Wednesday, April 7, 2010

தொழிற்சங்கம் என்கிற முகமூடியணிந்து முதலாளிகளுக்கு கன்சல்டன்சி வேலை செய்யும் சி.ஐ.டி.யூ.வின் கைக்கூலித்தனம்!

அன்பார்ந்த தோழர்களே!

மேநாள் – 2010 நெருங்கிவிட்டது. போலிகம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., உள்ளிட்ட ஏனைய ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளின் தலைமையிலான முதலாளித்துவ ஆதரவு - பிழைப்புவாத தொழிற்சங்கங்கள் மேநாள் கொண்டாட்டத்தை வழக்கம்போல ஒரு சடங்காக, சம்பிரதாயமாக, தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வு ஏற்பட்டுவிடாதவாறு பாதுகாப்புடன், குடியும் கூத்துமாக கொண்டாடவிருக்கின்றன. தொழிலாளி வர்க்கமாக உணர்வுபெற்று களம் கண்ட சிகாகோ தொழிலாளர்கள், உலகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, தங்கள் இரத்தம் சிந்தி பெற்றளித்த கொடையான எட்டுமணிநேர உழைப்பு, எட்டுமணிநேர ஓய்வு, எட்டுமணி நேர உறக்கம் போன்ற அடிப்படையான உரிமைகள் பறிக்கப்பட்டு, இன்றையதினம் பத்துமணிநேரம், பனிரெண்டு மணிநேரம், பதினாறு மணிநேரம் என்று வேலை வாங்கப்பட்டு, கடுமையாக வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள், நமது தொழிலாளிகள்.

முதலாளித்துவ கொடுமையிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு அடிப்படையான தேவையான சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமைகூட இன்றைய மறுகாலனிய சூழலில் முற்றாக மறுக்கப்படுகின்ற அவலநிலையில்தான் நமது தொழிலாளி வர்க்கம் சிக்கியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் உள்நாட்டு முதலாளிகளை, சிறுதொழில்களை மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு, நூறு கோடி மக்களின் சந்தையைக் குறிவைத்து தினம் ஒரு கம்பெனியாக படையெடுத்துவருகின்ற பன்னாட்டு பகாசூர நிறுவன்ங்கள் ஒருபுறம்; மேலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, இந்தியாவின் வேலையற்ற கோடிக்கணக்கான இளைஞர்களின் உழைப்பை அற்ப கூலிக்கு சுரண்டுவதோடு, இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கான கோடி சலுகைகளும் பெற்று நமது தேசத்தை மொட்டையடித்துச் செல்லும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் இந்திய தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் மறுபுறமும், நமது மைய-மாநில போலி ஜனநாயக அரசுகளிடம் தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டப் ‘பாதுகாப்பையே’ முதன்மையான தேவையாகக் கோருகின்றன. ஏகாதிபத்தியங்கள் வீசுகின்ற எலும்புத்துண்டுகளுக்கு நாக்கைச் சுழற்றிக்கொண்டு, தாராளமயத்தை ஆதரிக்கும் நமது கைக்கூலி ஆட்சியாளர்கள் இதுபோன்ற ஒத்துழைப்புகளையும் தாராளமாக செய்துகொடுப்பதாகத்தான் ஒப்புக்கொண்டிருப்பார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கைக்கூலி ஆட்சியாளர்களுக்கும் பன்னாட்டு பகாசூர நிறுவனங்களுக்கும் இடையில் மோசடியாகப் போடப்படும் ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்களின் இரகசியப் பக்கங்களுக்குகிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது இந்தியத் தொழிலாளிகளின் வாழ்வுரிமை.

சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் வாயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய மேநாளில் ஏற்றப்பட்ட (போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியின்னைச் சார்ந்த) தொழிற்சங்கக் கொடியை அடியோடு பெயர்த்து உடைத்தெறிந்தனர் அக்கம்பெனியின் நிர்வாகிகள். கனிசமான எண்ணிக்கையிலான தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்ததோடு வெகுமூர்க்கமாக நடந்துகொண்டது ஹுண்டாய் நிர்வாகம். அந்நிர்வாகத்திற்கு சகலவிதமான ‘ஒத்துழைப்பை’யும் தந்து தொழிலாளிகளை ஒடுக்குவதற்கு தோள்கொடுத்து நின்றது கருணாநிதியின் போலீசு. இதுபோன்ற அடாவடியான நடவடிக்கைகளைச் செய்து முடித்தபிறகு அதற்கான காரணமாக அவன் சொன்னது, தொழிலாளிகளுக்கு சங்கம் வைத்துக்கொள்ளுகின்ற உரிமையெல்லாம் எமது நிறுவனத்திற்குள் கிடையாது, என்பதைத்தான். போலி கம்யூனிச சி.பி.எம். கட்சியின் தலைமை, ஹூண்டாயின் இப்படிப்பட்ட காட்டுத்தனமான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் பேர்வழியென்று கிளம்பி, கருணாநிதி ஆட்சி மட்டும்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று பிரச்சினையை திசைமாற்றி ஓட்டுக்களாக்கவே முயற்சிதத்து. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் நலன்களுக்காக தொழிலாளிகளின் உரிமைகள் சட்ட ரீதியாக பலியிடப்பட்டிருப்பது குறித்து இன்றுவரை வாய்திறக்க மறுக்கிறது அதன் கைக்கூலி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ. ஏனெனில் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சி தான் ஆளுகின்ற மாநிலங்களில் இதே மாதிரியான அல்லது இதைவிடக் கொடிய வகையில் முதலாளிகளுடன் ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டிருக்கிற இக்கட்சியை, இப்படிப்பட்ட மோசடிகளை இருட்டடிப்பு செய்யவேண்டிய ஆளும்வர்க்க கடமையுணர்ச்சிதான் பேசவிடாமல் தடுக்கிறது போலும்!

அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த நோக்கியா நிறுவனத்தில் கூட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் முறையான முன்னறிவிப்பின்றி, நியாயமான காரணமுமின்றி வேலையில்லை என்று சொல்லி திடீரென நடுவீதியில் தூக்கி வீசப்பட்டார்கள். தொழிலாளர்களின் தன்னிச்சையான போராட்டங்கள் கடுமையாக்கப்பட்டும் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் நோக்கியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட நிர்வாகம் மசியவில்லை. மூவாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால நேரம் பாராமல் உழைப்பதற்காக ஆயிரக்கணக்கில் ஆள் கிடைப்பதால், ஐயாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டு இத்தனையாண்டுகள் தமக்கு உழைத்தவனை சிறிதும் இரக்கமின்றி, ஏதேனும் ஒரு காரணம் சொல்லி தூக்கி வீசுகிறது (நண்பர் அதியமானின் ஆதரவு பெற்ற...) முதலாளித்துவம். இவையெல்லாம் நமது மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத பன்னாட்டு முதலாளிகள், அவர்களிடம் அற்ப சம்பளத்திற்கு உழைப்பை விற்று உயிர்வாழும் தமது தொழிலாளிகளுக்கு எதிராகச் செய்துவரும் ஒரு சில ‘சேவை’களுக்கான உதாரணங்கள்.

இவை தவிர, பெரும்பான்மையான (அரசு நிறுவன்ங்கள் உள்ளிட்ட) முதலாளித்துவ நிறுவனங்களில் கடந்த பத்து, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகத் தொழிலாளர்களாகவே வைத்து சுரண்டப்படுகின்ற, பணி நிரந்தரமின்றிக் கொத்தடிமைகளாகத் தவித்துவரும் இலட்சக்கணக்கான, தொழிலாளிகளும் நமது நாட்டில்தான் இருந்துவருகின்றனர். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் முதல் ரயில்வே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் உற்பத்தி நிறுவனங்கள் என்று நீண்ட பட்டியலாக அணிவகுத்து நிற்கும் அரசு நிறுவனங்கள் தமது உற்பத்திக்கு பல பத்தாண்டுகளாக அத்துக்கூலிகளாக, தற்காலிகப் பணியாளர்களாக சுரண்டப்பட்டுவரும் பெரும்பான்மையான தொழிலாளர்களை நம்பித்தான் இருக்கின்றன. மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்னமேயே, தமது சொந்த நிறுவன்ங்களிலேயே தொழிலாளிகளை ஒடுக்கியும் சுரண்டியும் வருகின்ற நமது அரசுகள், பன்னாட்டு நிறுவன்ங்கள் வீசுகின்ற சில எலும்புத்துண்டுகளுக்காக நமது தொழிலாளர் உரிமைகளை பலியிட ஒருபோதும் தயங்கியிருக்காது, என்பதன் நேரடியான விளைவுகளைத்தான் இன்றையதினம் (பெயரளவுக்கான) அனைத்து உரிமைகளையும் இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் அவல நிலையில் காண்கிறோம்.

