Sunday, February 8, 2009

சி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம் - தீக்கதிர்!.... மற்றும் ’கோயபல்ஸ்’ செல்வப்பெருமாள்!!...

அன்பார்ந்த தோழர்களே!

ஈழப் போராட்டங்கள் குறித்தும், அங்கு சிங்கள பேரினவாத ராணுவத்துடன் கூட்டு சேர்ந்து இந்திய மேலாதிக்க அரசு நடத்திவரும் மாபெரும் தமிழின அழிப்பு பாசிச நடவடிக்கைகள் குறித்தும், விடுதலைப் போராட்டத்தில் மக்களுடன் ஒன்றுபடாமல், சிங்கள இனவெறி இராணுவத்தையொத்த பாசிச முகத்தோடு மக்களைப் பராமரித்து வரும் புலிகள் குறித்தும் தொடர்ந்து எதிர்த்துப் பேசவேண்டிய எழுதவேண்டிய, போராட வேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்து வருகிறேம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை எட்டப் போகும் இந்த இனவிடுதலைப் போரினை மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்தில், சரியான நிலைப்பாட்டில் அனுகுவதன் கடமையை உணர்ந்தே எமது தோழர்கள் இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில், போலி கம்யூனிச கட்சியாக இருந்து, டாடாயிஸ்ட், ரவுடியிஸ்ட், என்கிற படிநிலைகளில் ‘முன்னேறி’, குஜராத் இந்து பாசிஸ்டுகள் மக்கள் மீது ஏவிய பாலியல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளைக் கையாண்டு, கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டுப்போட்டு ஆதரித்துவந்த மேற்குவங்கது மக்கள் மீது பிரயோகித்ததன் மூலம் சி.பி.எம்.(மோடியிஸ்ட்)ஆக பரினமித்த போலிகள், இப்போது, போலித்தனமேயல்லாத, கலப்பில்லாத, ’அக்மார்க்’ பாசிஸ்ட்டாக ‘உயர்ந்திருக்கிறார்கள்’.

ஈழப் போராட்டம் குறித்த தமது கட்சியின் நிலைப்பாடு(!) ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த நிலைப்பாட்டைவிடக் கேவலமாக நாறிக்கொண்டிருக்கிறது; தமது கட்சியின் அணிகள் மத்தியில். கட்சியின் நேர்மையான அணிகள் பலர் சந்தடியில்லாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளதோடு, கட்சியில் செயல்படும் அணிகளும் கடுமையான அதிருப்தியோடு இருப்பதை எதிர்கொள்ளமுடியாத தலைமை, அவர்களுக்கு ‘வகுப்பு’கள் நடத்தி புரியவைக்கக் கோரியிருக்கிறதாம். ஜெயாமாமியுடன் இவர்கள் கொண்டுள்ள ‘மதச்சார்பற்ற’ கூட்டணி குறித்து பிறகு பேசலாம். ஈழ போராட்டம் பற்றி இவர்கள் பிதற்றி வருவது குறித்து இப்பதிவில் எனது கருத்துக்கள் சிலவற்றைப் பதியலாம் என்றிருக்கிறேன்.

சி.பி.எம். கட்சியின் தீக்கதிர் என்கிற கழிவறைக் காகிதத்தையும், கூலிக்கு அவதூறு பரப்பும் கோயபல்சு செல்வப்பெருமாளின் சில பதிவுகளையும் எடுத்துக் கொண்டு சுருக்கமாக இவ்விடயத்தை அனுகலாம் என்று நினைக்கிறேன்.

ஈழப் போராட்டத்தில் அப்பாவி மக்கள் யாரும் சாகடிக்கப்படவேயில்லை, இங்குள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சிலர்தான் மக்கள் சாகடிக்கப்படுவதாக பேசிவருகின்றனர், என்கிற ’ஹிந்து’ராமின் கருத்துக்களின் தமிழாக்கத்தைத்தான் தீக்கதிரின் பக்கங்களில் நாம் காணமுடிகிறது. ஈழ மக்கள் கேட்பாரில்லாமல் அழிந்து கொண்டிருக்கும்போது, இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி குறித்து சிலாகித்து எழுதுகிறான் தீக்கதிரில். அதுவும் முதல் பக்கத்திலேயே “யுவராஜ் சிங் அபார சதம்....” என்று படத்துடன் செய்தி வெளியிடுகிறான். அதனைப் பார்க்கும்போதே வயிறு பற்றியெறிகிறது. அங்குள்ள அப்பாவித் தமிழ்மக்களின் மரணஓலம் இவன் காதுக்கு கேட்கவில்லையாம், ’கிரிக்கெட் ரசிகர்களின்’ விசில் சத்தத்தைச் சிலாகிக்கிறான்.



