Sunday, July 20, 2008

"காங்கிரசை வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகும் ஆதரிப்போம்" சிபிஎம் கட்சியின் தலைமை 'தரகர்'குழுவைச் சார்ந்த யெச்சூரி அறிவிப்பு!!!!!!!!


"காங்கிரசை வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகும் ஆதரிப்போம்" சிபிஎம் கட்சியின் தலைமை 'தரகர்'குழுவைச் சார்ந்த யெச்சூரி அறிவிப்பு!!!!!!!!

சிபிஎம் / சிபிஐ என்ற இரு போலி கம்யூனிசக் கட்சிகளின் சார்பில் சென்னை அமைந்தகரையில் சென்ற 16/07/08 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நானும் சில தோழர்களும் சென்றிருந்தோம். மேடைக்கு பின்புறம் இருந்த ஒரு டீகடையில் நின்றிருந்த சில மூத்த தோழர்களிடம் பேச்சு கொடுத்தோம்.

கடந்த நாற்பது வருடங்களாக சிபிஎம் கட்சியில் தாங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். சென்னையை அடுத்த பெரியபாளையம் (திருவள்ளூர் மாவட்டம்) பகுதியிலிருந்து மேற்கண்ட கூட்டத்திற்காக வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

நாம் கேட்ட பல கேள்விகளுக்கும் அப்பாவித்தனமாக பல்வேறு பதில்களைச் சொன்னார்கள். அதில் "வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசை ஆதரிக்க வேண்டிய நிலை வந்தால் தயங்காமல் ஆதரிப்போம்" என்று உங்கள் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி சொல்லியிருக்கிறாரே அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டோம்.

"இல்லை. அவர் அப்படியெல்லாம் சொல்லியிருக்கவே மாட்டார்" என்று உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தனர். "அனைத்துப் பத்திரிக்கையிலும் செய்தியாக வந்திருக்கிறதே, தோழர் நீங்கள் பார்க்கவில்லையா?" என்று நமது தோழர்களும் திருப்பிக் கேட்டனர். உடனே அவர்கள், "இதுபோன்று 'தீக்கதிர்' பத்திரிக்கையில் வந்திருக்கிறதா?" என்றதோடு "எந்த செய்தியாக இருந்தாலும் தீக்கதிரில் வந்தால்தான் நாங்கள் நம்புவோம்" என்றும் அப்பாவித்தனமாகப் பதிலளித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் கீழ்மட்ட ஊழியர்கள் மலைபோல் நம்பியிருக்கும் அந்த 'தீக்கதிர்' நாளேட்டின் யோக்கியதையைக் காட்டும் வகையில், அதன் முக்கியப் பொருப்பாளரான குமரேசன் என்பவர் மக்கள் தொலைக்காட்சியின் நேர்காணலின் போது மேற்கண்ட யெச்சூரி சம்பந்தப்பட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
கேள்வி மேற்கண்ட சீத்தாராம் யெச்சூரியின் அறிக்கை பற்றியதுதான். "தில்லி அரசியலில் நிலவும் நெருக்கடிகளின் காரணமாக, சும்மா போகிற போக்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கருத்துக்களைச் சொல்லுவார்கள், அதையெல்லாம் பெரிதுபடுத்த் வேண்டியதில்லை. சீத்தாராம் யெச்சூரியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல" என்று தெளிவாகச் சொன்னார்.

'சும்மா போகிற போக்கில்' கருத்து தெரிவிப்பதற்கு சீத்தாராம் யெச்சூரி ஒன்றும் கட்சியோட கடைமட்ட ஊழியன் இல்லை. அவர்தான் அப்போலி கம்யுனிச கட்சியின் மூளையாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். சிபிஎம் கட்சியின் அரசியல் 'தரகு'ப் பாரம்பர்யத்தை கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருப்பவரும் அவரே. இப்படியிருக்கையில் யெச்சூரியின் கருத்தை கட்சியின் கருத்தாகக் கருதவேண்டியதில்லை என்று குமரேசன் சொல்வது போலி கம்யூனிஸ்டுகளுக்கே உரிய பித்தலாட்டப் போக்கு.

அப்பாவி ஊழியர்கள் மலைபோல நம்பிக் கொண்டிருக்கும், அக்கட்சியின் அதிகாரப் பூர்வ பத்திரிக்கையான தீக்கதிர், சீத்தாராம் யெச்சூரியின் அறிக்கைகளை மாற்றித் திரித்துக் கூறுவது புதியவிசயமல்ல. ஏற்கெனவே, காஞ்சிக் கிரிமினல் ஜெயேந்திரன் கைது செய்யப் பட்டபோது, அக்கைது நடவடிக்கையைக் கண்டித்து ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார் இதே யெச்சூரி பகவான். அது தினமணி, இந்து உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்தது. ஆனால், இவர்களுடைய தீக்கதிர் நாளேடு சிறிதும் கூசாமல் யெச்சூரி அவ்வாறு சொல்லவேயில்லை என்று அப்போதும் எழுதியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இதில் கொடுமை என்னவென்றால் மேற்கண்ட தினமணி, இந்து நாளேடுகள் சிபிஎம் கட்சியின் ஆதரவுப் பத்திரிக்கைகள். அப்பத்திரிக்கையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அக்கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நந்திகிரமம் உள்ளிட்ட போராட்டங்களில் அம்பலப்பட்டபோது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முறையாக பதிலளிக்கத் திராணியற்ற போலிகள், அவற்றை "ஊடகங்களின் சதி" என்று கூசாமல் சொல்லிக் கொண்டனர். வெற்று அவதூறுகளும் போலிப்புலம்பல்களும் மட்டும் கொண்டிருக்கும் இவர்களது ஏடுகளுக்கும் மற்ற பத்திரிக்கைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

2 comments:

said...

வணக்கம் தோழர்

said...

வேறு வழியேயில்லை...

BJP சேர உடமட்டிங்க..