இருப்பினும், இவையெல்லாம் எங்கோ ஒரு நிறுவனத்தில், உலகின் எங்கோ ஒரு மூலையில் அல்லது நமது ஏழை தேசமான இந்தியாவில் மட்டும் நடைபெறுகிற நிகழ்வுகளல்ல. உலக முதலாளித்துவமோ அல்லது ஏகாதிபத்தியத்தியமோ தொழிலாளர்களின் மீதான இத்தகைய கொடூரமான சுரண்டலில்தான் தம்மைத் தக்கவைத்துக் கொள்கிறது. முதலாளியத்தின் முதன்மையான, பெரும்பான்மையான மூலதனமே உழைப்புச் சுரண்டலில்தான் இருக்கிறது என்பதுவும், முதலாளி வர்க்கம் என்ற ஒன்று இருக்கும் வரை தொழிலாளி வர்க்கம் விடிவும் விடுதலையும் பெறமுடியாது என்பதுவும்தான் மார்க்சியத்தின் அரிச்சுவடி. இந்தியாவின் பெரும்பான்மையான நிறுவனங்களில் சுரண்டப்படும் தொழிலாளிகள், தம்மீதான முதலாளித்துவ சுரண்டலை முறியடிக்க முடியாமல் சிக்கியிருப்பதற்குக் காரணம் அவர்கள் போலி கம்யூனிச சங்கங்களால் வர்க்க உணர்வற்று பராமரிக்கப்படுவதுதான். கொடியிலும் பெயரளவிலும் மட்டும் சிவப்பு நிறத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர் விரோதமாகவும், வெளிப்படையான முதலாளித்துவ ஆதரவோடும் சங்கம் நடத்திவரும் போலிகள் தமது செந்நிறத்தைத் தக்கவைத்துக் கொவதற்காக மட்டும் கூலியுயர்வு, போனஸ், சீருடைகள், மருத்துவக் காப்பீடு போன்ற ஒரு சில பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து பெயரளவுக்கான போராட்டங்களை ‘புரட்சிகரமாக’ நடத்திவருகின்றனர். மேற்கண்ட பொருளாதார கோரிக்கைகள் ஒரு சில நிறுவன்ங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழங்கப்பட்டுவிட்ட போதிலும்கூட அந் நிறுவன்ங்களின் தொழிலாளிகளின் மீதான சுரண்டலிலோ, தொழிலாளிகளின் வாழ்நிலையிலோ எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை.

ஏனெனில், போலி கம்யூனிசக் கட்சியின் ஊதாரித் தலைவர்களுக்கு இப்படிப்பட்ட தொழிற்சங்கங்கள்தான் தங்கச் சுரங்கங்களாகக் காட்சியளிக்கின்றன. ஒரு தொழிற்சாலையில் சங்கம் தொடங்குவதற்கு முன்பே ஒரு பேரம், அப்பேரத்தில் சங்கம் தொடங்காமலிருக்க கைக்கூலிகளைப் பெற்றுக் கொண்டு ‘நா நயமாக’த் திரும்பிவிடுவது. ஒருவேளை பேரம் படியாவிட்டால் உடனே ஆலை வாயிலில் ‘புரட்சி’ தொடங்கிவிடும். போலிகள் அள்ளி வீசும், தொழிலாளிகளுக்கு ஆதரவான வார்த்தைச் சவடால்களை நம்பி சங்கமாகத் திரண்ட அப்பாவித் தொழிலாளிகள்தான் அடுத்த பலிகெடா. அப்படியே பேரம் படியும் வரை, அந்த முதலாளி எலும்புத்துண்டுகளின் எண்ணிக்கையைக் கூட்டும் வரை ‘புரட்சி’ பல்வேறு வடிவங்களில் (மொட்டையடித்துக்க்கொள்ளும் போராட்டம், கோவணம் கட்டும் போராட்டம், பாடை கட்டும் போராட்டம் என்று....) தொடரும். ஒருவழியாக முதலாளியே, இது கடிக்கின்ற நாய் அல்ல, குரைக்கின்ற நாய்தான் என்று புரிந்து கொண்டு, ”நமது செல்லப்பிராணியாக இருந்துவிட்டுப் போகட்டுமே...” என்று இறங்கி வந்து பேரத்தை நிறைவு செய்வான். உடனே சி.ஐ.டி.யூ.வின் ‘புரட்சி’ அம்முதலாளியின் காலடியில் சமர்ப்பிக்கப்படும். இவர்களை நம்பி வந்த தொழிலாளிகளுக்கு “இருக்கவேயிருக்கு செங்கொடி, அதையே ஈரத்துணியாக்கி வயிற்றில் சுற்றிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளுங்கள்...” என்கிற ‘புரட்சிகர’ யோசனைகள் வழங்கப்பட்டுவிடும்.

தோழர்களே! நகைப்பதற்காக நான் இவற்றை இங்கே குறிப்பிடவில்லை. இதுதான் நடைமுறையிலிருக்கும் உண்மையும்கூட. குந்தக்குடிசைகூட இல்லாமல் கட்சிக்குள் வந்து ஒரு சில ஆண்டுகளுக்குள் அடுக்குமாடிகள் கட்டி காரில் வலம் வரும் ‘காம்ரேடு’களின் திடீர் வளர்ச்சிக்குப் பின்னே ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் வாழ்க்கை பலியிடப்பட்டிருக்கிறது. ஏனைய ஓட்டுப்பொறுக்கி கட்சிகளைச் சார்ந்த திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் கூட இப்படிப்பட்ட கொலைபாதக வழிமுறையை கற்பனையும் செய்துபார்த்திருக்க மாட்டார்கள். வாட்டர் டேங்க், சாலைகள், கட்டிடங்கள், போன்ற காண்ட்ராக்ட்கள் மூலமாகவும் ரியல் எஸ்டேட் மாஃபியா தொழிலின் மூலமாகவும், கட்டைப்பஞ்சாயத்து – கந்துவட்டி மூலமாகவும் காசு பார்க்கும் இதர ஓட்டுப்பொறுக்கி கட்சிகளின் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளைவிட, தம்மை நம்பி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் ஈரக்குலையை அறுத்து காசுபார்க்கும் இந்த முதலாலிய கைக்கூலிகளின் நடவடிக்கைகள் ஆகக் கேவலமானவையாகக் கருதி அம்பலப்படுத்தப்பட்டு ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.

இந்நிலையில் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டி, தத்தமது சொந்த பிரச்சினைகளுக்காக மட்டும் போராடுவதை விடுத்து, தொழிலாளர்கள் மீதான சுரண்டலில் பொதிந்துள்ள சமூக அடித்தளத்தை உணர்த்தி, வர்க்கப் போராட்ட்த்திற்கு அணிதிரட்டப்படுகிற வகையில் செயல்படும் புரட்சிகர தொழிற்சங்கத்திற்கான தேவையை இன்றைய தினம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கிற எமது அமைப்பு நிறைவேற்றி வருகிறது. பு.ஜ.தொ.மு.வில் இணையும் பெரும்பான்மையான தொழிலாளிகள் ஏற்கெனவே ஏதேனும் ஒரு துரோக சங்கத்தினால் பழிவாங்கப்பட்ட்தை உணர்ந்து, தமது பிரச்சினைகளுக்கு வெறும் பொருளாதார – கவர்ச்சிகர கோரிக்கைகளைத் தவிர்த்து சமூகரீதியிலான கோரிக்கைகளையும் முன்வைத்து போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்ற, அத்தகைய புரட்சிகர போராட்டங்களினூடாகத்தான் நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்று அணிதிரட்டப்படுகின்ற காரணத்தினால்தான் இந்த மாற்றத்தைத் தேர்வு செய்கிறார்கள். தொடக்க நிலையிலிருந்தே மா-லெ முறைப்படி பயிற்றுவித்து வளர்க்கப்படும் அத்தொழிலாளிகள் வர்க்க உணர்வுடன் அணிதிரட்டப்படுவதோடு, இன்றைய மறுகாலணியச் சூழலையும் முதலாளித்துவ பயங்கரவாத்த்தையும் தமது சொந்த அனுபவத்தினூடாகப் புரிந்துகொள்கிறார்கள்.