கேட்டால், “கிரிக்கெட் ரசிகர்களும் கட்சிக்குள் வந்து கம்யூனிஸ்டாகலாம் அல்லவா?.. அதற்காகத்தான் கிரிக்கெட் செய்திகள்” என்று சொல்கிறான். கிரிக்கெட் ரசிகர்கள் கம்யூனிஸ்டாகலாம், தமிழர்கள் கம்யூனிஸ்டாவதற்கு அருகதையற்றவர்களா? இங்குள்ள உணர்வுள்ள மக்களின் மீது மலம் கழிப்பதைப் போல்தான் அவன் வெளியிடும் கிரிக்கெட், சினிமாச் செய்திகள் இருக்கின்றன. அதனால்தான் அப்பத்திரிக்கையினை கழிப்பறைக் காகிதம் என்று சொல்கிறேன்.

அதேபோல சி.பி.எம்.மின் இணையக் கோமாளி ‘சந்திப்பு’ என்கிற கே.செல்வப்பெருமாள் வேறு, இப்போது எங்கெங்கேயோ சுற்றி மேய்ந்து லெனினிடத்தில் சரணடைந்து ’இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு’ என்கிற தலைப்பில் ஒரு பதிவினைப் பதிந்துள்ளான். அப்பதிவில் அவன் மேற்கோள் காட்டியுள்ள தோழர் லெனினின் வரிகளைத் தவிர மற்றவையத்தனையும் வடிகட்டிய பொய்களாகவும், பிதற்றலாகவுமே இருக்கின்றன. அவன் மேற்கோள் காட்டியுள்ள வரிகளிலிருந்தே தோழர் லெனின் சி.பி.எம்.மின் போலித் தேசிய நிலைப்பாட்டைத் துவைத்து வெளுக்கிறார்.

///////தேசங்களுக்குத் தன்னாட்சி உரிமை என்பதை எச்சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு பிரிந்து செல்வதற்கான தகுதி உண்டு என்பதுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. பிரிவினைப் பிரச்சனை ஒவ்வொன்றையும் சமூக வளர்ச்சி முழுவதன் நலன்கள், சோசலிசத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள் ஆகியவற்றுடன் அது பொருந்துகிறதா என்ற தகுதியை மட்டுமே கொண்டு சமூக ஜனநாயகக் கட்சி தீர்மானிக்க வேண்டும்.(லெ.தொ.நூ.19.429)
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை//// - இது அவன் குறிப்பிட்டுள்ள தோழர் லெனினின் மேற்கோள்களில் ஒன்று.

‘சோசலிசத்திற்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள்...’ என்பதைப் பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்குத் தகுதியிருக்கிறதா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஈழப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள், சிங்கள பேரினவாத அரசிடம் பொங்கி வழிவதாக இவர்கள் உருவகப்படுத்துகின்ற கேவலமான நிலையில், லெனினின் மேற்கோள்கள் இவர்களது தேசிய நிலைப்பாட்டின் மீது காறி உமிழ்வதாகத்தானே இருக்கிறது!

’மாநில சுயாட்சி...’ என்கிற இவர்களது பசப்பல்வாதம் இந்தியாபோன்ற ‘ஜனநாயகம் பூத்துக்குலுங்கும்’ நாட்டிலேயே சாத்தியப்படவில்லை என்பதை நாங்கள் சொல்வது ஒருபுறமிருக்கட்டும், அதை இவர்களது கட்சியே சொல்லிவருகிறதே! மே.வங்கத்தில் இவர்கள் கோட்டைவிட்ட துறைகளின் முன்னேற்றமில்லாத நிலை குறித்து கேள்வி கேட்டால், நேரடியாக மத்திய அரசைக் காட்டுகிறார்களே, அது ஏன்? இவர்கள் போதிக்கும் ‘மாநிலத்திற்கான சுயாட்சி...’ அங்கே அம்மனமாக நிற்கிறது. இதே நிலைதான் இந்திய தேசியம் என்கிற பார்ப்பன-இந்துதேசியத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து மாநிலத்தின் அவலநிலைகளாகக் காட்சியளிக்கின்றன. இவன் என்னடான்னா இலங்கை அரசிடமிருந்து மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள பரிந்துரை செய்கிறான், இதனால்தான் இவனைக் கோமாளி என்று சொல்ல வேண்டியுள்ளது.

தனி ஈழம் அல்லது ஒன்றுபட்ட இலங்கை என்கிற இருவேறு கருத்துக்களுக்கும் மத்தியில், தீர்வினை ஒடுக்கப்படுகின்ற மக்களின் சுயநிர்ணய உரிமையின் மூலமாகத்தான் எட்டமுடியும் என்று சொல்பவர்களெல்லோரும் திரிபுவாதிகளாம். சுயநிர்ணய உரிமை என்பது என்ன? ஒடுக்கப்படுகின்ற தமிழ் இனமக்கள், இத்தனையாண்டுகாலம் தம்மை ஒடுக்கியழித்த சிங்கள பேரினவாதத்தோடு இணைவதையோ அல்லது விலகுவதையோ தமது சொந்த அனுபவத்தின் மூலமாக முடிவு செய்வதுதான் சுயநிர்ணய உரிமையாகும். அது தனி ஈழக் கோரிக்கையினை ஆதரிக்கலாம், அல்லது எதிர்க்கலாம். அதேபோல் ஐக்கியத்தையும் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். சுய நிர்ணய உரிமை என்பது தனி ஈழத்தை மட்டுமே கோரிக்கையாகக் கொண்டது அல்லவேஅல்ல. இதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

சி.பி.எம்.செல்வப்பெருமாளோ, சுயநிர்ணய உரிமையை தனி ஈழக் கோரிக்கையோடு மட்டும் பொருத்தி தனது பிழைப்புவாத அரசியலுக்கு சுதிசேர்க்கத் துடிக்கிறான். மார்க்சிய ஆசான் லெனினது மேற்கோள்களை தமக்கேற்றவாறு சுருக்கி, வெட்டி எடுத்து மோசடியாக ஒட்டவைத்துக் கொள்கிறான். இவனைப் பொட்டிலறைவது போல தோழர் லெனின் தமது ‘தேசிய இனப்பிரச்சினை குறித்த விமர்சனக் குறிப்புகள்...’ எனும் நூலில் கீழ்கண்டவாறு சொல்கிறார்.

ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றூம் கருதுவது நமது உரிமையும், கடமையுமாகும்.” - லெனின். (தே.வி.பா.ச. - பக்கம்’ 245)

ஒடுக்கும் இனத்திலிருக்கும் தொழிலாளர்களின் சர்வதேசிய உணர்வினை வளர்த்து ஒடுக்கப்படுகின்ற இனத்திற்காகப் போராடச் செய்கின்ற வகையிலா இவர்கள் வழிபடும் ஜே.வி.பி. இருந்துவருகிறது? எனவேதான், ஜே.வி.பி.யின் அடியொற்றி நடக்கும் இப்போலிகளை ஏகாதிபத்தியவாதிகள் என்றும் கயவர்கள் என்றும் போலிகள் என்றும் நாம் உறுதியாகக் கூறுகிறோம். தோழர் லெனின் தான் நம்மை அவ்வாறு கருதச் சொல்கிறார்.

(பதிவின் நீளம் கருதி தோழர் இரயாகரன் அவர்களின் ‘தேசியம் எப்பொழுதும், எங்கும் முதலாளித்துவ கோரிக்கைய ஒழிய, பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல...’ என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு குறிப்புகளை இங்கே பதிவதைத் தவிர்க்கிறேன். அதேபோல தோழர் லெனின் சி.பி.எம். என்கிற திரிபுவாத கும்பலை அம்பலப்படுத்துவதற்காகவே எழுதிய குறிப்புகள் பலவற்றையும் தவிர்க்கிறேன்.)

பொதுவாக இனப்போராட்டங்கள் குறித்து இந்த போலிக்கும்பல் எடுக்கும் நிலைப்பாடுகள் பாட்டாளிவர்க்க நிலைப்பாடுகளாக இல்லாது பார்ப்பனவாத நிலைப்பாடுகளாக வெளிப்பட்டு அம்பலமாகிவிடுகிறது. பார்ப்பன-இந்து தேசியத்தினை இந்திய தேசமென்றும் தேசத்தின் புனிதமென்றும் ஏனைய பார்ப்பனிய-முதலாளித்துவ ’தேசிய’க் கட்சிகளான காங்கிரசு, பாஜக வோடு ஒத்த குரலெழுப்புவதில் போலிகளின் பங்கு கனிசமானது. காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இப்போலிக் கும்பல் கொண்டிருக்கும் நிலைப்பாடு பார்ப்பன-இந்துவெறி பாசிஸ்டுகளின் நிலைப்பாட்டோடு ஒன்றிப்போவதுதான் இதற்கான நேரடி சாட்சியாக இருக்கிறது. போதாக்குறைக்கு, விடுதலைக்காகப் போராடும் காஷ்மீர் மக்களை “பிரிவினைவாதிகள்...” என்று முத்திரைகுத்தி செய்திவெளியிடுகின்றன, இவர்களின் ஏடுகள்.

எனவே, ஈழப் போராட்டமும் இவர்களது பார்ப்பன-இந்து தேசியக் கண்ணோட்டத்தில்தான் விமர்சிக்கப்படுகிறதேயொழிய அதிலொன்றும் மார்க்சியக் கண்ணோட்டமுமில்லை, வேறெந்த மண்ணாங்கட்டியுமில்லை. இந்த பார்ப்பன அரிப்புதான் இலங்கையின் ஜே.வி.பி.யோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டே இல்லையென்று மோசடியாக மறுத்தும் வருகிறது. இதனை அம்பலப்படுத்தி போலிகளை நேர்மையானவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் அணிகளின் மத்தியில் கேள்வியெழுப்ப வேண்டும்.

கடைசியாக, முத்துக்குமாரின் மரணம் குறித்த இவர்களது மதிப்பீடுகள், அவரது தீக்குளிப்பை சாதாரண தற்கொலையாக்கி அவரது தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறது. தீக்குளிப்பதற்கு முன் அவர் வெளியிட்ட அந்த அற்புதமான மரணசாசனத்தை பெயரளவுக்கேனும் பரிசீலிக்கத் தயங்கி, அதனை மொத்தமாக புறக்கனிக்கிறது, இக்கும்பல். முத்துக்குமார் தன்னுடலை எரிப்பதற்கு வைத்த தீ, கண்டும் காணாதமாதிரியிருக்கும் இச்சமூகத்தின் அமைதியின் மேல் வைக்கப்பட்ட தீயாக இருப்பதால் பதறுகிறது இப்பாசிசக் கூட்டம். அவர் தன் மரணத்தின் மூலமாக சொல்கின்ற செய்தியினை உயர்த்திப்பிடிப்பவர்களை ‘பிணவாத அரசியல்’ நடத்துபவர்கள் என்று தூற்றுகிறது.

யார் பிணவாத அரசியல் நடத்துபவர்கள்? ஒரு இளைஞன், எந்தவிதமான தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அல்லாமல், சமூகத்தின் இழிநிலையைப் போக்க தன் உடலைக் கொளுத்திக் கொண்ட தீயை எடுத்து, அவனது புரட்சிகர விருப்பத்தினை ஏற்று, அத்தீயினை சமூக அற்பத்தனத்தின் மீது வைப்பது பிணவாத அரசியல் என்றால்; 44பேரை குழந்தைகள், பெண்கள் என்று தீயிலிட்டுப் பொசுக்கிய வெண்மணியினை வைத்து நீங்கள் நடத்துவது என்ன புரட்சிகர அரசியலா? இல்லை, அதுதான் பிணவாத அரசியல். வெண்மணியின் தாக்கத்தை நீங்கள் ஓட்டுகளாக்கிப் பொறுக்கியது அன்றி, அதனைக் கொண்டு வேறு ஏதேனும் சிறு துரும்பையேனும் இதுவரை அசைத்திருக்கிறீர்களா?

கூலி உயர்வுக்காக நிலப்பிரபுவுடன் களம் கண்ட வெண்மணியில் நீங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டை, கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், அப்போராட்டத்தினையொத்த போராட்டமாக வெடித்த நக்சல்பரியில் உமது கட்சி ஏன் மாறுபட்டு நின்றது? ஜோதிபாசு தன்னுடைய போலிசு துறையினைக் கொண்டு தமது சொந்த அணிகளையே சுட்டுத்தள்ள உத்தரவிட்டது எப்படி நேர்ந்தது? அதனால்தான் சொல்கிறேன், வெண்மணியில் நீங்கள் செய்தது பிணவாத அரசியல். அதனால்தான், வெண்மணிக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவை போற்றிப் பாதுகாத்த தி.மு.க.வோடு அடுத்த தேர்தலிலேயே கூட்டணி வைத்து சோரம்போக முடிந்தது உங்களால்.

44 பேரை பலிகொடுத்த உழைக்கும் மக்கள், கருக்கறிவாள், வேல்கம்புகளுடன் லட்சக்கணக்கில் திரண்டு நின்றபோது, சட்டப்போராட்டத்தின் மூலமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று பசப்பல்வாதம் பேசி அவர்களின் உணர்வுகளை மழுங்கடித்தீர்கள். ஆனால், நக்சல்பரியில் விதைக்கப்பட்ட தியாகிகளின் உடல்களிலிருந்து எழுந்த புரட்சித்தீ இன்றுவரை, (உங்கள் மொழியில் சொல்வதானால்) சுக்குநூறாகப் பிளவுண்டிருந்தாலும் ஆளூம்வர்க்கத்தை குலைநடுங்கச் செய்துகொண்டிருக்கிறது. எதிர்கால சமூகமாற்றத்திற்கும் நம்பிக்கையூட்டக்கூடியவர்களாக நக்சல்பரிகளே இருந்துவருகின்றனர்.

எனவே, ஓட்டுப்பொறுக்கி பிழைப்பதற்காக நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பிணவாத அரசியலை ஒருபோதும் மற்றவ்ர்கள்மீது நீங்கள் சுமத்த முடியாது. நீங்கள் மற்றவர்களின் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள், உங்களையே மீண்டும் மீண்டும் கேள்விக்குட்படுத்தி அம்பலப்படுத்துகின்றன.

ஈழப் போராட்டத்தில் ஹிந்து ராம் என்பவனோடு நீங்கள் வைத்திருக்கும் கருத்தொற்றுமையும், பார்ப்பன-இந்து தேசியப் பார்வையும் உங்கள் கட்சியின் சீரழிவிற்கு பெரும் பங்காற்றியிருக்கிறது. இதே சமகாலத்தில், ஜெயாவுடன் நீங்கள் கொண்டிருக்கும் கூட்டணியும் அதற்கு கூடுதல் பங்குவகிப்பதன் மூலமாக உங்களின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இன்னும் மிச்சமிருப்பது கொடியும் கோவணமும்தான். அதனை உருவி எறிகிற வேலைகளை எஞ்சியிருக்கும் நேர்மையான அணிகள் செய்வார்கள்.

புரட்சிகர வணக்கங்களுடன்!


ஏகலைவன்.

தொடர்புடைய பதிவுகள்.....

1. சி.பி.எம். கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட நிலைப்பாடும், டவுசர் கழன்ற சந்திப்பும்

2. இந்திய அரசே தலையிடாதே! சிபிஎம் பாசிஸ்ட்டே கோயபல்ஸ் தனத்தை நிறுத்து!!

3. ஈழ மக்கள் மீது மலம் கழிக்கும் சந்திப்பு: இந்திய மேலாதிக்கத்துக்கு கம்பளம் விரிக்கும் போலி கம்யூனிஸ்டுகள்...

4. ஈழம்: இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

5. ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!

6. மனித அவலத்தை நிறுத்த, யுத்த நிறுத்தம் ஒரு தீர்வா!? அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா?

1 comments:

Anonymous said...

தோழரே

உங்கள் கட்டுரை கோட்பாடு ரீதியிலும், அதையே நகைச்சுவை கலந்து எழுவதிலும் வலிமையாக உள்ளது, வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

வினவு