்டுருக்க முடியும். அவர் மனம் குமுறிக் குரல் கொடுத்தார் என்பதுதான் உண்மை. அங்கேநடந்தது 'வழிபாடு' அல்ல, போராட்டம்!
'சைவ மெய்யன்பர்கள் மனமுருகித் தமிழில் பாடி இறைவனை வழிபடுவதற்கான உரிமையை வழங்குகதாக' கூறும் அந்த அரசாணையின்படி சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை நடராசனை 'வழிபடவில்லை'. வழிபட முடியவும் இச்லை அங்கே நடந்தது போராட்டம். போராட்டம் மட்டும் தான். அங்கே ஒலித்தது தமிழே அன்றித் தேவாரம் அல்ல. அங்கே நின்ற ஆறுமுகசாமி போராளியே அன்றி பக்தர் அல்ல.
நேர்ப்பொருளிலும் இது தான் உண்மை. ஆறுமுகசாமி வாய்திறந்த்வுடனே கருவறையை இழுத்து மூடிவிட்டு நந்தியாய் நடராசனை மறைத்து நின்று கொண்டார்கள் தீட்சிகர்கள். அன்று நடராசனைக் காணவிடாமல் நந்தனை மறைத்தது கூட உயிரற்ற கல்லான நந்தியல்ல, உயிருள்ள தீட்சிதப் பார்ப்பனர்கள் தான் என்ற உண்மையை, பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் காட்சியை, நம் கண்முன்னே கொண்டுவந்ததன் மூலம், வரலாற்றை இன்னொரு முறை நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டினார்கள் தீட்சிதர்கள்.
.............................................................................
ஆம்! இது ஒரு வரலாற்றுச் சாதனை. நந்தனையும், பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் ஜோதியில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி வைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள் "அந்தத் தில்லைக் கூத்தனே மூவாயிரமாவது தீட்சிதந்தான்" என்று இறுமாப்போடு பிரகடனம் செய்து அதை இன்றுவரை நிலைநாட்டிவரும் தீட்சிதர்கள், எந்த வித பட்டாவோ பாத்தியதையோ இல்லாமல் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஆலயத்தின் சொத்துக்களூக்கு பாத்தியதை கொண்டாடிவரும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தை பிணம் மறைக்கும் கொளைக்களமாகவும், ராஜகோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிகர்கள்,
பிரதமர்கள், முதல்வர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் இன்றளவும் தம் சிண்டின் நுனியிலே முடிந்து வைத்திருக்கும் தீட்சிதர்கள், கொலை - கொள்ளை முதலான எந்தக் குற்றங்களுக்காகவும் இதுவரை விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படாத தீட்சிதர்கள் - இன்று கடலூர் சிறையில் களி தின்று கொண்டிருக்கிறார்கள்.
எந்தச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலிக்கவிடாமல் தீட்சிதர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்களோ அதே மேடையில், அவர்களால் அடித்து வீழ்த்தப்பட்ட அதே ஆறுமுகசாமி யானை மீதேறி சிற்றம்பல மேடையில் வந்து இறங்கினார். தீட்சிதர்களோ, அதே இடத்தில் தூக்கி வீசப்பட்டார்கள்.
இது இறுதி வெற்றியல்ல, முதல் அடி மட்டுமே என்பதின்னவோ உண்மைதான். ஆனால் முத்ல் அடி என்றாலும் அவர்கள் முகத்தில் விழுந்த அடி. முன் எப்போதும் விழுந்திராத அடி. ஆனானப்பட்ட மாமன்னன் இராசராசனையே ஆட்டிப்படைத்த தீட்சிதர்கள், ஆறுமுகசாமி எனும் ஏதுமில்லாப் பரதேசியால் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறார்களே, எப்படி? இது ஆண்டவனின் அனுக்கிரகமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். எனில் இது இன்ன அரசாங்கத்தின் அனுக்கிரகமா? அரசாங்க முட்டைதான் அம்மியை உடைத்திருக்கிறதா? அப்படித்தான் கூறுகின்றன இதுவரை ஊடகங்களில் வந்துள்ள செய்திகள்.
