Thursday, March 13, 2008

'திருவரங்கத்தில் விடையாற்றியும்....திருவையாற்றில் அசுரவியூகமும்....

யுகமாய்த் தொடரும் தேவாசுரப் போரின்

புதிய அத்தியாயம் எழுதப்பட்டது திருவரங்கத்தில்


தேவாசுரப்போரில் அசுரர் பங்கையும்

தேவருக்குத் தாரை வார்த்த அசதியில்

பள்ளி கொண்டிருந்த

அரங்க நாதன் அறிதுயில் கலைய‌

அரங்கேறியது திருப்பள்ளி எழுச்சி


மூலவர் கருவறை வழிமறைக்கும்

நந்தீஸ்வர இந்து முன்னணி

ஊர்வலத்திற்கு மட்டுமில்லை

சீரங்கத்தில் அவாளின்

உத்திரை வீதியும் சித்திரை வீதியும் தாண்டி

உற்சவ மூர்த்திகளையே

உலா விட மறுத்தன சூத்திர வீதிகள்


அன்றுதான் முதன் முதலாக அங்கே

பார்ப்பானும் பகவானும் சண்டாளன் ஆயினர்

பஞ்சமனும் சூத்திரனும் பெண்டுகளும்

பள்ளிகொண்டானைத் தொட்டுத் துயிலெழுப்பி

பள்ளி எழுச்சி பாடினர்

பிறவிப் பயனை எய்தியே விட்டனன்

'பிறவா யாக்கை'ப் பெம்மான் தானும்.


பட்டாசு கொளுத்தி மிட்டாய் கொடுத்து

பூசுர அகம்பாவ துவம்சம் செய்த‌

அசுர தீபாவளி ஆரம்ப மானது.


காலகால நூல்வேலி கிழித்தே

கருவறை நுழைந்தது செம்பதாகை

அம்பேத்காரும் பெரியாரும்

ஆங்கெழுந் தருளினர்


ராமஜென்ம பூமியென அனுமார்கள்

கொடியேற்றிய கரசேவைக்கு

அம்பேத்கர் பிறந்த மண்ணின்

பெரியார் பூமியின்

விடையாற்றி இது.

.............


அடுத்த அத்தியாயம் அசுர கானமாய்

ஆரம்ப மானது தஞ்சை மண்ணில்....


மூப்பனார்கள் தோப்பனார்

முப்பாட்டனார் காலந்தொட்டே வழிவழியாய்க்

"கோத்திரஞ்சொல்லு - உன்

கோத்திரத்தின் சூத்திரம் சொல்"லெனச்

சொல்லச் சொல்லியே சூத்திரர் நுழையாமல்

அவாளை மாத்திரமே அனுமதித்த‌

உஞ்சி விருத்திப் பரம்பரை ஆதிக்கப்

பஞ்ச நதீஸ்வர பரிபாலன ஐயாற்றில்

அரங்கேறியது ஓர் அசுர வியூகம்


தியாகப் பிரம்ம ஆராதனையில்

பஞ்சரத்தினக் கீர்த்தனை

மங்களம் பாடுமுன்

திக்குகளெல்லாம் திக்குமுக்காட‌

ஊடறுத் தொலித்தது ஒயிலாட்ட விசில் விசில்...அபயகரமருளும் உபயதாரர்

மூப்பனர்ஜீயின் முகமெலாம் வேர்க்க‌

'தூரதர்சனி'ன் கேமரா அங்கிள்கள்

தாறுமாறாய்ப் புறம்புறம் திரிய‌

அரங்கத்தில் விரிந்தன செம்பதாகைகள்


சங்கு சக்கரங் கதிகலங்கிடச்

சனாதனத்தின் குலைநடுங்கிட‌

கங்கைவார்குழல் 'திங்குதிங்'கெனச்

சைவாதீனம் பதைபதைத்திட‌

அசுரகானம் முழங்குகின்றது

அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.


"அப‌ச்சார‌ம் அப‌ச்சார‌ம்

அப‌ஸ்வ‌ர‌ம் அப‌ஸ்வ‌ர‌ம்

ஆப‌த்து ஆப‌த்"தென‌ப்

ப‌றைகேட் ட‌திர்ந்த‌

பூசுர‌ அசுண‌ங்க‌ள் புல‌ப்ப‌லாயின‌


ஆர்ப்பாட்ட‌த்தின் போர்ப்ப‌ர‌ணியை

ஐயாற்றின் வீதிக‌ளில் ம‌ட்டுமில்லை

ஐயாற‌ப்ப‌ன் செவிப்ப‌றையினிலும்

அறைந்த‌றைந்த‌திர்ந்த‌து ப‌றை


அவ‌னுக்கு ம‌ட்டும் இல்லையா ஆசை?

ஏழிசையாய் இசிப்ப‌ய‌னாய்

நிற‌வ‌ன‌ன்றோ அவ்வீச‌ன்!

எந்நாட்ட‌வ‌ர்க்கும் இறைவ‌னே எனினும்

எத்த‌னை நாளாய் அதையே கேட்க‌

'இராம‌ நீ ச‌மான‌ம் எவ‌'ரென‌ ம‌ட்டும்?

த‌ஞ்சையில் கேட்ட‌ த‌மிழிசை அமுதை,

'ப‌ண்ணாய்ந்த சுந்தரேசன்'

பண்தோய்ந்த செந்த‌மிழை

மீண்டும் மீண்டும்

ஐயாற்றிலும் கேட்க‌ அவ‌னுக்கும் ஆசை


த‌ண்ட‌பாணித்தேசிக‌ர் பாடிய‌

த‌மிழிசை மேடையை

அசுர‌கான‌ம் புகுந்த‌ மாசென‌

சீர‌ங்க‌க் க‌ருவ‌ரையைத்

தீட்டுக்க‌ழித்த‌ திமிர்த்த‌ன‌மும்

தேவாதிதேவ‌ப் ப‌ழியுந் துடைத்தே

மீட்டுக் கொடுத்த‌து அசுர‌கான‌மே


ஐயாற‌ப்ப‌னும் அர‌ங்க‌நாத‌னும்

க‌ட்டுண்டு கிட‌ந்த‌ன‌ர்

ஏழிசைச் சூழ‌லில்....


அல‌ம‌ந்து சில‌ம‌ந்தி

ம‌திலேறி முக‌ம் பார்க்கும் திருவை யாறே!...


"நெடுமை நெடுங்கால‌மெலாம் ஆரிய‌த்தின் கையால்

நெஞ்சொடிக்க‌ப்ப‌ட்ட‌ க‌தை மாறி ந‌ட‌ந்தேறும்...

புற‌த்தெழுந்த‌ புதுப்பாட்டாய்ப் பொய்ய‌ழிந்த‌ செய்தி

புதுப்ப‌ண்ணின் இசையோடு யாழ்ந‌ர‌ம்பில் ஓடும்".


*பொதிகைச் சித்த‌ர்.

'புதிய‌ க‌லாச்சார‌ம்' மே'1997 இத‌ழில் வெளியான‌க‌விதை இது...

1 comments:

Anonymous said...

hi

i am a staunch brahmin still enjoyed your poetical words....you have this much knowledge in sanathana dharma, I pity it is misapplied..

any case appreciate your humour...

your avaal and ivaal are only supporting tamils and democracy which is getting sold to money power.