பல்லாண்டுகளாக காண்ட்ராக்ட் தொழிலாளர்களாகவும், தற்காலிகப் பணியாளர்களாகவும் சுரண்டப்பட்டு நலிந்த தொழிலாளிகள், புது உற்சாகம் பெற்று பு.ஜ.தொ.மு.வின் தலைமையில் பணி நிரந்தரத்திற்கான போராட்டத்தைத் தொடங்கி, இத்தனையாண்டுகாலம் நீடித்த தம் மீதான உழைப்புச் சுரண்டலை எடுத்துச் சொல்லி நியாயம் கோருகிறார்கள். தமது வியர்வையையும் இரத்த்த்தையும் உறிஞ்சிக் கொழுத்த முதலாளியை வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு துணிந்து அம்பலப்படுத்தி வெட்கித் தலைகுணியச் செய்கிறார்கள். அப்பாவி மக்கள் மத்தியில் கோடீசுவர்ர்கள் என்றும் கொடை வள்ளல்கள் என்றும் உருவேற்றி செயற்கையாக மதிப்பை உயர்த்திக் கொண்ட முதலாளிகளின் கபட வேடங்கள் கலைக்கப்பட்டு, அவர்கள் இதுநாள்வரை செய்த அயோக்கியத்தனங்கள் நமது புரட்சிகரத் தொழிலாளிகளின் தொடர் போராட்டங்களின் மூலமாக அடுத்தடுத்து அம்பலப்படுத்தப்படுவதால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய போராட்டங்களை மூர்க்கமாக எதிர்கொள்ளும் முதலாளிகளுக்கு, தேவையேற்பட்டால் உழைத்துக் காய்த்த கரங்களின் வலிமையையும் கொஞ்சம் லேசாக உணர்த்துகிறார்கள்.

சுரண்டிக் கொழுக்கும் முதலாளிக்கு எதிராக நீறு பூத்த நெருப்பாகத் தொடர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் பகையுணர்வின் புரட்சிகரப் பரினாமம் இத்தகைய போராட்டங்களில்தான் வெளிப்படத் தொடங்குகிறது. தமது நியாயமான, அடிப்படையான கோரிக்கைகளை முன்வைத்து போராடத் துவங்கும் தொழிலாளிகள் தொடர்ந்து தொய்வின்றி முன்னேறுகிறார்கள். இது முதலாளிகளை ஏகமாக அச்சுறுத்துவதோடு, இதுநாள்வரை தான் பார்த்த பிழைப்புவாத சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு நேரெதிராக பு.ஜ.தொ.மு. நடந்துகொள்வதால் அதனை வீழ்த்த, திரும்பவும் சி.ஐ.டி.யூ. போன்ற சங்கங்களையே நாடுகிறார்கள். எமது புரட்சிகர அமைப்புகளால் ஏற்கெனவே மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் போலி கம்யூனிச முகாமும் இத்தகைய சுரண்டல்வாத முதலாளிகளோடு உவப்புடன் இணைந்துகொண்டு, தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிதும் கூச்சமின்றி ஈடுபட்டுவருகிறார்கள். பு.ஜ.தொ.மு.வின் தலைமையிலான தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்குவதற்கு சட்டரீதியிலான தொழிற்சங்க நுனுக்கங்களை முதலாளிகளுக்கு சொல்லித்தருகின்ற அரும்பணியை போலிகம்யூனிச சி.பி.எம்.மின் தலைவர்களே செய்கிறார்கள். பு.ஜ.தொ.மு. வீச்சாக செயல்படுகின்ற தொழிற்சாலைகளில் முதலாளிவர்க்கத்தின் எடுபிடிகளாகவும் கன்சல்டண்டுகளாகவும் புரோக்கர்களாகவும் (Consultants or Broker) மேல்நிலையாக்கமடைந்து சந்திசிரிக்கிறது சி.பி.எம்.மின் தலைமை.

முதலாளித்துவ வர்க்க எதிரிகளோடு கரம் கோர்த்துக் கொண்டு நமக்கெதிராக்க் களமிறங்கியிருக்கும் போலிகம்யூனிச துரோகிகளின் செயல்பாடுகள், எமது தொழிலாளத் தோழர்களின் உறுதியான போராட்டங்களுக்கு முன்னால் அம்மனமாக நிற்கின்றன. இவர்களை மேன்மேலும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேண்டிய நமது வேலையைக்கூட குறைத்து தம்மைத்தாமே அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் எதிரிகளும் துரோகிகளும். ’சி.ஐ.டி.யூ. கண்சல்டன்சி’ கம்பெனியின் அடுத்த கட்ட ‘பரினாமத்தை’ நம்ம ‘காம்ரேடு’களுக்கு காட்டியிருக்கிறது. விரைவில் தமது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சங்கங்களையும் கலைத்துவிட்டு, அந்தந்த முதலாளிகளுக்கு கண்சல்டன்சிகளாக மாற்றி, அத்தொழிலாளிகள் இனிமேலாவது வர்க்க உணர்வு பெறுவதற்கு உதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ‘சி.ஐ.டி.யூ. கன்சல்டன்சி’யின் மூலமாக நம்ம ‘காம்ரேடுகள்’ வெகு விரைவில் தமது கனவுலகத்தை எட்டிவிடலாம் என்று மேநாள்-2010ன் மூலமாக வாழ்த்துகிறேன்.

இதுகுறித்து ஒரு தோழருடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது “அட போங்க தோழர், போலி கம்யூனிஸ்டுகள் நமது பகுதிகளில், தமது கட்சியின் சின்னத்திலுள்ள அரிவாளுக்கும் சுத்தியலுக்கும் இடையிலேயே சுரண்டலைத் துவக்கி வைத்து அதிலும் ஒரு ’புரட்சி’ செய்துவருகிறார்களே உங்களுக்கு அது தெரியாதா...” என்று கேட்டு, கேட்க்க் கூசுகின்ற மேலும் சில அயோக்கியத்தன்ங்களை விவரித்தார். அதுகுறித்து மேலும் சில வரிகள் (இந்தப் பதிவோடு தொடர்புடையதாக இருப்பதால்) குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று எண்ணுகிறேன்.