சிற்றம்பல மேடையில் தமிழ் பாடலாம் என்று திமுக அரசு ஆனையிட்டதாம். தடுத்து நின்ற தீட்சிதர்களைத்தூக்கி வீசிவிட்டு அரசாணையை அமல்படுத்திவிட்டதாம் போலீசு. "தீட்சிதர்கள் - போலீசு கைகலப்பு" பிறகு "ஆறுமுகசாமியின் ஆதரவாளர்கள் - போலீசு கைகலப்பு", "தீட்சிதர்கள் 11பேர், ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 35பேர் - ஆக மொத்தம் 46பேருக்கு சிறை!" இறுதியில் போலீசு வென்றது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது! - இது தான் தில்லைப் போராட்டம் பற்றி ஊடகங்கள் அளித்துள்ள சித்திரம்.
நிலைநாட்டப்பட்டது தமிழ் உரிமையா, சட்டமா? வென்றது போலீசா அல்லது ஆறுமுகசாமிக்குத் துணை நின்ற மனித உரிமைப்பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னனி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களா? இவைதான் நம் முன் உள்ள கேள்விகள்.
இவற்றுக்கு விடை கூற வேண்டுமெனில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கூறிய எமது அமைப்புகள் தில்லையில் நடத்திவரும் போராட்டத்தைப் பற்றி இங்கே விளக்கமாகக் கூற வேண்டும். ஏனென்றால் எமது அமைப்புகளின் பெயர்களை மறைத்து யாரோ அடையாளம் தெரியாத சில ஆதரவாளர்கள் தான் ஆறுமுகசாமிக்குத் துணை நின்றதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஏற்படுத்தியுள்ளன. எனினும் எமது போராட்டத்தின் வரலாற்றை விவரிப்பதற்கு இது இடமன்று. மார்ச்2 அன்று நடைபெற்ற சம்பவங்களை ஆராய்வதன் மூலமாகவே இந்தக் கேள்விகளுக்கு விடைகண்டுவிடமுடியும்.
நீண்ட நெடிய போராட்டம் நடத்தி அதன் இறுதியில் அரசாங்கத்தின் வாயிலிருந்து நாங்கள் வரவழைத்ததுதான் இந்த அரசாணை. மார்ச் 1-ஆம் தேதி அரசாணையின் நகல் கையில் கிடைத்தவுடனே "மார்ச் 2-ஆம் தேதி ஆறுமுகசாமி பாடுவார்" என்று அறிவித்தோம். சுமார் 300 தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். ஆனால், வெறும் 30 பேரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதித்து மற்றவர்களைத் தடுத்து நிறுத்தியது போலீசு. சுற்றுவட்டாரத்து மக்களும் பிற அமைப்பினரும் பல நூறு பேர் திரண்டு வர விரும்பினர். ஆனால் அவர்களை அச்சுறுத்தி அப்புறப்படுத்தும் வண்ணம் நகரத்தையே வெள்ளை வாகனங்களால் போலீசு நிரப்பியது.
கோயிலுக்குள்ளே நூற்றுக்கணக்கான போலீசார், வெறும் 30 தோழர்கள்! இந்த ஏற்பாடுகள் எல்லாம் யாரைப்பாதுகாக்க? தமிழுக்குப் போராடச் சென்ற தோழர்களைப் பாதுகாக்கவா, அல்லது தமிழ் விரோதிகளான தீட்சிதர்களைப் பாதுகாக்கவா?
சூழ்ச்சிகரமான இந்த போலீசு நடவடிக்கைகளின் விளைவாகத்தான் செஞ்சட்டைகளால் சூழப்பட்டிருக்க வேண்டிய சிற்றப்பல மேடை, காக்கிச்சட்டைகளால் நிரம்பியிருந்தது. பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கும் தீட்சிதப் பார்ப்பனர்களுக்கும் நடந்திருக்க வேண்டிய போராட்டம், போலீசுக்கும் தீட்சிதர்களுக்குமான கைகலப்பாக மாற்றப்பட்டது. 'பார்ப்பானையும் பாதுகாப்பது, தமிழையும் பாதுகாப்பது' என்ற கேலிக்குரிய கொள்கையின் கோமாளித்தனமான காட்சி வடிவம் தான் அன்று சிற்றம்பல மேடையிலிருந்து உலகதுக்கே ஒளிபரப்பப்பட்டது.
காக்கிச் சட்டைகளின் இடத்தில் செஞ்சட்டைகள் சூழ்ந்து நிற்கும் காட்சியை மனக்கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்! அது மட்டும் நிகழ்ந்திருந்தால் வேறு சில அதிசயங்களும் நிகழ்ந்திருக்கும். ஆறுமுகசாமி வெறும் அரை நிமிடம் பாடியிருக்க மாட்டார். அந்தத் தில்லைக் கூத்தனே தன் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, ஆறுமுகசாமியின் முன் பிரசன்னமாகி, 'போதும் பக்தனே போதும்' என்று கதறும் வரையில் ஆறுமுகசாமியை நாங்கள் பாடவைத்திருப்போம். சிற்றம்பல மேடையில் கொஞ்சம் இரத்தமும் சிந்தியிருக்கக் கூடும். அதனாலென்ன, நூற்றாண்டுகளாய் அங்கே சிந்திய இரத்தத்தின் கறையைக் கழுவுவதற்கு அது பயன்பட்டிருக்கும்.
