காற்று வீசுகிறது...
கொடி அசைகிறது...
நீர்த்திவலைகள் தெறிக்க
அடித்து வருகிறது
மடை திறந்த
வெள்ளம்.
முரசங்கள் அதிர்கின்றன.
பறை முழங்குகிறது.
மகிழ்ச்சியில்
கசிகிறது சினம்.
சினத்தில்
கலக்கிறது மகிழ்ச்சி.
கல்லறைச் சுவரில்
மோதி எதிரொலிக்கிறது
அடங்க மறுக்கும் குரல்.
அதனடியில்
ஆயிரமாண்டாய்
சலனமற்று வெந்த உடல்
சடசடக்கிறது.
பரவும் அனலில்
சுவரின்
காரை பெயர்கிறது.
சிதறிக் கிடக்கிற
திரிசூலத் துண்டுகள்
மெல்லப் பொசுங்குகின்றன..
எரிகின்ற உடலின்
இதழ்க் கோடியில்
விரிகிறதொரு
புன்னகை.
மீளும் சுவாசத்தில்
அதிர்கிறது
நிலம்.
காற்று வீசுகிறது...
கொடி அசைகிறது...
கரம் இறுகுகிறது...
பேனா ஈட்டியாகிறது...
(29-03-08 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்திய 'தில்லைச் சமரில் வென்றது தமிழ்' பொதுக் கூட்டத்தில், காற்றின் வழியே கடந்து சென்ற சொற்கள்...)
நன்றி தோழர் அரசுபால்ராஜ்(http://arasubalraj.blogspot.com/)
0 comments:
Post a Comment