இப்போது நெல் அறுவடைக்காலம். அனைத்து மாவட்டங்களிலும் அரசு கொள்முதல் என்பது பெயரளவுக்கே இருப்பதால், புரோக்கர்களின் கையிலேயே, அவன் கொடுக்கும் குறைவான காசை வாங்கிக் கொண்டு நெல்லை விற்கும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள், பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள். இந்த சிறு, குறு விவசாயிகள் போலி கம்யூனிச கட்சியின் செங்கொடியின் கீழ் விவசாயிகள் சங்கமாகவோ அல்லது விவசாயத் தொழிலாளிகள் சங்கமாகவோ இருக்கிறார்கள். இவர்களிடம், நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக படையெடுக்கும் புரோக்கர்களோடு செல்லும் லோடுமேன் எனப்படும் சுமை தூக்கும் தொழிலாளிகள் அதே செங்கொடியின் கீழ் சுமைதூக்கும் தொழிலாளிகளாக அணி திரட்டப்பட்டவர்கள். ஆனால், புரோக்கரோடு இணைந்து கொண்டு, அவன் கொடுக்கும் நூறு, இருநூறு பிச்சைக் காசுக்காக, எடைத்திருட்டு செய்து விவசாயியின் வயிற்றிலடித்துவருகிறார்கள். இம்மோசடியைக் கொஞ்சமும் கூசாமல் நியாயப்படுத்தி அந்த சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகளே நேரடியாக இத்திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயத் தொழிலாளர்களும் ஆலைத்தொழிலாளர்களும், வயிற்றுப்பாட்டுக்காக அறிவாள் பிடித்த கரங்களும் இரும்பைப் பிடித்த கரங்களும் ஒன்றினைந்துதான் புரட்சியைச் சாதிக்க் வேண்டும் என்பதை வலியுறுத்தித் தான் அறிவாள் சுத்தியலைத் தமது சின்னமாக உலக பாட்டாளி வர்க்கம் உயர்த்திப் பிடித்துவந்திருக்கிறது. அத்தகைய உன்னதமான உலகப்பாட்டாளி வர்க்க சின்னத்தை இரண்டு, மூன்று சீட்டுகளுக்காகவும் ஓட்டுப் பொறுக்கிப் பிழைப்பதற்காகவும் புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் சமர்ப்பித்து “அம்மாவின் ஆசிபெற்று....” இழிவுபடுத்தும் இப்போலிக் கம்யூனிசக் கயவாளிக் கும்பல் கிராமப்புறங்களில் செய்யும் அயோக்கியத்தனங்களைப் பாருங்கள். அறிவாள் பிடித்தவனின் குரல்வளையை நெறிக்க இரும்பைப் பிடித்த கரங்களை ஏவுகின்ற அயோக்கியத்தனத்தைக் கேளுங்கள். இத்தகைய எடைத்திருட்டு நடவடிக்கைகளில் மாட்டிக் கொண்டால், சொந்த கட்சித் தோழர்களாலேயே தாம் ஏமாற்றப்பட்டதை எண்ணி விவசாயிகளால் காறி உமிழப்படும் போது போலிகம்யூனிசக் கட்சியோடு சேர்த்து செங்கொடியும் அவர்கள் மத்தியிலிருந்து வெறுத்து ஒதுக்கப்படுகின்றது.

இதுபோன்ற சமூகத்தின் கடைமட்டத்தில் இருக்கும் உழைப்பாளிகளான சுமைதூக்கும் தொழிலாளர்களது வர்க்க உணர்வு, தன்னுடைய சொந்த வர்க்கமான விவசாயத் தொழிலாளர்களது வலியைக் கூட உணரமுடியாத அளவிற்கு சீரழிந்திருக்கிறது. போலி கம்யூனிச கட்சியின் அரசு ஊழியர் சங்கத்தில் இணைந்து கொண்டு லஞ்சம் வாங்கிப் பிழைக்கும் அதிகாரிகள், தாம் லஞ்ச-ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டால் காப்பாற்றிவிடுவதற்கு சங்கம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால்தான் அச்சங்கத்தைத் தேர்வு செய்கிறார்கள். மக்கள் மத்தியில் லஞ்சம் வாங்குவதற்காக சாதாரணமாகவே காறி உமிழப்படும் அரசு ஊழியர்களில் எண்ணிக்கையில் அதிகமானவர்களைக் கொண்ட பெரிய சங்கமே சி.பி.எம். கட்சியின் சங்கம்தான். இப்படியே பட்டியல் போட்டுக் கொண்டு சென்றால் பக்கங்கள் பல கடந்து செல்லுமேயொழிய போலிகளின் இழிநிலைப் பட்டியல் முடிவுக்கு வராது போலும்.

பிழைப்புக்காக எதையும் செய்யும் இத்தகைய கயமைக் கூட்ட்த்தை இனியும் நம்பிக் கொண்டிருப்பதற்கு ஏதேனும் ஒரு முகாந்திரத்தை நேர்மையான சி.பி.எம். கட்சியின் அணிகள் நமக்குக் காட்ட வேண்டும். இத்தகைய இழிநிலையைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாமல் தவிக்கும் சி.பி.எம். கட்சியின் நேர்மையான தோழர்களை புரட்சிகர அமைப்புகளின் இணைந்து செயலாற்ற மேநாள் – 2010ல் அறைகூவி அழைக்கிறோம்!

புரட்சிகர வணக்கங்களுடன்,
ஏகலைவன்.

12 comments:

said...

சுயசிந்தனை உள்ளவர்கள் ஏற்கனவே வந்துவிட்டார்கள் தோழர்

said...

////////மாதவராஜ் said...
நொந்தகுமாரன்!

ம.க.இ.க மட்டும் வார்த்தைக்கு வார்த்தை, மூச்சுக்கு முன்னூறு தடவை போலிக் கம்யூனிஸ்டுகள் எனச் சொல்வது சரியா?////

நண்பர் மாதவராஜ் அவர்களே!

சிபிஎம் / சிபிஐ கட்சிகள் மீதான போலி கம்யூனிஸ்டு என்கிற எமது மதிப்பீடு, வெறும் வசைபாடலோ அல்லத் கேலியோ அல்ல. ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்குரிய, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சிக்குரிய தன்மைகள் இல்லாத நிலையிலும், அக்கட்சிகளின் பெரும்பாலான நடவடிக்கைகள் முதலாளித்துவத்தை உயர்த்திப்பிடிப்பதாக இருக்கின்ற காரணத்தினாலும் மட்டுமே அவர்களை கம்யூனிச போலிகள் என்று மதிப்பிட வேண்டியுள்ளது.

1967-ல் நக்சல்பரி எழுச்சி ஏற்பட்ட போது, சிபிஎம் கட்சியின் விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த தோழர்கள் மே.வங்க ‘ஜோத்திதார்கள்’ எனப்படும் நிலவுடைமைக் கொடுங்கோலர்களுக்கு எதிராகப் போராடுகின்றபோது, அதே கட்சியின் தலைமையில் இருந்த ஜோதிபாசு (தன்னுடைய போலீசு துறை மூலம்) சொந்த கட்சியின் அணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி,அந்த நிலவுடைமையாளர் வீட்டு ஏவல் நாயாக நடந்துகொண்டது, எதைக்காட்டுகிறது? அக்கட்சியின் பாட்டாளி வர்க்கத்தன்மையையா?

ப.சிதம்பரம் என்கிற ஒரு ஏகாதிபத்திய கைக்கூலியுடன் இரண்டற கலந்து கொண்டு ‘பசுமை வேட்டை’ அல்லது ‘காட்டு வேட்டை’ எனப்படும், ஒரு கொடூரமான உள்நாட்டுப் போரை நடத்திவருகிற மாநில அரசுகளில், மேற்குவங்க சிபிஎம் அரசும் ஒன்று. ஏழை, எளிய பழங்குடி மக்களை காடுகளை விட்டு விரட்டியடித்துவிட்டு பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு, தாதுக்களும் கனிம வளங்களும் மண்டிக்கிடக்கும் காடுகளையும் மலைகளையும் சொந்தமாக்குவதற்காக போலீசையும் இராணுவத்தையும் ஏவுகின்ற ஆளும் வர்க்கப் பணியில், ‘கம்யூனிஸ்ட்’ என்று பெயர் மட்டும் வைத்திருக்கும் கட்சி, இன்முகத்துடன் ஈடுபட்டிருக்கும் போது அதனை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள், நண்பரே?

காங்கிரசும், பாஜகவும் இதர ஓட்டுக் கட்சிகளும் தத்தமது ஏகாதிபத்திய, முதலாளித்துவ சார்புத்தன்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது போல, இந்தக் கம்யூனிச போலிகள் ஒப்புக்கொள்வதில்லை, மாறாக பாட்டாளிகளைப் பாதுகாக்க வந்த பரமாத்மாவாகத் தங்களைக் காட்டிக் கொண்டு, பச்சையாக, சிறிதும் கூச்சமின்றி ஏகாதிபத்திய சேவையாற்றி வருகிறார்கள்.