சிற்றம்பல மேடையில் தீட்சிதர்களுடன் போலீசு மல்லுக்கட்டுவதைப் போன்ற காட்சி ஒளிபரப்பானதே, அந்தக் காட்சிதான் 'கண்ணால் காண்பது பொய்'என்ற முதுமொழிக்கு மிகப் பெரும் சான்று. தீட்சிதர்களிடமிருந்து தமிழைப் பாதுகாப்பதற்கு அல்ல, எமது தோழர்களிடமிருந்து தீட்சிதர்களைப் பாதுகாப்பதற்குத்தான் ஆயிரக்கணக்கில் அங்கே போலீசு குவிக்கப்பட்டிருந்தது.
...................................................
இதை நம்ப மறுப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்காகவே இரண்டாவது காட்சி தில்லைக் கோயிலின் வாசலில் அன்று மாலையே அரங்கேறியது. "சிற்றம்பல மேடையில் 2 வரிகள் கூடத் தேவாரம் பாட இயலவில்லை. எனவே, அரசு ஆணையின்படி சிற்றம்பல மேடையில் அமைதியாக தேவாரம் பாடி வழிபட காவல்துறை வழி செய்யவேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் 30 பேர்மீது கொலைமுயற்சி மற்றும் தீண்டாமைக் குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்" என்று கோரினார் ஆறுமுகசாமி. அவரது தலைமையில் எமது தோழர்கள் தெற்கு வாயிலின் முன் மறியல் நடத்தினர்.
"நீங்கள் கலைந்து செல்லாத வரை தீட்சிதர்கள் மீது நீங்கள் கொடுத்துள்ள புகாரை வாங்கமுடியாது" என்றனர் போலீசு அதிகாரிகள். "ஆறுமுகசாமி பாடுவதற்கு உத்திரவாதம் அளித்தால் கலைந்து செல்கிறோம்" என்று மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ராஜு கூறினார். ஆனால் "அதற்கெல்லாம் எந்த உத்திரவாதமும் தரமுடியாது, கலைந்து செல்லுங்கள்" என்றார் ஆர்.டி.ஓ. "மீண்டும் பாட அனுமதிக்கும் வரையில் அமைதியாக ஆலயத்தின் வாயிலிலேயே அமர்ந்திருப்போம் கலைந்து செல்ல முடியாது" என்று ஆறுமுகசாமியும் அனைத்து தோழர்களும் ஒரே குரலில் கூறினர்.
உடனே, பின்புறத்திலிருந்து மர்மமான முறையில் ஒரு கல் வந்து விழுந்தது. இதற்காகவே காத்திருந்தவர்கள் போல அடுத்த கணமே கூட்டத்தினர் மீது போலீசார் தடியடித் தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டனர். சிவப்புச் சட்டை அணிந்த எங்களது தோழர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் சிதறிக் கலைந்தவர்களையும் தெருத்தெருவாக விரட்டி விரட்டித் தாக்கியது போலீசு. இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படாத காட்சி. இதற்கு சிதம்பரம் நகர மக்கள்தான் சாட்சி.
சிற்றம்பல மேடையில் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைப் பிடித்துத் தள்ளுகிறான் ஒரு தீட்சிதன். பத்திரிக்கைகளில் புகைப்படங்களே வெளிவந்திருக்கிற்றன. "போலீசு அதிகாரிகளை தீட்சிதர்கள் தண்ணீர் பாக்கெட்டால் அடித்தார்கள், கடித்துக் குதறினார்கள், தாக்கினார்கள்" என்று கண்ணால் கண்ட பத்திரிகையாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் சாந்த சொரூபிகளாக, சட்டையைக் கழற்றிவிட்டு நோகாமல் அணைத்து தீட்சிதர்களையும் வெளியேற்றுகிறார்கள் போலீசுக்காரர்கள்.
அதே போலீசு அன்று மாலை தோழர்கள் மீது தடியடி நடத்தும் காட்சியும் தொலைக்காட்சிகளில் சிறிதளவு ஒளிபரப்பானது. ஒரு தோழரை 4 போலீசார் சுற்றிக்கொண்டு மண்டையில் அடிக்கின்றனர். வயிற்றில் லத்தியால் குத்தி அவரைக் கூழாக்குகின்றனர். இது மாலையில் போலீசின் நடத்தை!
'சமஸ்கிருதத்துக்கு ஒரு நீதி தமிழுக்கு ஒரு நீதி' என்பதைக் களைவதற்காகப் போடப்பட்ட ஒரு அரசாணை! அதனை அமல் படுத்தக் கோரினால் 'சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி' என்ற அதைவிடப் பெரிய அரசாணை அம்லாகிறது! "தமிழ் பாடலாம்" என்று ஆணையிடுகிறது அரசி. "அதை அமல் படுத்த உத்திரவாதம் தரமுடியாது" என்று அந்தக் கோயிலின் வாசலிலேயே நின்று பிரகடனம் செய்கிறார் ஆர்.டி.ஓ. "அமல்படுத்து" என்று கேட்ட எமது தோழர்கள் போலீசு வேனுக்குள் இரவு முழுவதும் வைத்துப் பூட்டப்படுகிறார்கள்.
மார்ச் 2-ஆம் தேதி காலையில் யானை மீது ஏறி தில்லை நகர வீதிகளில் நாயகனாகப் பவனிவந்த ஆறுமுகசாமி அன்று மாலையே 'அவருக்கு உரிய' இடத்துக்கு தள்ளப்பட்டு வுடுகிறார். "எனக்காகப் போராடிய பிள்ளைகளை அடித்துக் கைது செய்தாயே, என்னையும் கைது செய்!" என்று தன்னந்தனியனாக போலீசு நிலையத்தின் முன் மறியல் செய்கிறார். காலையில் சிற்றம்பல மேடையில் போராட்டம்! மாலையில் போலீசு நிலையத்தின் முன் போராட்டம்!
பார்ப்பனத் திமிரையோ, போலீசின் அராஜகத்தையோ, இந்த அரசின் இரட்டை வேடத்தையோ அம்பலப் படுத்துவதற்காக மட்டும் இவற்றையெல்லாம் விவரிக்கவில்லை. இதுவரை விவரிக்கப் படாத ஒரு கொடுமையை, பலர் ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு எதார்த்தத்தை, நந்தனின் உள்ளத்தை எரித்திருக்கக் கூடிய அந்த உண்மையை வாசகர்கள் உணரச் செய்வதற்காகத்தான் இவற்றை விவரித்தோம்.
.....................................................
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நுழையக்கூடாத கோயிலுக்குள் நுழையக் கனவு கண்ட நந்தனை 'கிறுக்கன்' என்று அவனுடைய சொந்த சாதிகாரர்களே ஏளனம் செய்திருக்கக் கூடும். 'திமிர் பிடித்த மூடன்' என்று பார்ப்பன உயர்சாதிக்காரர்களே ஏளனம் செய்திருக்கக் கூடும். கேட்பாரில்லாத அநாதையாய் அவன் அந்த ஆலையத்தின் வாயிலில் எரிந்திருக்கக் கூடும்.
நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. காலம் மாறிவிட்டது. அரசும் ஆணையிட்டு விட்டது. ஆனால் மார்ச் 2-ஆம் தேதி மாலை தில்லைக் கோயிலின் தெற்கு வாயிலில், எமது தோழர்கள் ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கிக் கைது செய்யப்பட்ட பிறகு, அந்த நந்தனைப் போலவே, கேட்பாரற்ற அநாதையாக, நந்தன் எரிந்த அதே வாயிலில் ஆறுமுகசாமியும் அமர்ந்திருந்தார். 'என்னை எரித்துக் கொல்' என்று நந்தன் பார்ப்பனர்களிடம் மன்றாடவில்லை. ஆறுமுகசாமியோ 'என்னைக் கைது செய்' என்று போலீசிடம் போராடினார். நீதிமன்றத்தில் மன்றாடினார். ஏனென்றால் நாங்கள் அகற்றப்பட்டபின் அவருக்குத் துணை நிற்க அங்கே யாரும் இச்லை. தமிழுக்குத் துணை நிற்க ஒரு தமிழனுமில்லை. பக்தனுக்குத் துணை நிற்க ஒரு பக்தனுமில்லை.