சிங்கூரின் ஆயிரம் ஏக்கர் நிலத்தை டாட்டாவுக்கு வழங்கி, கார் தொழிற்சாலைக்காக சிபிஎம் அரசால் போடப்பட்ட ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’, காலாவதியாகிவிட்ட பிறகும் கூட இன்று வரை அந்த ஒப்பந்தங்களை அக்கட்சியின் அரசு இரகசியமாகவே வைத்திருக்கிறதே இதன் பொருள் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை, குறைந்த பட்ச செயல்திட்டத்தின் மூலமாகவும், தமது கட்சியின் நாடாளு மன்றப் பாதையின் மூலமாகவுமே சாதித்துப் பெற்றதாகப் பெருமை பேசிக்கொண்டார்கள், சிபிஎம் தலைவர்கள். அதே த.அ.உரிமைச் சட்டத்தின் மூலமாகக் கூட டாட்டாவுடன் கொல்லைப்புறமாகப் போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் விபரங்களைப் பெறமுடியவில்லை. அதற்கும் தடை வாங்கி வைத்திருக்கிறார்கள்.

இவர்களால் புனிதம், புனிதம் என்று உயர்த்திப்பிடிக்கப்படும் நாடாளுமன்றத்திலும் அனைத்து மாநில சட்ட மன்றங்களிலும் கூட விவாதங்களுக்கு அப்பாற்பட்ட இரகசியங்களாகவே அந்த அடிமைச் சாசனங்கள் (புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்) பராமரிக்கப்படுகின்றன.

காலாவதியாகி, இரத்து செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் விபரங்களையே பரம இரகசியமாக வைத்திருக்கும் இவர்கள், நந்திகிராம், லால்கார் இன்னும் இன்னும் எத்தனையெத்தனையோ ஒப்பந்தங்கள் குறித்து ஏதேனும் வாய்திறப்பார்களா?

ஏகாதிபத்தியச் சூறையாடலுக்கு விளைநிலங்களைப் பறித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை சி.பொ.ம. என்கிற பெயரிலும், தொழில் வளர்ச்சி என்கிற புனைவின் மூலமாகவும், ஒரே ஒரு முதலாளிக்காக பலியிட்டுக் கொடுக்கின்ற ஒரு ஆளும்வர்க்க கூட்டம், கம்யூனிசத்தின் பெயரால் செயல்படுகிறதென்றால், அக்கூட்டத்தை போலி கம்யூனிஸ்டுகள் என்று அடையாளப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும், ஐயா?

said...

/////இந்த அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற துடிப்பில், இடதுசாரிச் சிந்தனைகளோடு அளப்பரிய தியாகங்களும், போராட்டங்களுமே வாழ்க்கையாய் அமைத்துக்கொண்ட எத்தனையோ பேரை ஒரு வார்த்தையில் கேலி செய்வது முறையா?/////////

அவ்வாறு தியாகம் செய்த தோழர்கள் நினைத்திருப்பார்களா, தாம் தமது உயிரை விட அதிகமாக நேசித்த அரிவால் சுத்தியல் பொதித்த செங்கொடி, கேவலம் ரெண்டு,மூன்று சீட்டுகளுக்காக புரட்சித்தலைவியின் ’ஆசி’பெற்ற சின்னமாக தமது கட்சியால் அறிவிக்கப்படும் என்று!

தமது இரத்தமும் சதையுமாகக் கட்டிக் காத்த கட்சி, (உ.ரா.வரதராசன் கடைசியாக பிரகாஷ்காரத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல்) பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் ’யோக்கியர்’களால் தலைமை தாங்கப்படுமென்று!

நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தகைய தோழர்களின் தியாகங்களின் மீது சிறுநீர் கழிக்கின்ற அரசியல் நடைமுறையை வைத்திருக்கும் அக்கட்சியினைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது, என்பது எனது தாழ்மையான கருத்து.

தோழமையுடன்,
ஏகலைவன்.
http://yekalaivan.blogspot.com

said...

///////உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து சுமத்தும் பழிகள் (இங்கே நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விஷயங்கள் உட்பட) மே.வங்க அரசை குறிவைத்தே இருக்கின்றன./////

இருக்கட்டும்; அதற்கான உங்களது பதில் இவ்வளவுதானா?!

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக, பன்னாட்டு பகாசூர நிறுவனங்களின் கொள்ளைக்காக ஏழைகளை வஞ்சிக்கும், ஒரு ஆளும் வர்க்கச் சேவக அமைப்பினை போலி கம்யூனிஸ்டு என்று அழைப்பதற்கு மாற்றாக வேறு ஏதேனும் ‘நாகரீகமான’ பெயர் இருந்தால் நீங்களே அறிமுகப்படுத்துங்கள், ஐயா!

////இந்திய முதலாளித்துவத்திற்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சிகள் இயங்குகின்றன எனச் சொல்லியபடி, மே.வங்கத்தை நோக்கியே உங்கள் கைகள் நீள்கின்றன./////

மேற்குவங்கத்தில் சிபிஎம் நீண்ட நாட்களாக ஆளும் கட்சியாக இருப்பதனால் அதன் செயல்பாடு என்ன புனிதமானதாக ஆகிவிடுமா? இந்த ஒரே காரணத்தைச் சொல்லி “இந்த அளவுக்கு புனிதமான கட்சியைப் போய் விமர்சித்துவிட்டீர்களே...” என்று உடனே ஆத்திரப்படுகிறீர்களே. அவ்விமர்சனங்களுக்கான பதிலைச் சொல்லிவிட்டு கோபப்படுங்கள், ஐயா.

சிங்கூர் ஒப்பந்தங்களின் இருட்டுப் பக்கங்களுக்குள் உங்கள் கட்சியால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இரகசியங்களை எமக்கு அறியத்தாருங்கள். (இங்கு வேண்டாம் பிறிதொரு சமயத்திலேனும்)

மம்தாவுடன் கூட்டு என்கிற உங்கள் கட்சியின் பம்மாத்து நாடகமெல்லாம் அங்குள்ள பழங்குடியின மக்களாலேயே உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. மம்தாவுடன் உமது காம்ரேடுகள் கூட்டணி கட்டிக் கொண்டு ரியல் எஸ்டேட் கொள்ளை நடத்தி ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களை வீடற்றவர்களாக வீதியில் வீசியிருக்கிறார்கள். மே.வங்கத்தின் ராய்காட் பகுதியில் தான் இந்த அக்கிரமங்கள் நடைபெற்று வழக்குகளாகி அம்பலப்பட்டுள்ளது.

மாவோயிஸ்டு கட்சியுடன் அந்த பழங்குடியின மக்கள் நடத்திவரும் போராட்டம் ஏகாதிபத்திய-முதலாளித்துவ சூறையாடலுக்கு எதிரான வர்க்கப்போராட்டம். உங்கள் கட்சிக்கு எதிராக மம்தாவும், அல்லது மம்தா கட்சிக்கு எதிராக உமது கட்சியும் நடத்திக் கொண்டிருக்கும் குழாயடிச் சண்டை ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பு நடத்துவதற்கான வெட்டிப் போராட்டம். வர்க்கப்போராட்டத்தின் சமூக அடித்தளத்தை இருட்டடிப்பு செய்வதற்காகத்தான் உமது கட்சி அதனையும் ஏதோ ஒரு ஓட்டுக்கட்சியுடன் நடைபெறும் சாதாரண மோதலாகச் சித்தரிக்கிறது.

said...

////சிபி.எம் மீது முதலாளித்துவக் கட்சிகளுக்கு இருக்கும் கோபமும், வன்மமும் , ஒரு இடதுசாரி என்று தங்களைச் சொல்லிக் கொள்கிற நக்சல்பாரிக்கும் இருப்பது வினோதமானதாகவும், விசித்திரமாகவும் இல்லையா?////////

ஐயா, ஏனைய முதலாளித்துவக் கட்சிகள் குறித்து நீங்கள் பேசுவது ஒருபுறமிருக்கட்டும். சிபிஎம் கட்சியின் முதலாளித்துவ சார்புத் தன்மையை நான் இங்கே கேள்விக்குட்படுத்தியிருக்கிறேன்.

மே.வங்க நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக தமது போலீசு துறையைக் கொண்டு சொந்த கட்சித் தோழர்களையே சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட ஜோதிபாசுவின் வர்க்கத் தன்மையையும் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதைக் கண்டும் காணாதமாதிரி புறம் தள்ளிவிட்டு மீண்டும் மீண்டும் அதே பல்லவியைப் பாடுவது சரியல்லவே!

ஏனைய முதலாளித்துவக் கட்சிகளுக்கும் உமது கட்சிக்கும் உரிய வேறுபாட்டை, வெறும் கட்சியின் பெயர் சார்ந்த அடையாளங்களோடு அல்லாமல் வர்க்கத் தன்மையோடு விளக்குங்கள்.

said...

நண்பர் மாதவராஜ் அவர்களே!

இங்கு விவாதிக்க எனக்கு விருப்பமில்லை, என்றாலும் உங்களால் பதியப்பட்ட கருத்தின் மீது சில கருத்துக்களை நான் பதியவேண்டியது அவசியமாகிவிடுகிறது. அதனால்தான் இத்தனை பின்னூட்டங்களை வரிசையாகப் பதிந்துவருகிறேன். உங்களது பதில் கருத்தை இங்கு பதிவதை நீங்கள் தவிர்ப்பீர்கள் என்றால், வேறு எங்கு எப்போது நாம் விவாதிக்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியப்படுத்துங்கள். கருத்துப் பரிமாற்றமாகவே இவ்விவாதத்தை நான் எடுத்துச் செல்ல முயல்கிறேன். எனது எழுத்து நடையில் காணப்படும் குறைகளைப் பெரிதாக்காமல், பெருந்தன்மையோடு பொறுத்து(!) அதன் கருத்துக்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று பணிவுடன் வேண்டுகிறேன். இனி தொடர்ந்து......

/////இந்த முதலாளித்துவ அமைப்பில், இருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தோடு, ஒரு மாநில அரசாக, மே.வங்கத்தில் முறையாக நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்திய ஒரு இயக்கத்தை எப்போதேனும், எங்கேனும் ஒரு வார்த்தை நீங்கள் பாராட்டியதுண்டா.//////

மே.வங்கத்தில் உமது கட்சி முதலாளித்துவத்திற்கு ஆதரவாகச் செயல்படுவது சுட்டிக் காட்டப்படும்போதெல்லாம், உமது தலைமை அங்கு நடைபெற்றதாகச் சொல்லப்படும் நிலச்சீர்திருத்தத்தைப் பற்றித்தான் அங்கலாய்த்துக் கொள்ளும். விமர்சனத்திற்கு பதில் சொல்லாமல் தப்பித்துக் கொள்வதற்காக நடத்தப்படும் ‘மான்கராத்தே’ வரிகள்தான் இவை.

முதலில் மே.வங்கத்தில் நடத்தப்பட்ட நிலச் சீர்திருத்தம் என்பது பிற மாநிலங்களை விட சற்றுக் கூடுதலாக செய்யப்பட்டிருக்கலாம். அதனைக் கொண்டு பிற மாநில அரசுகளை விட மே.வங்க சிபிஎம் அரசு சாதித்துவிட்டதாகவும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அங்குள்ள புறம்போக்கு, உபரி நிலங்கள்தான் நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்டனவே தவிர, மே.வங்கத்தை ஆதிக்கம் செலுத்தும் ஜமீர்தார்களான ஜோத்திதார்களுக்கு எதிராக அவர்களிடமிருந்து பிடுங்கி கொடுக்கப்பட்ட சீர்திருத்தமல்ல.

நிலச் சீர்திருத்தம் என்பதன் பெயரிலேயே இது ஒரு சீர்திருத்தம் மட்டும்தான் என்பது புலனாகிறது. நிலவுகின்ற சுரண்டல்வாத சமூகக் கட்டமைப்பின் மீது வினையாற்றுவதைத் தவிர்த்து, ”மக்கள் இன்னும் புரட்சிக்குத் தயாராகவில்லை...” என்று அழுக்கப் புளித்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்து, “ஆகவே வெறும் பொருளாதார, சீர்திருத்த போராட்டங்கள் மட்டும் இப்போதைக்குப் போகும்...” என்று நியாயவாதம் பேசுகிறது உமது கட்சியின் தலைமை.

ஆனால், ஜிண்டால் என்கிற பன்னாட்டு பகாசூர நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்ட பழங்குடியின மக்களின் பூமியும், இப்போதைய போராட்டக் களமுமான லால்கார் பகுதியில் உமது சிபிஎம் அரசால் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் அளவு 4,500 ஏக்கர் மட்டுமே. இவை முழுக்க முழுக்க அரசாங்கத்தின் புறம்போக்கு நிலத்திலிருந்து மட்டுமே அம்மக்களுக்கு நிலசீர்திருத்தம் என்கிற பெயரில் வழங்கப்பட்டது. ஆனால், இன்று ஜிண்டாலுக்காக அதே பகுதியிலிருந்து 5,000 ஏக்கர் நிலத்தைப் (அதாவது கூடுதலாக 500 ஏக்கர்) பிடுங்கி அம்மக்களை அங்கிருந்து துப்பாக்கி முனையில் விரட்டியடிக்கிறது, இந்த சிபிஎம் அரசு.

இவையும் உமது கட்சி நிலச்சீர்திருத்தத்தின் மூலம் சாதித்தவைதான். இப்போது சொல்லுங்கள் இப்படிப்பட்ட ’நிலச் சீர்திருத்தத்தை’ பாராட்ட முடியுமா?

said...

/////இடதுசாரிக் கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஆற்றியிருக்கும் நல்ல காரியங்கள் ஒன்றுகூட உங்கள் கண்ணில் படவில்லையா?////

இந்திய உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, அவர்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற சுரண்டலுக்கு எதிராக உமது கட்சி ஒரு சிறு துரும்பைக் கூட இதுவரை அசைக்கவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து, ஐயா!

மாறாக, சுரண்டிக் கொழுக்கும் வர்க்கங்களுக்கு ஆதரவாக உழைக்கும் மக்களின் உரிமையை அன்றாடம் பலியிட்டுக் கொண்டிருப்பதுவும் உமது கட்சிதான், ஐயா.

நாடாளுமன்றப் பாதையின் மூலம் நீங்கள் சாதித்திருப்பதாகக் கருதுபவற்றை இங்கே பட்டியலிடுங்கள், பரிசீலிப்போம். நீங்கள் ‘சாதனைகள்’ என்று சொல்லிக் கொள்பவற்றை எடுத்து அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுக்கும் பொருத்தமுடியும். நீங்கள் குறிப்பிடுகின்ற சாதனைதான் ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்குரிய அளவுகோல்கள் என்றால், எம்.ஜி.யார் கூட சிறந்த கம்யூனிஸ்டாகத்தான் தெரிவார். அத்தனை சலுகைகளை அரசுத் திட்டங்கள் என்று காட்டி மக்களைத் திசைதிருப்பிவிட்டு, முதலாளித்துவ சேவையாற்றினார் அவர். ஆனால், மக்களைப் பொருத்தவரை அவர்தான் பாட்டாளி மக்களுக்கான சிறந்த தலைவராகத் தெரிகிறார்.

எம்.ஜி.ஆரின் மீதான அப்பாவி மக்களின் இத்தகைய மதிப்பீடு தவறுதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், சிபிஎம் கட்சியின் சாதனைகளை அளப்பதற்கு நீங்கள் கொடுக்கும் அளவுகோலால் மக்கள் எம்.ஜி.ஆரையும் அளப்பதால் ஏற்பட்ட விளைவே அது. அதிகமான பொருளாதார ரீதியிலான சலுகைகளையும் ஒரு சில சீர்திருத்தங்களையும் காட்டி “சமூகத்தை மாற்றி விட்டோம் பாருங்கள்.” என்று சொன்னால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.

said...

///////மாதவராஜ் said...
நண்பர் ஏகலைவன்!

லீனா மணிமேகலை கவிதை குறித்த உரையாடலிலிருந்து, இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கிறீர்கள்./////

நீங்களும் லீனா விவகாரத்திலிருந்து சற்று விலகி, போலி கம்யூனிஸ்டு என்று குறிப்பிடுவதற்கு எதிராகச் சில கருத்துக்களை நீங்கள் பதிந்தமையால்தான் இவற்றை நான் குறிப்பிட்டு எழுத நேர்ந்தது.

சரோஜாதேவி புத்தகத்தின் தரத்திற்கும் கீழான தரத்தோடு, படுக்கையறைக் காட்சிகளை வார்த்தைகளாக்கி, அவ்வார்த்தைகளுக்குள் கம்யூனிசத்தையும் கம்யூனிச ஆசான்களையும் செருகிக் கொச்சைப்படுத்தி ‘கவிதை’ வெளியிட்ட லீனாவுக்கு எதிராக வினையாற்றினார்கள் எமது தோழர்கள்.

உலகை விடியலுக்குள் அழைத்துச் செல்லக்கூடிய ஒரே தத்துவம் கம்யூனிசம்தான் என்கிற தெளிவான கொள்கை உறுதியோடு போராடிவருகிற எமக்கு அக்கவிதை ஏற்படுத்திய கோபம் ஏனைய அக்மார்க் ‘கம்யூனிஸ்டு’களுக்கு ஏற்படாமல் போனதற்கு நாங்கள் என்ன செய்ய?

லீனாவைத் திட்டுவதற்குப் பதிலாக எமது அமைப்பை எதிர்ப்பதற்கான சரியான வாய்ப்பாகக் கருதி, ’போர்தந்திரம்’ வகுத்து அறிக்கை விட்ட தமிழ்ச்செல்வன் தான், ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் ‘கம்யூனிஸ்டு’. அவ்வறிக்கையையும், அந்த மாபெரும் கண்டனக் கூட்டத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்ட தீக்கதிர்தான் தமிழின் ஒரே ‘புரட்சிகர ஏடு’.

இவற்றை உங்களிடம் சொல்வது பொருத்தமானதல்லதான். ஏனெனில், தமுஎகசவின் இந்நிலைப்பாட்டையும் லீனாவையும் கேள்விக்குட்படுத்தி இப்பதிவை நேர்மையாக எழுதிய உங்களைப் பார்த்து நான் கேட்கக் கூடாத கேள்விதான் இது.

இருப்பினும், சி.பிஎம்.ஐ கம்யூனிச போலிகள் என்று சுட்டிக் காட்டுவதற்கு மே.வங்கத்தை விட்டால் எமக்கு வேறு வழியில்லை என்பது போலவும், மே.வங்கத்தைத் தவிர இதர மாநிலங்களில் அக்கட்சியின் செயல்பாடு வெகுவாக பாராட்டப்பபடுகிறது என்பது போலவும் நீங்கள் கருத்து தெரிவித்திருக்கிறீர்கள்.

சி.பிஎம்.ஐ போலிகள் என்று அடையாளப்படுத்துவதற்கு மே.வங்கத்திற்கெல்லாம் போகத்தேவையில்லை. அதற்காக வரலாற்றையெல்லாம் புரட்டத் தேவையில்லை. இது நமது கண்முன், சமகாலத்தில், நேற்றைக்கும் இன்றும் காணப்படும் நடைமுறை உதாரணங்களைச் சொல்லியே அக்கட்சியைப் போலிகம்யூனிஸ்டு என்று அம்பலப்படுத்த முடியும், என்பதற்காகத்தான் இப்பின்னூட்டத்தைப் பதிகிறேன்.

said...

நண்பர்களே!

ஏழை என்றால் ஹூண்டாய், ஃபோர்டு, நோக்கியா, இன்னும் பல சிறப்புப் பொருளாதார மண்டல முதலாளிகள், அப்புறம் நம்ம கலைஞரும் அவருடைய ஃபேமிலியும் கூட பரம ஏழைகள்தான்.

தொண்டு என்றால் மேற்கண்ட ஏழைகள் சமூகத்தை முன்னுக்குக் கொண்டுவருவதற்காக வேறு வழியின்றி ஆலைகள் தொடங்கியிருக்கிறார்கள் அல்லவா, அவ்வாலைகளை முட்டுக்கொடுத்து உயர்த்திபிடிப்பதற்காக நமது மத்திய-மாநில அரசுகள் வழங்கும் i. தடையற்ற இலவச மின்சாரம், ii.ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு வரிச்சலுகை, iii.பத்துமணி நேரம், பனிரெண்டு மணிநேரம், பதினாறுமணி நேரமென்று தமது சுய இலாபத்திற்காக ‘கோடீசுவர’ தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கிக் கொள்வதற்கு சட்டரீதியான பாதுகாப்பு, iv.தாம் திவாலானதாகக் கதையளந்துவிட்டு நமது நாட்டைத் திவாலாக்கிவிட்டு செல்லும்போது (மகாராஷ்டிராவில் என்றான் நிறுவனம் திவாலாக்கியது போல) நீதிமன்றங்களில் ப.சிதம்பரம் போன்ற வக்கீல்களின் மூலமாக வழங்கப்படும் நீதிச்சலுகைகள் என்று நமது பெருமதிப்பிற்குரிய (சிபிஎம் உள்ளிட்ட) மத்திய-மாநில அரசுகள், அந்த மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஏழைகளுக்கு ஆற்றிவரும் தொண்டு சொல்லி மாளாதது.

இயக்கம் என்பது தேசவிடுதலை பெற்றுத்தந்ததாகவும் இந்திய ‘சுதந்திர’த்திற்கு ஏகபோக அத்தாரிட்டியாக அறிவித்துக் கொண்டிருக்கும் கட்சியுமான காங்கிரசு, இந்துக்களின் நலன்களைக் கட்டிக்காப்பதற்காக அரசியலுக்கு வந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து, அங்கே வாய்திறப்பதற்கே தொகுதி மக்களிடம் காசு வாங்கிய யோக்கிய சிகாமணிகள் அடங்கிய பா.ஜ.க., கம்யூனிசத்தின் பெயரால் கட்சி நடத்திக்கொண்டு, உலகத் தொழிலாளத் தோழர்களின் உதிரத்தால் சிவந்த செங்கொடியை முதலாளிகளின் பாதணிகளுக்குக் கீழ் விரித்து ‘தொழில் வளர்க்க’ப் பாடுபடும் போலிகம்யூனிஸ்டு கட்சிகள்.

இப்படியே மேம்போக்காக சில வேற்றுமைகளை வைத்துக் கொண்டு, அடிப்படையில் இந்த சுரண்டல்வாத சமூகத்தைக் காத்து நிற்பதில் ஒத்தகருத்துடன் செயல்படும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும்தான் இயக்கம் என்று வரையறுக்கப்படுகிறது போலும்!

said...

கருணாநிதி விமர்சிக்கப்படுவது சரியானதுதான். ஈழத்துரோகம், தொழிலாளர் வர்க்கத்துக்கு அவர் பச்சையாக இழைத்து வரும் துரோகம், நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிராக அவர் நடத்திவரும் மோசடிகள் குறித்தெல்லாம், இதனினும் கடுமையாகக் கூட அவரை விமர்சிக்கலாம். அதே நேரத்தில் ஜெயாமாமியின் மனத்தைக் குளிர்விக்க ‘காம்ரேடு’கள் நடத்தும் அரசியல் நாடக வசனங்களை நேர்மையான எதிர்ப்பாகக் கருதி கோரஸ் குரல் கொடுக்க நம்மால் முடியாது.

எந்த ஒரு ஓட்டுக் கட்சியையும் தனியாகக் கட்டம் கட்டி விமர்சிப்பது தேர்தல் ஸ்டண்ட் மட்டும்தான். கருணாநிதியை ஜெயாமாமி விமர்சிப்பதும், ஜெயாமாமியை ராமதாஸ் விமர்சிப்பதும், நேரத்திற்குத் தகுந்தமாதிரி இடத்திற்குத் தகுந்தமாதி, கூட்டணிக்குத் தகுந்தமாதிரி இலாவகமாகப் பேசும் வைகோ மற்றும் அக்மார்க் கம்யூனிஸ்டுகளான சிபிஎம் / சிபிஐ என்று ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்வதற்கு எந்த எல்லையுமில்லை.

மக்களின் பிரச்சினைகளுக்கும் இவர்கள் நடத்திக் கொள்ளும் குழாயடி மோதல்களுக்கும் எள்முணையளவும் சப்பந்தம் கிடையாது. எச்சில் இலைகளின் மீது கடித்துக் குதறிக்கொள்ளும் தெருநாய்களின் சண்டைக்கும் நமக்கும் எத்தனை சம்பந்தம் உண்டோ அதைவிடக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்த மோதல்கள்தான் இவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்வது.

திருவண்ணாமலையை அடுத்த செங்கம் என்கிற ஊரில் உள்ள வேடியப்பர் மலையில் பொதிந்திருக்கும் சுமார் என்பது இலட்சம் டன் இரும்புத்தாதுவை ஜிண்டாலுக்கு சந்தடியில்லாமல் ஒப்பந்தம் போடப்பட்டபோது இந்தத் தெருநாய்கள் மூச்சுகூட விட்டதுகிடையாது. “கருணாநிதி நம்ம நாட்டு வளங்களை ஜிண்டாலுக்கு தாரைவார்த்தது மோசடி” என்றோ “அந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்றோ யோக்கியமாக அறிக்கை விடுவதற்கு சி.பி.எம்.கட்சியால் முடியுமா!

அதே ஜிண்டாலுக்குத்தானே லால்காரின் 5000த்திற்கும் மேற்பட்ட விளைநிலைங்களை நம்ம ’காம்ரேடு’கள் ’தொழில் வளர்ச்சிக்காக’ தாரை வார்த்திருக்கிறார்கள். “நீங்கள் விற்றால் தொழில்வளர்ச்சி, நான் விற்றால் தாரை வார்ப்பதா...” என்று சுவற்றிலடித்த பந்து போல கருணாநிதியிடமிருந்து கேள்விகள் வருமல்லவா?!

நண்பர் மாதவராஜ் கோபித்துக்கொள்ளக்கூடாது. சிபிஎம் கட்சியிலிருந்தாலும் சில அடிப்படையான நேர்மை உங்களுக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். எனவேதான் இதனை இங்குப் பதிவிடுகிறேன். மற்றபடி பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று இப்பின்னூட்டங்களை இருட்டடிப்பு செய்துவிடாதீர்கள், ஐயா!

தோழமையுடன்,
ஏகலைவன்
http://yekalaivan.blogspot.com

said...

நண்பர் மாதவராஜ் அவர்களுக்கு!

நான் எதிர்பார்த்ததைப் போன்று நீங்கள் எனது பின்னூட்டங்களை சந்தடியில்லாமல் இருட்டடிப்பு செய்துள்ளீர்கள்.

அதில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இலக்கியத் தரம் இல்லாமல் இருக்கலாம், உண்மைகள் சுடுவதனால்தான் அவற்றை பதிப்பிக்காமல் கமுக்கமாக வைத்துக்கொண்டீர்களா?

அவற்றைப் பதிப்பிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவற்றுக்கான உங்களது பதில் என்று ஒற்றை வரியில் எதையாவது சொல்லியிருக்கலாம், ஐயா!

பதில் சொல்லத் திராணியற்ற நிலையை உங்களுக்கு ஏற்படுத்தியது எது? பொதுத்தளத்தில் விவாதிக்க முடியாத அளவுக்கு தரம் தாழ்ந்த அரசியல் நடைமுறைக்கு நீங்கள் எவ்வளவுதான் சப்பைக்கட்டு கட்டினாலும் இறுதியில் இதுதான் முடிவாக இருக்கும். அதாவது, சந்தடியில்லாமல் எதிர்க்கேள்விகளை ஆழக்குழிதோண்டி புதைத்துவிட்டு, அதன்மேல் நின்று வழக்கம்போல ‘புரட்சி’ பேசலாம் போலும்!

இப்பின்னூட்டம் உள்ளிட்ட நான் உமக்கு அனுப்பிய அனைத்து பின்னூட்டங்களின் சுட்டியினைக் கீழே பதிகிறேன்; இங்கு மட்டுமல்ல இந்த இழைகளில் பின்னூட்டமிட்டுள்ள அனைத்து நண்பர்களின் பக்கங்களிலும் சென்று பதிவிடுகிறேன். எனது கேள்வியின் நியாயத்தை அவர்களே புரிந்து கொள்ளட்டும்.

மன்னிக்கவேண்டும் ஐயா, இது நானாக ஏற்படுத்திக் கொண்ட நிலைப்பாடு அல்ல, நீங்கள் எனது கருத்துக்களை மூடிமறைத்ததன் மூலமாக, இந்நிலைக்கு என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளியிருக்கிறீர்கள்.

குறிப்பு: சிபிஎம் கட்சியின் சூரர்கள் பொதுத்தளத்தில் விவாதிக்க வரமாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் மாதவராஜுக்கு நான் அனுப்பிய பின்னூட்டங்களை எனது கீழ்கண்ட சுட்டியில் பதிப்பித்திருந்தேன். நண்பர்கள் அச்சுட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எனது கருத்துக்கள் குறித்து தத்தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தோழமையுடன் வேண்டுகிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.
yekalaivan@gmail.com

https://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&postID=347442641342899308

said...

நண்பர் மாதவராஜ் அவர்களே!

ஒருவழியாக நான் எதிர்பார்த்த இடத்திற்கு நீங்கள் வந்து சேர்ந்தமைக்கு நன்றி!

////எதை எழுதினாலும், எதைப் பேசினாலும் தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு சொன்னதையே சொல்லிக்கொண்டு பின்னூட்டமிடுகிறார். //////

உங்கள் வலைப்பக்கத்தில் “இது இடதுசாரிகளை விமர்சிப்பதற்கான தளம் அல்ல, பாராட்டுபவர்களுக்கு மட்டுமே இங்கு விவாதிக்க அனுமதியளிக்கப்படும்” என்று என்போன்ற அறிவீலிகளுக்கு உரைப்பது போல் அறிவித்திருக்கலாம், ஐயா!

லீனா குறித்த உமது முந்தைய பதிவில் நீங்கள் ஏதோ நேர்மையாகவே அனைத்தையும் பரிசீலிப்பவர் என்று தோன்றும் அளவுக்கு எழுதியிருந்தீர்கள். அதனால் எனது நேரத்தை விரயமாக்கி சில கருத்துக்களைப் பதிந்தேன். ஆனால் இத்தகைய பரிதாபமான நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

எனது பின்னூட்டத்தை மற்றவர்கள் படித்து அதன் உண்மைகளைத் தெரிந்து கொண்டுவிடக்கூடாது என்கிற துடிப்போடுதான் நீங்கள் இருட்டடிப்பு செய்துள்ளீர்கள்.

அஹோரி said...
//“ஏழைகளுக்கு தொண்டாற்றும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே”//

அநாகரிகமாக இருந்தாலும் இதுதான் உண்மை, இதை படித்தவுடம் , வாயை தவிர மற்ற ஒரு உறுப்பும் சிரிக்கிறது. ஆனால் இதுக்கெல்லாம் அவர்கள் வெக்கபடவே மாட்டார்கள்.

April 18, 2010 11:00 AM

இதுபோன்ற ‘தத்துவச் செறிவுள்ள’ பின்னூட்டங்களை நீங்கள் உவந்து பதியும் போது, எனது கருத்துக்களைப் புறந்தள்ளாமல் என்ன செய்வீர்கள். பதிலளிக்க முடியாத கேள்விகள் கேட்கப்பட்டால் அக்கேள்வியில் உள்ள வார்த்தைகளின் தரம் குறித்து அங்கலாய்க்க கிளம்பிவிடுவீர்கள். மேற்குறிப்பிட்டுள்ள நண்பரின் பின்னூட்டத்தில் உள்ள வரிகள் எல்லாம் பொண்ணெழுத்தில் பொறிக்க வேண்டியவை போலும்!

பரவாயில்லை யாருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று நீங்கள் மறைக்கிறீர்களோ அவர்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தப்படுவீர்கள்.

தொடர்ந்து சந்திப்போம்.