ஆறுமுகசாமி என்ற எஃகுறுதி மிக்க ஒரு கிழவனை முன்னிறுத்திப் போராடித் தமிழ் பாடும் உரிமையை நாங்கள் பெற்றோம். அரசாணை வந்ததை உலகறியும். அன்று காலை ஆறுமுகசாமி பாடப் போகிறார் என்பதை அந்த மாவட்டமே அறியும். தில்லைக் கோயிலைச் சுற்றியிருக்கும் ஆதீனங்கள் எத்தனை? தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள்...! எல்லாம் ஏக்கர் கணக்கில் தமிழ் வளர்த்த ஆதீனங்கள்! தமிழ் நெய்யால் தொந்தி வளர்த்த ஆதீனங்கள்! ஆறுமுகசாமியோ நெய்யைக் கண்ணாலும் கண்டறியாத ஒரு பரதேசி.
தில்லையைச் சுற்றித்தான் எத்தனை ஓதுவாமூர்த்திகள்! சைவத் திருமறை வளர்க்கத்தான் எத்தனை மன்றங்கள்! எத்தனை புலவர்கள், அறிஞர்கள், விழாக்கள், பட்டங்கள், விருதுகள்! வாய்க்கு வாய் 'திருச்சிற்றம்பலத்தை' மென்று துப்பும் உதடுகள்! ஆனால் உதைபட்டவர்களோ நெற்றி நிறைய நீரணிந்த பக்கர்கள் அல்ல. திருமறையில் ஒருவரியைக் கூட ஓதியறியாத செஞ்சட்டை அணிந்த எமது தோழர்கள்!
எங்கள் பெருமையை எடுத்தியம்புவதற்காக இவற்றைக் கூறவில்லை. தமிழகத்தின் சிறுமையை எண்ணி மனம் நொந்ததனால் கூறுகிறோம். நாம் மானமும் சொரணையும் உள்ள மக்களாயின் தமிழ் என்றைக்கோ சிற்றம்பல மேடை ஏறியிருக்கும். அதற்கு அரசாணையின் துணை தேவையில்லை. மானத்தையும் சொரணையையும் அரசாணையால் உருவாக்கமுடியாது. சட்டத்தால் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்கமுடியாது.
கருணாநிதி அரசின் இடத்தில் ஜெயலலிதாவின் அரசு இருந்திருக்குமானால் இப்படியொரு அரசாணையே வந்திருக்காது. உண்மைதான். ஆளும் இந்த அரசாங்கங்களிடையே வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஆளப்படும் மக்கள்? ஒருவேளை இப்படியொரு அரசாணை வந்திருக்கவில்லையென்றாலும், தமிழகம் குமுறிக் கொந்தளித்து எழும்பியிருக்கப் போவதில்லை. கசப்பானதுதான், எனினும் இதுதான் உண்மை.
இந்த உண்மையைத்தான் வேறுவார்த்தைகளில் கூறுகிறார்கள் தீட்சிதப் பார்ப்பனர்கள். "யாருக்கும் பிரச்சினை இல்லை, இவர்கள் மட்டும்தான் பிரச்சினை செய்கிறார்கள்" என்று குற்றம் சாட்டுகிறார்கள். தீட்ச்சிதன் வாயிலிருந்து வந்தாலும் உண்மை உண்மைதானே!
இந்த உண்மையின் காரணமாகத்தான் நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமைச் சுவர் இன்னும் நின்று கொண்டிருக்கிறது.
சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறலாமென்ற அரசாணை வந்தபிறகும், தமிழர்கள் கிடைக்காமல் அந்த மேடை தவித்துக் கொண்டிருக்கிறது.
இத்தனைக்குப் பிறகும் ஆறுமுகசாமியின் போராட்டத்தைத் தொடர்வதற்கு அடுத்தொரு 'சாமி' வரவில்லையென்றால், எந்தச் சாமியின் மீதும் பூததின் மீதும் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்ருகளாகிய நாங்கள் அந்த மேடைமீது ஏறிநின்று "உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்" என்று பாட வேண்டியிருக்கும். அது இன்னொரு வரலாற்றுச் சாதனையாக அமைய நேரிடும்.
அத்தகையதொரு 'சாதனை' தமிழகத்துக்கு நிச்சயம் பெருமை சேர்க்காது. எங்களுக்குச் சிறுமையும் சேர்க்காது.
'புதியகலாச்சாரம்' மார்ச்/08 இதழில் வெளியான தலையங்கக் கட்டுரை...
Thursday, March 13, 2008
தில்லைச் சிற்றப்பலத்தில் தமிழ்:வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம்! ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment